periyar maniammaiபல நூறு ஆண்டுகளாக மனுஸ்மிருதி தான் இந்தியாவை ஆண்டது. அதுதான் எல்லாவற்றையும் அடிமையாக்கியது. குறிப்பாக மானுட விடுதலைக்கு எதிரானதாக இருந்தது. மனிதனுக்கு, மனிதன்  ஏற்றத் தாழ்வையும், வேறுபாட்டையும் கற்பித்தது. பெண்களை சுயசிந்தனை அற்றவர்களாகவும், அவர்கள் எப்பொழுதும் ஆண்களைச் சார்ந்து இருக்க வேண்டும் எனவும் வற்புறுத்தியது. பால்ய விவாகத்தையும் வலியுறுத்தியது. இளம் விதவைகளையும் மோசமாக வழிநடத்தியது. கணவனை இழந்த பெண்கள் கைம்பெண்கள் என்றும், அவர்கள் கணவன் இறந்த பின்பு சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைக் கொண்டிருக்கவும் வலியுறுத்தியது. உடன்கட்டை ஏற விரும்பாத பெண்களையும் வலிய கொண்டு சென்று தீயில் தள்ளியது. இக் கொடுமை உலகில் வேறு எந்த நாட்டிலும் நடந்ததாக வரலாறு இல்லை.

 மதத்தின் பெயரைச் சொல்லி பெண்களின் பூவையும், பொட்டையும், மஞ்சளையும் அழித்தது. ஆனால் இந்தக் கொடுமையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட ஆண்களுக்கு ஏற்படவில்லை. மட்டுமல்ல மனைவியை இழந்த ஆண்கள் புது மாப்பிள்ளையாகவும் பார்க்கப்பட்டனர். விபச்சாரம் என்ற சொல்லுக்கு ஆண்பால் இல்லை. விதவை என்கின்ற சொல்லுக்கும் ஆண்பால் இல்லை. இப்படி பல சொற்களுக்கு இலக்கியத்தில் பெயரளவிற்கு சொற்கள் கூட இல்லை.

இந்தக் கொடுமையை எதிர்த்து ஆண்டாண்டு காலமாக சிந்தனையாளர்கள் போராடி வந்தனர். அவர்களுள் தந்தை பெரியார் மிக முக்கியமானவர். காலமெல்லாம் எதை எதிர்த்துப் போராடினாரோ, அதே காரணத்தை முன்வைத்து பெரியாரை விமர்சனம் என்ற பெயரில் தரம் தாழ்ந்து வசை பாடுகின்றனர்.

பெண் விடுதலையில் பெரிதும் அக்கறை கொண்ட பெரியார் 40 வயது வித்தியாசத்தில், மணியம்மையை மறுமணம் செய்தது எந்த அளவிற்கு நியாயம் என்ற விமர்சனம் அவர் மீது வைக்கப்படுகிறது. அந்த காரணத்திற்காகத்தான் அண்ணாதுரை,  பெரியாரை விட்டுப் பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தார். 'அவர் ஒரு பெண் பித்தர். தன் மகள் வயது உடைய மணியம்மையை மணந்து கொண்டார்' என்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் தன்மையில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

பகுத்தறிவுக் கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, தந்தை பெரியார் மீது அன்பும், மரியாதையும் கொண்டவர் வேலூர் கனகசபை.  கனகசபைக்கும், பத்மாவதி அம்மையாருக்கும் மார்ச் மாதம் பத்தாம் நாள் 1920 ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைக்கு இட்ட பெயர் காந்திமதி. அவர் பிறந்து வளர்ந்து வேலூரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார்.

