ஒன்றிய அரசு கொண்டுவந்த உயர்சாதியினருக்கான 10% EWS இட ஒதுக்கீட்டுச் சட்டத்துக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது இட ஒதுக்கீட்டின் உண்மை நோக்கம் குறித்தான தீவிரமான விவாதங்களை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து மிகுந்த கவலை தெரிவித்துள்ள சட்ட வல்லுனர்கள் இது இட ஒதுக்கீட்டின் அடிப்படை சாராம்சத்தையே குலைத்துப் போட்டுவிடும் என அச்சம் தெரிவிக்கின்றனர். திமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற ஒரு சில கட்சிகளைத் தவிர்த்து ஏனைய கட்சிகள் அனைத்தும் இந்த விவகாரத்தைக் கடந்து செல்லவே விரும்புகின்றனர் அல்லது இன்னமும் குழப்பமான நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.

சாதி ரீதியாக வரலாற்று ரீதியாக சலுகை பெற்ற உயர்சாதியிலும் ஏழைகள் இருக்கின்றனர் என்ற காரணம் காட்டி, நடுத்தர வர்க்கத்தினர் பலரும் இந்த 10% EWS இட ஒதுக்கீட்டை ஆதரிக்கின்றனர். உயர்சாதிகளிலும் கஷ்டப்படும் ஏழைகள் இருக்கிறார்கள் என ஒடுக்கும் சாதிகளையும் ஒடுக்கப்படும் சாதிகளையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தும் தவறான, வெற்று உணர்ச்சிப்பூர்வ வாதங்களை அவர்கள் முன்வைக்கின்றனர். இவ்வாறு 10% EWS இட ஒதுக்கீட்டுக்கு வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ ஆதரவளிப்பது மக்களாக இருந்தாலும் அல்லது அவர்கள் நீதிபதிகளாக இருந்தாலும், அவர்களின் மனங்களில் சாதிவாரி இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஒவ்வாமை படிந்து கிடக்கிறது என்பதை இது காட்டுகிறது. சாதிவாரி இட ஒதுக்கீட்டு கொள்கையால் உயர்சாதியினர் தங்களுக்குரிய பங்கு கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர் என்னும் கருத்தை இந்த சாதிய சமூகம் அவர்களின் மனங்களில் ஆழமாகப் பதியவைத்துள்ளது. இட ஒதுக்கீட்டால் தகுதி பாதிக்கிறது என்னும் பிற்போக்குத்தனமான பசப்பல்வாதத்தின் நீட்சியாகவே இந்த கருத்தை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.brahmins 365பாகுபாடு என்றால் என்ன? புறக்கணிக்கப்படுவதன் கொடுமை என்ன? என்பதை புரிந்து கொள்ளத் தவறும் இடத்தில் இருந்து தான் இப்பிரச்சனை தொடங்குகிறது. இதை உணர, நீங்கள் ஏதுமற்றவர்கள் என்பதை உங்கள் பிறப்பு முதல் உங்களுக்கு தொடர்ந்து போதித்துக் கொண்டே இருக்கும் சமூக அமைப்பில் நீங்கள் பிறந்திருக்க வேண்டும். சமூக அளவிலும் பண்பாடு அளவிலும் உயர்வானவர்களாக தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் சாதிகளுக்கு அடிமைச் சேவகம் செய்யும் உயிரற்ற ஜடங்களாக மட்டுமே இந்தச் சமூக அமைப்பு ஒடுக்கப்பட்ட மக்களை மாற்றி வைத்துள்ளது. அவர்களின் உணர்ச்சிகளை எல்லாம் அழித்து அவர்களை நடைப்பிணமாக்கியுள்ளது.

