முஸ்லிம் ஜமாத்துகளில் மறைமுகமாக நடைபெற்றுவந்த ஊர்விலக்கு என்னும் கட்டப் பஞ்சாயத்து முறைக்கு எதிரான குரல்கள் அண்மைக்காலங்களில் தீவிரமடைந்து வந்துள்ளன. முஸ்லிம் சிந்தனையாளர்கள் மட்டத்திலும், தமிழகத்தில் வாழும் ஜனநாயக பண்பாட்டு இயக்கங்கள் சார்பிலும் இவை குறித்து விரிவான அளவில் விவாதங்கள் வெளிப்பட்டுள்ளன.

இந்தவகை ஊர்விலக்கத்திற்கு அடிப்படைகளாக ஜமாத் சொத்துக்களை, அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வது, சுன்னத்துல்ஜமாத் - வகாபி பிரச்சினைகள் முக்கிய காரணங்களாக இருந்துள்ளன. வகாபியப் பிரச்சினைகள் தலைதூக்கிய போது அவ்வியக்கத்தினரின் உள் அரசியல் தளத்தில் ஊர்விலக்கம் ஆதரவுக்குரிய செயல்பாடாக மாறியது. ஏனெனில் ஊர்விலக்கப்பட்ட வகாபிகளை ஒன்று திரட்டி அவர்கள் மாற்று ஜமாத்தை கட்டியமைப்பதற்கு இது போன்ற விலக்கங்கள் தேவைப்பட்டன. பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அவர்களது குடும்பங்களை செயலூக்கமுடன் ஒன்றிணைத்தன. எனவே ஜமாத் அமைப்புக்குள் போராட்டத்தை தவிர்த்தனர். தனியாக பள்ளிவாசல், தனியான மையவாடி என செயல்பட்டனர்.

வகாபியப் பிரச்சினைகள் அல்லாது ஜனநாயக ரீதியான கருத்தியல் விவாதங்களுக்கு இடமளிக்காமல் சுன்னத்துல் ஜமாத்தினர்களும் வகாபிகளும் ஒரு சேர எதிர்க்கும் நிலையில் ஊர்விலக்கத்தால் பாதிக்கப்பட்ட படைப்பாளிகளும் உண்டு.

இதில் விசேசம் என்னவென்றால் ஒருகாலத்தில் கடவுள் இல்லை என பகுத்தறிவுவாதம் பேசியவர்களும், முரட்டுமார்க்ஸியம் பேசியவர்களும் கூட வகாபியக் கொள்கைகளோடு இணைந்தும், ஜமாத்துகளின் முக்கிய உறுப்பினர்களாகவும் மாறி தங்களது இருப்புக்கு எந்த சேதாரமும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்கின்றனர். படைப்பாளிகளின் நிலைதான் இவற்றில் எல்லாம் பரிதாபமாக உள்ளது.

இந் நிலையில் தமிழ்நாடு வக்ப் வாரியம் அதன் தலைவர் செ.ஹைதர் அலி தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றை 11 - 09 - 2008 அன்று பத்திரிகை ஒருங்கிணைப்பாளர்மூலம் வெளியிட்டது.

தமிழகத்தின் சில பகுதிகளில் முஸ்லிம் ஜமாத்துகளில் ஏற்படும் தனிப்பட்ட விரோதங்களுக்காக ஜமாத்து நிர்வாகிகள் அவர்களின் ஜமாத்துக்கு உட்பட்ட நபர்களை ஊர்நீக்கம் செய்தல், திருமணப் பதிவுப் புத்தகம் தர மறுத்தல் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தல் போன்ற இஸ்லாத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதாக தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவருக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து இதுபோன்ற விசயங்கள் மனித உரிமை ஆணையம், மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்கப் பட்டாலும் சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் ஜமாத்துகள் வக்ப் நிறுவனங்களாக இருப்பதால் வாரியம் உரிய கட்டளைகள் பிறப்பிப்பது என முடிவு செய்து செ,ஹைதர் அலி அவர்களை தலைவராகக் கொண்ட தமிழ்நாடு வக்ப் வாரியம் தீர்மானம் நிறைவேற்றியது.