கனகசபை, தந்தை பெரியாருக்கு கடிதம் எழுதும் பழக்கம் கொண்டவர். ஒருநாள் பெரியாரை நலம் விசாரித்து கடிதம் எழுதினார். அதற்கு பெரியார் பதில் எழுதும் பொழுது, "எல்லோரும் தூர இருந்தபடி உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால் கூட இருந்து உதவி செய்ய யாரும் இல்லை. என்னமோ? என் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்" என்று பதில் கடிதம் எழுதினார். இது நடந்தது 1943ஆம் ஆண்டு. இந்த சொற்கள் கனகசபையை என்னமோ செய்துவிட்டது. எப்பொழுதும் மதிப்பும், மரியாதையும், அன்பும் கொண்ட பெரியாருக்கு ஏற்பட்ட துயரத்தை எண்ணி வருந்தி தன்னுடைய மகள் காந்திமதியை அழைத்துச் சென்று, பெரியாரிடம் 'இனிமேல் இந்தப் பெண் உங்கள் கூட இருந்து, உங்களை கவனித்துக் கொள்வார்' எனச் சொல்லி, அன்று விட்டு வந்தவர்தான் அன்றைய காந்திமதியான,  இன்றைய மணியம்மை.

காந்திமதி வருகைக்குப் பிறகு பெரியார் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. புத்துணர்ச்சி உண்டாயிற்று. அதன் பிறகு கால் நூற்றாண்டு காலம் அவர் ஆயுள் நீட்டிப்பு உண்டானது. பகுத்தறிவு கொள்கைக்கு சற்றும் பொருத்தமற்ற மதத்தையும், சாதியையும் காரணம் காட்டி மக்களை பிளவுபடுத்தும் எண்ணத்திற்கு இன்னும் தீவிரமாக பணியாற்றத் தொடங்கினார். சாதிக் கொடுமையைப் போலவே, பெண் கொடுமையையும் இந்து மதம் ஆமோதிக்கிறது. அதனால் இந்து மத நம்பிக்கைகளையும், கொடுமைகளையும் வேரறுக்கவே இன்னும் தீவிரமாக செயல்பட்டார். இப்படி இந்திய சமூகத்தை பீடித்திருந்த நோயை தன் கைத்தடியாலும், வலிமையான சொற்களாலும் சம்மட்டி அடி தந்து நோயைக் குணப்படுத்தப் போராடினார்.

மேலும் சாதி என்னும் கொடுநோயை விரட்டி விரட்டி வேட்டையாடினார். முன்பை விட இன்னும் மூர்க்கமாக களப்பணி ஆற்றினார். இவை எல்லாவற்றுக்கும் காரணம் மணியம்மையின் வருகை.  பெரியாரே, பின்வருமாறு பதிவு செய்கிறார். "இந்த வயதிலும் நான் சாகாமல் இருக்கிறேன் என்றால், இந்த அம்மாவால் என்பது யாருக்கும் தெரியாது. எனது உடம்புக்கு ஏற்ற உணவை பக்குவப்படி கொடுப்பது, உடை மாற்றுவது எல்லாம் இந்த அம்மா தான்" என்று மணியம்மையைப் பற்றி பதிவு செய்தது அனைத்தும் உண்மை. மணியம்மையை வாஞ்சையோடு பொது வெளியிலும், தனி வாழ்க்கையிலும் அம்மா என்றே அழைத்துள்ளார்.

மணியம்மை சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், நிர்வாகத் திறமை மிக்கவர், சமூக சிந்தனையாளர், தொண்டுள்ளம் கொண்டவர், கடவுள் மறுப்பாளர், சாதி எதிர்ப்பாளர், மொழி போருக்காக  சிறைக்குச் சென்ற களப்போராளி, கண்டிப்பு மிக்கவர், தயாள எண்ணம் கொண்டவர், குழந்தைகளைப் பேணி பாதுகாக்கும் வகையில் காப்பகம் நடத்தியவர் என்று அவருக்கு பல முகங்கள் உண்டு.

பெரியாரின் அறிமுகத்திற்கு முன்பே தன்னுடைய தந்தை கனகசபையின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட காந்திமதி, அரசியல் மணி என்றும் அறியப்பட்டார். கனகசபையின் நண்பர் அண்ணல்தாங்கோ என்பவர் அந்தக் காலத்தில் தென்னார்க்காடு மாவட்டத்தின் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவர். அவர்தான் முதன் முதலாக காந்திமதியை, அரசியல் மணி என்று அன்போடு அழைத்தார்.

