sivashankar babaதமிழகத்தில் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தப்பட்டு வரும் பாலியல் அத்துமீறல்கள் பற்றியப் புகார்கள் அனைவரையும் நிலைகுலையச் செய்திருக்கின்றது. குறிப்பாக பள்ளிகளில் பெண் குழந்தைகள் மீது நடைபெற்றதாக வரும் பாலியல் அத்துமீறல் பற்றிய புகார்கள் மீண்டும் பெண்களை அடுப்படியை நோக்கியே தள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்திவிடுமோ என அச்சம் கொள்ள வைக்கின்றது.

பாலியல் பிரச்சினைகளைப் பற்றி சமூகத்தின் பொதுப் புத்தியில் பதிந்திருக்கும் ஆணாதிக்க மனோபாவமும் அது நீண்ட நாட்களாக உருவாக்கி வைத்திருக்கும் கருத்தியலும் பெண்களை தனக்கு எதிராக வன்முறை நடக்கும் போது கூட சகித்துக் கொண்டு செல்லும்படி கட்டாயப் படுத்துகின்றது.

பெண்களின் மூளையில் கூட ஆணாதிக்க வக்கிரம் பிடித்த ஆண்களின் கருத்துக்கள் தாக்கம் செலுத்துவதும் அதையே சமூக ஒழுங்காக அவர்கள் நம்புவதும் கூட பெண் குழந்தைகள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை மூடி மறைக்க காரணமாகி விடுகின்றது.

பெண் உடல் சார்ந்த புனிதப்படுதலும், கற்பு கோட்பாடுகளும் எந்த அளவுக்கு சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றதோ அந்த அளவிற்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகமாகின்றது.

எப்படிப்பட்ட பாலியல் வன்முறையில் ஈடுபட்டாலும் பெண்கள் அதை பொதுவெளியில் சொல்ல மாட்டார்கள், சொன்னால் அவர்களின் நடத்தையே முதலில் கேள்விக் குள்ளாக்கப்படும் என்ற சமூக எதார்த்தத்தை நன்கு உணந்தே பாலியல் பொறுக்கிகள் தங்களின் கைவரிசையை பெண்களிடம் காட்டுகின்றார்கள்.

பாலியல் வன்புணர்வு செய்து வீடியோ எடுத்து மிரட்டுவது, காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி நிர்வாணப் படங்களை பெற்று மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்வதோடு பணம் கேட்டு மிரட்டுவது, புகைப்படங்களை ஆபாசமாக மார்ப்பிங் செய்து மிரட்டுவது, பணியிடங்களில் தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தியும் பள்ளிகளில் மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என மிரட்டியும் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது தொடர் கதையாக மாறியிருக்கின்றது.

பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளியானதில் இருந்து தினம் தினம் ஏதாவது ஒரு பள்ளியின் ஆசிரியர் மீது பாலியல் புகார்கள் வந்த வண்ணம்தான் இருக்கின்றது. அந்த வரிசையில் தற்போது மாட்டியிருக்கும் பொறுக்கி சாமியார்தான் சிவசங்கர் பாபா.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் சாத்தாங்குப்பம் பகுதியில் இவன் நடத்திவரும் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியில்தான் தனது அயோக்கியத்தனத்தை அரங்கேற்றி இருக்கின்றான்.

30 ஆண்டுகளாக தன்னை கடவுளின் அவதாரம் எனக் கூறி ஆன்மீக முட்டாள்களை நம்ப வைத்திருக்கின்றான். அந்த நம்பிக்கையில்தான் தன்னை கடவுள் கிருஷ்ணர் (புராண பாலியல் குற்றவாளி) என்றும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட விரும்பும் மாணவிகளை கோபிகா என்றும் நம்பவைத்தும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவிகளுக்கு குளிர்பானம் என்ற பெயரில் மதுபானங்களை கொடுத்தும் அவர்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி இருக்கின்றான்.

ஆனால் இதுவரை திமுக அரசு இந்த பொறுக்கியை கைது செய்யாமல் மெளனம் காத்து வருகின்றது. திமுக மீது பார்ப்பன மற்றும் பார்ப்பன அடிமைகளால் சுமத்தப்பட்டிருக்கும் இந்து விரோதிகள் பட்டம் அவர்களை சிவசங்கர் பாபாவை கைது செய்ய தடுக்கின்றது என்பதாகவே புரிந்துக் கொள்ள முடிகின்றது.

ஏற்கெனவே பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி ராஜகோபாலன் கைது செய்யப்பட்டதும் அதற்கு எதிராக சில பார்ப்பன அடிமைகள் கொந்தளித்ததும் கூட திமுகவின் தயக்கத்திற்கு காரணமாக இருக்கலாம்.

அரசியல் பலமும், அதிகார பலமும், பொருளாதார பலமும் இருந்தால் எப்படிப்பட்ட கேடுகெட்ட குற்றத்தில் ஈடுபட்டாலும் தப்பித்துக் கொள்ளலாம் என பாலியல் குற்றவாளிகள் நினைப்பது போலத்தான் அரசியல்வாதிகளும் பெரும்பாலும் பாலியல் குற்றவாளிகளை அணுகுகின்றார்கள்.

குற்றங்களை குற்றங்களாக பார்க்காமல் அந்தக் குற்றங்களை கையில் எடுப்பதால் அரசியல் ரீதியாக ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்றே அரசியல்வாதிகளால் பார்க்கப்படுகின்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான உண்மையான அக்கறையின் பாற்பட்டு இங்கே அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கமும் செயல்பட்டு இருக்குமே என்றால் சமூகம் இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி 2018 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 109 குழந்தைகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கின்றார்கள்.

