நம் ஒவ்வொருவருடைய வாழ்நாளிலும் மறக்க முடியாத எத்தனையோ அனுபவங்களையும் பல நினைவுகளையும் பாடங்களையும் கற்று தந்த இடங்களில் மிக முக்கியமானது பள்ளிக்கூடம்தான். பள்ளிக்கூடங்கள்தான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடமாகவும் வாழ்க்கைக்கு அவசியமான கல்வியையும் நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொள்கின்ற இடமாகவும் இருக்கிறது. அத்தகைய பள்ளிகள் எந்தளவுக்கு தூய்மையாக இருக்கிறது என்றால் கொஞ்சம் கேள்விக்குறிதான்.

ஒரு பள்ளி அமைதியான சூழலில் அமைந்திருக்க வேண்டும். இயற்கை அழகோடு சேர்ந்த சூழலாக அமைந்திருப்பதுடன் மாணவர்களின் கற்றலுக்கும் மகிழ்ச்சிக்கும் ஏதுவாய் அமைந்திருக்க வேண்டும். அதோடு பசுமையான தூய்மையான சுற்றுச்சூழலை கொண்டதாக இருக்க வேண்டும், நல்ல குடிநீர் வசதி, காற்றோட்டம் உள்ள வகுப்பறைகள், விளையாடுவதற்கான உபகரணங்கள், மைதானங்கள் எனப் பலவும் இருக்க வேண்டும் என்று சொல்லும் நம்மில் பலர் அதன் தூய்மை குறித்து அதிகளவு அக்கறைப்படுவது கிடையாது. அதன் வெளிப்பாடுதான் அரசும் இதுவரை பள்ளிகளை தூய்மையாக பராமரிப்பதில் மெத்தனம் காட்டி வருகிறது.

பள்ளிகளில் கல்வி கற்று வெளியேறுகின்ற மாணவர்கள் நாளைய சமுதாயத்தை உருவாக்க இருக்கிறார்கள். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் ஒரு மாணவன் எவ்வாறு தன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கக் கற்று கொள்கிறானோ அதுபோலவே எதிர்காலத்தில் இந்தச் சமூகத்திற்கும் பங்காற்றுகிறான் என்பதை மறுக்க இயலாது. பள்ளிகள் தூய்மையாகப் பராமரிக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு ஒருபக்கம் இருப்பினும் அதற்கான காரணங்களை நாம் அலசி ஆராய வேண்டுமல்லவா?students cleaning toiletsகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டதில், வாரத்தில் வியாழக்கிழமை தோறும் காலையில் பள்ளி வளாகத்தை, வகுப்பு ஆசிரியர்கள் தலைமையில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மூலம் தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் தூய்மைப் பணியை புகைப்படம் எடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பள்ளி வளாகத் தூய்மை குறித்து மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் திடீரென சோதனையிடலாம். அப்போது, தூய்மையின்றி உள்ள பள்ளிகளுக்கு அபராதமும் விதிக்கப்படும். எனவே, அனைத்துப் பள்ளிகளும் தூய்மையான சூழலைத் தொடர்ந்து பராமரிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று கூறியிருந்திருக்கிறார். இந்தத் திட்டத்தின் வாயிலாக மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மட்டுமின்றி, தாம் வசிக்கும் இடத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மாணவர்களுக்கு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதைக் கருத்தில் கொண்டு சில பள்ளிகளில் மாணவர்கள் கழிவறையை தூய்மை செய்யும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. மாணவிகள் தண்ணீர் பிடித்து வகுப்பறைக்குள் கொண்டு சென்று வைக்கும் வீடியோக்களும் வெளியானது. பலரும் இந்த வீடியோக்களுக்கு கண்டனங்களைத் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் மாணவர்கள் பள்ளியை தூய்மையாக வைத்துக் கொள்ள வாரத்தில் ஒருநாள் பயிற்சி உதவியாக இருக்கும் என சில ஆசிரியர்கள் மாணவர்களை கொண்டு வளாகத்தை சுத்தம் செய்த நிகழ்வும், இன்னொரு புறம் மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய சொல்லும் அவலமும் நடந்ததாகவும் அதன் பின்னர் இத்திட்டம் கைவிடப்பட்டதாக அறிய முடிகிறது.

