தேர்தலையொட்டி வெளியாகும் செய்திகளையும் அரசியல்வாதிகளின் அறிக்கைகளையும் பார்க்கும்போது மனிதர்கள் இத்தனை குரூரமாகவும் தந்திரமாகவுமா இருப்பார்கள் என்று வியந்து மாளவில்லை. அ.தி.மு.க., தி.மு.க. ‘எசப்பாட்டு’ கச்சேரிகளில் ஈழத்தமிழர்களின் தலை உருளாமல் இருந்தாலாவது ‘போங்கய்யா நீங்களும் உங்கள் புண்ணாக்கு அரசியலும்’ என்று புறக்கணித்துவிடலாம். ஆனால், தேர்தல் விருந்துபசாரத்தில் ஈழத்தமிழர்களின் குருதி அவர்களுக்கு மதுவாயிருப்பதும், சிதறிய சதைத்துண்டுகள் உணவாயிருப்பதும்தான் வருத்துகிறது. பிணங்களின் மீது மேடை அமைத்து அப்போதுதான் உருவியெடுத்த குடலை ஒலிவாங்கியாக்கி பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, சுயநலத்தின் நிர்வாணம் அருட்டுகிறது.

Jayalalitha fastingகடைசி மூச்சுக்கூட ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தபடிதான் பிரியவேண்டும் என்று அடாவடியாக அடம்பிடிக்கிற கலைஞருக்கு, ஈழத்தமிழர்களின் மனங்களில் தான் என்னவாக இருக்கிறேன் என்பது இன்னமும் புலப்படவில்லையா? ‘நீலி’ என்றும் ‘சாத்தான்’ என்றும் அண்மையில் மேலதிக பட்டங்களைப் பெற்ற ஜெயலலிதா அம்மையார், கால மறதியின் மீது வைத்திருக்கும் அளவுக்கதிகமான நம்பிக்கையையும் பாராட்டத்தான் வேண்டும். வாக்குகளுக்காக எல்லோரும் ஏறும் மேடையில் (ஈழத்தமிழர்களின் பாடையில்) நாமும் ஏறித்தான் பார்ப்போமே என்று உண்ணாவிரதத்தில் குதித்திருக்கிறார். வாக்காளர் அட்டை என்னும் துருப்புச் சீட்டைக் கையில் வைத்திருக்கிறவர்களே தொடர்ந்து தோற்றுக்கொண்டிருக்கிற பரிதாபத்தைத் தமிழகத்தில்தான் காணமுடியும். தேர்தலின் முன் ராஜாக்களாகவும் தேர்தல் முடிந்ததும் ஜோக்கர்களாகவும் பார்க்கப்படும் மக்களே இங்கு பரிதாபத்திற்குரியவர்கள்.

‘காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் இடையிலான கூட்டணி பலமாக இருக்கிறது; திடமாக இருக்கிறது’ என்று கலைஞர் மீண்டும் மீண்டும் தனது வார்த்தைகளைத் தானே நம்பாததுபோல அறிவித்துக்கொண்டிருக்கிறார். ‘ஆம்... ஆம்.. நாங்கள் உங்களோடுதான் இருக்கிறோம்’ என்று அவர்களும் ஏதோ ‘நெருடும்’ குரலில் வழிமொழிந்து கொண்டுதானிருக்கிறார்கள். காங்கிரஸ் ஈழத்தமிழர்களை அழிக்க இலங்கைக்கு ஆயுதம் அனுப்பும். அந்த ஆயுதப் பரிவர்த்தனையைக் கண்டுகொள்ளாத கலைஞர், அவ்வாயுதங்களால் அழிக்கப்படும் ஈழத்தமிழர்களுக்காக இரங்கி அறிக்கை அம்பு விடுவார். இந்த முரண்நகையை ஒரு கசப்பான புன்னகையோடு பார்த்துத் தொலைக்கவேண்டியிருக்கிறது. ‘ஆடு பகை, குட்டி உறவு’ என்பார்களே அது மாதிரிப் போகிறது கதை.