பெரியாரிடம் அறிமுகமான பிறகு அரசியல் மணியும்,  காந்திமதி என்னும் பெயரும் நாளடைவில் மறைந்து திராவிட இயக்கத்தைத் தோழர்கள் அன்போடு மணியம்மை என விரும்பி அழைக்கத் தொடங்கினர்.

மணியம்மை தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கூடவே இருந்து பெரியாருக்குத் தேவையான பணிவிடை வேலைகள் அனைத்தும் செய்து வந்தார். ஆனாலும் தன்னுடைய கல்வி ஆர்வத்திலும் அக்கறை செலுத்தினார்.

குலசேகரப்பட்டினத்தில் உள்ள தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் பட்டப்படிப்பில் (B.Lit) சேர்ந்து பட்டம் பெற்றார். அவருக்கு இயல்பாகவே மொழி மீதும், இலக்கியத்தின் மீதும் ஆர்வம் அதிகமாக இருந்ததால் விருப்பத்தோடு படித்து பட்டப்படிப்பை நல்ல முறையில் படித்து முடித்தார்.

அதன்பிறகு இயக்கப் பணிகளை மேற்கொள்ளும் தன்மையில் பொது வாழ்க்கையில் தன்னை இணைத்துக் கொண்டார். 1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் தன்னுடைய முதல் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

திராவிடர் கழகம் வளர்ந்து பெரிய இயக்கமாக உருவாகி வந்தது. மக்களும் திராவிட இயக்கத்தின் பால் நம்பிக்கை கொண்டனர். பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை பட்டிதொட்டி எங்கும் பரவத் தொடங்கியது. மக்களும் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகள் கேட்டு பெரியாரின் சிந்தனைகளை செவிமடுக்கத் தொடங்கினர். இப்படி நம்பிக்கை கொண்ட மக்களை நல்வழிப்படுத்தும் எண்ணம் பெரியாருக்கு கடமையாக மாறியது. அந்தக் கடமை உணர்வை எண்ணி தனக்குப் பிறகு இந்த இயக்கத்தைக் கொண்டு செல்ல அடுத்த தலைமுறைக்கு மடை மாற்ற வேண்டிய தேவை இருந்தது.

பெரியார் தனக்குப் பின்னர் இயக்கத்தைக் கொண்டு செல்வதற்கு பகுத்தறிவு சிந்தனையாளர், பெரியாரின் தொண்டர் அர்ஜுனன் என்பவரைத் தத்தெடுத்து அவரிடம் இயக்கத்தை ஒப்படைக்க விரும்பினார். ஆனால் அவர் பெரியாருக்கு முன்பாகவே இறந்துவிட்டார். அதன் பிறகு தன்னுடைய கொள்கை வாரிசாக அண்ணாதுரையை நம்பினார். 1948இல் ஈரோட்டில் நடந்த மாநாட்டில் தனக்குப் பிறகு அண்ணாதான், வழிநடத்தப் போகிறார் அதனால் பெட்டிச் சாவியை அண்ணாவிடம் ஒப்படைக்கப் போவதாக அறிவித்தார்.

ஆனால் அண்ணாதுரை பெரியார் பெரிதும் வெறுத்த அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்ததால் அவரை நம்ப மறுத்து விட்டார். அதன் பின்னர் தன்னுடைய அண்ணன் மகன் ஈ.வி.கி.சம்பத்தை பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்தார். அவரும் பெரியாரின் விருப்பத்திற்கு எதிராக நடந்து கொண்டதோடு வீட்டை விட்டு வெளியேறி அண்ணாதுரையின் பின் சென்றது அவர் மீது இன்னும் நம்பிக்கையின்மை வெளிப்படக் காரணமாக அமைந்தது.

பெரியார் யாரை எல்லாம் நம்பினாரோ, அவர்களெல்லாம் அவருடைய நம்பிக்கைக்கு எதிராக மாறவே, இந்த தமிழ் சமுகத்தைக் கொண்டு செல்ல வேண்டிய கடமையை எண்ணி அவர் ஒரு முடிவுக்கு வர வேண்டிய சூழலுக்குத் தள்ளப் பட்டார். தன்னுடைய சொத்துக்களையும், இந்த அமைப்பையும் எடுத்துச் செல்வதற்கு நம்பிக்கையான ஒருவர் அவருக்கு தேவைப்பட்டார். தன்னுடைய வாரிசாக இருந்து சட்டப்படி கவனித்துக் கொள்ளவே மணியம்மையை 1949ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் நாள் திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது பெரியாரின் வயது 72. மணியம்மைக்கு 27 வயது. 40 வயது வித்தியாசத்தில் இருவரின் விருப்பத்துடன் திருமணம் நடந்தது.