நடப்பது என்ன?

பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் அலுவலக உதவியாளர் என்ற பணியிடம் இல்லை என்பது பலருக்கும் தெரியும். அதே பள்ளியில் தூய்மைப் பணியாளர் பகுதிநேரமாகவோ அல்லது அதுவும் இல்லாமலோ இருக்கிற சூழல்தான் அதிகமாக உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் அத்தகைய பணிகளின் போது பெரும்பாலும் ஆசிரியர்கள் மாணவர்களை கொண்டுதான் செய்ய வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகின்றனர். சிறு சிறு பணிகளை கூட மாணவர்களின் வழியாக பெறுவது ஒரு பக்கம் இருந்தாலும் அவற்றில் கழிப்பறை சுத்தம் செய்வதில் மட்டும் அங்குள்ள மாணவர்களில் பட்டியலின சாதியை சார்ந்த மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதன் நோக்கம் என்னவென்று புரிந்து கொள்ள முடியும். எந்தவொரு மாணவரும் கழிப்பறை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்துவது குற்றம்தான். அதிலும் சாதிய மனோபாவத்தோடு ஆசிரியர்கள் மாணவர்களை நடத்தும் போது அத்தகைய சூழலில் அம்மாணவர்கள் சக மாணவர்களோடு கலந்து படிப்பது முதல் அனைத்துவிதமான செயல்பாடுகளிலிருந்து சில சமயம் ஓரங்கட்டப்படுவார்கள் என்பதும் நிதர்சன உண்மை.

சமூகத்தில் தூய்மைப் பணியை செய்யும் நபர்களை கண்டால் பிறர் ஒதுங்கிப் போவது போலவும், அதேநேரத்தில் தூய்மைப் பணியாளர்கள் அரசுப் பணியாளர்கள் என்றாலும் அவர்களை சக அரசுப் பணியாளர்கள் இணக்கமாக நடத்துவது கிடையாது என்ற புரிதலில் இருந்து இவற்றை தொடர்புபடுத்திப் பார்க்கலாம். இத்தகைய வேற்றுமையை பள்ளிக் கூடங்களில் இருந்து மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வாயிலாக கிடைக்கும் போது சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை மிக அழுத்தமாக கற்பிக்கும் இடமாக பள்ளிகள் அமைந்துவிடுகிறது என்ற அபத்தத்தை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

மாணவர்களின் இயல்பு ஆசிரியர்கள் ஏதேனும் வேலை சொன்னால் அதை உடனே செய்து முடித்து நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று போட்டிப் போட்டுக் கொண்டு செய்யும் மாணவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவற்றில் தண்ணீர் பிடித்துக் கொடுப்பது, கடைக்குப் போய்விட்டு வருவது போன்றவற்றை குறிப்பிடலாம். ஆனால் கழிப்பறை சுத்தம் செய்வது என்பது எந்தவொரு மாணவரும் விரும்பிச் செய்ய வாய்ப்பு இல்லை. அவற்றை கட்டாயத்தின் பெயரில்தான் செய்ய வற்புறுத்தப்படுவதோ அல்லது பணிக்கப்படுதோ நடக்கிறது என்பதை யூகித்துக் கொள்ளலாம். அத்தகைய பணியை ஆசிரியர்கள் சொன்ன பின்னர் ஒரு மாணவனால் செய்யாமல் வகுப்பறைக்கு செல்ல முடியுமா? சில இடங்களில் ஆசிரியர்கள் மாணவர்கள் கழிப்பறையை சரியாக சுத்தம் செய்கிறார்களா? என்பதை கண்காணித்துக் கொண்டும் இருப்பதை வீடியோ அல்லது செய்திகளில் இடம் பெறுவதை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் எக்காரணம் கொண்டும் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது. பள்ளிகளை தூய்மைப்படுத்த 100 நாட்கள் வேலைத்திட்ட பணியாளர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதுவொரு வகையில் வரவேற்கத் தக்கதுதான் என்றாலும் நூறு நாள் வேலைத்திட்ட ஆட்கள் காலை ஒன்பது மணிக்கு மேல்தான் பணிக்கு வருவார்கள். அவர்கள் அப்படியே வந்தாலும் பள்ளி வளாகம் உள்பட சுற்றுப்புற பகுதியை சுத்தம் செய்வார்களே தவிர கழிப்பறையை யார் சுத்தம் செய்வார்கள்? கழிப்பறையை சுத்தம் செய்ய அதற்கென பணியாளரை நியமிப்பதுதானே சாலச் சிறந்ததாக இருக்கும்.

