Covid19 financialஉலகமயம், தாராளமயம், தனியார்மயம் கொள்கைகள் இந்தியாவின் அனைத்து துறைகளிலும் தனியார் பெரும் முதலாளிகளுக்கு முதலீடுகளை பெருமளவில் இந்திய ஆளும் வர்க்கங்கள் வாரி வழங்கியுள்ளது.

குறிப்பாக மருத்துவம் மற்றும் சுகாதாரத்தில் தனியார் முதலீடுகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் ஊக்குவிக்கப் படுகிறது. பெரும் முதலாளிகளின் மருத்துவமனைகளுக்கும், மருத்துவம் சார்ந்த அந்நிய பகாசூர கம்பெனிகளுக்கும் அனுமதியோடு புதிய சுகாதார உள் கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி பல லட்சம் கோடி ரூபாய்கள் மதிப்பில் முதலீடுகளை வழங்கி இதற்கான சந்தைகளையும் உத்திரவாதப்படுத்துகிறது இந்திய ஆளும் வர்க்கங்கள்.

உலக பொருளாதார நெருக்கடிகளால் இந்திய பொருளாதாரம் கட்டுண்டு கிடந்த போதெல்லாம் இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்கும் ஆபத்பாண்டவர்களாக இருப்பவர்கள் இந்திய மருத்துவ தொழில் துறை தான் என்பதை நன்கு அறிந்தவர்கள் இந்திய ஆளும் வர்க்கங்கள்.

எனவேதான் மருத்துவ சந்தைகளை வளர்த்தெடுக்க வேண்டுமெனில் பெரும்பான்மை மக்களை தனியார் மருத்துவ வலைப் பின்னலுக்குள் கொண்டு வருவதை தவிர வேறு வழியில்லை. 

அதாவது வாகனம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனைக்காக மத்தியதர வர்க்கத்தினரை இன்ஸ்டால்மென்ட் அதாவது இஎம்ஐ கடன் சந்தையை ஏற்படுத்தி எங்ஙனம் பெரும்பான்மையினரை கடன்காரர்களாக இத்துறையினர் உருவாக்கியுள்ளனரோ அதுபோல மருத்துவச் சந்தையை பயன்படுத்த திட்டமிட்டே உருவாக்கப்பட்டுள்ள மருத்துவ காப்பீடு சந்தை முறைகள், இஎம்ஐ கடன் சந்தைகள் பெரும்பான்மை மக்களை நோயாளிகளாக்கி விடும். 

2019 ஆம் ஆண்டில் உருவான கொரோனா வைரஸ் (COVID -19 ) பெருந்தொற்று மர்ம நோய் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

பல லட்சக்கணக்கான விலைமதிப்பற்ற உயிர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தினந்தோறும் ஆக்சிஜன் பற்றாக் குறையாலும், போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காமலும்  இறக்கின்றனர்.

தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜன் அளவு 92க்கு கீழ் சென்றால் சிகிச்சையளிக்க மறுப்பதோடு திட்டமிட்டு தற்காலிகமாக ஆக்சிஜன் பற்றாக்குறையையும், மருந்து பற்றாக்குறையையும் உருவாக்கி பல உயிர்கள் இறப்பதற்கு காரணமாக இருக்கின்றனர்.

இந்திய அரசு அறிவித்த திட்டமிடாத ஊரடங்கால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை இழந்து பட்டினி சாவுக்கு ஆளாகினர். இத்தகைய நெருக்கடிகள் தனியார் மருத்துவ தொழில் துறைக்கு உந்து சக்தியாகவே விளங்குகிறது எனலாம்.

முதலாளிகளுக்கு லாபம் குறையாமல் இருக்க முதலாளித்துவ சந்தையை ஊக்கப்படுத்த எங்ஙனம் தொழிலாளிகளுக்கு தீபாவளி,பொங்கல் போனஸ் வழங்கப்படுகிறதோ அது போல தனியார் மருத்துவ துறைக்கு நோயாளிகள் குறைவில்லாமல் கிடைக்க வேண்டுமெனில் அவ்வப்போது உருவாகும் மற்றும் உருவாக்கப்படும் மர்ம நோய்களும், தொற்று நோய்களும் மருத்துவச் சந்தையை ஊக்கப்படுத்த உதவுகின்றன. 