‘கலைஞரைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை’ என்று சொன்னால் அது தவறு. அவர் தான் பேசுவது இன்னதென்று புரிந்தே பேசுகிறார். ‘ஈழத்தில் நடக்கும் மனிதப் பேரவலங்களைப் பார்த்து நான் மனம் வருந்துகிறேன்’ என்று ஒருநாள் அறிக்கை விடுவார். அதே ஈழத்தமிழர்களுக்காகத் தன்னைக் கொளுத்திச் செத்துப்போன முத்துக்குமார் என்ற, மானுடத்தின்பால் பேரன்பு மிக்க இளைஞனது தீக்குளிப்பைக் கண்டும் காணாதது போல கண்மூடியிருப்பார். அந்தச் சோதிப்பெருஞ்சுடரின் தியாகத்தை ‘தீக்குளிப்பது தீவிரவாதச் செயல்’ என்று சொல்லி மின்மினியாக்கி அணைத்துவிடுவார்கள் அவரைச் சார்ந்தவர்கள். ஈழத்தமிழர்களுக்காக இரங்குகிறார் என்றால், முத்துக்குமாரின் மரணத்தையடுத்துப் பொங்கியெழுந்த மாணவர்களது உணர்வுகளுக்கு, எழுச்சிக்குத் தடைபோடும் வகையில் விடுதிகளையும் கல்லூரிகளையும் மூடியது எதனால்? இத்தனை காலம் கழித்து தமிழகம் எழுந்ததே என்று கொண்டாடியிருக்க வேண்டாமா ‘தமிழினத் தலைவர்’!

உண்மையை உரத்துப் பேச இங்கு ஒரு சிலர்தான் உண்டு. அந்த ஒரு சிலரில் உண்மையும் நாவன்மையும் ஒருசேரப் பொருந்திய சீமான், புதுச்சேரியில் வைத்து உண்மைகளைப் போட்டுடைத்தார் என்ற காரணத்திற்காகச் சிறையில் தூக்கிப் போட்டார்கள். ‘விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார்’ என்று கொளத்தூர் மணி அவர்களையும் சிறையிலடைத்தார்கள். தினம் தினம் செத்து மடியும் சகோதரர்களுக்காகக் குரல்கொடுப்பது பயங்கரவாதச் செயலாயிருக்கிறது. இராஜபக்ஷ என்ற இரக்கமற்றவனுக்குத் துணைபோகிறவர்களை உரத்துக் கேள்வி கேட்பது அதிகாரத்தின் செவிகளில் நாராசமாய் விழுகிறது. அதே விடயத்தை வேறு வார்த்தைகளால் ‘போரை நிறுத்து’ என்று தி.மு.க.வினரும்தான் கேட்டார்கள். ஒப்புக்காகவேனும் காங்கிரஸாரும் கேட்கிறார்கள். ‘ஏனடா கொலைசெய்கிறாய் பாவிப்பயலே’ என்று சீமான் அறச்சீற்றத்தோடு கேட்டதுதான் தவறாகிவிட்டது.

இந்தியாவின் போர்நிறுத்த வேண்டுகோளை எள்ளல் புன்னகை இதழ்க்கடையில் வழிந்தோட ராஜபக்ஷேவும் கோத்தபாயவும் பார்த்துக் கொண்டிருக்கவில்லையா? இந்தியா அடிக்கிறமாதிரி அடிக்கிறது; இலங்கையோ அழுகிற மாதிரி அழுகிறது. இந்தப் பிரம்ம இரகசியம் எல்லோருக்கும் தெரிந்துதான் இருக்கிறது.

உண்மையைப் பேசினால் காராக்கிரகம் என்பதே எல்லா அரசுகளதும் நிலைப்பாடாயிருக்கிறது. ஜனநாயகம், எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் என்பதெல்லாம் அகராதியில் முடக்கப்பட்ட சொற்களாகிவிட்டன. நிமலராஜன், தராக்கி, லசந்த, அண்மையில் வித்தியாதரன் என்று நீள்கிறது இலங்கை அரசின் பட்டியல். ஊடகக்காரர்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடுகளில் இலங்கை முதன்மையானதாக இருக்கிறதாம். இந்தியா இவ்விடயத்திலும் இலங்கையின் ‘பெரியண்ணா’வாக இருக்க நினைக்கிறாற்போலிருக்கிறது.

மறுபடியும் நமது பிலாக்கணத்துக்கு வருவோம்.