தொடரும் பிரச்சனைகள்

பிப்ரவரி 09, 2023 அன்று தி இந்து தமிழ் நாளிதழ் வெளிட்ட தலையங்கத்தில், ‘தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளின் போது மாணவ-மாணவியரை ஈடுபடுத்தும் போக்கு தொடர்வது தவறான ஒரு நடைமுறை’ எனக் குறிப்பிட்டிருந்தது. அவற்றிற்கு சில சம்பவங்களை குறிப்பிட்டும் காட்டியிருந்தது.

‘சமீபத்தில் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி கழிப்பறையையும் பள்ளி வாளாகத்தையும் மாணவர்கள் சுத்தம் செய்யும் காணொளி வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. பெற்றோரும் அரசியல் கட்சியினரும் இந்த அவலத்தை எதிர்த்து குரல் எழுப்பினர். இதையடுத்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த நடவடிக்கை மட்டும் போதுமா என்பதுதான் அனைவரின் மனதிலும் எழுந்திருக்கும் கேள்வி. பள்ளிக்கு வரும் மாணவர்களை படிப்பதை தவிர வேறு எந்தப் பணியிலும் ஈடுபடுத்த கூடாது என்றும் இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்து வருகிறார். ஆனாலும் பிரச்சினைகள் ஒழிந்தபாடு இல்லை. குறிப்பாக கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்களை வற்புறுத்தி ஈடுபடுத்தும் இழிவான போக்கு தொடரவே செய்கிறது.

கடந்த டிசம்பரில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த பட்டியல் இன மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்திய தலைமையாசிரியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 2021 டிசம்பரில் திருப்பூரிலும் கடந்த ஏப்ரலில் கோவையிலும் இதே குற்றத்தை செய்த ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என இரு சம்பவங்களைக் குறிப்பிட்டுள்ளது.

ஈரோட்டில் பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக பாலக்கரை அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை ஜெ.கீதாராணி (53)யை மாவட்ட போலீசார் கைது செய்தனர். அந்தப் பள்ளியில் இரண்டு கழிப்பறைகள் உள்ளன, மாணவர்களுக்கு ஒரு கழிப்பறை மற்றும் ஆசிரியர்களுக்கு மற்றொரு கழிப்பறை உள்ளது. அதை தவறாமல் சுத்தம் செய்ய தலைமையாசிரியர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை தேர்வு செய்து கழிப்பறையை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தி இருக்கிறார். இதைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோரின் புகாரின் அடிப்படையில், பெருந்துறை போலீசார் தலைமையாசிரியை மீது ஐபிசி பிரிவு 284 (விஷப் பொருள் தொடர்பாக அலட்சியமாக நடந்து கொண்டனர்), சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 பிரிவு 75 இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3(1)(r) மற்றும் 3(1)(I) இன் ST திருத்தச் சட்டம் 2015 மற்றும் கீதாராணி கைது செய்யப்பட்டார். இந்தப் புகார் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) விசாரணை நடத்தி, தலைமை ஆசிரியையை சஸ்பெண்ட் செய்தனர்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கும்மனூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கும்மனூர் மற்றும் சுற்றுபுற கிராமங்களை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தூய்மைப் பணியாளர் இல்லாத நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்துச் சென்று, பள்ளி கழிவறையை தூய்மை செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளியை தூய்மை செய்யும் பணிக்கு மாணவர்கள் ஈடுபடுத்தக்கூடாது என அரசு உத்தரவிட்டிருந்த நிலையிலும், மாணவர்களை கழிவறையை தூய்மை செய்ய வைத்த பள்ளி ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் நேரில் விசாரணை மேற்கொண்டு, தனது அறிக்கையை பள்ளிக்கல்வித்துயினரிடம் தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில், பள்ளி மாணவர்கள் தண்ணீர் சுமந்து சென்றது உறுதியானது. இதனை அடுத்து, கும்மனூர் பள்ளியின் தலைமை ஆசிரியை சென்னம்மாள், ஆசிரியர் சந்திரசேகர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.

