பாஜகவின் சமீபத்திய உயர்ஜாதியினருக்கான 10% EWS இட ஒதுக்கீடு என்பது உண்மையிலேயே பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதிகளின் பிரதிநிதித்துவத்திற்கானதா அல்லது 2019 தேர்தலை ஒட்டிய பாஜகவின் வெறும் தேர்தல் அரசியலா? சொல்லப் போனால், பாஜகவின் இந்த அரசியல் நடவடிக்கை இருப்பு அரசியல் மற்றும் வாக்குவங்கி அரசியல் சார்ந்தது எனலாம். மேலும் பாஜக அரசின் இந்த நடவடிக்கை இட ஒதுக்கீடு குறித்த அரசியல் விவாதங்களையும் துவங்கியுள்ளது. இருப்பு அரசியல் என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் அரசியல் பிரதிநிதிகளின் சமூக அடையாளங்கள் அக்கூட்டத்தின் நலன்களில் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதை விவாதிக்கும் அரசியல் ஆகும். இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது உயர்ஜாதிகள் தான் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. விளிம்புநிலை நிலை சமூகங்களின் நலன்களை உண்மையில் அந்த சமூகத்தின் பிரதிநிதிகள் எந்த அளவுக்கு வெற்றிகரமாக பிரதிநிதித்துவப் படுத்தியிருக்கிறார்கள் என்பது ஒரு நீண்ட விவாதம். எப்படியாகினும், உயர்ஜாதி சமூகங்களை சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள் எவ்வாறு அவர்கள் சார்ந்த ஜாதிகளின் நலன்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள் என்பது பற்றி அவ்வளவாக அரசியல் விவாதங்கள் இல்லை. 

சித்தாந்த அரசியல் என்பது சித்தாந்தங்களை முதன்மையாக முன்னிறுத்தி விவாதிக்கும் அரசியலாகும், அதில் தனிநபர்களின் சமூக அடையாளங்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இவ்வரசியலில் விளிம்புநிலை சமூகங்களின் நலன்கள் பெரிதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாததால் அச்சமூகங்களின் பிரதிநிதித்துவமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது அரசியல் நிபுணர்களின் வாதமாகும். இதனால் அரசின் கொள்கை முடிவுகளில் பல சமூகங்களின் பிரதிநிதிகளும் பங்கு கொள்வது இந்தியா போன்ற பலதரப்பட்ட கலாச்சார பின்னணி கொண்ட மக்கள் வாழும் நாடுகள் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சமாகும்.parliament 392இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் பாஜக அரசின் கேபினட்டில் உயர்ஜாதி சமூகங்களின் பிரதிநிதித்துவம் மிக அதிகமாகவே உள்ளது எனலாம். அதற்கு முந்தைய அரசுகளிலும் இது தான் உண்மை நிலை. உயர்ஜாதிகளின் ஆதிக்கம் நிறைந்த இந்த கேபினட் தான் உயர்ஜாதி ஏழைகளின் 10% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துகிறது. இதனடிப்படையில் பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் பேராசிரியர் நியமனங்களில் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பிரதிநிதித்துவம் பெரிதும் பாதிக்கப்படும். இதே பாஜக அரசு, அவர்கள் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆட்சேர்ப்புகளுக்கான புதிய ரோஸ்டர் கொள்கையை அறிமுகப்படுத்தியது. புதிய ரோஸ்டர் கொள்கையின் கீழ், SC, ST, OBC இட ஒதுக்கீட்டை நாசப்படுத்தும் வகையில் ஒவ்வொரு துறையும் தனித்தனி அலகாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற விதிமுறையை அறிமுகப்படுத்தியது.

