karunanidhi 333திராவிட இயக்கம் தமிழ் சமூகத்தின் நியாயமான சமூகத் தேவையிலிருந்து முகிழ்த்த இயக்கம். தமிழர்கள் தன்மானம் இழந்து, மூட நம்பிக்கைகள், ஜாதி இழிவுகள், ஏற்றத்தாழ்வுள்ள சமூக சூழ்நிலையில் வாழ்ந்து வந்த போது அவர்களை தன்மானவுள்ளவர்களாக மாற்றி வாழ வைத்த பெருமை முழுக்க முழுக்க திராவிட இயக்கத்தையே சாரும்.

திராவிட இயக்கம் சமூக நலத்திட்டங்களின் முன்னோடி என்று அடையாளப்படுத்தும் அளவிற்கு தமிழகத்தில் எண்ணற்ற சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளது.

இதனால் தமிழகமும் தமிழர்களும் பெரும் பயனடைந்தனர். இந்த நலத்திட்டங்களினால் இந்தியாவிலேயே இன்று தமிழகமே அனைத்து மனித வளக் குறியீடுகளிலும் முன்னோடி மாநிலமாக இருக்கின்றது.

தமிழகத்தின் சமூக நலத்திட்டங்களின் தொடக்கத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம் முதலாவது பகுதியில் நீதிக்கட்சியும் இரண்டாவது பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியும் தொடர்கின்றன.

ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் உரிமைக்காகவும், சமூகத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் உதித்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.

அடிமைத் தளையில் சிக்குண்டு இருந்த தமிழ்ச் சமூகத்தின் அடிமைத் தளையை அறுத்தெறிந்து, மூட நம்பிக்கையில் உழன்று கொண்டிருந்து தமிழ் மக்களை பகுத்தறிவு சுடர் ஏற்றி, சாதி மத வேறுபாடுகளால் சிதறுண்டு கிடந்த மக்களை ஒன்றுபடுத்தியதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகத்தான சாதனையாகும்.

சமூக நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும், மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் திராவிட முன்னேற்றக் கழகம் இந்திய அளவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வந்திருக்கின்றது.

அவற்றில் கை ரிக்‌ஷா ஒழிப்பு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், அனைத்து கிராமங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள், இலவச உயர்கல்வி, மாவட்டந்தோறும் தொழிற்பேட்டைகள், தகவல் தொழில் நுட்பக் கொள்கை, சிறந்த உள்கட்டமைப்பு, சமத்துவபுரம், உழவர் சந்தை, மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை, சிறந்த பொது விநியோகத் திட்டம் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமூக நலத்திட்டங்கள் இந்திய நாட்டிற்கே முன்னோடியாக விளங்கி சமூக நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வந்திருக்கின்றது.

கல்வி, சுகாதாரம், சமூக நலன் போன்ற துறைகளில் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் அளவிற்கு வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. இத்தகு வளர்ச்சிக்கு முதன்மையான காரணம் தமிழ்நாட்டை ஆட்சி செய்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியேயாகும்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக் காலம் தொடர்ச்சியாக இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா 1967 ஆம் ஆண்டு முதன் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றார். அப்போதே திராவிட முன்னேற்றக் கழகம் சமூக நலத்திட்டங்களை அமல்படுத்த தொடங்கியது.

அண்ணாவின் மறைவையொட்டி கலைஞர் 1969 ஆம் ஆண்டு முதன் முறையாக முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து 1971 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றார். தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரையிலான கலைஞரின் ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற சமூக நீதித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் பிறகு 1987 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரையும் ஆட்சியிலிருந்தது. இதன் பிறகு ஐந்தாண்டுகள் கழித்து 1996 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பை ஏற்ற திராவிட முன்னேற்றக் கழகம் 2001 ஆம் ஆண்டு வரையும் அதன் பிறகு ஐந்தாண்டுகள் கழித்து 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரையும் ஏறத்தாழ 21 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தது.

