Save Higher Educationபெறுநர்:

நீதியரசர் மாண்புமிகு ஏ.கே.இராஜன்
தலைவர்
உயர்நிலைக்குழு
மருத்துவக் கல்வி இயக்ககம்
மூன்றாவது தளம், கீழ்பாக்கம்,
சென்னை 600010
.
பொருள் : நீட் தேர்வு குறித்த கருத்துக்கள் சமர்பித்தல்

ஐயா,
வணக்கம்..

தமிழ்நாடு உயர்கல்வி இயக்கதின் சார்பாக நீட் தேர்வு தமிழநாட்டிற்குத் தேவையில்லை அதை அரசு ரத்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி கீழ் கண்ட கருத்துக்களை தங்களின் மேலான பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.

1. சமத்துவமற்ற கல்வியும் சமமான தேர்வும் :

பாடதிட்டங்களிலும், பயிற்றுவிக்கும் முறைகளிலும் மட்டுமல்ல, பயில்வோரின் பின்புலத்திலும் அதிகமான வேறுபாடுகள் நிலவும் வேளையில் நாடெங்கிலும் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு என்பது சரியல்ல.

கிரமப்புற மாணவர்களுக்கும், நகர்புற மாணவர்களுக்கும் பெரும் வேறுபாடுகள் நிலவும் வேளையில் ஒரே போட்டித்தேர்வு என்பது சமூகநீதிக்கு எதிரானது. சமூகப் பொருளாதர சமத்துவத்தை உருவாக்க இயலாத நிலையில் மருத்துவ சேர்க்கையில் மட்டும் நீட் தேர்வு என்ற ஒரு வடிகட்டியை வைத்து திறன் சோதிப்பது சமூக நீதிக்கு எதிரானது. எனவே நீட் ரத்து என்பது அவசியம்.

2. 11&12 ஆம் வகுப்பு கல்விக்கு எந்த மதிப்பும் இல்லை.

எவ்வளவுதான் மதிப்பெண்களை 11&12 ஆம் தேர்வுகளில் பெற்றிருந்தாலும், அதற்கு எந்த மதிப்பும் தராமல் நீட் தேர்வின் அடிப்படையிலேயே தேர்வு செய்வது எந்த விதத்தில் நியாயம்? அப்படியாயின் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களுக்குப் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் எதற்கு? அது மட்டுமல்ல, இரண்டு ஆண்டுகள் கடுமையான பயிலும் மாணவர்களுக்கான நீதி மறுப்பு அல்லவா இது?

3. படிப்பது வேறு, தேர்வு வேறு

தமிழ்நாடு முழுவதும் ஒரே கல்வி திட்டம் பயிலும் அரசு பள்ளி மாணவர்கட்கு அதன் அடிப்படையில் நீட் தேர்வை அமைக்காமல் முற்றிலும் வேறு கல்வி திட்டத்தின் அடிப்படையில் நுழைவுத்தேர்வை வைப்பது முறையல்ல.

4. மாறுபட்ட பாடதிட்டதில் தேர்வு

பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்விற்கான பாட திட்டங்கள் செழுமைப் படுத்தப்பட்டுள்ள இந்த வேளையில், அதற்கு முற்றிலும் மாறுப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்துவதும், அதை மாணவர்கள் எழுதுவதற்காக பள்ளிகளில் தனியாக சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்பதும் முரண்பட்ட விஷயங்கள் அல்லவா?

5. ஏழைகள் கனவிலும் நினைக்க முடியாது

பொருளாதரத்தில் பின் தங்கிய மாணவர்கள் தங்களை தாயார் படுத்திக் கொள்ள முடியவே முடியாத ஒரு அமைப்புதான் நீட் தேர்வு என்பது. வசதி உள்ளவர்கள் மட்டும் பல இலட்சங்கள் கொடுத்து பயிற்சி எடுக்கும் வேளையில், மருத்துவ படிப்பு பற்றி கனவு கூட காணமுடியாத நிலை நீட் தேர்வினால் உருவக்கப்பட்டுள்ளது. இனி ஏழைகள் கனவில்கூட நினைக்க முடியாத உயரத்திற்கு மருத்துவக் கல்வியை நீட் தேர்வு கொண்டு சென்றுவிட்டது.