முத்தவல்லி அல்லது நிர்வாகக்குழு, சம்பந்தப்பட்ட ஜமாத்தார்களை சமூகபுறக்கணிப்பு, மற்றும் ஊர்நீக்கம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் ஜமாத்தார்களுக்கு தேவைப்படும் நேரத்தில் திருமணப் புத்தகம் தர மறுப்பது, இறப்புச் சான்றிதழ் வழங்காதிருப்பது போன்ற அடிப்படை உரிமைகளை மீறும் செயல்களில் முத்தவ்ல்லி அல்லது நிர்வாகக் குழு ஈடுபடக் கூடாது. மேற்கண்ட உத்தரவை வக்ப் நிர்வாகங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ் உத்தரவை புறக்கணித்து மேற்கண்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் முத்தவல்லி/நிர்வாகக் குழுவை பதவிநீக்கம் செய்ய தமிழ்நாடு வக்ப் சட்டம் 1995 ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறாக வெளியிடப்பட்டுள்ள வக்ப் வாரியத் தலைவரின் அறிவிப்பு ஊர்விலக்க வன்கொடுமையால் நசுக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கும் சமூக குடும்ப சமய உறவுகளிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் ஒரு விடுதலையை வழங்குமென நம்பிக்கை உருவானது. எனினும் இந்த தீர்மானத்தின் அமுலாக்கத்தை, ஜமாத்துகள் எங்கனம் நிறைவேற்றுகின்றன என்பது குறித்து வக்ப் வாரியம் உரிய முறையிலான கண்காணிப்பை செய்ய வேண்டும்

ஜமாத்துகளை பார்வையிட அதிகாரம் படைத்த வக்ப் ஆய்வாளர்கள் ஜமாத்துகளின் நிர்வாகிகள் முன்பு அடிபணிந்து நிற்கும் நிலைமையை மாற்றி செயலாற்ற வேண்டும்.

அரசுக்கு முறைப்படி சேரவேண்டிய உண்டியல் மற்றும் சொத்து வருமான வரியை ஏய்ப்பு எதுவும் செய்யாமல் முறையாக கணக்கீடு செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

உள்ளாட்சித் தணிக்கைக்கு வைக்கப்படாத வரவு செலவு கணக்குகள், வக்ப்வாரிய அனுமதியிண்றி கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்கள், நிர்வாகங்கள் பின்பற்றும் இரட்டை கணக்குமுறை,விவசாயவிளைப் பொருட்களை விற்பதில் பின்பற்றவேண்டிய டெண்டர்முறை வக்ப் சொத்து ஆக்ரமிப்புகள், சொத்துவருமானத்தில் ஏற்படும் இழப்புகள், வங்கியிலும், ரொக்கமாகவும் பணம் இருப்புவைத்து பேணும் முறை உள்ளிட்ட பல பிரச்சினைகளின்பால் வக்ப் வாரியம் கவனம் செலுத்தி ஏழை எளிய முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்கடன், முஸ்லிம் பெண்களின் சுய ஆளுமைத் திறன் முன்னேற்றத்திற்கு அந்த வருமானத்தை பயன்படுத்த வேண்டும்.

ஜமாத்துகளை ஜனநாயகப்படுத்தாமல் எந்த முன்னேற்றத்தையும் நாம் எட்டமுடியாது.
எழுத்துக்காக ஊர்விலக்கம்
2) எழுத்துக்காக ஊர்விலக்கம் செய்யப்பட்ட வன்முறை இன்னும் தொடர்கிறது.

