திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றிட பல்வேறு முயற்சிகள் எடுத்து 70% வாக்குறுதிகளை நிறைவேற்றியமைக்கு பாராட்டுக்கள்.

இருப்பினும், மக்கள் நலன் சார்ந்த, மின் கட்டண உயர்வு, குடிநீர் தனியார் வசம் (கோவை சூயஸ்), வீட்டு வரி உயர்வு, பெண்களுக்கான ஊக்க தொகை வழங்க தாமதம், பழைய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் பல்வேறு சாக்குபோக்குக்களை சொல்லி வருவது வருத்தமளிக்கிறது.electric lineமின்கட்டண உயர்வு அறிவித்த பின்னர், மக்களிடம் கருத்து கேட்பு நடத்தியது. 16-08-2022 அன்று கோவையிலும் 18-08-2022 அன்று சென்னையிலும் 22-08-2022 அன்று மதுரையிலும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. அந்த கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் இந்த விலையேற்றம் மற்றும் சீர்திருத்தம் என்ற பெயரில் நடக்க இருக்கும் தாக்கம் குறித்து எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். அதே போன்று 8,000 மின் நுகர்வோர்கள் மின்னஞ்சல் வாயிலாகவும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் விதமாக கீழ்க்கண்ட பதில்களை இந்த மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் தனது அறிக்கையில் https://www.tangedco.gov.in/linkpdf/TO-Order%20No0100920220422.pdf பக்கம் 540 முதல் 676 வரை இந்த ஒரே பதிலை மட்டுமே வீட்டு மின்சார உபயோகிப்பாளர்கள், விசைத்தறி, சிறு குறு தொழில் உற்பத்தியாளர்கள், அரிசி ஆலை சங்கம், பல்வேறு தொழில் அமைப்புக்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

1. தற்போது நுகர்வோர்களிடமிருந்து வசூல் செய்யப்படும் கட்டணமானது மாண்பமை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 2014-15 ஆம் ஆண்டில் ரூ.44,618 கோடியாக இருந்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டு மொத்த நிதி இழப்பானது, ரூ.68,648 கோடி அதிகரித்து, 31.03.2021 அன்று ரூ.1,13,266 கோடியாக உயர்ந்துள்ளது. மின் நுகர்வோர் குறியீட்டு எண் புள்ளிகள் 236 முதல் 333 வரை உயர்ந்த காரணத்தினால் அதாவது 41% கடன் அதிகரித்தது. எனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இதன் விணளவாக, ரூ. 64,087 கோடியாக இருந்த கடன் நிலுவையானது 109 சதவீதம் அதிகரித்து, தற்சமையம் ரூ.1,34,210 கோடிகடன் நிலுவையில் உள்ளது. இதன் விளைவாக கடன் வாங்கிய நிதியின் வட்டியும் ஆண்டொன்றிற்கு ரூ.9,281 கோடியில் இருந்து ரூ. 14,116 கோடியாக அதிகரித்துள்ளது.

2. மத்திய அரசின் மின் அமைச்சகத்தால் மாநிலத்திற்கு கூடுதல் கடன் வாங்குவதற்காக கட்டணத் திருத்தத்துடன் மின்துறை சீர்திருத்தங்களின் கட்டாய நிபந்தனையை உருவாக்கியுள்ளது. மத்திய நிதி நிறுவனங்களான M/s REC / M/s PFC நிறுவனங்கள் சிறப்புப் பணப்புழக்கத் திட்டத்தின் (ஆத்மநிர்பார்) )கீழ் ரூபாய் 30,230 கோடி கடனை அனுமதிக்கும்பொது , வருடாந்திர கட்டண திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற முன் நிபந்தனையின் அடிப்படையில் அனுமதித்துள்ளது.. கட்டணத்திருத்தம் செய்யப்படாததால், ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் மீதமுள்ள ரூ.3,435 கோடியை REC/PFC நிறுவனங்களால் நிறுத்தி வைத்துள்ளது..

