federation production

மக்கள் விரோத தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு பாராட்டும் நன்றியும்

தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் நடுவண் அரசின் எதேச்சதிகாரமான போக்கைக் கண்டித்து, நேற்றைய இணையவழிக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்திருப்பது வரவேற்கத்தக்க ஒரு முடிவு.

தேசியக் கல்விக் கொள்கையை அமுல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடுவண் அரசின் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனால் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாநில அமைச்சர்களையும் அனுமதிக்க வேண்டுமென்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடுவண் அரசின் கல்வி அமைச்சகத்திற்கு முன்கூட்டியே கடிதம் எழுதியிருந்த போதிலும், நடுவண் அரசின் கல்வி அமைச்சகம் இதற்கு எந்த பதிலையும் அனுப்பவில்லை.

எனவே தமிழக அரசு இக்கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது, தமிழக கல்வியாளர்கள் மத்தியிலும் மக்கள் இயக்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடுவண் அரசு கொண்டு வரத் துடிக்கும் தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதை நாடே அறியும். புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை வெளியான போதே, அதில் மக்கள் விரோத, சனநாயக விரோத, மனித உரிமைகள் விரோத, குழந்தைகள் விரோத, பெண்கள் விரோத, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான, சமயச் சிறுபான்மையினர் உரிமைகளுக்கு எதிரான, சமூக நீதி தத்துவத்திற்கு எதிரான, தமிழர் விரோத அம்சங்கள் நிறைந்திருந்தன என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வந்தன.

இத்தகைய மக்கள் விரோத தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதிலும் பல்வேறு சமூக அரசியல் அமைப்புகளும், மக்கள் இயக்கங்களும், ஆசிரியர் - மாணவர் சங்கங்களும், மனித உரிமைக் குழுக்களும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும், பொதுக் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தி வந்தன.

எனினும் அப்போதைய அதிமுக அரசு இதுகுறித்து எந்தவொரு உறுதியான நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காகவும், தங்களது சுயநலத்திற்காகவும் முந்தைய தமிழக அரசுப் பொறுப்பிலிருந்தோர் தமிழக மக்களின் நலன்களையும் தமிழக உரிமைகளையும் பலிகொடுத்தனர் என்ற பரவலான குற்றச்சாட்டுகள் எழும்பின.

கடந்த தமிழகப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு வெற்றி பெற்ற திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் மக்கள் விரோத தேசியக் கல்விக் கொள்கையை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று தெட்டத் தெளிவாக தங்களது தேர்தல் அறிக்கைகளில் அறிவித்தன.

அதன் அடிப்படையில் தமிழக அரசு இப்போது எடுத்திருக்கக்கூடிய இந்த நிலைப்பாட்டை கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு – தமிழ்நாடு & புதுச்சேரி முழுமையாக வரவேற்கிறது.

குலக்கல்வித் திட்டம், இந்தித் திணிப்பு, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருதத் திணிப்பு, தமிழ் மொழி விரோத மனப்பான்மை, கிராமங்களில் பள்ளிகளை மூடுவதற்கு வழிவகை செய்தல், நலிவுற்ற பிரிவினருக்கு கல்வியில் இட ஒதுக்கீட்டை மறுத்தல், கல்வி நிறுவனங்களில் கட்டற்ற தனியார்மயத்தை ஊக்குவித்தல், நீட் தேர்வு போன்று கலை மற்றும் அறிவியல் பாடங்களுக்கும் இளங்கலை பிரிவுகளில் கூட அனைத்திந்திய தகுதித் தேர்வை நடத்த முன்மொழிதல், கல்வி தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் டெல்லியில் குவித்து வைத்து மாநில அதிகாரங்களை முற்றிலுமாக முடக்குதல், பாடத்திட்டத்தில் இந்துமயமாக்குதல் போன்ற பல்வேறு மோசமான அம்சங்கள் உள்ளடங்கிய இந்த தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு எவ்வடிவத்திலும் தமிழக மண்ணில் அனுமதிக்கவே கூடாது என்றும் தங்களது நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றும் கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறது.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்ற அளவில் மட்டும் தமிழக அரசின் எதிர்ப்பு சுருங்கி விடக் கூடாது என்று வேண்டுகிறோம். தமிழகத்திற்கென்று தனித்த கல்விக் கொள்கையை உருவாக்குவதாக திமுக வின் தேர்தல் அறிக்கை குறிப்பிட்டதைப் போல நமக்கென்று பிரத்தியேக கல்விக் கொள்கை ஒன்றை வடிவமைத்திட வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் கூட தமிழக உயர்கல்வி நிறுவனங்களின் தலைமைப் பதவிகளுக்கான நியமனங்களிலும் பாடத்திட்டத்தை மாற்றுவதிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊடுருவல் கணிசமாக இருந்துள்ளது என்பதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

சனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோர், சமயச் சார்பின்மையில் ஈடுபாடு கொண்டோர், தமிழர் நலன்களையும் தமிழர் உரிமைகளையும் பாதுகாக்க விரும்புவோர், கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்த விரும்புவோர், சமத்துவத்தையும் சமூக நீதித் தத்துவத்தையும் தமிழ் மண்ணில் பாதுகாக்க விளைவோர் ஒருபோதும் நடுவண் அரசு கொண்டு வரும் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரிக்க மாட்டார்கள் என்பது உறுதி.

- கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு