dmk sunriseபல தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றிவிடும் என்பதில் பலருக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. ஆட்சியேற்ற முதல் நாளில் இருந்தே தனது வாக்குறுதிகளை திமுக அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது.

நீட் தடை, அனைத்து சாதி அர்ச்சகர் உரிமை, பெண் அர்ச்சகர், எழுவர் விடுதலை என சிக்கலான விஷயங்களையும் மிக கவனமாக, அதே வேளையில் சரியாகவும் தளபதி மு.க ஸ்டாலினின் திமுக அரசு கையாண்டு வருகிறது.

ஆனால் அதன் வேகம் போதாது எனவும், முந்தைய அதிமுக போலவே நடந்துகொள்கிறது எனவும் பல கருத்துக்கள் திமுக அரசை விமர்சிக்கும் நோக்கில் முன் வைக்கப்படுகின்றன. இது போன்ற கருத்துகள், யதார்த்தை புரிந்துகொள்ளாமல் தூய்மைவாத நோக்கில் மட்டுமே எழுகின்றன.

பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்துள்ளது திமுக. தேர்தலில் பங்குபெறும் கட்சிக்கு ஆட்சி முக்கியம். ஆட்சியை பறிகொடுத்துவிட்டு, எதிர்க்கட்சியாக இருந்து போராட எந்த தேர்தல் கட்சியும் விரும்பாது.

தேர்தலில் பங்குபெறும் கட்சிகளுக்கு பல நிர்பந்தங்கள் உண்டு. அந்த நிர்பந்தங்களைத் தாண்டி, தேர்தலில் வெற்றி பெற்று, மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

பள்ளிக் குழந்தைகளை பாலியல் வன்புணர்வுக்குள்ளக்கிய பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர்கள் மீது சரியான நடவடிக்கை எடுத்த திமுக அரசை கலைப்பேன் ஒரு அரசியல் தரகுப் பொறுக்கியால் பேச முடிகிறது.

அந்தப் பொறுக்கிக்கு பெரிய எதிர்ப்பு பதிவு செய்யப்படவில்லை. நீட் விஷயத்திலும் மிக மோசமாக தமிழக பாஜக நடந்து கொண்டாலும் பெரிய எதிர்ப்பு பதிவு செய்யப்படவில்லை.

அனைத்து சாதி அர்ச்சகர், பெண் அர்ச்சகர் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தும் போதும் எதிர் சக்திகள் மக்களைக் குழப்பும் வேலைகளில் ஈடுபடுவார்கள் என்பது உறுதி. அந்தச் சூழலில் யார் பக்கம் நாம் நிற்கப் போகிறோம்?

மென்மையாக செயல்படுகிறது என திமுகவை விமர்சிப்பதை தொடரப் போகிறோமா அல்லது மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் குழப்பவாதிகளைத் தனிமைப் படுத்தப் போகிறோமா?

பரந்து பட்ட கோரிக்கைக்காக தலைவர் கலைஞர் ஆட்சியைப் போன்றே, தளபதி மு.க ஸ்டாலினின் தற்போதைய திமுக அரசை தொடர்பு கொள்வது மிக எளிதாக இருக்கிறது. ஆனால் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு வெளியே ஆதரவு இருக்கிறதா?

மதமாற்றத் தடைச் சட்டம், சிறுபான்மையினர் எதிர்ப்பு என மக்கள் விரோத நடவடிக்கைகளை பாஜக தொடர்ந்து செயல்படுத்தினாலும், அடுத்து ஆட்சிக்கு வரமுடியும் என்ற நம்பிக்கை பாஜகவுக்கு உள்ளது. அந்த நம்பிக்கை பாஜகவுக்கு அகங்காரத்தையும் திமிரையும் தருகிறது.

திமுகவிற்கோ ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டே, அனைத்து சாதி அர்ச்சகர், பெண் அர்ச்சகர் போன்ற முற்போக்குத் திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. மக்களுக்கு ஒரு பயனும் அற்ற ஜல்லிக்கட்டு எனும் காட்டுமிராண்டித் தனத்திற்கு கிடைத்த மக்கள் ஆதரவு, அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்திற்கு கிடைத்திருந்தால் 40 ஆண்டுகளுகளாக பயன்பாட்டில் இருந்திருக்கும்.