மற்றொரு கண்ணோட்டத்தில் நோக்கினால், இதை ஒரு தேர்தல் நேர யுக்தி என்று கூட அணுகலாம். உயர்ஜாதிகளின் வாக்குவங்கி என்பது பாஜகவின் திடமான வாக்குவங்கி எனலாம். பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் மூலம் தாங்கள் தான் உயர்ஜாதிகளின் நலன்களைக் காக்கும் உண்மையான அரசியல் பிரதிநிதி என்றும், காங்கிரசு கட்சி உயர்ஜாதி நலன்களுக்கு எதிரான கட்சி, இந்து மதத்திற்கு எதிரான கட்சி என்றும் முன்னிறுத்தி வருகின்றனர். ஆனால் பாஜக குற்றஞ்சாட்டுவது போல் காங்கிரசு கட்சி உயர்சாதிகளின் நலன்களைப் பாதுகாப்பதிலோ, இந்து மதத்தை முன்னிறுத்துவதையோ என்றும் சமரசம் செய்து கொண்டது கிடையாது. சொல்லப்போனால், உயர்ஜாதி ஏழைகளின் 10% இட ஒதுக்கீட்டை 1991 இல் முன்மொழிந்ததே காங்கிரசு தான். அது மட்டுமல்லாது, 1955 ஆம் ஆண்டிலேயே 24 மாநிலங்களில் பசுவதை தடைச் சட்டத்தை கொண்டு வந்தது கூட காங்கிரசு கட்சி தான். அந்த காலகட்டத்தில் பாஜக என்ற ஒரு கட்சியே உருவாகியிருக்கவில்லை. தற்போது கூட காங்கிரசு கட்சி தனது உயர்ஜாதிய நலன்களை பாதுகாக்கும் நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை, சொல்லப் போனால் இன்னும் உக்கிரமாகவே மாறியிருக்கிறார்கள். அதன் சமீபத்திய உதாரணம் ராகுல் காந்தி இந்து கோவில்களுக்கு செல்வதும், தனது பூணூலை எடுத்துக் காட்டுவதும் போன்ற நிகழ்வுகள் ஆகும்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான சமீபத்திய வழக்கில் பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் சரியாக வாதாடாத காரணத்தால் உச்சநீதிமன்றம் வண்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் விதமாக அமைந்தது. இதனால் கடுமையான போராட்டங்களில் இறங்கிய பட்டியலின மக்கள் அமைப்புகள், அதன் காரணமாய் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் பழைய நிலைக்கே மாற்றப்பட்டது. இந்த நிகழ்வு உயர்ஜாதிகள் மத்தியில் இருந்த பாஜகவின் பிம்பத்தை கணிசமாகவே பாதித்தது. இதன் விளைவாய் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக பின்னடைவை சந்தித்தது. இதனால் பாஜக உயர்ஜாதிகளை திருப்திப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளதால் இந்த 10% இட ஒதுக்கீட்டில் பாஜக ஆர்வம் காட்டுகிறது. இதில் ஆச்சரியமான அம்சம் என்னவென்றால் கடந்த நான்கு ஆண்டுகளாக மாநிலங்களவையில் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடையாது, ஆனால் உயர்ஜாதிகளுக்கான 10% இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக பெரும்பான்மை கிட்டியிருக்கிறது. காங்கிரசு, கம்யூனிஸ்ட்டு உட்பட பல எதிர்க்கட்சிகளும் இச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். திமுக உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இச்சட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். காங்கிரசு கட்சியை போன்று இடதுசாரிகளும் வரலாறு நெடுகிலும் இத்தகைய இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர், சமீபத்தில் கேரளாவிலும் இந்த இட ஒதுக்கீடு திட்டத்தை அமுல்படுத்த முயற்சித்துள்ளனர். 

10% EWS இடதுக்கீட்டின் சிக்கல்கள்: 

103 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதாவின் மூலம் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 15, 16 திருத்தப்பட்டன. இந்த திருத்தமானது ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்கிறது. ஆனால் இதில் யார் அந்த ஏழைகள் என்பதை தீர்மானிக்கும் காரணிகள் தான் பெரும் முரண்பாடாக உள்ளது: ஐந்து ஏக்கர் அல்லது அதற்கு குறைவான நிலம் உடையவர்கள், அல்லது 1000 சதுரடிக்கு வீட்டுமனை உள்ளவர்கள், அல்லது ஆண்டு வருமானம் எட்டு லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்கள் ஏழைகள் எனப்படுகின்றனர். இந்த வரையறை நிலமற்ற ஏழைகளாக வாழும் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் வரமாட்டார்கள்.

எந்தெந்த சமூகங்கள் அரசு வேலைவாய்ப்புகளில் போதுமான அளவு பிரதிநிதித்துவ படுத்தப்படவில்லையோ அந்த சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 16(4) சொல்கிறது. இதை வைத்துக் கொண்டு உயர்ஜாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரிக்க முடியுமா? அரசின் பொது நிறுவனங்களில் உயர்ஜாதிகளின் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தமட்டில் அவர்கள் அளவுக்கு அதிகமாகவே உள்ளார்கள். சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி பட்டியலின, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசின் உயர் பொறுப்புகளில் (Group A & B) போதுமான அளவுக்கு பிரதிநிதித்துவ படுத்தப்படவில்லை என்பதையே காட்டுகிறது. 40 மத்திய பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களில் வெறும் 14.38% பேராசிரியர்களே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், அதற்கு மேல் இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் 0% ஆகவே உள்ளது. மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு உதவிப் பேராசிரியர் பணிகளில் மட்டுமே உள்ளது, இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணிகளுக்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்கப்படுவதில்லை.