அந்தத் திருமணத்துக்குப் பிறகுதான் பெரியார் மீது ஆயிரக்கணக்கான வசை சொற்களும், அதே அளவிற்கு கேள்விகளும் எழத் தொடங்கின. அண்ணாதுரையும் திராவிடர் கழகத்தை விட்டு 1949ஆம் ஆண்டு, செப்டம்பர் 17ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார்.

 இதனால் பொதுவெளியில் மணியம்மை மீது வைத்த விமர்சனங்கள் பெரிய களங்கத்தை உண்டாக்கியது. ஆனாலும் சற்றும் மனம் தளராமல் மணியம்மை, போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும், ஏற்றதொரு கருத்தை துணிந்து சொல்வேன் என்று கொள்கைப் பிடிப்புடன் பயணம் செய்தார். பெரியாரின் வார்ப்பு  எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மணியம்மை சான்று. எதைப் பற்றியும் கவலைப்படாமல், மற்றவர்களின் வன்மத்திற்கும் அச்சப்படாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருந்தார்.

இதற்கிடையில் பெரியார் மணியம்மையை மறுமணம் செய்து கொள்ளாமல் மகளாகவே எண்ணி அவரிடம் இயக்கத்தையும், சொத்தையும் ஒப்படைத்து இருக்கலாம் என்ற வினாவும் எழுந்தன. ஆனால் அன்று இருந்த இந்து சட்டம் பெண்ணைத் தத்தெடுக்கவோ,  தத்து கொடுக்கவோ அனுமதிக்கவில்லை. மட்டுமல்ல பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்ட காலம் அது. அந்தச் சூழலில்தான் பெரியார் முறையாக சட்டப்படி தன்னுடைய கொள்கைக் கோட்பாட்டுக்காக மணியம்மையைத் திருமணம் செய்ய வேண்டிய தேவை இருந்தது.

பொதுவெளியில் பெரியார் மீது வைக்கும் விமர்சனம் ஒருவேளை நியாயமென்று ஏற்றுக்கொண்டாலும், பெரியார் பார்வையில் இருந்தும், மணியம்மை பார்வையிலிருந்தும் பார்க்கும் பொழுதும் அதே நியாயத்தை இச் சமூகம் ஏன் ஏற்க மறுக்கின்றது என்பது புரியாத புதிர். ஒருவேளை இந்து சட்டத்தில் பெண்ணை தத்தெடுக்கும் உரிமை  இருந்திருக்குமேயானால், அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தேவை எழுந்திருக்காது என்ற புரிதல் ஏன் தோன்றவில்லை? அல்லது அந்த விவாதத்திற்கு ஏன் செல்ல மறுக்கிறார்கள் என்பதும் கேள்வியாக எழுகிறது. இது ஒரு சாதி இந்துவின் மனோநிலை. பெரியாரை எந்தக் கோணத்தில் அணுகினாலும் அவருடைய கேள்விக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் தான் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்கின்றனர். 

மணியமையும் அப்படி ஒன்றும் அறியாத பருவம் கொண்டவரல்ல. அவரும் பெரியாரின் பெண் விடுதலை, பகுத்தறிவுக் கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்.

பெரியாரின் அணுகுமுறையும், செயல்பாடும் தவறானது என்று நினைத்திருந்தால் அதைப் பெரியாரிடமே கேட்கும் அளவிற்குத் துணிவு கொண்டு இருந்தார். அவர் காலத்தில் கேட்கவில்லை என்றாலும் பெரியாரின் மறைவுக்குப் பிறகாவது அந்தக் கேள்வியை கேட்டிருக்க முடியும். ஆனால் எங்குமே மனம் கசந்து பெரியாரை நம்பி நான் மோசம் போய்விட்டேன் அல்லது பெரியார் தன்னை நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார் என்று சொல்லவில்லை.