3. மின் அமைச்சகத்தின் வழி காட்டுதல்களின்படி புதுப்பிக்கப்பட்ட விநியோக துறை திட்டத்தின் (RDSS) கீழ் நிதியை வெளியிடுவதற்காக மின் கட்டணம் திருத்தம் செய்வது முன் நிபந்தணனயாகும். அவ்வாறு மின் கட்டணம் திருத்தம் செய்யப்படாவிட்டால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு 10,793 கோடி ரூபாய்க்கான மானியங்கள் வழங்கப்படாது மற்றும் அந்த திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது. மின் விநியோக நிறுவனங்கள் உட்பட அரசுக்கு சொ\ந்தமான நிறுவனங்களுக்கு கடன் வழங்குதற்கான வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு கட்டாய வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது, அதன்படி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் மின் விநியோக நிறுவனங்கள் மின் கட்டண மனுவை தாக்கல் செய்யவேண்டும். CERC/APTEL போன்ற பல சட்ட அமைப்புகள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின் கட்டணம் திருத்தம் செய்யாதது குறித்து அவ்வப்போது கண்டனம் தெரிவித்து வந்தன. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உள்ளபடி வழங்கல் விலைக்கான மின்கட்டணம் இல்லாததால் தரவரிசையில் பின் தங்கியது . இந்த காரணத்தினால் வங்கிகள் மேலும் கடன் வழங்க முன்வரவில்லை.

4. மத்திய அரசின் மின் அமைச்சகத்தின் அறிவிக்கையின்படி10 சதவிகித வெளிநாட்டு நிலக்கரியை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் விலை மற்றும் மின்சாரத்தின் சராசரி அடக்க விலை அதிகரித்து, சராசரி மின் வழங்கல் விலை மற்றும் சராசரி மின் விற்பனை விலை ஆகியவற்றிற்கான இடைவெளி அதிகரித்துள்ளது. 2014-15 நிதியாண்டுடன் ஒப்பீடும் பொது எரிபொருள் அடிப்படை விலை, போக்குவரத்து மற்றும் கையாளும் கட்டணங்கள் 49% அதிகரித்துள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து மின் கொள்முதல் செய்யும் மின்சாரத்தின் மாறுபடும் விலை 2014-15 நிதியாண்டுடன் ஒப்பீடு செய்யும்போது 37% அதிகரித்துள்ளது. பராமரிப்பிற்க்கான கடன்கள் மின்சாரத்தின் சராசரியாக பெறப்படும் விலைக்கும் மின்வழங்கலுக்கான விளைக்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளி காரணமாக வட்டிக்கான செலவுகள் 50% அதிகரித்துள்ளது.

5. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 8 வருட இடைவெளிக்குப்பிறகு மின் கட்டணத்தை சராசரியாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது

இப்படி இந்த ஆணையம் மேற்கண்ட பதில்களோடு Letter No. 6329/C2/2022-1 Dated 07-09-2022 அன்று கூடுதல் தலைமை செயலாளர் அவர்கள் மின்வாரிய செயலருக்கு கூடுதல் மின் கட்டணம் குறித்த கடிதம் எழுதுகிறார். அதை தொடர்ந்து 09-09-2022 அன்று Order No.07 of 2022 in T.P. No.1 of 2022 dated 09-09-2022 (effective from 10-9-2022) ஒரே நாளில் அந்த கட்டணங்கள் அமலுக்கு வரும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதில் பல்வேறு வித குழறுபடிகள் குறிப்பாக 9 ஆம் தேதி மின் மீட்டரில் அதற்கு முந்தைய இரண்டு மாத உபயோகத்தை கணக்கு எடுத்திருந்தால் அது முந்தைய மாத கட்டண அடிப்படை என்றும் அதே போன்று முந்தைய இரண்டு மாத பயன்பாட்டிற்கு உரிய கணக்கை 10 ஆம் தேதி கணக்கெடுத்தால் உயர்த்தப்பட்ட கட்டண அடிப்படையில் இருந்தது. அது குறித்து பல்வேறு விமர்சனங்களும் எதிர்ப்புக்களும் பதிவிடப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இந்த மின்கட்டண உயர்வின் சுமை இருக்கும் நிலையில், திடீர் என்று குறுகிய கால அவகாசத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வருகிறது. அதிலும் ஏகப்பட்ட குழப்பங்கள். இவை அனைத்தையும் தாண்டி, ஆதாருக்கு பதில் ஏற்கனவே தமிழக அரசின் குடும்ப அட்டையுடன் இணைக்க சொல்வதில் என்ன விளைவு ஏற்படுத்திவிட போகிறது? இந்த ஆதார் என்ற உடனே இதுவரை பல்வேறு முறைகளில், வகைகளில் பல்வேறு சேவைகளுக்கு ஒன்றிய அரசின் ஆதார் இணைப்பு நிர்பந்தமும் அதில் ஏற்பட்ட ஏமாற்றமும் தான் மக்கள் மீள் அசை போடுகிறார்கள். ஆதார் & மின் இணைப்பு இவற்றை இணைக்க செயலியில் இருக்கும் பிரச்சினைகள்.