தனியார் மருத்துவ முதலாளிகள் ஆளும் வர்க்கங்களால் ஏற்படுத்தி கொடுத்த கடன் சந்தை முறைகளை பயன்படுத்தியும், மருத்துவ காப்பீடு முறைகளை பயன்படுத்தியும் இதுவரை மருத்துவமனைகளில் தான் கொள்ளை லாபம் ஈட்டினார்கள்.

இப்பொழுது அதற்கும் மேலாக தனியார் மருத்துவ முதலாளிகளும் அந்நிய பகாசூர கம்பெனிகளும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பயன்படுத்திய ஆக்சிஜன் இயந்திரம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை இனி அனைவரது வீடுகளிலும் கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்ள அதற்காக திட்டமிட தயாராகிவிட்டார்கள்.

பெரும் முதலாளிகளின் கொள்ளை லாபத்தை பெருக்கவும், மருத்துவ துறையில் தனியார் முதலீடுகளை  வளர்த்தெடுக்கவும் இந்திய ஆளும் வர்க்கங்கள் உருதுனையாக இருந்து செயல்பட்டு வருகின்றன.

தனியார் பெரும் முதலாளிகளின் மருத்துவமனைகள், மருந்து கம்பெனிகள் தங்கள் இலக்கை அடைய இவர்களிடையே நடக்கும் கடுமையான வியாபாரப் போட்டி இந்திய மக்களுக்கு ஆரோக்கிய வாழ்வை அளிக்காது.

மாறாக கொரோனா வைரஸ் போன்ற மர்ம நோய்களும்,கருப்பு பூஞ்சை போன்ற தொற்று நோய்கள் தான் இவர்களது நிறுவனங்களுக்கு லாபமளிக்குமென்றால் அவைகளையே விருப்பம்போல் ஊக்கப்படுத்தும்.

மாமேதை காரல் மார்க்ஸ் கூறியது போல் கொந்தளிப்பும் குமுறலும் லாபமளிக்குமென்றால் மூலதனம் இவ்விரண்டையும் தன் விருப்பம் போல் செய்யும் என்றார். இந்திய மருத்துவ துறையை தங்களது அசுர வளர்ச்சிக்குரிய துறையாக இந்திய ஆளும் வர்க்கமும், பன்னாட்டு பகாசூர கம்பெனிகளும் மாற்றி வருகின்றன.

மருத்துவ செலவுகளை தாக்குபிடிக்க முடியாமல் 24 சதவிகிதம் நோயாளிகள் ஆண்டுதோறும் மருத்துவ செலவுக்குப்பின் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டு வருகின்றனர்.

இந்திய ஆளும் வர்க்கங்களால் மாற்றியமைக்கப்பட்ட இந்திய மருத்துவ துறை இந்திய பெரும் முதலாளிகளுக்கும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும் பிரம்மாண்டமாய் லாபங்களை அள்ளி வழங்கும். அதே நேரத்தில் இந்திய வெகுஜனங்களின் வருமானங்களை கொள்ளையிடுவதுடன் அவர்களை நோயாளிகளாக மாற்றுவதாகவும் உள்ளது.

உலகமய, தாராளமய, தனியார் மய கொள்கைகளால் மருத்துவம் மற்றும் சுகாதார அமைப்புகள் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்திருந்தாலும் இவர்களது நோக்கம் மக்கள் நலன், எல்லோருக்கும் மருத்துவம் மற்றும் சுகாதாரம் என்பதாக இல்லாமல் இவர்களது நிறுவனத்தை விரிவுபடுத்துதல், லாபத்தை பெருக்குதல் என்பதாகவே உள்ளது.

கோடிக்கணக்கான சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரிந்தே மளிகை, காய்கறிகள் வனிகத்தில் ரிலையன்ஸ் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்துள்ளது இந்திய அரசு.

