ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜக அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டுக்கென்று தனித்தன்மையான புதிய கல்விக் கொள்கையை உருவாக்க திமுக அரசும் உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அளுநருக்கு அனுப்பப்பட்ட நீட் தேர்வு விலக்குச் சட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் கல்வியின் இலக்கணம்; ஜனநாயகத்தின் இலக்கணம்; கல்விக்கும் ஜனநாயகத்திற்கும் உறவு; இரண்டிலும் ஏற்பட்டுள்ள இன்றைய பின்னடைவுகள்; கல்வியும் ஜனநாயகமும் தழைப்பதற்கான வழி என்பவை குறித்தான வெளிப்படையான, ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் அவசியமானவையாக உள்ளன.

மனிதன் ஒரு சமூக விலங்கு. ஜனநாயக விழுமியங்களை உள்ளடக்கிய கல்வியின் மூலமே மானுட சமூகம் மேன்மையடைய முடியும். கல்வியைக் ”கேடில் விழுச்செல்வம்” என்று உலகத் தமிழ் மறை போற்றுகிறது. சமூகத்தில் நீடித்து வரும் பல்வேறு கேடுகளையும் அநீதிகளையும் ஒழிப்பதற்கு கல்வியைத் தவிர வேறு வழி இல்லை. எனவே தான், கல்வி ஒவ்வொரு தனி மனிதனின் அடிப்படை உரிமை என்பதும் கல்வி கொடுப்பது அரசின் கடமை என்பதும் எல்லா நாடுகளின் அரசியல் அமைப்புச் சட்டங்களிலும் இடம்பெற்றன. ஆனால், இன்றைய உலகளாவிய தாராளமய, தனியார்மய, சந்தைப் பொருளாதாரக் கொள்கையின் விரிவாக்கத்தால் கல்வியும் புதிய விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் 1970 வரையிலான காலம் ஜனநாயகத்தின் வளர்ச்சிக் காலமாக அமைந்தது. ஆனால், 1970 முதல் ஜனநாயகம் தேயும் நிலை ஏற்பட்டுள்ளது.govt school 615பெரும்பாலான நாடுகளில் மக்களின் வரிப்பணத்தில் கல்விக்கான ஒதுக்கீட்டை விட ராணுவத்திற்கான ஒதுக்கீடு அதிகமாகி வருகின்றன. கல்விக்காக அரசு செலவழிக்க வேண்டும். ஆனால், கல்விக்காக மக்கள் செலவழிக்கவேண்டியுள்ளது. கல்விச் செலவு பெரும்பான்மை மக்களுக்கு பெரும் பொருளாதாரச் சுமையாக மாறியுள்ளது. உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவதில் போட்டிகள் அதிகரித்து வருகின்றன. நீட் போன்ற நுழைவு மற்றும் தகுதித் தேர்வுகள் புதிதாக உருவாக்கப் படுகின்றன. தனியார் பள்ளிகளையும் கல்லூரிகளை நடத்துவதை விட, போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் நடத்துவது குறுகிய காலத்தில் அதிக லாபத்தை ஈட்டிக் கொடுக்கும் பெரும் முதலீடில்லா வணிகமாக மாறியுள்ளது. கல்வி வணிகம் கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்களில் முதன்மையான ஒன்றாகவும் மாறிவிட்டது. 

கருப்புப் பணப் பெருக்கம் நாட்டின் மிகப்பெரிய சிக்கலாகப் பேசப்படுகிறது. கருப்புப் பணப் பெருக்கத்தில் கல்வியும் முதன்மை ஊற்றுக்கண்ணாக உள்ளது. நாட்டில் பெரிய தனியார் கல்வி நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் அவ்வப்போது கருப்புப் பண சோதனை நடத்துவதைப் பார்க்கிறோம். நாடாளுமன்ற, சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடக்கும்போதும் இச்சோதனைகள் நடப்பதுண்டு. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுப்பதற்காக இச் சோதனைகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்படும். தனியார் கல்வி நிறுவன முதலாளிகளிடமிருந்து கணக்கில் வராத கருப்புப் பணம் பல கோடிகள் கைப்பற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்படும். நமது இந்திய நாட்டின் கல்வியும் ஜனநாயகமும் சீரழிக்கப் பட்டுள்ளதைச் சுட்டிக்காட்ட வேறு உதாரணங்கள் தேவையில்லை. 

பணம் கொடுத்துக் கல்வி பெறுவது தவிர்க்க முடியாதது, பணம் கொடுத்து வாக்கு வாங்குவது தடுக்க முடியாதது என்று எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் அவல நிலை தான் இன்று உள்ளது. சந்தைக் கல்வியால் பணமுள்ளவர்கள் மட்டும் கூடுதலான திறமைகளை வளர்த்துக் கொள்வதும் வாய்ப்புகளைப் பெறுவதும் நடக்கிறது. கல்வி கற்பவர்களை விட கல்வியை விற்பவர்கள் பயனடையும் அவல நிலை தான் இன்றுள்ளது. பல தலைமுறைகளாக கடைக்கோடியினராக வாழும் மக்களை கல்வியின் மூலமே முன்னேற்ற முடியும். அனைவருக்கும் கல்வி என்பது வெறும் எழுத்தறிவிக்கும் இலக்கோடு நின்று போனது. இதனால், பணம் இல்லாதவர்கள் கல்வியின் பயன்களை முழுமையாகப் பெற முடியாமல் ஒதுக்கப்படும் நிலை உருவாகி வருகிறது. 