ஒரு மனிதனை வளரும் சூழலே அந்த மனிதனை உருவாக்குகிறது. மனதின் மெல்லிய உணர்வுகளைச் செதுக்குகிறது. இந்தச் சமூகம் பற்றிய பார்வையையும் தான் யார் என்பதை தனக்கு அடையாளம் காட்டுவதிலும் ஒருவர் வாழும் சூழல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் நமது நாட்டில் ஒடுக்கப்பட்ட சாதிகளில் பிறக்கும் குழந்தைகளை இந்தச் சமூகம் எவ்வாறு நடத்துகிறது? நீங்கள் மற்றவர்களை விட தாழ்ந்தவர்கள், ஏதுமற்றவர்கள், முக்கியத்துவம் அற்றவர்கள், உங்களுக்கு எதிர்காலம் இல்லை, வாழ்க்கை முழுவதும் அடிமைச்சேவகம் செய்து உழன்று கிடப்பதே உங்கள் விதிவசம் என்னும் கருத்தை அம்மக்களே ஏற்றுக் கொள்ளும் வகையில் அவர்கள் மனதில் வஞ்சகமாக பதியவைத்துக் கொண்டே இருக்கிறது. தங்களுக்கு எது வேண்டும் என்பதை உணரும் சுய உறுதிப்பாடோ சுய விருப்பமோ இல்லாதவர்களாக அம்மக்களை மாற்றுகிறது.

இந்த முடிவற்ற சாதியச் சுழலில் இருந்து எப்படியாவது தப்பி மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து விட மாட்டோமா என அம்மக்கள் ஏங்குகின்றனர். இதிலிருந்து பார்க்கும் போது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கப்போகும் கல்வியும் வாய்ப்புகளும் வெறும் பொருளாதார முன்னேற்றத்தை மட்டும் அவர்களுக்கு அளிக்கப் போவதில்லை என்பதை நாம் உணரலாம். அதற்கும் மேலாக, அது யுகம் யுகமாக அடக்கி வைக்கப்பட்டுள்ள அவர்களின் சுயம் பீறிட்டு எழுந்து மகிழ்ச்சியில் ஆனந்தத் தாண்டவம் ஆடுவதற்கான திறவுகோலும் ஆகும். ஆரோக்கியமான சமூகத்தின் அளவுகோலாக உலக மகிழ்ச்சிக் குறியீட்டை கணக்கில் கொள்ளும் நாம், சமூகப் பொருளாதார திட்டங்களின் வெற்றியைக் கணக்கிடும் போது மகிழ்ச்சி என்னும் குறியீட்டை கவனத்தில் கொள்ளத் தவறுகிறோம்.

இட ஒதுக்கீடு என்பது வாய்ப்புகளையும் அதை அனுபவிக்கும் வெளியையும் மட்டும் தருவதோடு மட்டுமல்லாது காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட மகிழ்ச்சி என்னும் அடிப்படை உரிமையையும் அது சேர்த்தே வழங்குகிறது. கல்வியும் வேலைவாய்ப்பும் பொருளாதாரத்திற்கான அளவுகோல்கள் மட்டுமல்ல, அது கற்றலுக்கும், சமத்துவம் மற்றும் கண்ணியமான சமூக உறவுகளை உருவாக்குவதற்கும், இயற்கையின் பரிபூரணத்தை உணர்ந்து கொள்வதற்கும் சுய மரியாதையை மீட்டெடுப்பதற்குமான அளவுகோல்களும் ஆகும். அரசியலமைப்புச் சட்டத்தின் பீடிகையில் சொல்லப்பட்டுள்ள கண்ணியம் என்னும் சொல்லுக்கு இதுவே உண்மையாக விளக்கமமும் ஆகும்.

இதனால் தான் கிரீமிலேயர் என்று வகைப்படுத்துவதில் அதிக கவனம் தேவைப்படுகிறது. பொருளாதார நிலை மட்டுமே கிரீமிலேயருக்கான அளவுகோலாக இருக்க முடியாது. சமூக நிலை, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களையும் உள்ளடக்கியே கிரீமிலேயர் என்பது வரையறுக்கப்பட வேண்டும். சமூகத்தில் ஆழமாக வேரூன்றிப் போயிருக்கும் சாதிய மனநிலையை மாற்ற தலைமுறைகள் தாண்டிய சமூகப் பணி தேவை

