தமக்கான பொறுப்புக்கள் அதிகரித்து வரும் காலம் இது என்பதை உணர்ந்து தமது நோயையும் குடும்பத்தையும் அடுத்த இடத்தில் வைத்து விட்டு படைப்புலகிலும் இயக்க வாழ்விலும் வாழ்ந்து மகிழ்ந்த படைப்பாளிகள் சிலர் கடந்த மாதம் அகாலத்தில் மரணத்தை சந்தித்தார்கள்.

பாரா என நாங்கள் அன்போடு அழைக்கின்ற தோழர் பா.ராமச்சந்திரன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னணி எழுத்தாளராக அறியப்பட்டவர். அடிப்படையில் ஒரு கவிஞர். சென்னைத் துறைமுகத்தில் பணி. பல ஆண்டுகளுக்கு முன் த,மு.எ.ச. குற்றாலத்தில் நடத்திய சிறுகதைப் பயிற்சி பட்டறையில் உருவான கூர்மையான போர்வாள்.

ஒரு இலக்கியவாதியாகவும் கூடவே மிகப்பெரும் துறைமுகத்தின் தொழிற்சங்க செயலாளராகவும் இருந்த மிகப்பெரும் அனுபவம், வாழ்க்கையை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதை ராமச்சந்திரனுக்கு கற்றுத் தந்திருந்ததை அவரது எழுத்துக்களில் நன்றாகவே உணர முடியும். மாபெரும் இந்தியக் குடியரசின் பெருமைமிகு சக்ரவர்த்திகளால் கைவிடப்பட்ட சென்னையின் கடைநிலை உழைப்பாளி மக்கள் சாலையோரங்களிலும் கடைகளின் தாழ்வாரங்களிலும் தமக்கான வாழ்க்கையை சாதாரணமாக அமைத்துக்கொண்டதை ஜெயகாந்தன் தனது கதை மாந்தர்களாக, கதைக்களமாக அமைத்துக்கொண்டதை, ராமச்சந்திரனின் கதைகளைப் படிக்கும்போது ஒருவர் தவிர்க்க முடியாமல் நினைவு கூர முடியும். தான் பணியாற்றிய சென்னை துறைமுகத்தின் தொழிலாளர்களின் வாழ்க்கை அனுபவத்தை மட்டும் இன்றி, தகிக்கும் வெப்பத்தையும் வெறுமையையும் ஏமாற்றத்தையும் மட்டுமே தமக்கான சொத்துக்களாய் தயக்கமேதும் இன்றி தலையில் சுமந்து, ஆனால் நம்பிக்கையோடு திரியும் 'கறுப்பர்களின் நகரம்' ஆன (blackers town) வடபகுதி சென்னைப்பட்டினத்தின் கடற்கரையோர மக்கள், மீனவ மக்கள் தொடர்பான வாழ்க்கையையும் அவர்களது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளையும் அவர்களது சொந்த மண்ணின் பண்பாட்டு மொழியிலேயே தமது கதைகளில் எழுதி ஆச்சரியப்பட வைத்தவர். 'அப்பாவின் கைப்பெருவிரலில்' விரியும் அவரது படைப்புலகமும் மொழியும் அற்புதமானவை, ஒரு சமுத்திரம் போல கரை காணாதவை. வண்ணதாசன் இப்படி கூறினார் "பா.ராமச்சந்திரன் முன்வைக்கின்ற உலகம் துறைமுகம் சார்ந்தது. அவர் சில கதைகளை எழுதுகின்றார். சில கதைகளை வரைகின்றார். எழுத்துக்களுக்கு இடையே சித்திரங்கள் தோன்றி, சித்திரங்களுக்கு இடையே எழுத்து அழிகின்றதாக மாறிமாறி விரிவடைந்து கொண்டு போகின்றது துறைமுகம்".

அவரது நட்பு வட்டாரமும் ஆச்சரியப்பட வைப்பது. மிகப்பெரும் படிப்பாளிகள் ஆளுமைகள் முதல் அன்றாடம் காலையில் மதுவை அருந்திய பின்னரே தொழிலுக்கு செல்லும் கீழ்க்கோடி மனிதர்கள் வரை அவருக்கு நண்பர்களாக இருந்தார்கள். நமக்கு எளிதில் வசப்படாத கதைக்களங்களும் வார்த்தைப்பிரயோகங்களும் அவரது எழுத்தில் மிகச்சாதாரணமாக வெளிப்படும் எனில் நமக்கு வாய்க்காத ஆனால் ராமச்சந்திரனுக்கு மட்டுமே வாய்த்த வித்தியாசமான இந்த அனுபவங்களே காரணம்.