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஜனநாயகம் புத்துருவாக்கம் பெறவேண்டும். ஜனநாயகம் வளர வேண்டும். ஆனால், பணம் கொடுத்து வாக்கு வாங்கும் அளவிற்கு வலிமை உள்ள கட்சிகளே இன்று ஆட்சி அதிகாரத்தைப் பெற முடிகிறது. நேர்மையான மனிதர்கள் அரசியலில் காலடி வைப்பது ஆபத்தாக உள்ளது. மாதவாதக் கருத்துகளை மக்களை ஏற்க வைத்து அதிகாரத்தைப் பெறுவதும் நடக்கிறது. மக்களிடம் நிலவும் வறுமை, அரசியல் அறியாமை இரண்டையும் பயன்படுத்தி ஜனநாயகத்தைச் சீரழிப்பது நடந்து வருகிறது. 

புதிய தனியார்மய, தாராளமய, உலகமய, சந்தைப் பொருளாதாரக் கொள்கை அனைத்து நாடுகளையும் இன்று கபளீகரம் செய்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஜனநாயகத்தை செயல்படுத்துவதிலும் தழைக்கச் செய்வதிலும் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அரசியல் கட்சிகள் அதிகாரப் போட்டிக்கான அமைப்புகளாக அல்லாமல் ஜனநாயக இயக்கங்களாக பரிணாம வளர்ச்சி பெறுவதற்கான சமூக அழுத்தங்களை ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் வெளியிலிருந்து உருவாக்க வேண்டியுள்ளது. 

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமயச் சார்பின்மை –உலகிலேயே மதிப்பு மிக்க சொற்கள் இவை. மானுட சமூகம் அடைந்துள்ள அரசியல் பரிணாம வளர்ச்சியால் கிடைத்த கொடைகள் இவை. உலகளாவிய அரசியல் அகராதியில் இச் சொற்கள் இடம்பெற எண்ணற்ற மாமனிதர்கள் பல தியாகங்களைச் செய்துள்ளனர். இச் சொற்கள் இடம்பெறாத அரசியலமைப்புச் சட்டம் எந்த நாட்டிலும் எழுதப்பட்டிருக்காது. ஜனநாயகம் என்பது ஒவ்வொரு நாடும் செயல்படுத்த வேண்டிய உயரிய அரசியல் குறிக்கோள். நமது அரசியல் சட்டத்தின் முகப்புரையும் நமக்கு இதைத் தான் உணர்த்துகிறது.

21 ஆம் நூற்றாண்டின் சந்தைப் பொருளாதாரத்திற்கு மாற்றான சித்தாந்த ஒளியை தொன்ம இந்திய ஆன்மிகத்தில் இருந்து கூட பெற முடியும். ”எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு, எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவராகிறது, வெறொரு நாள் அது வேறொருவருடைதாக ஆகும். இதுவே உலக நியதி”. இந்தியாவின் ஆன்மிக நெறி இது. இதை நேசிக்கும் எவரும் இலாப வெறிப் பொருளாதாரக் கொள்கைக்கு ஆதரவுக் கரம் நீட்ட முடியாது.

சந்தைப் பொருளாதாராத்தால் அதிக இலாபமடையும் நாடுகளில் கூட கல்வி உரிமை, வாக்குரிமை இரண்டின் அடிப்படை விழுமியங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அரசியலமைப்புச் சட்டக் குறிக்கோள்களுக்கும் விழுமியங்களுக்கும் மதிப்பளிக்கப்படுகின்றன. ஜனநாயகத்தையும் கல்வியையும் வளர்த்தெடுப்பதில் நம்மைவிட பல நாடுகள் சிறந்து விளங்குகின்றன. இந்தியாவில் கல்வியும் ஜனநாயகமும் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தப்படுவதற்கு அரசியல் கட்சிகள் உறுதி ஏற்றால் மட்டுமே மாற்றம் விளையும்.

ஜனநாயகத்தை முழுமையாகச் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். ‘‘ஜனநாயகத்தில் கல்விக்கு முதன்மையான இடம் உள்ளது. கல்வியே மக்களின் மனங்களில் ஜனநாயக உணர்வை வளர்க்கிறது” என்கிறார் அமெரிக்கக் கல்வியாளர் ஜான் டூயி. உலகிலேயே அதிகமான குழந்தைப் பருவத்தினரும் இளமைப் பருவத்தினரும் வாழும் நாடு இந்தியா என்பதை நாம் கவனத்தில் கொள்வோம். அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த, நிலையான வளர்ச்சி என்பதே உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டுள்ள புத்தாயிரம் ஆண்டின் குறிக்கோள். இக் குறிக்கோளை அடைவதில் நாம் உலகின் முன்னிலை வகிக்கும் நாடாக மாறவேண்டும். 21 ஆம் நூற்றாண்டில் மாபெரும் ஜனநாயகக் கடமை நமக்காகக் காத்திருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

- சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு