அண்ணல் அம்பேத்கர் சட்ட அறிஞர்; ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக பாடுபட்டவர்;அத்துடன் அவர் அறிவுலக மாமேதையகவும் திகழ்ந்தவர்; மிகச் சிறந்த தலைமைப் பண்புகள் கொண்டவர்; மத ஆராய்ச்சியாளர்; தொழிலாளர் நலம் பெற சிந்தித்தவர்; இப்படி பன்முக ஆளுமை கொண்டவர் அம்பேத்கர். அம்பேத்கரின் தலைமை பண்பு நலம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மேலவை உறுப்பினராக அவர் இருந்தபோது ஒரு முறை மேலவை கூட்டத்தில் பேசும் போது ஆங்கிலேயர் அரசில் தாழ்த்தப்பட்டோர் படும் அவலங்களை எல்லாம் கேட்போர் நெஞ்சம் வேதனைப்படும் வகையில் விரிவாக எடுத்துரைத்தார்.

Ambedkarஅதனைக் கேட்டு அரசு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தது. ஆளுநர் வில்சன் "நான் கொடுத்த பதவி பிச்சையை ஏற்றுக்கொண்டு எங்கள் அரசையே குறை கூறுவதா?" என்று கேட்டார். அதற்கு அம்பேத்கர்,"ஆளுநர் அவர்களே உலகத்தில் ஒவ்வொரு நாடாகப் பிச்சை எடுப்பவர்கள் நீங்கள் தான். இந்த நாட்டை கூட உங்களுக்கு நாங்கள் தான் பிச்சை போட்டுள்ளோம். நீங்கள் கொடுத்த பதவியை வேண்டுமானால் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். பதவியில் அமர்ந்துக் கொண்டு கடமையைச் செய்யாதவனை நான் மனிதனாகவே மதிப்பது கிடையாது” என்றார் அம்பேத்கர்.

அம்பேத்கர் காட்டும் சாதியின் கொடிய முகமும் இந்து மத எதிர்ப்பும் பலரும் பொதுவாக சாதி ஏற்றத்தாழ்வினை உயர்வு தாழ்வு என்ற இரு நிலைகளிலேயே அணுகுவர். ஆனால், அம்பேத்கர் அவர்கள் அதனை நுட்பமாக ஆராய்ந்து இந்து மதத்தில் சாதி இரு நிலைகளாக மட்டும் இல்லை இரு நிலைகளாக மட்டும் இருந்தால் அது சமத்துவம் இல்லாத சாதாரண நிலையாகும். ஆனால், இந்து மதச் சாதி என்பது சமத்துவம் இல்லாத நிலைக்கும் தாழ்வான படிநிலைத் தன்மை, படிப்படியான சமத்துவமின்மை என்ற நிலையை கொண்டதாகும். சமத்துவமின்மையால் நேரும் அபாயமானது, படிப்படியான சமத்துவமின்மையால் நேரும் அபாயத்தில் பாதி கூட இல்லை. சமத்துவமின்மைக்குள்ளேயே அதன் அழிவை ஏற்படுத்தும் வித்துக்களும் உள்ளன.

ஆனால், படிப்படியான சமத்துவமின்மை என்பது, அதனை எதிர்த்து பொதுவான அதிருப்தி ஏற்படாமல் தடுக்கிறது. இதனை விளக்க வேண்டுமாயின், நமது சாதி அமைப்பில் ஒருவர் ஒருபுறம் மற்றவர்களை விட உயர்ந்தவராகவும் மறுபுறம் வேறு பலரை விட தாழ்ந்தவராகவும் இருப்பவராகப் பிரிக்கப்பட்டுள்ளார். உயர் சாதியினர் எனப்படுவோரிடமும் படிப்படியான தாழ் நிலை உண்டு. அவ்வாறே தாழ்த்தப்பட்டோரிடமும் படிப்படியான உயர் நிலை உண்டு. இந்தப் படிநிலைத் தன்மை தான் தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று வேறு பலரால் கூறப்படுவதற்கு கோபமடைந்து விடாமல் அவர்களைத் தடுத்து விடுகிறது,என்று அம்பேத்கர் விளக்குகிறார்.

1956 ஆம் ஆண்டு அக்டோபர் ஆம் நாளில் நாக்பூரில் பேசும்போது டாக்டர்.அம்பேத்கர் குறிப்பிட்டார். "சமத்துவமின்மை, சமூக அநீதி ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள இந்து மதம், வளர்ச்சிக்கு வழி வகுக்கவில்லை. தீண்டத்தகாத மக்கள், இந்து மதத்தில் அடிமைகளாக இருக்கும் வரை எந்தவித தன்னம்பிக்கையும் புத்துணர்வும் வரவே வராது. "இந்து மதம் தீண்டாமை கொடுமையால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் தீமை செய்து விடவில்லை. மற்றவர்க்கும் இந்த நாட்டுக்கும் கூட அது எதிரானது" என்பதனையும் அம்பேத்கர் அவ்வுரையில் குறிப்பிடுகிறார். "இந்து மதமும் அதன் சமூகப் படிநிலைத் தன்மையும் நம்மை அழித்துவிட்டது. ஆனால் இத்துடன் இது நின்றுவிடப்போவதில்லை. இந்துக்களையும், இறுதியாக இந்தியாவையும் அழித்து விடும். இந்து மதம் யாரையுமே காப்பாற்றாது." என்கிறார் அம்பேத்கர்.

அம்பேத்கர் இந்து மதம் குறித்து இவ்வளவு தீவிரமான எதிர்ப்புணர்வு கொண்டிருப்பதற்கு காரணங்கள் பல்வறு வகைப்பட்டவை. இந்து மதம் மட்டுமின்றிப் பிற மதங்களிலும் கூட அறிவியல் பூர்வமான சிந்தனை இல்லை என்று அம்பேத்கர் கூறுகிறார். அவர் ஏற்றுகொண்ட புத்தமதத்தில் உலகம், மக்கள் தோற்றம் குறித்து தவறான, உண்மைக்கு மாறான கருத்துக்களை அம்பேத்கர் தெளிவுப்படுத்துகிறார். “பிற மாதங்களில், கடவுள்தான் உலகத்தைப் படைத்தார்; முதலில் பூமியையும் பிறகு சொர்க்கத்தையும் பல கோள்களை ஏற்படுத்தினார் என்று உள்ளது.... நமக்குத் தேவையானவற்றையெல்லாம் கடவுள் உருவாக்கினார். எனவே நாம் செய்யவேண்டியது இதையெல்லாம் உருவாக்கிய கடவுளைப் புகழ்ந்து பாடுவது தான் என்று பொருள்படுகிறது. இன்று பகுத்தறிவுள்ள மனிதன் இதை ஏற்கமாட்டான்." என்கிறார் அம்பேத்கர்.

இன்றைக்கும் இந்து மதம் போன்ற மதங்கள் சொல்லும் உண்மைகள் இவைதான். எனவே அம்பேத்கரின் இந்து மத எதிர்ப்பு பகுத்தறிவின் அடிப்படையில், காரண காரியங்களுடன் கூடியது என்பதை நாம் புரிந்து கொள்வோம்!

- நாகசுந்தரம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)