அது மட்டுமல்லாது, 95% பேராசிரியர்கள், 92.9% இணை பேராசிரியர்கள், 66.27% துணை பேராசிரியர்கள் பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள் என்கிறது இந்த புள்ளிவிவரம். அதே போன்று, ரயில்வே பணிகளில் 68.82%, இந்திய அரசின் 71 துறைகளில் 62.95%, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் 66.17%, கேபினட் தலைமை செயலாளர்களில் 80.25%, நிதி ஆயோக்கில் 73.84%, ஜனாதிபதியின் செயலகத்தில் 74.62%, துணை-ஜனாதிபதி செயலகத்தில் 76.92%, UPSC இல் 64.76%, மத்திய தணிக்கை துறையில் 66.79%.பேர் உயர்ஜாதிகளே உள்ளனர். அரசின் பல்வேறு உயர் பொறுப்புகளில் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் தேவையான அளவுக்கு பிரதிநிதித்துவ படுத்தப்படவில்லை. ஆதலால், ஏற்கனவே அதீதமாக பிரதிநிதித்துவம் கிட்டியிருக்கும் உயர்ஜாதிகளுக்கு ஏன் மீண்டும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பது தவிர்க்க முடியாத கேள்வியாக உள்ளது. 

இட ஒதுக்கீடு என்பது வறுமையை ஒழிக்க கொண்டு வரப்பட்ட திட்டமன்று. குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமெனில் அச்சமூகத்தினர் ஏதோ ஒரு வகையில் சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகமாக இருக்கவேண்டும். அப்படியானால் அக்குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளங்களும், நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை கணக்கில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்படலாம். வறுமையை ஒழிக்க முன்னெடுக்கப்பட்ட பல திட்டங்களில், குறிப்பாக பொது விநியோகத் திட்டத்தில் கூட இன்றும் பட்டியலின மக்கள் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். மற்றொரு கேள்வி என்னவென்றால் ஐந்து ஏக்கர் நிலம், அல்லது 8 லட்சம் ஆண்டு வருமானம் கொண்ட உயர்ஜாதி ஏழைகளால் அரசின் தலையீடு இல்லாமல் தங்கள் "வறுமையிலிருந்து" வெளிவர முடியுமா இல்லையா என்பது தான். இக்கேள்விக்கு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு ஆம் எனலாம், ஏனென்றால் ஜாதிய சமூகத்தின் சமூக-பொருளாதார நடவடிக்கைகளில் உயர்ஜாதிகள் எங்கும் பாகுபாட்டை சந்திப்பதில்லை, மேலும் இந்த சமூக-பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவது உயர்ஜாதிகளுக்கு எளிதாகவே உள்ளது. பட்டியலின மக்கள் தினம் சந்திக்கும் ஜாதிய பாகுபாடு, தீண்டாமை போன்ற சமூக காரணிகள் தான் அம்மக்களை வறுமையில் வைத்துள்ளது, ஆனால் இது போன்ற எந்த சமூக காரணிகளையும் உயர்ஜாதிகள் எதிர்கொள்வதில்லை. 

இதுவரை எந்த உயர்ஜாதியினரும் தங்களின் ஜாதிய அடையாளத்தினால் எந்தவித பொருளாதார நடவடிக்கைகளிலும் ஒதுக்கப்பட்டதில்லை. ஆனால் எவ்வித பொருளாதார நடவடிக்கைகளில் ஒரு பட்டியல் சாதியினர் ஈடுபட்டாலும் அவர்கள் ஜாதியப் பாகுபாட்டை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆதலால் உயர்ஜாதிகளுக்கான பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு என்பது எந்த விதத்திலும் உயர்ஜாதிகளின் வறுமையை ஒழிக்கும் தீர்வல்ல. அத்தோடு நில்லாமல், இந்த இட ஒதுக்கீட்டால் ஏற்கனவே அதீத பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் உயர்சாதிகளுக்கு மீண்டும் பிரதிநிதித்துவம் வழங்குவதாகவே அமையும். இட ஒதுக்கீடு என்பது ஜாதியம் போன்ற சமூக காரணிகளால் புறக்கணிக்கப்படும் சமூகங்களுக்கு சரியான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கு கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இட ஒதுக்கீடு நிச்சயமாக வறுமையை ஒழிக்க வேண்டி கொண்டு வரப்பட்டதல்ல.

- ரஜனிகாந்த்

நன்றி: Round Table India இணையதளம் (2019, ஜனவரி 22 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: நாஞ்சில் திராவிடன்