ஒரு ஊரிலே ஒரு மாமியார்க்காரி இருந்தாளாம். அதே வீட்டில் ஒரு மருமகளும் இருந்தாளாம். ஒரு பிச்சைக்காரன் வாசலிலே வந்து ‘அம்மா பிச்சை’ என்றானாம். மருமகள் எழுந்துவந்து ‘பிச்சை இல்லைப் போ’ என்றாளாம். பிச்சைக்காரன் ஏமாற்றத்தோடு திரும்பிப்போகும்போது மாமியார்க்காரி கூப்பிட்டாளாம். ‘இவங்க ஏதோ போடப்போறாங்க. நல்லவங்க’ என்று நம்பிக்கையோடு பிச்சைக்காரன் திரும்பிவந்தானாம். ‘பிச்சை இல்லையென்று அவ என்ன சொல்றது... நான் சொல்றேன்... பிச்சை இல்லைப் போ’ என்றாளாம் மாமியார்க்காரி.

Anbumani and Soniaமேற்சொன்ன கதை ஞாபகத்திற்கு வரும்படியாக அடிக்கடி சம்பவங்கள் நடந்து தொலைக்கின்றன. பழ.நெடுமாறன் அவர்களது தலைமையிலான ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கமோ அதுபோன்ற வேறு ஏதாவது அமைப்புக்களோ கூட்டங்களை நடத்தத் திட்டமிடுவார்கள். அதற்கு தமிழக காவற்துறை அனுமதி வழங்க மறுத்துவிடும். அதே போன்றதொரு கூட்டத்தை தி.மு.க. நடத்தத் தடையேதுமில்லை. ஆக, சட்டம் என்பது கை வலுத்தவனின் கையாள் ஆகிறது. ‘ஈழத்தமிழர்களைக் கொன்றழிக்காதே என்று நீ என்ன சொல்வது... அதையும் நான்தான் சொல்வேன்’ என்ற தொனி புலப்படுகிறதல்லவா? ‘செத்த வீடானால் நான்தான் பிணம்; கல்யாண வீடானால் நான்தான் மாப்பிள்ளை’ என்று சொல்வார்களே.... அதுபோல.

எல்லா இடங்களிலும் தாமே துருத்தித் தெரியவேண்டும் என்று ஆட்சியாளர்கள் முண்டியடித்ததன் விளைவுதான் வழக்கறிஞர்களின் தலைகளில் அடியாக விழுந்திருக்கிறது. முத்துக்குமார் பற்றவைத்துவிட்டுப் போன தீ வழக்கறிஞர்களுக்கிடையில் பற்றியெரிந்தால், காங்கிரசின் மீதான தி.மு.க.வின் விசுவாசம் என்னாவது? ‘மறக்கவும் மாட்டோம்... மன்னிக்கவும் மாட்டோம்’ என்பதே காங்கிரசாரின் தாரக மந்திரமாக இருக்கும்போது ‘தமிழர்களை மறந்துவிடுவோம்... வரலாறு நம்மை மன்னித்துவிடும்’ என்பதாகத்தானே பிற்பாட்டு அமையவேண்டும்! அதை மீறும் எவர் மீதும் சட்டம் பாய்கிறது. காவற்துறையின் செயலுக்கு கலைஞர் அவர்கள் பொறுப்பில்லை என்றால், காவற்துறை மாநிலத்தை ஆள்பவரின் கட்டுப்பாட்டுக்குள் இல்லையா? ஈழத்தமிழனை இலங்கை இராணுவம் அடிக்கிறது. ஈழத்தமிழனுக்காகப் பேசுபவனை இங்குள்ள காவற்துறை மிரட்டுகிறது. ஆக, வாளேந்திய சிங்கத்திற்கும் தூணேந்திய சிங்கங்களுக்கும் ‘தமிழர் ஒவ்வாமை’ நோய் எனக் கொள்ளலாமா?