12 - 7 - 2007 அன்று நானும் என் குடும்பமும் தக்கலை முஸ்லிம் ஜமாத் அஞ்சுவன்னம் பீர்முகமதியா முஸ்லிம் அசோசியேசனால் ஊர்விலக்கம் செய்யப்பட்டோம். இரண்டுவருடங்கள் முடிகிறது. குடும்பங்களில் நடைபெறும் திருமணங்கள், மரணங்கள், நல்லது, கெட்டதுகள், சமூகநிகழ்வுகள், தர்கா உள்ளிட்ட சமயவிழாக்கள் எதிலும் நாங்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு புறக்கணிப்பு தொடர்கிறது. எமது குடும்பப் பெண்களின் வாழ்வும் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது.

இந்த வருத்தமான அனுபவங்களை உள்வாங்குகையில்தான் தீவிர வெறுப்பின் உச்சநிலைக்குப் போய் கொலைசெய்வது அல்லது தற்கொலை செய்வது என்ற கருத்தாக்கம் ஏன் நிகழ்கிறது என்பது குறித்து உணரமுடிகிறது. திண்டுக்கல்லில் வாழ்ந்த நவீன இலக்கியத் திறனாய்வாளர் இளம்பரிதியின் தற்கொலை ஞாபகத்திற்கு வந்து போகிறது.

3) குடிபண்பாட்டைப் பற்றிய இஸ்லாத்தின் மதிப்பீடு தொடர்பான உயிர்மை இதழில் வெளிவந்த கட்டுரை அது. குரானிய வசனங்கள், ஹதீஸ்கள், உலக அளவிலான நடைபெறும் எதிரும் புதிருமான உரையாடல்கள் என்ற அளவிலேயே அந்த ஆய்வுக் கட்டுரை அமைக்கப்பட்டிருந்தது.

குரானிய வசனங்கள் குடியை அருவருக்கத்தக்கதாகவும் வெறுக்கத்தக்கதாகவும்,சொல்லி அதிலிருந்து விலகிக் கொள்ளச் சொல்லி அறிவுரை சொல்கிறது. திருட்டுக்கு கரங்கள் துண்டிப்பு, பாலியல் தவறுக்கு நூறு கசையடிகள் என்பது போல தண்டனைக்குரிய குற்றமாக சொல்லவில்லை என்ற கருத்துதான் பிரதானமாக சர்ச்சைக்குரியதாய் மாற்றப்பட்டது, ஹதீஸ்களில் குடிக்கு கசையடி தண்டனை சொல்லப்பட்டிருப்பதையும் குடி தடை செய்யப்பட்டிருப்பதற்கான தரவுகளும் அக்கட்டுரையில் விவாதிக்கப்பட்டிருந்தன. கருத்தை கருத்தால் எதிர் கொள்ளாமல் காபிர்பத்வா, ஊர்விலக்கம் என நியாயமற்ற முறையில் செயல்பட்டனர்.

இப்பிரச்சினைகள் தொடர்பான விரிவான 103 பக்க அளவிலான ஆவணத் தொகுப்பு காபிர்பத்வா - ஊர்விலக்கம் முஸ்லிம் உரையாடல் மார்ச் 2008ல் வெளிவந்தது. ஊர்மக்கள் மத்தியில் உண்மைகளை அறிவிக்கும் பொருட்டும், அப்போதைய அபீமுஅ நிர்வாகத்தின் நியாயமற்ற செயல்முறைகள் குறித்தும் ஒரு கவன ஈர்ப்பினை செய்வதாக இருந்த அந்த நூல் ஊர்விலக்கம் செய்யப்பட்ட அந்த ஜமாஅத்திற்கு உள்ளாலேயே வீடுவீடாக விநியோகிக்கப்பட்டது. இளைஞர்கள். பெண்கள் புதிய உண்மைகளை கண்டடைய முயன்றனர்.

ஏப்பிரல் 2008 முதல் என்னையும் என் குடும்பத்தையும் ஊர்விலக்கம் செய்த நிர்வாக அமைப்பு பொதுமக்களால் மாற்றப்பட்டு புதிய நிர்வாகம் பதவி ஏற்று செயல்பட்டுவருகிறது.