1. குழப்பத்தோடு இருந்த மக்களில் சிலர் இணைக்க முயன்றபோது மின்வாரியத்தின் இணையதளம் முடங்கியது.

2. யார் வேண்டுமானாலும் யாருடைய ஆதார் எண்ணை பயன்படுத்தி எந்த மின் இணைப்பு எண்ணோடு இணைக்க ONLINE மூலம் உரிமையாளர் என்றோ வாடகைதாரர் என்றோ விண்ணப்பிக்க முடியும் என்பது மிகவும் ஆபத்தானது.

3. வாடகைதாரர் இணைத்தால் அந்த உரிமையாளருக்கு உறுதிப்படுத்த குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்ற அறிவிப்பு இருந்தும் குறுஞ்செய்தி வருவதில்லை.

4. குறுஞ்செய்தி வராததால் வாடகைதாரர் என்று சரிபார்க்கப்படாமலேயே குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் இணைத்து விட்டால் அதன் விளைவுகள் ஆபத்தானது.

5. ஏற்கனவே வாடகைக்கு இருப்போருக்கும் உரிமையாளர்களுக்கும் இடையே பல்வேறு வாடகை சம்மந்தப்பட்ட, வீட்டை காலி செய்வது சம்மந்தப்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கிறது. இந்த இணைப்பு மேலும் அதிகப்படுத்தும்.

6. வீட்டில் வாடகைக்கு இருப்போர் சில மாதங்களில் வீட்டை காலி செய்துவிட்டு சென்றால் அதை மீண்டும் சேர்க்க நீக்க உரிய வடிவில் இன்னும் அந்த செயலி கொண்டுவரவில்லை

இவை அனைத்தையும் தாண்டி, இன்றைய காலகட்டத்தில் இந்த அறிவிப்பானது பட்டவர்த்தனமாக வீட்டின் உரிமையாளர்கள் பல மின் இணைப்புக்களை பெற்று 100 யூனிட் இலவசங்களை பெறுகிறார்கள் அதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் வரும் காலங்களில் ஒரு ஆதாருக்கு மாதம் 50 யூனிட்டுகள் என்ற அடிப்படையில் ஆணை பிறப்பிப்பதற்கான ஏற்பாடு என்பதை மக்கள் அறிவார்கள்.

ஒரே நபர் தனது வீட்டில் ஒரு இணைப்பில் வீட்டின் உரிமையாளரும், மீதி இருக்கும் இணைப்பில் வாடகைக்கும் விட்டு இருக்கலாம். இன்றைய சட்ட சிக்கல்களும், வாடகைக்கு இருப்போர்கள் & உரிமையாளர்களுக்கு இடையே அன்றாடம் தொடுக்கப்படும் வழக்குகள் காரணமாக வீட்டு உரிமையாளர் பெரிதாக இந்த இணைப்பில் அக்கறையோ ஆர்வமோ காட்ட மாட்டார்கள். அந்த வாடகைதாரர் ஆதாரை இணைக்க ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இந்த நிலையில் ஒரு ஆதாருக்கு மாதம் 5௦ யூனிட் இலவச மின்சாரம் என்று கொண்டு வரும் பட்சத்தில் அந்த வீட்டின் உரிமையாளருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதே நேரம் அந்த வாடகை தாரருக்கு இந்த ஆதார் மின் இணைப்பு ஏற்பாடு செய்யாததால் அந்த இலவச மின்சாரம் கிடைக்காமல் போகும். இது அரசின் மேல் தான் அதிருப்தியை ஏற்படுத்தும்.

ஆகவே மலையை புரட்டி எலியைப் பிடித்த கதையாக இந்த திட்டம் சென்று விடக்கூடாது.

ஒன்றிய அரசின் பரிந்துரைப்படி மின் வாரியம் 30-11-2022 அன்று நிதி நிறுவனங்களுக்கு மானியம் பெறுவதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்று இருக்கும் நிலையில் கால அவகாசம் கேட்டு பெற்று முழுமையாக ஆராய்ந்து இந்த திட்டம் தேவையா இல்லையா என்று அனைத்து கட்சி கூட்டத்தின் வாயிலாக முடிவெடுக்க வேண்டுகிறோம்

- ஆர்.எம்.பாபு