ஜாதி மேட்டின்மை உணர்வு கொண்ட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் வெளிச்சத்துக்கு வரும்போது அவர்கள் உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும்; எந்தச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆனாலும் அவர்களை கழிப்பறை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்துவது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளிகளில் கழிப்பறை சுத்தம் செய்யும் பணி போன்றவற்றில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்;ட வகுப்பு மாணணவர்களே அதிகளவில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பதற்கு மேற்கண்ட சம்பவங்களே போதுமானது.

துப்புரவுப் பணியாளர்கள் நியமனத்தில் அக்கறையின்மை

அரசு பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்களின் போதாமையால் வெகுசில இடங்களில் ஆசிரியர்களே கழிப்பறையை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய அல்லது பெரும்பாலும் மாணவர்களை வைத்து அவற்றில் ஈடுபடுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதை மறுத்து விட முடியாது.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், “பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியை உள்ளாட்சித்துறை மூலம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக குறிப்பிட்ட தொகை செலுத்தப்படுகிறது. ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளில், தலைமையாசிரியர்கள் மூலம் பணி மேற்கொள்ளப்படுகிறது. உள்ளாட்சி நிர்வாக அலுவலர்கள் மூலமாகவும் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் வெறுமனே உத்தரவிடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். ஆனால் அங்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பதை நேரடியாக போய் பார்க்கிறார்களா? என்றால் கேள்விக்குறிதான்.

பள்ளி மேலாண்மை குழுவின் பங்களிப்பு

அரசு சார்பில் முறையாக பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்களை நியமனம் செய்யாத காரணத்தினால் அவர்களின் பற்றாக்குறையை போக்க மாணவர்களை கொண்டு கழிப்பறைகளை சுத்தம் செய்வதை ஏற்க முடியாது எனப் பொதுவாக நாம் பேசிக் கொண்டிருந்தாலும் அரசுத் தரப்பில் தூய்மைப் பணியாளர்களை நிரந்திரமாக பணியமர்த்த சொல்வதில் பெற்றோர்-ஆசிரியர்கள் உள்பட அனைவரும் மெத்தம் காட்டுவதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பள்ளிகளை தூய்மையாகப் பராமரிப்பதில் அன்றாடம் கண்காணிப்பதை பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக செய்வதோடு, அரசு சார்பில் நிரந்திரமான தூய்மைப் பணியாளர் இடங்களை பணியமர்த்தும் வரையில் அன்றாடம் பள்ளியின் தூய்மையை பராமரிக்க அரசின் மற்றொரு அங்கமான உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக இதற்கென ஒரு பணியாளரை நியமிக்க உத்தரவாதப்படுத்தலாம். இதற்காக ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்களில் சிறப்பு தீர்மானங்களை நிறைவேற்றி செயல்படுத்த பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக செய்ய உத்திரவாதப்படுத்தும் போது இதுபோன்ற சிக்கல்கள் தீர்வு காணப்பட்டு, இதுபோன்ற பிரச்சனைகளை தீர்ப்பதோடு மட்டுமில்லாமல் பள்ளி மேலாண்மை குழுக்கள் வலுவான அமைப்பாக உருப்பெறும். இதற்கான உத்தரவை அரசுத் தரப்பில் வெளியிட்டால் இதற்கு உகந்ததாக இருக்கும்.