‘எல்லா மாடும் ஓடுதுன்னு வயித்து மாடும் கூட ஓடிச்சாம்’ என்று சொல்வார்கள். ஜெயலலிதா அம்மையாரின் உண்ணாவிரத அறிக்கையைப் பார்த்தபோது அதுதான் நினைவில் வந்தது. ‘போர் என்றால் மக்கள் சாகத்தானே செய்வார்கள்’ என்று திருவாய் மலர்ந்தருளியவர் இதே தேவியார்தான். ஒவ்வொரு காலத்திற்கென்று ஒவ்வொரு நாகரிகம் புதிது புதிதாகப் பிறக்கும். கால் விரிந்த பெல்பொட்டம், தோள்வரை தலைமயிர் வளர்த்தல் இப்படியாக. அந்தச் சாயலில் தேர்தல் காலத்திலும் சில காய்ச்சல்கள் பரவும். வரவிருக்கும் தேர்தலின்போது கட்சிகள் தூக்கிப்பிடிக்கும் கொடி ‘ஈழப்பிரச்சனை’யாயிருப்பது வருந்தத்தக்கதே. அங்கே நாளாந்தம் ஒருவேளைச் சாப்பாடு கூட இல்லாமல் குழந்தைகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். பசியால் குடல் உள்ளிழுத்து முறுக்கி கண்கள் இருண்டு தண்ணீருக்காய் தவித்து விழுந்து இறந்துகொண்டிருக்கிறார்கள் வன்னியிலுள்ள தமிழர்கள். இறந்தவர்களை எடுத்துப் புதைக்கப் போகும்போது எறிகணை தாக்கி மண்ணில் சரிவது சாதாரண நிகழ்வாயிருக்கிறது. அத்தகைய பேரழிவின் மத்தியில், பட்டினியின் பிடியில், மனச்சிதைவின் விளிம்பில் மரணம் வரும் நொடியை எண்ணிக் கொண்டிருப்பவர்களது பிணங்கள் மீது அரசியல் நடத்தும் எவரும் மனிதர்கள் என்ற வரையறைக்குள் அடங்கமாட்டார்கள்.

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் அம்பலத்தேறி ஆடுவதுபோல பா.ம.க.ஆடவில்லையே தவிர, வளைய வேண்டிய இடத்தில் வளைந்து குனிய வேண்டிய இடத்தில் குனிந்து சரியாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது சங்கதி. மருத்துவர் அய்யா மதிப்பிற்குரிய சோனியா அம்மையாரைச் சென்று சந்தித்து சமரசம் பேசியிருக்கிறார் என்று தெரிய வந்திருக்கிறது. தானாடாவிட்டாலும் மத்தியிலுள்ள தன் வாரிசுக்காக காவடி ஆடவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு. ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து எரிந்த தியாகிகளுடைய ஈமச்சடங்கு நிகழ்வுகளில் கலந்துகொண்டு இனவெறியை எதிர்த்துக் குரல்கொடுக்கும் ராமதாஸ் ஐயா ஒரு முகம் என்றால், மத்தியில் மகனை அமர்த்தி, தமிழகத்தில் தன்னை நிலைநிறுத்தப் போராடும் இருப்பின் தவிப்புத் தெறிக்கும் இன்னுமோர் முகமுண்டு அவருக்கு.

ஆக, இங்கே தேர்தல் கோலாகலம் ஆரம்பமாகிவிட்டது. நாற்காலிக்கான குடுமிப்பிடிச் சண்டைகளுக்கு இனிக் குறைவிராது. ‘போக மாட்டேன்.. போக மாட்டேன்’ என்று அடம்பிடிக்கிறார் கலைஞர். ‘போயேன்... நானும் கொஞ்சம் ஏமாற்றுகிறேனே...’ என்று முறுக்குகிறார் ஜெயலலிதா. ‘சற்றே விலகியிருங்களேன் நந்திகளா’ என்று கடுக்கின்றன ஏனைய கட்சிகள். அரசியல் தெளிந்தவர்கள் இம்முறையும் ஏமாற மாட்டார்கள். இங்கு நடக்கும் இழுபறிகளை அறியாத சனங்கள், அரசியல் அறிவற்றவர்களை நினைத்தால்தான் அடிவயிற்றைக் கலக்குகிறது. ஆனால், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கப் போவது விழப்போகும் வாக்குகள் மட்டுமல்ல என்பதை நாமறிவோம். பணமும் அரிவாளும் சாராயமும் வேட்டி-சேலைகளும் சண்டித்தனமும் கள்ள ஓட்டுக்களும் ஆட்டோக்களும் அச்சுறுத்தல்களும்கூட தேர்தலில் தோன்றாத்துணையாக இருக்குமென்பதை அனைவரும் அறிவோம். வாழ்க பணநாயகம்! வெல்க அராஜகம்! 

- தமிழ்நதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)