12 - 07 - 2008 அன்று ஊர்விலக்கம் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நாளில் அந்த கறுப்பு நாளை எழுத்துரிமை நாளாக்கி மன்னார்குடி மக்கள் கலை விழாவில் குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம் நூல் வெளியிடப்பட்டது.

4)தமிழ்நாடு வக்ப்வாரியம் ஜமாஅத்துக்கள் ,தர்காக்களின் வருமானம்,நிர்வாகம் நடைமுறை உள்ளிட்ட செயல்பாடுகளை கட்டுப்படுத்துமொரு அமைப்பு.
1995 வக்ப் சட்டம் இந்திய அளவில் இதனை அமுல் படுத்துகிறது.த்மிழ்நாடு வக்ப் வாரிய தலைவராக தமுமுக பொதுச் செயலாளர் ஜனாப் ஹைதர் அலிபொறுப்பு ஏற்றபின் 26 - 08 - 2008ல் வக்ப் வாரியம் ஒரு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.அதில் எந்த ஒரு ஜமாத் உறுப்பினர் மீதும் சமூக புறக்கணிப்பு, மற்றும் ஊர்நீக்கம் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என அது வலியுறுத்தியது.

அந்த தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ்நாடு வக்ப்வாரியத்திற்கு 10 - 11 - 2008 மற்றும் 25 - 02 2009 தேதிகளில் மேல்முறையீடு மற்றும் நினைவூட்டு அனுப்பி அபீமுஅ ஜமாஅத்தின் ஊர்விலக்கத்தை ரத்து செய்ய கோரியிருந்தேன்.

இதற்கு தமிழ்நாடு வக்ப் வாரியம் 6 - 3 - 2009 தேதியிட்ட ஒரு கடிதத்தின் மீலம் அபீமுஅ நிர்வாகத்திற்கு எனது மற்றும் எனது குடும்பத்தின் மீதான ஊர்விலக்கத்தை ரத்து செய்ய அறிவுரை வழங்கியிருந்தது,மேலும் வாரிய உததரவை மீறுவது வக்ப் சட்டம் 1995 பிரிவு 64(1) ந்படி நடவடிக்கைக்கு உட்பட்டதாகும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.
இதுவரையிலும் இது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது.

மனிதாபிமானம் ,சட்டம் ஒழுங்குக்கு உட்பட்டு நடத்தல் மனித உரிமைகளை மதித்தல் என்பதான அடிப்படை நியாயங்கள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது வருந்தத் தக்கதாக உள்ளது.

தற்போது வக்ப்வாரியத் தலைவராக கவிக்கோ அப்துர் ரகுமான் பொறுப்பேற்று உள்ளார்.சமய அறிஞராகவும்,இலக்கியப் படைப்பாளியாகவும் இருக்கிற கவிக்கோவின் அணுகுமுறை எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

5) என் எழுத்தின் இயக்கம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது, உயிர் எழுத்து இதழில் பின்காலனிய இஸ்லாம்,உன்னதம் இதழில் அர்சால் முஸ்லிம் பின்காலனிய உரையாடல்,வார்த்தை இதழில் பின்நவீன் இஸ்லாமிய கதையாடல்கள்,புதியகாற்றில் சென்னை சேரி முஸ்லிம்களின் வாழ்வியல் இருப்பு,எழுநூறாண்டு குதிரைசுமந்து ஒரு நாடோடி செல்கிறான் பல்ஸ்தீன கவி மக்மூது தர்வேஷ் பற்றி. முதற்சங்கு இதழில்தொப்பூள் கொடி அறுபட்ட குரல் - புலம்பெயர் ஈழ இலக்கியம் முன்வைத்து, கிளிக்கூண்டு சிமிக்கியுடன் புனைவுப்பரப்பில் மிதக்கும் மகரபட்சி,படைப்புகள் புதுவிசை, தீராநதி என தொடர்கிறது.