ஊதியப் பற்றாக்குறை

கல்வி வளர்ச்சி கூட்டமைப்பு சார்பில், பள்ளிகளில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்யும் பொறுப்பை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்திடம் வழங்க வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடாது. மேலும் தொடக்கப் பள்ளிகளில் கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை மூலம் மாதம் ரூ.1000 மட்டுமே ஒதுக்கப்படுகிறது. நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.1500 ஒதுக்கீடு. இந்தக் கூலிக்கு யார் வருவார்கள்? அதை உயர்த்த வேண்டும். இல்லையெனில் பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்வதற்கான நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் பொறுப்பில் கழிப்பறைகளை விட்டுவிடக் கூடாது என்கின்றனர்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாடங்களை நடத்துவதில் அக்கறை காட்டுவதோடு பள்ளியை தூய்மையாக வைத்திருக்க ஒதுக்கப்பட்ட உரிய பணியாளர்கள் அல்லது உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக அதற்கான உரிய ஏற்பாடுகளை செய்வதில் பக்கபலமாக இருந்து பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக பள்ளி தூய்மையை மேம்படுத்த உதவியாக இருந்தாலே போதுமானது.

சம்பளம் வழங்க கோரிக்கை :

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கவும் அதோடு, இன்னும் நிரப்பப்படாத பள்ளிகளில் தூய்மை பணியாளர்களை நியமிக்க ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளில் தூய்மை பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் 30,798 பேர் கடந்த ஓராண்டாக மாத ஊதியம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஆசிரியர்களுக்கு ஆயிரக்கணக்கில் சம்பளம் கொடுக்க அரசிடம் பணம் இருக்கிறது. அதேநேரத்தில் பள்ளியின் தூய்மை மிக அடிப்படையான பணிகளில் ஒன்று. அத்தகைய பணிகளுக்கு சம்பளம் கொடுக்க அரசிடம் பணம் இல்லாமல் இருக்குமா என்பதே பலரின் கேள்வி.

தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் 23,939 ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளும், 6,859 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இதில் தலா ஒரு தூய்மைப் பணியாளர் வீதம் மொத்தம் 30,798 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஊதியமின்றி சிரமப்படுகின்றனர் என்பது எதார்த்த உண்மை.

‘பள்ளியில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் பணியாளர்கள் வேறு கூலி வேலைக்குச் செல்ல முடியவில்லை. காலையில் கழிப்பறைகள், வகுப்பறைகள், பள்ளி வளாகம், பள்ளியின் முன்புறம் உள்ளிட்ட பகுதிகளை துப்புரவு செய்ய வேண்டும். மதியம் மாணவர்கள் சத்துணவு சாப்பிட்ட பின்னர் சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு ஒரு நாளைக்கு கூலி ரூ.33 மட்டுமே. கடந்த 11 மாதங்களாக இந்த ஊதியமும் வழங்கப்படவில்லை. இந்த வேலை அரசு வேலையாக மாறிவிடும், குறைந்தது மாதம் ரூ.10 ஆயிரமாவது ஊதியமாகக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். என்னைப் போன்று தமிழகம் முழுவதும் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஊதியமின்றி சிரமப்படுகின்றனர். தமிழக அரசு உடனே தனி கவனம் செலுத்தி தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் நிரந்தரப் பணி வழங்க வேண்டும்’ என்று பணியாளர் ஒருவரின் அவரின் அவலத்தை கூறுகிறார்.

