பஞ்சாங்கம் கூறுகிற 12 ராசிகளுக்கும் இந்தியாவின் அஞ்சல்துறை, அஞ்சல் தலையை 14 ஆம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பு 14 ஆம் தேதி வந்தவுடன், அன்றே பெரியார் திராவிடர் கழகம் போராட்ட அறிவிப்பை வெளியிட்டது. 14 ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அடுத்த நாளே அஞ்சலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அடுத்த நாளே சென்னை, சேலம், கோவை நகரங்களில் தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார்கள். தூத்துக்குடி, கோபியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

சென்னையில்

சென்னையில் அண்ணாசாலையிலுள்ள தலைமை அஞ்சலகம் முன் ஏப். 15, பிற்பகல் 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தோழர்கள் திரண்டனர். திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலிருந்து ஆர்ப்பாட்டத்துக்கு புறப்பட்டபோது, காவல்துறை கைது செய்தது. அனைவரும் சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள திருமண மண்படத்தில் வைக்கப்பட்டு, இரவு 7 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

கோவையில் கைது

கோவையில் மூடநம்பிக்கைகளை பரப்புகிற வகையில் 12 ராசிகளுக்கு அஞ்சல்தலை வெளியிட்ட அஞ்சல் துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கழகத்தினர் 40 பேர் கைதானார்கள். அறிவியலுக்கு எதிராக மூடநம்பிக்கையை பரப்புகிற தன்மையில் அஞ்சல்துறை 12 ராசிகளுக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடுவதைக் கண்டித்தும், வெளியிட்ட அஞ்சல்தலைகளை திரும்பப் பெறக் கோரியும் 15.4.2010 கோவை, அவினாசி சாலை, அண்ணா சாலை எதிரிலுள்ள மத்திய அஞ்சல் துறை அலுவலகம் முன்பு கழகப் பொதுச்செயலாளர் கு. இராம கிருட்டிணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்து, தோழர்கள் 40 பேரைக் கைது செய்து இரயில் நிலையம் அருகிலுள்ள தனியார் விடுதி அரங்கில் வைத்து இரவு 9 மணிக்கு விடுதலை செய்தது.

ஆர்ப்பாட்டத்தில் கழக மாநகர செயலாளர் வே. கோபால், அலுவலக பொறுப்பாளர் சா. கதிரவன், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் ந. பன்னீர் செல்வம், மணிகண்டன், நேருதாசு, பாண்டியன், சென்னிமலை இராமசாமி, கா. சோமசுந்தரம், நாகராசு, பெரியார் மணி, திருப்பூர் மூர்த்தி, கோபிநாத் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.

தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் 12 ராசிகளுக்கும் அஞ்சல்தலை வெளியிட்ட மத்திய அரசையும், அஞ்சல் துறையையும் கண்டித்து, 17.4.2010 அன்று மாலை 6 மணிக்கு தூத்துக்குடி காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கோ.அ. குமார் தலைமை தாங்கினார். ஆதித் தமிழர் பேரவையின் ரா.வே. மனோகர் துவக்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து கழக மாவட்ட அமைப்பாளர் ச.க. பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் வே. பால்ராசு, கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கத்தின் சுந்தரி மைந்தன் ஆகியோர் கண்டன உரையை தொடர்ந்து தலைமை செயற்குழு உறுப்பினர் பால். பிரபாகரன் விளக்க உரையாற்றினார். கழக மாவட்டத்தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு முடித்து வைத்து உரையாற்றினார். இரா. உதயகுமார் நன்றியுரையாற்றினார். நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் க. மதன், மாவட்ட பொருளாளர் செ. செல்லத்துரை, மாநகரத் தலைவர் சா.த.பிரபாகரன், மாநகர துணைத் தலைவர் ரவிசங்கர், நெல்லை தோழர்கள் சி.ஆ.காசிராசன், ராசா, செந்தில், அமிர்தராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோபியில்....

அரசியல் சட்டபடி அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதை விடுத்து, மூடநம்பிக்கையை வளர்க்கும் வகையில், இராசிகளின் பெயரில் அஞ்சல் தலைகளை வெளியிடும் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 15.4.2010 வியாழன் காலை 11 மணிக்கு கோபி தலைமை அஞ்சலகம் முன்பு, கோபி நகர அமைப்பாளர் கா.ம.குணசேகரன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் இராம.இளங்கோவன், மாவட்ட துணைத் தலைவர் கா.சு.வேலுச்சாமி முன்னிலையிலும் நடைபெற்றது.

மதச்சார்பின்மைக்கு எதிராக, மூடநம்பிக்கையின் ஒரு பகுதியாக உள்ள சோதிடம், இதில் வரும் 12 இராசிகளின் பெயரில் அஞ்சல் தலைகளை வெளியிடும் மத்திய அரசை வன்மையாக கழகம் கண்டிக்கின்றது. அறிவியல் மனப்பானமையை வளர்க்க வேண்டும் என்ற அரசியல் சாசனத்துக்கு எதிரானது, இது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் வழக்கறிஞர் ஜெகதீசன், கொ.கு. சுப்ரமணியன், கா.சு. வேலுச்சாமி ஆகியோரின் கண்டன உரைக்குப் பின்னர் இறுதியாக மாவட்டச் செயலாளர் இராம. இளங்கோவன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாவட்ட அமைப்பாளர் சதுமுகை பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர் இரகுநாதன், நகரச் செயலாளர் செயராமன், கருப்பணன், அருளானந்தம், மாவட்டஇளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், ரமேசு, நகரத் தலைவர் நாகப்பன், விசு, விசயசங்கர், ந. தாமோதரன், மூர்த்தி, சுப்ரமணி, பழனிச்சாமி, வடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

- பெரியார் முழக்கம் செய்தியாளர்

Pin It