ஒரு உதாரணத்தை பார்ப்போம். ஒடுக்கப்பட்ட சமூகப் பின்புலத்தைச் சேர்ந்த குழந்தை ஒன்று முதல் தலைமுறையாக பள்ளியில் படிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று ஒரு நாள் பள்ளி செல்ல மறுக்கிறது என்றால் அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் அதை மீண்டும் பள்ளிக்கு செல்ல வைக்க எவ்வளவு தூரம் கட்டாயப்படுத்துவார்கள் என்பது கேள்விக்குறியே. ஏனென்றால் பள்ளி செல்ல மாட்டேன் என்று குழந்தை அடம்பிடிப்பதே அந்தக் குடும்பத்திற்கும் அவர்களின் சமூகத்திற்கும் புதிய அனுபவம். ஒரு குழந்தையை பள்ளிக்கு செல்ல வைப்பதற்கான சமூகக் கட்டாயம், ஒழுங்குமுறை, அதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்வது உள்ளிட்டவைகளை முழுமையாக புரிந்து கொள்ளாததும் இங்கு முக்கியப் பங்காற்றுகிறது.

மாறாக, குழந்தை எவ்வளவு அடம்பிடித்தாலும் அதைக் கட்டாயப்படுத்தி பள்ளி செல்ல வைப்பதற்கான சாத்தியங்கள் சமூகத்தில் முன்னேறிய பிரிவினரில் மிக அதிகமாக உண்டு. ஏனென்றால் காலம் காலமாக பள்ளி செல்லும் தலைமுறைகளை கண்ட அந்தச் சமூகத்திற்கு இதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது நன்கு தெரிந்திருக்கும். எவ்வளவு ஏழையாக இருந்தாலும் ஒரு பார்ப்பனர் தனது குழந்தைக்கு கல்வி கிடைக்க வழிசெய்ய முடிவது இதனால்தான். வெறும் பொருளாதாரம் மட்டுமே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு அல்ல. பண்பாட்டு அளவில் நடக்க வேண்டிய இத்தகைய மாற்றங்களுக்கு துணைபோகக் கூடிய ஒரு சமூக அமைப்பு நமக்குத் தேவை. அதை விடுத்து, ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த குழந்தைகளிடமும் பெற்றொர்களிடமும் அவர்களுக்கு கல்வி கிடைப்பதே பெரிய விசயம் என்னும் ரீதியில் நாம் பேசிக் கொண்டிருந்தால், அந்தக் கல்வியால் ஏற்பட வேண்டிய பலன்கள் ஏற்படாது என்பதே நிதர்சனமான உண்மை. இதைத் தான் சஃபாய் கரம்சாரி ஆந்தோலன் என்னும் துப்புரவு பணியாளர்கள் இடையே சமூகப்பணியாற்றும் அமைப்பைச் சேர்ந்த பெசவாடா வில்சன் ஒருமுறை சொன்னார், ‘பள்ளிக்கூடம் எனக்கு மகிழ்ச்சியான இடமாக இல்லை’ என்று.

உயர்சாதிகளைச் சேர்ந்த ஏழைகளிடம் பணம் இல்லாதிருந்தாலும், அவர்களின் சமூக செல்வாக்கும், பண்பாட்டு ரீதியில் அவர்களுக்கு இருக்கும் சாதகமான சூழலும் அவர்களுக்கான ஆதரவைப் பெற அவர்களுக்கு துணை செய்கின்றன. செல்வாக்கான சாதியைச் சேர்ந்த ஒரு ஏழைக்கு ஆதரவு கிடைப்பது என்பது கடினமான காரியம் அல்ல. அவ்வாறு தான் இந்த சமூக அமைப்பும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சமூகக் காரணிகளை புறந்தள்ளி அனைத்தையும் பொருளாதார அளவுகோலால் அளந்துவிடலாம் என்பதே மிகத் தவறான வாதமாகும். இதே பொருளாதார அளவுகோலை பாலின சமத்துவத்துக்கு பயன்படுத்தினால் அது எவ்வளவு அபத்தமாக இருக்கும் என்பதை எளிதில் உணரலாம்.