நிதி ஒதுக்கீடு

பள்ளி கல்வித்துறை கடந்த டிசம்பர் 2022 இல் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அரசு பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள பள்ளி ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், அரசு பள்ளிகள் தூயமையாக இருந்தால் மாணவர்கள் பாதுகாப்பாகவும் சுகாதாரமாகவும் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 31 ஆயிரத்து 210 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் என்ற அளவில் ரூ.6 கோடியே 24 லட்சம் நிதி ஒதிக்கீடு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிதி வழங்குவதன் மூலம் அரசு பள்ளிகள் முறையாக தூய்மைப் பணிகளை மேற்கொள்கின்றனவா? என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வெறுமனே இரண்டாயிரத்தில் ஒட்டுமொத்த பள்ளியிலும் தூய்மைப் பணியை நிறைவு செய்துவிட முடியுமா? என்ற சிந்தனையெல்லாம் அரசுக்கு இல்லை. ஓட்டுமொத்தமாகப் பார்க்கும் போது 6 கோடி ரூபாய் பெரிதாக தோன்றலாம். அதை வைத்து மூன்று பேருக்கு ஒருநாள் சம்பளம் வேண்டுமானால் கொடுக்கலாம். வேறு என்ன செய்துவிட முடியும்? அன்றாடம் பணிசெய்யும் பணியாளாருக்கு உரிய சமபளம் கொடுக்கப்படவில்லை என்பது ஒருபுறம். இன்னும் பல பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்களே நியமிக்கப்படாத சூழலும் இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் வெறுமனே இரண்டாயிரத்தை ஒதுக்கி பள்ளியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது கண்துடைப்பாகத்தான் தெரிகிறது.

தூய்மைப் பள்ளி விருதுக்கு விண்ணப்பிக்க தயக்கம்

மத்திய அரசின் தூய்மைப் பாரத திட்டத்தின் கீழ் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், பள்ளிகளுக்கு ‘தூய்மை பள்ளி’ விருது வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டது. இதில், துவக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுற்றுப்புற தூய்மை, அங்கு படிக்கும் குழந்தைகளின் சுய சுத்தம், கழிப்பறைகளை தூய்மையாக பராமரித்தல், தரமான வகையில் உணவுகளை தயாரித்தல், குப்பைகளை அப்புறப்படுத்துதல், வளரிளம் பருவ குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் என அனைத்தையும் ஆய்வு செய்து, அதில் தரமுள்ள பள்ளிக்குத் தூய்மை பள்ளிக்கான விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டிலும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் கூடுதலாக குழந்தைகள், கழிப்பறைகளைப் பயன்படுத்திவிட்டு கை, கால் கழுவுதல், அங்கு பயன்படுத்துவதற்கான தண்ணீர் குழாய்களிலிருந்து வருகிறதா அல்லது, தேக்கி வைக்கப்பட்டதா என்பது குறித்தும், புகைப்படங்கள் எடுத்து அனுப்பவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தூய்மைப் பள்ளியை தேர்ந்தெடுப்பதில், இதுபோல் கூடுதல் விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால், இவை அனைத்தும், குறிப்பிட்ட பள்ளிகளில், பராமரிப்பு பதிவுக்கான கண்துடைப்பாக மட்டுமே உள்ளது.

பல கிராமப்புற பள்ளிகளில் அதிலும் மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளில், தூய்மைப் பணியாளர் என ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். அதுவும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், தற்காலிக துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படும் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளார்கள். திட்டம் துவக்கப்பட்டு இரண்டாண்டுகளாகியும், தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியத்தில் எந்த மாற்றமும் இல்லை. குறைந்தபட்சமாக, 750 முதல் அதிகபட்சமாக 2,500 ரூபாய் வரை மட்டுமே துவக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை, தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. துவக்கத்தில், மாதந்தோறும் பணிசெய்த பணியாளர்கள் சம்பளப் பற்றாக்குறையால் இப்போது வாரத்திற்கு இருமுறை, சில நாட்களில் ஒரு வாரத்துக்கு மேலாகியும் வராமல் போவது என இடத்திற்கு தகுந்தவாறு உள்ளது.

சில இடங்களில் பள்ளியை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்பதற்காக பள்ளி தலைமையாசிரியரே தனது சொந்த செலவில் தூய்மைப் பணியாளருக்கு வருகை தரும் நாளன்று நூறு ரூபாய் வீதம் கொடுத்து வேலை செய்ய சொல்லும் நிலையும் உள்ளது.