உண்மையில் இருபத்தி ஏழு வயதில் தான் கொண்ட கொள்கைக்காக இந்த தமிழ்ச் சமூகத்திற்காக தன்னுடைய இளமையையும் வாழ்க்கையையும் தியாகம் செய்திருக்கிறார்.

பெரியாரின் மனைவி இறந்து 16 ஆண்டுகள் கழித்து 72 வயதில் மறுமணம் செய்து கொண்டபோது உடல் தேவைக்காக மணந்து கொண்டார் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை. பெரியார் நினைத்திருந்தால் நாகம்மையார் இறந்தவுடன் இரண்டாவது திருமணம் செய்திருக்க முடியும். ஆனால் அதை விடுத்து தள்ளாடும் வயதில் கிழவனான போது மறுமணம் செய்துகொள்வது சமூக தேவைக்காகத்தான். அதைப் பெரியாரே, "என்னைச் சுற்றி இருக்கும் தோழர்களிடம் நான் எவ்வளவு சகிப்புத்தன்மையோடு பழகினாலும், அவைகளை என் பலவீனமாகவும், ஏமாந்த தனமாகவும் கருதிக்கொண்டு நான் பயப்படும் வண்ணமாய் பெரிதும் அவநம்பிக்கை கொள்ளும் வண்ணமுமாய் நடந்து வருவதை உணர்கிறேன்" என்று கூறுகியுள்ளார்.

ஆயினும் அண்ணாதுரை, பெரியாரை விட்டுப் பிரிந்து செல்வதற்கு மணியம்மையின் திருமணத்தை மட்டும் காரணம் காட்டுகின்றனர். ஆனால் அது மட்டும் உண்மை இல்லை. அண்ணா பெரியாரை விட்டுச் செல்வதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முக்கியமான நான்கு காரணங்களைக் கூற முடியும்.

  1. இந்திய விடுதலையை பெரியார் கருப்பு தினம் என்றார். ஆனால் இந்திய விடுதலையை வரவேற்றார்.
  2. அண்ணாவிற்கு தேர்தல் அரசியல் பாதையில் நாட்டம் இருந்தது.
  3. மணியம்மையின் திருமணம்
  4. பெரியார் கடவுள் மறுப்பில் இருந்தபோதும், அரசியல் தேவைக்காக 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற முழக்கத்தை ஆதரித்தவர் அண்ணாதுரை.

இப்படி நான்கு காரணங்கள் தான் முக்கியமானதாக இருந்தன. ஒருவேளை மணியம்மையை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், அண்ணாதுரை திராவிட முன்னேற்றக் கழகத்தை உறுதியாகத் தொடங்கி இருப்பார். இந்தக் காரணங்களை முன்வைத்து 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது.

ஒரு பக்கம் திராவிட இயக்கத்தில் பெரிய அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டு இயக்கம் உடையும் போது மணியம்மை சற்றும் மனம் தளராமல் தான் கொண்ட கொள்கையில் பின்வாங்காமல் முன்னேறிக் கொண்டே சென்றார்.

பெரியாருடன் இருக்கும் பொழுதும், பெரியார் இறந்த பின்பும் மணியம்மையின் சமூகப் பொறுப்பு இன்னும் கூடுதலாக இருந்தது. தன் இயக்கத்தை கட்டிக் காப்பாற்றுவதற்கு கவனமாக செயல்பட வேண்டிய தேவை இருந்தது.

1948ஆம் ஆண்டு அன்றைய அரசு விதித்திருந்த தடைச் சட்டத்தை மீறி மணியம்மை செயல்பட்டார் என்பதற்காக கைது செய்து மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தித் திணிப்பை எதிர்த்து அன்றைய அரசுக்கு எதிராகவும், இந்தித் திணிப்புக்கு எதிராகவும் 1958-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் நாள் "இளந்தமிழா புறப்படு போருக்கு" என்ற தலைப்பில் கட்டுரை எழுதிய குற்றத்திற்காக கைது செய்து ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.