ஆண்களுக்கு இருக்கும் சமூக மதிப்பு ஒரு ஏழை திருநருக்கு கிடைப்பதில்லை. ஒரு பெண்ணைக் கரம்பிடிக்கும் ஆணுக்கு கொடுக்கும் அங்கீகாரத்தை தன்பாலினத்தைச் சேர்ந்த ஒருவரைக் கரம்பிடிக்கும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இந்தச் சமூகம் கொடுப்பதில்லை. ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் இந்தச் சமூக நிலை ஒன்று தான். இந்த சமூகப் பண்பாட்டு ஏற்றத்தாழ்வுகளை களைவதில் தான் இடஒதுக்கீடு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் சுயமரியாதை கொண்ட மகிழ்ச்சியான வாழ்விற்கு மிகுந்த தடையாக உள்ளன.

உயர்சாதிகளில் இருக்கும் ஏழைகளின் மீது இந்தக் கட்டுரை பாராமுகம் காட்டுகிறதா? இல்லை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சீர்செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு முன்னெடுக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஆனால் இந்த ஏரணத்தை இட ஒதுக்கீடு கொள்கைக்கு பொருத்த முடியாது என்பதே உண்மை. ஏற்கெனவே சொன்னது போல, இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. மாறாக, அனைத்து வழிகளிலும் ஒடுக்குமுறைகளை சந்திக்கும் சமூகங்களை அறிவுத்தளத்திலும், சமூகத் தளத்திலும் உணர்வுத் தளத்திலும் முன்னேற்றம் காண வைக்கும் திட்டமே இடஒதுக்கீடு ஆகும்.

பணம் ஓர் இடத்தில் குவியும் போது அதுவே சமூக ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கிறது என்பது உயர்சாதியினரின் மற்றொரு வாதம் ஆகும். சமூகப் பாகுபாடுகளும், பண்பாட்டு ரீதியில் நடக்கும் ஒதுக்குதல்களும் அதை மதம் அங்கீகரிப்பதும் இத்தகைய பொருளாதாரக் குவிப்பினால் தான் என்றும், பணத்தின் மீது சில சமூகங்களுக்கு இருக்கும் பேராசையினாலும் ஏற்படும் விளைவுகள் இவை என்றும் இந்த வாதம் நீள்கிறது. ஆனால் மனிதனுக்கு இயல்பாகவே இருக்கும் அதிகாரப் பசியை நுட்பமாகக் கவனிக்கும் போது, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எந்த இடையூறும் கொடுக்காமல் யார் சமூக அநீதிகளை கண்டும் காணாமல் கடந்து செல்லத் தயாராக இருக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே செல்வம் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம். சாதி, இனம், மரபினம், பால், பாலினம், நிறம் உள்ளிட்ட பல அளவுகோல்கள் சமூகத்திற்கு உள்ளன. இந்த அளவுகோல்களை வைத்து தான் யார் எதற்கு தகுதியானவர்கள் என்பதை இந்த சமூகம் தீர்மானிக்கின்றதே தவிர ஒருவரின் தகுதியை வைத்து இந்த சமூகக் காரணிகள் எடை போடப்படுவதில்லை.

சாதிவாரி இட ஒதுக்கீடு மீதான தொடர் பொய்ப் பரப்புரைகளால் அதன் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ள ஒருவித ஒவ்வாமையை 10% EWS இடஒதுக்கீட்டுச் சட்டம் மேலும் அதிகப்படுத்துகிறது. இது ஒடுக்கப்பட்ட சமூகங்களை மேலெழ முடியாதபடி அவர்களை தொடர்ந்து காலால் மிதித்துக் கொண்டே, அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் சமூக அடையாளங்கள் அனைத்தையும் பணம் என்னும் ஒற்றை அடையாளத்தின் மூலம் மூடி மறைக்கும் சதித்திட்டத்தின் முதல் படியே இந்த 10% EWS இட ஒதுக்கீடு ஆகும்.

டி.எம்.கிருஷ்ணா

நன்றி: Telegraph India இணையதளம் (2022, நவம்பர் 23 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: நாசர்