ஊக வணிகத்தால் விலைவாசி பலமடங்கு உயரும் பெரும்பான்மை மக்கள் பாதிப்படைவார்கள் என்பது தெரிந்தே முதலாளிகளின் லாபத்திற்காகவே ஊக வனிகத்தை இன்று வரை அனுமதித்துள்ளது இந்திய அரசு.

கோடிக்கணக்கான தொழிலாளர்கள் ஒட்டச் சுரண்டப்படுவார்கள் என்பதனை நன்றாக தெரிந்து கொண்டு தான் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சட்டத்தை ஏற்படுத்தி தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக மாற்றியுள்ளனர் இந்திய ஆளும் வர்க்கங்கள். குடி குடியை கெடுக்கும் என்பதனையும் தெரிந்தே தான் தமிழக அரசு உள்ளிட்ட பல மாநில அரசுகள் சாராய வியாபாரத்தை அனுமதித்துள்ளனர்.

அதேபோலதான் மருத்துவம் மற்றும் சுகாதாரத்தில் தனியார் முதலீடுகள் இந்திய மக்களுக்கு ஆராக்கியமான வாழ்வை அளிக்காது என்பதனையும் அறிந்தே மருத்துவ சந்தையை ஊக்குவிக்கும் விதத்தில் நாடு முழுவதும் மருத்துவ கருவிகளின் தொழிற்சாலைகளுக்கென சிறப்பு பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்தியும், கடன்சந்தைகளை ஏற்படுத்தியும், காப்பீடு சந்தைகளை ஏற்படுத்தியும் இந்திய முதலாளிகளின்,பன்னாட்டு முதலாளிகளின் லாப வேட்டைக்கு ஏதுவாக இந்திய ஆளும் வர்க்கங்கள் சட்டங்களை இயற்றி வருகின்றன.

பெரும் முதலாளிகள் மற்றும் பன்னாட்டு பகாசூர நிறுவனங்களால் உருவாகும் மற்றும் உருவாக்கப்படும் மர்ம நோய்களிலிருந்தும்,தொற்று நோய்களிலிருந்தும் இன்றும் பெரும்பான்மை மக்களுக்கு பாதுகாவலனாக இருந்து மக்களை காப்பது இந்திய மருத்துவ பொது துறைகள் தான்.

உலக வங்கியும் பன்னாட்டு நிதி மூலதனங்களும் இந்தியாவின் பொதுத் துறையை இந்திய ஆளும் வர்க்கங்களின் துணையோடு தொடர்ந்து கபளிகரம் செய்து வருகின்றன. 

குறிப்பாக உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடிகள் தோன்றும் போதெல்லாம் இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்கும் இந்திய மருத்துவ பொதுத்துறையை அழித்தொழித்து லாப வேட்டையை மேற்கொள்ள பல வழிகளில் ஆளும் வர்க்கங்களின் துணையோடு உலக வங்கியும், பன்னாட்டு நிதி மூலதனங்களும் முயன்று வருகின்றன. 

பன்னாட்டு நிதி மூலதனத்தோடு கூட்டு வைத்து சதி செய்யும் இந்திய ஆளும் வர்க்கங்களின் அரசியலை  நிர்மூலமாக்கியும், பெரும் முதலாளிகளின் மூலதனத்தை வீழ்த்துவதோடு சந்தை பொருளாதாரத்தையும் ஒழிக்க வேண்டும்.

இன்றைய உடனடி தேவையாக முதலாளித்துவத்திற்கு முடிவு கட்ட வேண்டுமென்றால் இந்தியாவில் சோசலிச கட்டுமானத்தை வலிமையாகக் கட்டி எழுப்ப வேண்டும் அதற்கு இந்தியாவின் பிரத்யேக தன்மைகளை பற்றியும், இந்திய சமூக மாற்றத்தில் அதன் முக்கியத்துவம் குறித்ததுமான மாமேதை காரல் மார்க்ஸின் நிலைபாடுகளை உள்வாங்கிக் கொண்டு வர்க்க விடுதலையை நிலைநிறுத்துவதே இன்றைய சூழலின் இன்றியமையாத தேவை.

- ப.மீனாட்சி சுந்தரம்