இந்த காலகட்டத்தில் எண்ணற்ற சமூக நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுவாக திட்டங்கள் தொடங்கும் காலகட்டமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியும் அந்த திட்டங்கள் பயன்பாட்டிற்கு வரும் போது திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இல்லாதிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படியாக அரசியல், வளர்ச்சி, நிர்வாகம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைப்பதில் கலைஞர் வெற்றி பெற்றார்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் சாதனைகள்:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகள் எண்ணற்றவை. அவை சமூக, பொருளாதார மற்றும் அரசியலில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக வாழ்வதிலும், ஜாதி மோதல்கள் தேர்தல்களில் எந்த வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாததும், வரலாற்றில் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்கள் அரசுப் பணிகளிலும், ஆட்சி அதிகாரத்திலும் பங்கு பெறும் அளவிற்கு சமூக கட்டமைப்பை உருவாக்கியதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பணிகள் குறிப்பிடத்தக்கவை.

பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் அவர்களின் முன்னேற்றம், பெண் சமத்துவம், கல்வி, வேலை வாய்ப்புகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு என்பனவற்றை திராவிட முன்னேற்றக் கழகம் சாதித்திருக்கின்றது.

தமிழகத்தின் வளர்ச்சியினை இந்திய நாட்டின் மற்ற மாநிலங்களும் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு தமிழகம் முன்னேறிய மாநிலமாக மாறியதில் கலைஞரின் பங்கு அளப்பரியது.

கலைஞர் நடைமுறைப்படுத்திய சமூக வளர்ச்சியுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி என்ற பாதை தமிழகத்தை ‘ஒரு சிறந்த வளர்ச்சி’ மாநிலமாக தமிழகத்தை இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபடுத்தியது.

எந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் கலைஞர் நடைமுறைப்படுத்திய இந்த கொள்கையிலிருந்து விலக முடியாது. அதனை பின்பற்றியே ஆட்சி செய்ய முடியும் என்ற நிலையை தமிழகத்தில் உருவாக்கியது கலைஞரின் மகத்தான சாதனையாகும்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

• தமிழ் மொழிக்கான திட்டங்கள்
• இருமொழிக் கொள்கை கொண்டு வரப்பட்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே அலுவல் மற்றும் பயிற்று மொழியாக அமையும் வகையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
• தமிழுக்கு உழைத்த பெருந்தலைவர்களின் பெயரில் புதிய பல்கலைக்கழகங்கள்
• மொழிப்போர்த் தியாகிகளுக்கு ஓய்வூதியம்
• தமிழ் இணைய மாநாடு மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம்.
• தமிழைப் பயிற்று மொழியாக கொண்டவர்களுக்கு அரசுப் பணி நியமனங்களில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு.
• கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை அமைப்பு.
• தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.
• விடுதலைப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்களுக்கு சிலைகள் மற்றும் நினைவு மண்டபங்கள்.
• தமிழ் செம்மொழியாக அங்கீகாரம்
• செம்மொழி ஆய்வு நிறுவனம் சென்னையில் அமைக்கப்பட்டது.
• தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிப்பு

கல்வித் திட்டங்கள்

• காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக அறிவிப்பு.
• மகளிர் இலவச பட்டப்படிப்புத் திட்டம்.
• உயர்கல்வித் துறை தனியாக உருவாக்கப்பட்டு உயர்கல்விக்கென தனி அமைச்சகம்.
• மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை
• பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம்
• சத்துணவுத் திட்டத்தில் வாரம் இரண்டு முட்டைகள்
• ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, ராமநாதபுரம், திண்டுக்கல் என பல்வேறு இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
• அரசு பொறியியல் கல்லூரிகள்
• தொழிற்கல்விக்கான நுழைவுத்தேர்வு ரத்து
• கோவை, திருச்சி, நெல்லை நகரங்களில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள்
• மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள்
• தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
• சென்னை அண்ணா சாலை அரசினர் மகளிர் கல்லூரி காயிதே மில்லத் கல்லூரி எனப் பெயர் மாற்றம்
• பள்ளி மாணவர்களுக்கு வாழைப்பழம், கொண்டைக்கடலை மற்றும் பால் வழங்கும் திட்டம்.
• முதல் தலைமுறை பட்ட படிப்பு மாணவர்களுக்கு முழுக்கட்டணத்தையும் அரசே ஏற்கும் என்ற திட்டம்.
• சமச்சீர் கல்வி முறை அறிமுகம்.
• பன்னிரண்டாம் வகுப்பு வரை இலவசக் கல்வி.
• கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகம்