தற்போது டிஎம்பி தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் கூகுள் இணையத்திலும் மீண்டும் மைலாஞ்சி கவிதைகள்,அல்லாவின் மொழி,பெண்நபி தொடர்பாக இருதரப்பிலும் 124 க்கும் மேற்பட்ட பதிவுகளோடு உரையாடல் தொடர்கிறது.

சென்ற மாதத்தில் வால்பாறையில் நடைபெற்ற இருநாள் கவிதை அமர்வில் செல்மாபிரியதர்சனின் தெய்வத்தை புசித்தல்,மதுரையில் நடைபெற்ற கடவு அமைப்பின் இருநாள் இலக்கிய விமர்சனக் கூட்டத்தில் யவனிகா சிறீராமின் திருடர்கள் சந்தை கவிதைநூல்களை மதிப்பீடு செய்ய அழைக்கப்பட்டிருந்தேன்.

12 - 07 - 2009 அன்று நானும் எனது குடும்பமும் எழுத்துக்காக ஊர்விலக்கம் செய்யப்பட்ட மூன்றாம் ஆண்டின் துவக்கம் அண்ணாமாவட்டம் வத்தலக் குண்டுவில் இந்திய இலக்கிய அமைப்பு சாகித்திய அகாடமி கவிஞர்கள் சந்திப்பு நிகழ்விலும் எனது பதிவை வெளிப்படுத்தினேன்.

5) பதினெண்ணாயிரம் தமிழ்ஞானப்பாடல்களைப் பாடியசூபிஞானி பீர்முகமது வலியுல்லாவின் தர்கா அபீமுஅ நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் ரஜப் மாதம் பிறை 1 முதல் 14 வரை ஆண்டுப் பெருவிழா நடைபெறும். 14 - ம் இரவு விடிய விடிய அந்த சூபிஞானியின் சமாதியின் முன்பு அவர் எழுதிய பாடல்களை இரவு 9 மணிமுதல் காலை 5 மணிவரை கூட்டிசை குரல்வழியாக பாடும் வழக்கம் உண்டு.

2007 - ம் ஆண்டில் இந்த பாட்டு மஜ்லிசுக்கு சென்ற போதுதான் பழைய நிர்வாகத்தின் சிலர் தர்காவின் உள்நுழைய அனுமதியை மறுத்து எனக்கு எதிராக அராஜகம் செய்தனர்.

ஆண்டுதோறும் நடக்கும் இந்த விழாதொடர்பாக நபிதின அசோசியேசன் என்ற அமைப்பின் ஒரு சில இளைஞர்கள் சிறப்புமலர் ஒன்றை வெளியிடும் பழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த ஆண்டுக்கான பீரப்பாவிழா 24 - 6 2009 துவங்கி பாட்டுமஜ்லிஸ் 7 - 7 - 2009 அன்று நிகழ்ந்தது.

இந்த விழாவிலும் தென்னகத்து ரூமி - தக்கலை ஞானமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு வலியுல்லா 56 பக்க சிறப்பு மலர் ஒன்றையும் வெளிக் கொண்டு வந்தனர்.

இந்த மலருக்காக என்னிடமும் ஒரு கட்டுரை கேட்டிருந்தனர்.நானும் கராமாத்துகள் தலைப்பில் ஒரு விரிவான கட்டுரையை கொடுத்திருந்தேன்.

குரான் ,ஹதீஸ்களில் இடம் பெற்றிருக்கும் அதிசய செயல்களான நபிமார்களின் முஅஜிசாத்துகள் மற்றும் முகியத்தீன் அப்துல்காதிர்ஜிலானி,முகினுதீன்சிஸ்தி,ஷாகுல் ஹமீது நாயகம் சூபிஞானி பீர்முகமது வலியுல்லா உள்ளிட்ட இறைநேசர்கள் பற்றிய வாய்மொழி வரலாறுகளில் தென்படும் கராமாத்துகள் என்னும் அதிசய கதையாடல்கள் , அவற்றின் தொன்ம விசித்திரங்கள் ,இந்த அதிசய கதையாடல்களை எவ்வாறு அர்த்தம் கொள்வது என்பன குறித்தும் அக்கட்டுரை விளக்கியிருந்தது.