இதுபோன்ற காரணங்கள் மட்டுமல்லாமல் போதியளவு ஊதியம் இல்லாததால், கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் இடையூறு நிலவுகிறது. இப்பிரச்னையால் இன்றைய நிலையில் பெரும்பான்மையான கிராமப்புற பள்ளிகளில் சுற்றுப்புற தூய்மை ஐம்பது சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் பட்சத்தில் இப்போது விருதுக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் இருக்கும் உண்மை நிலையை பதிவு செய்ய தயக்கம் காட்டுவது இயல்புதானே?

அதோடு இம்முறை விருதுக்கான ஆன்-லைன் பதிவில், நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு என நன்று, பரவாயில்லை, மோசம், மிகமோசம் என நான்கு நிலைகளை பதிவிடப்படும் விபரங்களைக்கொண்டு, கணிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களைக்கொண்டு, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் மாநில அளவில் உள்ள குழு பள்ளிகளில் ஆய்வுகள் நடத்தவும் தயாராக உள்ளன. பல பள்ளிகளில் பதிவுக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள், உண்மை நிலைக்கு நேர்மாறாய் இருப்பினும், வேறுவழியின்றி விபரங்களை பள்ளி நிர்வாகங்கள் பதிவிட வேண்டிய நிலையும் இருப்பதை பார்க்க முடிகிறது.

இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘துப்புரவு பணியாளர்களுக்கு, ஊதியம் கூடுதலாக வழங்கினால் மட்டுமே, முழுமையாக பணிகளை மேற்கொள்ள முடியும். ஆசிரியர்களின் முயற்சியால், தற்காலிக பணியாளர்களை நியமித்தாலும், அவர்களும் தொடர்ந்து வருவதில்லை. இந்நிலையில், பள்ளி நிர்வாகங்கள் என்ன செய்ய முடியும். முடிந்தவரை, தூய்மைக்கான வழிகளை மேற்கொண்டுதான் இருக்கிறோம். தூய்மைப் பணிகளுக்கான வசதிகளை செய்யாமல், தூய்மை குறித்து பதிவுகளை கேட்பதில் எந்தப் பலனுமில்லை,’ என்கிறார்.

இறுதியாக நம்முடைய புரிதலுக்கு…

தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் தூய்மைப் பணிகளுக்குப் பெரும்பாலும் பகுதிநேர ஊழியர்களே நியமிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மிக குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. இதனால் அந்தப் பணிகளுக்கு ஆள் கிடைப்பதும் அரிதாக உள்ளது. அதனால் அரசுப் பள்ளிகள் என்றாலே போதிய சுகாதரம் இல்லாமல்தான் இருக்கும் என்ற மனநிலை பரவாலக இருக்கிறது. அதேநேரத்தில் சில தனியார் பள்ளிகள் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு பரவலாக பெற்றோரின் கவனத்தை ஈர்த்து அவர்களிடம் கட்டணத் தொகை வசூலித்துக் கொள்கிறது என்பது ஒருபக்கம் இருப்பினும் தனியார் பள்ளிகள் மீதான மோகம் பெற்றோர்களுக்குப் பெருகி வருவதற்கான காரணம் தூய்மையான சூழலும் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.

ஆகவே அரசும் இவற்றை கவனத்தில் கொண்டு பள்ளிகளின் தூய்மை மிக மிக அவசியம். அதற்குரிய பணியிடங்களில் போதுமான எண்ணிக்கையிலான தூய்மைப் பணியாளர்களை உரிய ஊதியத்துடன் அனைத்து அரசு பள்ளிகளில் நியமிக்க வேண்டிய கடமை அரசு முன்னுரிமை அளித்து நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க முடியும். மாணவர்களும் சுகாதரமான சூழலில் கல்வி கற்று பின்னாளில் சுற்றுப்புறத்தையும் தூய்மையாகப் பராமரிக்க உறுதுணை புரிவார்கள்!

- மு.தமிழ்ச்செல்வன்