மகளிர் மேம்பாடு

• பெண்களுக்கு சொத்துரிமை
• அரசுப் பணியில் பெண்களுக்கு 30 விழுக்காடு ஒதுக்கீடு
• கலப்பு குடும்பத்து பெண்களுக்கு பேறுகால நிதியுதவி
• மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம்.
• உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு
• ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டம்
• கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு காலத்திற்கு முந்தைய 3 மாதங்களும் பிந்தைய 3 மாதங்களும் நிதியுதவி அளிக்கும் மகப்பேறு உதவித் திட்டம்
• ஈ.வே.ரா நாகம்மையார் நினைவு மகளிர் பட்ட மேற்படிப்பு இலவச திட்டம்
• டாக்டர் தர்மாம்பாள் நினைவு கைம்பெண் மறுமணத் திட்டம்
• கைம்பெண்கள் மற்றும் முதியோர் ஓய்வூதியத் திட்டம்
• அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமணத் திட்டம்
• அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம்
• மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுத் திட்டங்கள்

• 1969 ஆம் ஆண்டு கலைஞர் முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது முதன் முதலாக பிராமணரல்லாதோர் அமைச்சரவையை உருவாக்கி வரலாறு படைத்தார்
• பண்டிகை நாட்களில் ஏழைகளுக்கு இலவச அரிசி – வேட்டி – புடவைகள் வழங்கும் திட்டம்
• ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைத்தல்
• ஆதி திராவிடர்களுக்கு இலவச வீடுகள் மற்றும் வீட்டு வசதி வாரியம்.
• மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு
• சமத்துவபுர குடியிருப்புகள்
• அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்
• இஸ்லாமியர்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு
• அருந்ததியினர் சமுதாயத்தினருக்கு 3 விழுக்காடு உள் இடஒதுக்கீடு
• உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பு
• விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டங்கள்
• விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் 7000 கோடி ரூபாய் தள்ளுபடி
• விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
• நிலச்சீர்த்திருத்தம் கொண்டு வரப்பட்டு நில உச்சவரம்பு அமல்படுத்தப்பட்டது.
• நீர்ப்பாசன வசதியில்லாத புஞ்சை நிலங்களுக்கு நிலவரி விலக்கு
• உழவர் சந்தைகள்
• கோயம்பேடு மார்க்கெட்
• நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன.
• நுகர் பொருள் வாணிபக் கழகம் உருவாக்கப்பட்டது.

கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள்

• அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி
• கிராமப்புற வளர்ச்சிக்காக நமக்கு நாமே திட்டம்
• அனைத்து அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்டம்
• கிராமப்புறங்களை இணைக்கும் வகையிலான சிற்றுந்து சேவைகள் தொடக்கம்

மாநில சுயாட்சித் திட்டங்கள்

• சுதந்திர தினம் அன்று முதலமைச்சர் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தார்.
• முதன் முதலில் மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயர் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.
• மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என்று மாற்றப்பட்டது.
• மாநில திட்டக்குழு அமைத்தல்
• சிவப்பு நாடா ரகசிய குறிப்பு முறை ஒழிப்பு
• மாநில உரிமைகளுக்கென்று ராஜமன்னார் குழு அமைப்பு

நீராதாரத் திட்டங்கள்

• தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டம்
• காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம்
• நீர்வளத்தை பெருக்கும் வகையில் புதிய அணைக்கட்டுகள், தடுப்பணைகள்

