“சாதலும் புதுவது அன்றே
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின் இன்னா தென்றலும் இலமே”

எனும் கணியன் பூங்குன்றன் சொல்வழி “திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின்” இக்கட்டுரை வரைய தூரிகை எடுத்தே விட்டேன்!

               நாம் ஒரு புகைப்படத்தினுள் அடைபட்டுப் போகவும் நமது மொத்த வாழ்வும் நமது இருப்பும் சிலரது நினைவலைகளாகிப் போவதற்கும் ஒரு நொடி போதுமானது. அந்நொடி ஒளித்து வைத்திருக்கும் திகில், நமக்குத் தெரிந்தவர்களின் மரணத்தைக் கடந்து செல்ல நேர்கையில் அவ்வப்போது எட்டிப் பார்த்துச் செல்லும். யாரேனும் மறைந்த செய்தி கேள்வியுறுகையில் உண்டாகும் அதிர்ச்சியுடன் சேர்ந்து எழும் இயல்பான கேள்வி “அவரது குடும்பம் அவரை இழந்து இனி எப்படி?”. பொருளாதாரக் கண்ணோட்டத்தைத் தாண்டி உளவியல் ரீதியிலான அவர்களது இழப்பிலும் பாதிப்பிலும் விளையும் கேள்வி. ஆனாலும் காலச் சக்கரம் சுழன்று கொண்டேதான் இருக்கிறது; நாட்கள் உருண்டோடிக் கொண்டேதான் இருக்கின்றன… அவரது குடும்பத்தார்க்கும்.

எனில், நான் இல்லையென்றால் இந்த உலகம் ஒன்றும் முடிவுக்கு வந்துவிடப்போவதில்லை. என்னைச் சார்ந்தவர்களின் அன்றாடப் பணிகள் எந்தவிதத்திலும் தடைபடப் போவதில்லை. அவ்வப்போது எனது நினைவுகள் மின்னலெனக் குறுக்கிடுவதைத் தவிர. உலகம் வழமையான பரபரப்புடன் இயங்கிக் கொண்டேதான் இருக்கப் போகிறது. எனது இருப்பின்மை எவ்வித மாற்றத்தையும் உண்டாக்கப் போவதில்லை. வாசகர்களின் நலன் கருதி, எழுத்து நாகரிகம் கருதி, ‘நான்’, ‘எனது’ என்று குறிப்பிட்டு முன்னிலையைத் தவிர்த்துள்ளேன். “இவ்ளோதான் வாழ்க்கை… நீ என்பது காற்றில் கரைந்து போகும் ஒரு பிடி சாம்பல். அவ்வளவே! அப்புறம் ஏன் வாழும் போது இவ்வளவு ஆட்டம்?” – ஒவ்வொரு மரணமும் பறையடித்துக் கூறும் செய்தி இது. இதை நானும் கூற ஆசைதான். ஆனால் குதியாட்டம் போடுபவர்களும் பெரிய மகான் ஆகி இதைக் கூறிவிட்டு அடுத்த ஆட்டத்தைத் துவக்குகின்றனர் ஆதலால் நான் இதை மறுமொழியாமல் விட்டுவிடுகிறேன்.

ஏனோ எனது மரணம் பற்றிய சிந்தனைகள் ஒருபோதும் என்னைப் பாதித்தது இல்லை. எனது அன்புக்குரியோரின் இழப்பைத்தான் தாங்கும் தைரியமில்லை எனக்கு. அதுவே பெரும் பீதியைக் கிளப்புகிறது.

எனது மரணத்தைப் பற்றிய சில கற்பனைகளும் ஆசைகளும் (ஆம்! ‘ஆசைகள்’) உண்டு எனக்கு. இதுவரை தனது மரணம் குறித்த விருப்பங்களை யாரேனும் இப்படி அங்கதத்தில் எழுதி வைத்திருக்கிறார்களா? தெரியவில்லை. இதை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போதா வெளிப்படுத்த முடியும்? எதற்கும் இப்போதே எழுதி வைத்துவிடுவோம்… அகால மரணம், நரைகூடி கிழப்பருவம் எய்தி போதும் போதும் என வாழ்ந்த பின்னான மரணம், திடீர் மரணம், நெடுநாள் நோய்வாய்ப்பட்டு கஷ்டப்பட்டு பின் தழுவப்பட்ட மரணம்…. எத்தனை எத்தனை வகைகள்? கண்டிப்பாய் இறுதியாகக் கூறப்பட்ட வழியில் எனது கடைசி மூச்சை விட விரும்பவில்லை. எனக்கானவர்கள் நூறாம் அகவையையும் தாண்டி ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் என் மரணம் நிகழ வேண்டும். எனது மரணம் வலியில்லாததாய் இருக்க வேண்டும். ஒரு நல்ல மகிழ்ச்சியான நிகழ்வுக்குப் பிறகு மனநிறைவுடன் கூடிய இரவில் வாய்க்கும் அமைதியான நித்திரை நிரந்தரமானதாகிப் போக வேண்டும். மிக முக்கியமாக என்னைச் சார்ந்தோருக்குப் பாரமாய் இல்லாமல் அவர்களின் மனதில் ‘Why now?” என்ற கேள்வியை விட்டுச் செல்வதே சாலச் சிறந்தது. “Why not now?” என்ற கேள்வி தரும் உணர்வை விடவும் கொடூரமானதொன்று இவ்வுலகில் இருக்க முடியுமா?

கம்பீரமாக வாழ்வது போலவே கம்பீரமாக மரணத்தையும் வரவேற்கவே உத்தேசம். மரணம் என்னைத் தழுவும் போது… ஆமா, அது ஏன் தழுவுது? மரணத்துடன் கட்டிப்பிடி வைத்தியம் எல்லாம் செய்ய விருப்பமில்லை எனக்கு. பாரதி கூறியதைப் போல் “காலா! உனை நான் சிறு புல் என மதிக்கிறேன்; என்றன் காலருகே வாடா ! சற்றே உனை மிதிக்கிறேன்” என்று மரணத்தை எட்டி உதைக்கவும் வேண்டாம் எனக்கு. மரணம் என்னை அழைத்துச் செல்ல வருகையில், “அட! கொஞ்சம் இருப்பா… போர்ன்விட்டா குடிச்சிட்டு தெம்பா வரேன்” என்று கூறி ஆற அமர கடைசி கோப்பையை ரசித்து அருந்திவிட்டு, “அப்புறம் என்ன? கெளம்புறது” என்றவாறே மரணத்தின் தோளில் கையைப் போட்டுப் பகடி செய்தவாறே அந்நீண்ட யாத்திரையை இனிதே துவங்க வேண்டும். என் மரணத்திற்குப் பிறகு அன்பர்கள் கடைபிடிக்க வேண்டியவை.

ஓரளவு நினைவுக்கு வந்தவற்றைப் பதிவிட்ட நிறைவு.

ஒருமுறை செத்துப் பிழைத்த உணர்வு.

மேலும் செத்துச் செத்து விளையாட விழைவு!

- சோம.அழகு