6. அரசுப் பள்ளிக்கான இடஒதுக்கீடு சலுகையே தவிர சமூக நீதி அல்ல

தமிழக அரசின் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% மருத்துவப்படிப்பு ஒதுக்கீடு என்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அவர்களில் பெரும்பாலோனோர் ஆங்கில வழி கற்றவர்களாகவே இருப்பர். தமிழ்வழிக் கற்றவர்களுக்கு இந்த ஒதுக்கீடு அதிக அளவில் பயன் தராது. இம்மாதிரி ஒதுக்கீடுகள் ஒரு வகைச் சலுகைகள்தானே தவிர, சமூக நீதியை உறுதிசெய்யாது.

7. +2 மதிப்பெண் அடிப்படையில் சிறப்பு இட ஒதுக்கீடு தேவை

+2 மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கை நடத்தப்படவேண்டும். இதிலும் வசதி படைத்தவர்கள் பல்லாயிரம் செலவு செய்து, அதற்கான பள்ளிகளில் பயிற்சி பெறுவதின் மூலம் முந்தும் ஆபத்து உள்ளபடியால், கிராமப்புற மாணவர்களுக்கு, மலைவாழ் மக்களுக்கு, அரசு பள்ளியில் தமிழ் வழி பயிலும் மாணவர்கட்கு என சிறப்பு இட ஒதுக்கீடுகள் செய்வது குறித்து அரசு ஆலோசிக்கலாம்.

மேலும் +2 மதிப்பெண்களை மட்டும் கணக்கில் எடுக்காமல், அதற்கு முன் வகுப்புகளில் எடுத்துள்ள மதிப்பெண்களையும் கணக்கில் எடுக்கலாம்.

8. மேல் சிறப்பு மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும்

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மேல் சிறப்பு படிப்பு படிக்க 50% இடஒதுக்கீடு இருந்தது. அதை முடித்தவுடன் அவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிறப்புப் பிரிவு மருத்துவராகப் பணிபுரியும் உத்திரவும் இருந்ததும் மேல் சிறப்புப் படிப்பு பயில்பவருக்கும் நீட் தேர்வு வைத்து விட்டதால் இந்த இட ஒதுக்கீடு நீக்கப்பட்டுவிட்டது.

அதனால் சிறப்பு மருத்துவர்கள் இனி அரசு மருத்துவமனைகளில் பணி புரிந்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லாமல் போனது. எனவே உயர் மருத்துவப் படிப்பு படிப்பவர்களுக்கும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்.

9. நீட் தேர்வில் வெளிப்படைத் தன்மை இல்லை.

நீட் தேர்வு நடத்துவதில் காட்டப்படும் கெடுபிடிகள் ஒரு புறம் துன்பங்களைக் கொடுத்தாலும், தேர்வுத்தாள்களை திருத்தும் முறை, மதிப்பெண்கள் வழங்கப்பட்டதற்கான தெளிவான முறைகள் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மை இல்லை.

10 .மாநில உரிமை மறுப்பு

தமிழ்நாட்டின் கல்வி உரிமையை ஒன்றிய அரசு பறித்து ஆதிக்கம் செலுத்துவது எவ்விதத்திலும் நியாயமல்ல. நீட் தேர்வு மாநில உரிமைகளைப் பறிப்பதால் அது ரத்து செய்யப்படவேண்டும்.

11. அமைப்பியல் வன்முறை மற்றும் பாசிச செயல்பாடு

தமிழ்நாட்டில் இந்த நீட் தேர்வு பல மாணவர்களின் உயிரைப் பலி வாங்கியுள்ளது. பலருக்கு மன உளைசல்களை ஏற்படுத்தி வருகின்றது. வசதி இல்லாதவர் குழந்தைகள் நன்றாக படித்தாலும் மருத்துவ படிப்பை படிக்க வைக்கவே முடியாது என்ற நிலை அவலமானது.

தேர்வு எழுதச் செல்வதற்கு ஏற்படும் சிரமங்கள் அனைவரும் அறிந்ததே. நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு என்பது அமைப்பியல் வன்முறையாகும். இது மனித உரிமை மீறலாகும். பன்மை சமுதாயத்தில் ஒரே அளவுகோலை வைத்து அளப்பது ஒரு வகை பாசிசமாகும் எனவே நீட் ரத்து அவசியமானது.

இவண்,
பேரா.இரா.முரளி
மாநில ஒருங்கிணைப்பாளர்