இந்தியாவில், ஒவ்வொரு 155 நிமிடத்திற்கும், 16 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை வன்புணர்வுக்கு ஆளாகிறது. 2007 ஆம் ஆண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் நடத்திய ஆய்வின் மூலம், 22 சதவீதக் குழந்தைகள் கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். 51 சதவீதக் குழந்தைகள் மற்ற பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

இதில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருவருமே அடக்கம். அதே போல ஒருநாளைக்கு 87 பெண்கள் இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் படுகின்றார்கள். 2018-ம் ஆண்டில் 58.8 சதவீதமாகப் பதிவாகியிருந்த பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2019-ம் ஆண்டு 62.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பெண்களுக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு 5,397 வழக்குகளும் 2018 ஆம் ஆண்டு 5,822 வழக்குகளும் 2019 ஆம் ஆண்டு 5,934 வழக்குகளும் பதிவாகியிருக்கின்றன.

பெண் குழந்தைகள் மீது நேரடியாக நடத்தப்படும் பாலியல் தாக்குதல்கள் மட்டுமே சில அவ்வபோது வெளியே வருகின்றது ஆனால் மன ரீதியாக அவர்களின் உடலை தொடாமல் ஆனால் அந்த நோக்கத்திற்காக நடத்தப்படும் பல்வேறு வடிவிலான பாலியல் ரீதியான தாக்குதல்கள் வெளி உலகிற்கு தெரியாமலேயே போய் விடுகின்றன.

குறிப்பாக பெண் குழந்தைகளின் மறைவான பாகங்களைக் காட்டச் சொல்லுதல் ஆபாசப் படங்கள் காட்டுதல், ஆபாசக் கதைகள் சொல்லுதல், ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்புதல், வாட்ஸ் அப் போன்றவற்றில் பாலியல் ரீதியான செய்திகள் அல்லது படங்களை அனுப்புதல் போன்றவற்றை சொல்லலாம்.

போக்சோ (POCSO) போன்ற சட்டங்கள் குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்க இயற்றப்பட்டிருந்தாலும் அப்படியான சட்டங்கள் இங்கே எந்த அளவுக்கு பயன்படுத்தப் படுகின்றது என்பது கேள்விக்குறியாகும்.

அரசியல் செல்வாக்கும் அதிகார வர்க்கத்தின் செல்வாக்கும் இருக்கும் நபர்கள் மிக எளிதாக தப்பித்துக் கொள்வது எப்போதுமே நடக்கக் கூடியதுதான்.

பாதிக்கப்பட்ட பெண்கள் மிக எளிய குடும்பத்தை சார்ந்தவர்களாக இருந்தால் அவர்களின் புகார்களை காவல்துறை எப்படி விசாரிக்கும் என்பதற்கும் நீதித்துறை எப்படி தீர்ப்பு கொடுக்கும் என்பதற்கும் நம்மிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

பாலியல் குற்றவாளிகளை கைது செய்வதற்கு இடைக்கால தடைவிதிக்கும் அளவுக்கு நீதித்துறையின் யோக்கியதை இருக்கும் போது பாதிக்கப்பட்ட பெண்கள் எந்த தைரியத்தில் வெளியே வந்து தனக்கு ஏற்பட்ட அநீதியை சொல்வார்கள்.

ஆனால் அப்படி இருந்தும் அங்கொன்றுமாக இங்கொன்றுமாக சில கலக குரல்கள் எழும்ப ஆரம்பித்து இருக்கின்றன. சமூக ஊடகங்கள் அதற்கான வெளியை அவர்களுக்கு உருவாக்கி கொடுத்திருக்கின்றன. ME TOO போன்ற முன்னெடுப்புகள் முன்னால் பாலியல் குற்றவாளிகளை முச்சந்தியில் ஏற்றி இருக்கின்றன.

பாலியல் குற்றவாளிகள் எல்லாமுமாக இங்கே இருக்கின்றார்கள். ஆன்மீகவாதியாக, அரசியல்வாதியாக, ஆசிரியர்களாக, இலக்கியவாதியாக, தத்துவவாதியாக, பிற்போக்குவாதியாக, முற்போக்குவாதியாக என்று பலவித முகமூடிகளோடு வலம் வருகின்றார்கள்.

ஆணாதிக்க பாலியல் வக்கிரம் பிடித்த பொறுக்கிகளை சமூகத்தின் முன் அடையாளம் காட்ட பெண்களை சிறுவயதில் இருந்தே நாம் பயிற்றுவிக்க வேண்டும். அரசியல் சமூகம் பொருளாதாரம் என அனைத்து மட்டங்களிலும் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்த வேண்டும்.

பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொதுச் சமூகத்தின் முன் பகிரங்கப்படுத்தும் போது அவர்களின் ஒழுக்க விழுமியங்களை கேள்விக்கு உட்படுத்தாமல் அவர்களுக்கு நீதி கிடைக்க குரல் கொடுக்க வேண்டும். அப்படி ஒழுக்க விழுமியங்களை கேள்விக்குள்ளாவது அவர்களை மீண்டும் மீண்டும் முடக்கி வைக்கும் ஆணாதிக்க வக்கிரம் என்பதை நாம் புரிந்துச் செயல்பட வேண்டும்.

- செ.கார்கி