யாரையும் மதிக்கின்ற, எளிமையாகப் பழகும் குணம் அவருக்கானது. ஆனால் அன்பான வார்த்தைகளால் மிகக்கறாரான விமர்சனங்களை தயக்கம் ஏதுமின்றி அவர் எப்போதும் முன்வைத்தார் என்பது இயக்கவாதிகள் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது. இதனால் அவரை கசப்பாக பார்த்தவர்களும் இருக்கின்றார்கள், அது குறித்து என்றும் அவர் கவலைப்பட்டதில்லை.

******************
கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக மேலாண்மை பொன்னுசாமி+கல்வி குறித்த ஆவணப்பட தயாரிப்பில் தன்னை கரைத்து உடல் நோவையும் பொருட்படுத்தாமல் இயங்கினார் (நாங்களெல்லாம் பயப்படும் அளவுக்கு). மேலாண்மையின் வாழ்க்கையோடு இன்றைய கல்வி முறையை அதன் சீர்கேட்டை இணைத்து ஆவணப்படம் தயாரிக்கப் போவதாக அவர் சொன்னபோது "ஆஹா! இப்படி ஒரு சிந்தனையா!" என நான் வியந்தேன். இறுதியாக இந்த பிப்ரவரி ஐந்தாம் தேதிதான் "தூரத்துக்கனவு" வெளியீட்டு விழா துறைமுக தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்பட்டது. அதன் பின்னரே பேஸ் மேக்கர் பொருத்துவதற்கான ஏற்பாட்டுக்கு செல்லப்போவதாக சொன்னது அவர் மனவுறுதியை அன்றி வேறு எதைக் காட்டுகின்றது? நெருக்கடியான இவ்வேளையில் அவரது மனைவி மங்களாவின், அவரது இரண்டு பிள்ளைகளின் மனவுறுதியை வியக்கின்றேன்.

********************
இறுதியாக வெளியான அவரது இரண்டு கதைகள் "நெத்திக்காசு" (புதுவிசை),"பதினாறாம் நாள் நினைவாஞ்சலி" (செம்மலர்) (இக்கதை வேறொரு முடிவோடு உயிரெழுத்திலும் வந்தது) ... தற்செயலாக இவை இரண்டுமே மரணம் தொடர்பான சிறுகதைகளாக அமைந்து விட்டதை இப்போது நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

அதே துறைமுகத்தில் ஒரு பணியாளராகவும் ஒரு தொழிற்சங்கத் தலைவராகவும் பணியாற்றி மறைந்த தனது அப்பாவைப் பற்றி ராமச்சந்திரன் இப்படி சொல்லியிருந்தார்: "மரணத்தின் கடைசி தினத்தன்றும் தான் இறுதியாகப் பணியாற்றிய துறைமுக ஓய்வூதிய அமைப்பின் களப் பணிகளின் சிந்தனையோடு நிகழ்ந்த அப்பாவின் மரணத்திலிருந்தும் பெற்றிருக்கின்றேன் இன்னொரு அப்பாவை. சரியானவற்றிற்காக கடைசிவரை போராடிய, அந்த எளிய மனிதரின் வாழ்க்கையும், மரணமும் என்னை உயிருள்ளவரை எழுதவைக்கும், இயங்க வைக்கும்". சொன்னபடியே எழுதவும் இயங்கவும் செய்தார் ராமச்சந்திரன். ஆனால், அடுத்து இந்த வேலை, அடுத்து அந்த வேலை என்று தொடர்ந்து இயங்கிக்கொண்டும், ஐம்பதே வயதில் பிரிந்து சென்ற கணத்திலும் கடலும் கடல் சார்ந்த மனிதர்கள் குறித்தான ஒரு நாவலை பாதியிலும் விட்டுச் சென்றுள்ள ராமச்சந்திரன் வேதனையான ஒரு பாடத்தை நமக்கும் சொல்லிச் சென்றுள்ளார். இலக்கியவாதிகள் தம் உடல் நலன் குறித்தும் கவலைகொள்ள வேண்டும். சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம்.

**************
- இக்பால் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)