சமூக நலத்திட்டங்கள்

• அண்ணா ஆட்சிக் காலத்தில் 1967 ஆம் ஆண்டு சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட வடிவம் அளிக்கப்பட்டது.
• கைரிக்‌ஷாக்கள் ஒழிக்கப்பட்டு சைக்கிள் ரிக்‌ஷாக்கள் வழங்கப்பட்டன.
• குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது.
• மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை உருவாக்கி 20 விழுக்காடு இட ஒதுக்கீடு
• பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள் ஆகியோருக்கான மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கப்பட்டன.
• கோவில்களில் ஆதரவற்றோருக்கு பாதுகாப்பு வழங்கும் கருணை இல்லங்கள்
• கண்ணொளி திட்டத்தின் கீழ் இலவச கண் சிகிச்சை முகாம்கள் – இலவச கண்ணாடிகள்
• நாட்டிலேயே முதன் முதலாக போலீஸ் கமிஷன்
• அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்புத் திட்டம்
• ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம்
• சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு.
• 1 கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கும் திட்டம்
• குடும்ப அட்டைகள் உள்ள அனைவருக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியது
• நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்
• அரவாணிகள் திருநங்கையினர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கென்று நல வாரியம்
• மாநிலம் முழுவதும் பொதுவிநியோகத் திட்டம் விரிவாக்கம்
• 34 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் உருவாக்கப்பட்டன

சுகாதாரத்துறை மேம்பாடு

• 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை
• அனைத்து மருத்துவ சேவைகள் வழங்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம்
• ஊனமுற்றோர் என்ற பெயரை மாற்றுத்திறனாளிகள் என்று மாற்றியது.
• அனைத்து கிராமங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்
• வட்டார மருத்துவமனைகள், தாய்சேய் நல மையங்கள் அமைக்கப்பட்டன.

தொழில்துறை மேம்பாட்டுத்திட்டங்கள்

• தகவல் தொழில்நுட்பக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
• தகவல் தொழில்நுட்ப பூங்கா சென்னையிலும் பிறகு தமிழகத்தின் பிற பெரிய நகரங்களிலும் கொண்டு வரப்பட்டது.
• எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் கொண்டு வரப்பட்டன.
• சிப்காட் தொழில் வளாகங்கள்
• சிட்கோ தொழிற்பேட்டைகள்
• தேயிலை வாரியம்
• உப்பு வாரியம்
• சேலம் உருக்காலை
• மின் திட்டங்கள் – வல்லூர், வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடி

உள்கட்டமைப்பு மேம்பாடு

• அண்ணாவின் ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கலைஞரின் பெருமுயற்சியினால் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கப்பட்டன.
• சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மேம்பாலங்கள்
• கோயம்பேடு பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் திட்டம்
• பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்
• மதுரை மாநகரில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு
• நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்வு
• பெரிய மாவட்டங்களில் இருந்து புதிய மாவட்டங்கள் பிரிப்பு
• வருவாய் கோட்டங்கள் மற்றும் புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்கம்
• தேசிய நெடுஞ்சாலைகள் நான்கு வழி சாலைகளாக விரிவாக்கம்
• சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி நிதி வழங்கும் திட்டம்

கலைஞரின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலான எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இத்திட்டங்களினால் தமிழகம் பெரும் வளர்ச்சி பெற்று இன்று நாட்டிலேயே மூன்றாவது பெரிய பொருளாதார மாநிலமாக திகழ்கிறது.

அனைவருக்கும் அனைத்தும் பகிர்ந்தளிக்கப்படும் சமூக நீதியே, நிலையான, நீடித்த வளர்ச்சியினை நோக்கிய சமூகத்தை நிலைநாட்டும். சமூக நீதியை அடிப்படையாக கொண்டே திராவிட இயக்கம் செயலாற்றி வருகிறது.

- இரா.வெங்கட்ராகவன்