மதுவிலக்கு, சுற்றுச்சூழல் திட்டங்களில் திமுக அறிவியல் மனப்பான்மையோடு செயல்பட வேண்டுமென எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஆனால் களச் சூழல் என்ன?

மது கலாச்சாரம் எளிய மக்களைப் பாதிக்கிறது என்ற நோக்கில், மதுவிலக்கை அமல்படுத்துவது சரி எனத் தோன்றினாலும், மதுவிலக்கு அறிவியல் மனப்பான்மை அன்று. அறிவியல் பார்வையோடு சுற்றுச்சூழல் திட்டங்களை கையாள்வது திமுகவிற்கு கடினமன்று.

ஆனால் கடந்த பத்தாண்டுகளாக சூழலியல் அடிப்படைவாதம் தமிழ் நாட்டில் நிலைபெற்றுள்ளதால், அறிவியல் பார்வையோடு சுற்றுச்சூழல் திட்டங்களை கையாண்டால் கடுமையான எதிர்ப்பை திமுக சந்திக்கும்.

ஆட்சியா? அறிவியல் மனப்பான்மையா என்றால் ஆட்சியே தேர்தல் கட்சிகளுக்கு தேவை. ஆட்சியா? கொள்கையா என்றால் ஆட்சியே தேர்தல் கட்சிகளுக்கு தேவை.

எனவே தான் பெரியார் காம்ராஜர் ஆட்சியை கண் இமை போல் பாதுகாத்தார். 1965 மொழிப் போராட்டத்தில் கூட காமராசரை ஆதரித்தார். 1967 ல் அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சிக்கும் வந்த பின்னர், இறக்கும் வரை திமுக ஆட்சியை பாதுகாத்தார் தந்தைப் பெரியார்.

அதே வேளையில் வழிதவறும் அரசை அறிவியல் நோக்கில் கண்டிக்கவும் தவறவில்லை. ஆனால் பெரியாருக்கும் பின் திமுக அரசை பாதுக்காக்கிற வேலையை யாரும் செய்யவில்லை. விமர்சிப்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வந்தது. குறிப்பாக 2009 இல் இந்த எண்ணிக்கை பெருமளவில் கூடிவிட்டது.

திமுகவும் ஆட்சியைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் கூடிவிட்டது. ஆட்சியை பிடிப்பதும் பாதுகாப்பதும் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டால் கொள்கை, அறிவியல் மனப்பான்மை பின்னால் போய்விடும். கொள்கை நீர்த்துப் போய் பாப்புலிசம் கூடிவிடும்.

பாஜக எதிர்ப்புக்கு மக்கள் ஆதரவு உள்ளது என திமுக உணர்ந்ததால் 2019, 2021 தேர்தல்களில் பாஜக எதிர்ப்பை திமுக பிரதானப் படுத்தியது. வெற்றியும் பெற்றது. இது போன்று, திமுக ஆட்சிக்கு ஆதரவான களச்சூழலும், அறிவியல் மனப்பான்மைக்கு ஆதரவும் இருக்குமானால், தேர்தலில் வெற்றி பெறுவதைப் பற்றி கவலைப் படாமல் அடித்து ஆடும் துணிவைத் திமுக பெரும்.

முற்போக்கு என்பது தனி நபர் தூய்மைவாத்தில் முடிந்துவிட்டால் பாஜக தான் கிடைக்கும். முற்போக்காளர்களுக்கு உள்ள ஆயுதம் திமுக. போர்க்களத்தை திமுகவிற்கு ஆதரவாக மாற்றிவிட்டால் துணிந்து ஆட திமுக தயங்காது.

எனவே தந்தைப் பெரியார் போலவே திமுக ஆட்சியைப் பாதுகாப்பது தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் நல்லது.

விமர்சிக்கப்படுவோம் எனத் தெரிந்தும், தன்னைப் பலி கொடுத்து மக்கள் நலனுக்காக திமுக, காங்கிரஸ் ஆட்சியைப் பாதுகாத்தார் தந்தைப் பெரியார். நாமோ நம்மை தூய்மை வாதிகளாக காட்டிக் கொள்வதற்காக மற்றவர்களைப் பலி கொடுக்கிறோம். இந்த தடித்தனத்தை நிறுத்தி, பாசிசத்தை வீழ்த்த களத்தையும் ஆட்சியையும் பாதுகாக்க வேண்டும்.

- சு.விஜயபாஸ்கர்