1974ஆம் ஆண்டு டெல்லியில் "ராம லீலை" நடத்தி ராவணனின் உருவத்தை எரிக்கும் நிகழ்ச்சியில் அன்றைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது கலந்து கொள்ளக்கூடாது என்று மணியம்மை வேண்டுகோள் விடுத்தார். அதையும் மீறி அவர்கள் கலந்து கொண்டார்கள்.

அந்தக் காரணத்தை முன்வைத்து ராவணன் திராவிடத்தின் அடையாளம், திராவிடத்தை இழிவு செய்தது தவறு, அதனால் அதைக் கண்டிக்கும் விதமாக 1974 டிசம்பர் 25ஆம் நாள் சென்னையில் "ராவண லீலை" திராவிட கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது.  அந்த நிகழ்விற்கு மணியம்மை தலைமை தாங்கினார். இப்படி பெரியாரின் கொள்கையில் வாரிசாகவும், கைத்தடியாகவும் இருந்து செயல்பட்டது மறுக்க முடியாது.

அவசரகாலப் பிரகடனம் அறிவித்து நெருக்கடி நிலையின் காரணமாக அன்றைக்கு எதிர்க் கட்சித் தலைவர்களையும், சமூகச் சிந்தனையாளர்களையும் அன்றைய அரசாங்கம் கைது செய்தது. அப்பொழுது  1976 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் மணியம்மையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். 1977 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் சென்னைக்கு வருகை தந்தபோது கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததற்காக கைது செய்து சிறையில் தள்ளப்பட்டார்.

இப்படி எல்லா வகையிலும் பெரியாரின் மனைவியாகவும், தொண்டராகவும் இருந்து இயக்கப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார். பெரியார் பல இடங்களில் தேவையற்ற வீண் செலவு என மறுத்ததை எல்லாம் அவற்றின் நன்மைகளை எடுத்துச் சொல்லி நல்ல ஆலோசகராகவும் இருந்து வழி நடத்தினார். திருச்சியில் உருவாகிய கல்வி நிறுவனங்களையும், குழந்தைகள் காப்பகத்தையும் மணியம்மை திறம்பட நிர்வகித்து உள்ளார்.

கல்வி நிறுவனம், குழந்தைகள் காப்பகம், பத்திரிக்கைத்துறை எல்லாவற்றிலும் தன்னுடைய அழுத்தமான திறமையால் முத்திரை பதித்தவர் மணியம்மை. பெண்கள் பொதுவெளியில் இயங்குவதற்கும், தங்கள் கருத்தை துணிந்து சொல்வதற்கும் பகுத்தறிவு இயக்கம் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு பெரியார் கட்டிக் காப்பாற்றிய இயக்கத்தை ஜனரஞ்சகமாக கொண்டு சென்ற பெருமை மணியம்மைக்கு உண்டு.

பெரியார் - மணியம்மை திருமணம் அவர்களது சொந்த ஆசாபசங்களுக்காக அல்ல‌, திராவிடர் கழகத்திற்காக,  அதன் இயக்கத்திற்காக நடந்த திருமணம். பணத்தையோ,  சொத்தையோ காரணம் காட்டி விருப்பம் இல்லாத ஓர் இளம்பெண்ணை முதியவர் ஒருவர் கட்டாயத் திருமணம் செய்து கொண்டதைப் போன்ற கருத்து எப்படி உருவாகியது? காரணம் தந்தை பெரியார் காலம் முழுவதும் பெண்ணடிமை தனத்தை எதிர்த்து, சாதிக் கொடுமையை எதிர்த்து, இவற்றுக்கு ஊற்றுக்கண்ணாக திகழும் இந்து மதத்தை எதிர்த்தார் என்பதனால்தான். அந்த சாதி இந்து மனநிலையில்தான் பெரியார் - மணியம்மை திருமணம் எதிர்க்கப்படுகிறது.

ஆனாலும் பெரியாரின் மறைவிற்குப் பிறகும், பகுத்தறிவு இயக்கத்தின் தூணாகவும், முன்னோடித் தொண்டராகவும் இருந்து வழிநடத்தியவர் தான் தோழர் மணியம்மை.

- பேரா. .பாவலன்