இந்த சிறப்பு மலரை மக்கள் மத்தியில் 7 - 7 - 2009 இரவு நபிதின அசோசியேசன் நண்பர்கள் விநியோகித்துக் கொண்டிருந்தபோது முன்பு என்னை ஊர்விலக்கம் செயத பழைய நிர்வாகத்தினரில் சிலர் சிறப்புமலரின் ஆசிரியரை கடுமையாக மிரட்டி உள்ளனர். அவர் அபீமுஅ ஜமாஅத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரையும்ஊரைவிட்டு விலக்கிவிடுவோம் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதனால் ஒரு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ஊர்விலக்கம் செய்யப்பட்ட ஒருவரின் எழுத்தோ ,கட்டுரையோ ஊர்மக்கள் மத்தியில் வாசிப்பதற்கு சென்றுவிடக் கூடாது என்ற மிகக் குறுகிய எண்ணத்தில் அந்த ஒருசிலர் செயல்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.

செல்பேசியில் பேசிய நபிதின அசோசியேசன் பொறுப்பாளர்களில் ஒருவரான இலக்கியப் படைப்பாளியும் சூபித்துவ சிந்தனையாளருமான சகோதரர் முபீதாநாசரின்குரலிலும் பதட்டம் தென்பட்டது மறுநாள் காலையில்தான் எனக்குத் தகவல் கிடைத்தது.

நான் எழுதிய கராமாத்துகள் கட்டுரையின் 13 பக்கங்களையும் கிழித்துவிட்ட பிறகுதான் அம்மலரை விநியோகிக்க அனுமதித்து உள்ளனர். என்னிடம் பிரசுரத்திற்காக கராமாத்துகள் கட்டுரை வாங்கிச் சென்ற மலரின் ஆசிரியர் கே.முகமதுகான் இதுவரையிலும் என்னை தொடர்பு கொள்ளவே இல்லை..

எனது கட்டுரை கிழிக்கப்பட்ட மலர்மட்டும் வேறு நண்பர்கள் மூலமாக என் கைக்கு கிடைத்தது. ஊர்விலக்க வன்முறை மனிதர்களையும் கிழிக்கிறது, எழுத்துக்களையும் கிழித்துப் போடுகிறது.

வாடிய செடி

கலீபா காலத்து சாட்டையொன்றை
தூக்கிக் கொண்டு ஓடி வருகிறார்கள்
பத்வாக்களின் பேரிரைச்சல்களில்
ஏற்கெனவே மூர்ச்சையற்றுக் கிடந்த
கவி இக்பாலும் சர்சையத் அகமதுகானும்
இன்னும் எழும்பவில்லை
அனல் ஹக்கென்று பேசிய
சூபிமன் ஸுர் ஹல்லாஜை
வெட்டி துண்டு துண்டாக்கிய
வாள்களின் முனையில்
உலராமல் உறைந்திருக்கும் ரத்தம்
பல்லக்கு தூக்கிகள் சூழ்ந்து நிற்க
கலீபாக்களின் நகர்வலம்
விட்டுவிடாமல் தொடர்கிறது.
நேசித்த மனைவி குழந்தைகளிடமிருந்து
பிடுங்கி எறியப்பட்ட வாடிய செடியொன்று
இனங்காண முடியாத துன்பவலிகளுடன்
தன் ஹிஜ்ரத்தை தொடர்கிறது.
சாட்டைகளை வீசிய கைகளில்
கூர்வாள் மின்னுகிறது.
அது விரல்களை துண்டிக்கிறது.
தலைகளை வெட்டுகிறது.
பிணமாகிவிட்டால் மையவாடி கூட தர மறுக்கிறது.
பத்வாக்களுக்கு என்றுமே இதயம் இருந்ததில்லை. 

- ஹெச்.ஜி.ரசூல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It