maruthaiyanதமிழகத்திலுள்ள பெரும்பான்மை முற்போக்கு சக்திகள், 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் பாசிச பாஜகவை தோற்கடிப்பதற்காக திமுக கூட்டணியை மறைமுகமாகவோ நேரடியாகவோ ஆதரித்து நிலைப்பாடு எடுத்துள்ளனர்.

அவற்றை விமர்சிப்பவர்கள் சிலரும் நிபந்தனையோடு திமுகவை ஆதரிப்போம் அல்லது திமுகவிற்கு வாக்களிப்பதோடு தேர்தலுக்குப் பிறகும் தேவையானப் போராட்டங்களை முன்னெடுப்போம் என்று அதே 'ஜோதி'யில்தான் கரைகிறார்கள்.

இத்தகைய வலது சந்தர்ப்பவாத சறுக்கலில் மகுடம் சூட்டிக் கொண்டவராக மகஇகவின் முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளரான மருதையன் விளங்குகிறார்.

"அருந்ததிராய், ஆனந்த் தெல்தும்டெ ஆகியோர் வழியில் காங்கிரசு - திமுகவுக்கு ஆதரவாக அமைப்பை இழுத்துச் செல்கிறேன்".

"... சாதி அரசியலையும் திராவிட அரசியலையும் மறைமுகமாக ஊக்குவிக்கிறேன்" என்று தம்மீது அவதூறைப் பரப்புகிறார்கள் எனவும் நாயன்மார் பாணி பழி போடுகிறார்கள் எனவும் 24-02-2020 வினவு விலகல் கடிதத்தில் மருதையன் குறிப்பிட்டார்.

ஆனால் இதற்கு முரணாக, 2018ல் ஆனந்த் தெல்தும்டெயும் 2019ல் அருந்ததிராயும் படிப்படியாக 'அறிவுக்கண்ணை' திறக்க, டில்லி போராட்ட நேரடி ஆய்வில் 'பட்டறிய', 09-03-2021 "இடைவெளி"யில் மருதையன் "பாசிச எதிர்ப்புக்குத் தேர்தலும் ஒரு களமே! தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்போம்!" என முடிவெடுத்ததாக அறிவித்திருக்கிறார்.

ஒருவரது முடிவுகள் தலைகீழாககூட மாறலாம்; தவறல்ல. மருதையன் மாறியதற்கான காரணமும் விளக்கங்களும் நேர்மையின்றியும் வளர்ச்சியின்றியும் முடிவிலிருந்து விவரத்தை தேடியதாகவும் இருக்கின்றன.

'பாசிச சக்திகளை களத்தில் எதிர்த்துப் போராட உதவும் தேர்தல் அரசியல் கட்சிகளோடு இணைந்து செயல்படுவோம்' என்கிற கருத்தை, 23-02-2019 திருச்சி மக்கள் அதிகாரம் மாநாட்டு மேடையில் முன்வைத்த மருதையன், 2016 தேர்தலிலேயே அமைப்பு, புறக்கணிப்பை கைவிட்டதாக கூறும் மருதையன், தன் கருத்தை முன்வைத்து அமைப்புக்குள் போராடியிருக்கலாமே? 'அவதூறு' என மறுப்பானேன்?

நான்கரை மாதம் தகுதி குறைப்பை தானே செய்து கொண்ட போதாவது முன்வைத்திருக்கலாமே? இந்த அரசியல் முரண்பாட்டை விடுத்து, தலைமையின் அமைப்பியல் தவறுகளை மட்டும் உயர்த்தி பிடித்ததேன்? தனக்கான ஆதரவு நபர்களை திரட்ட தடையாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததாலா?

தனக்குத் தெரியாமல் தன்னைப் பற்றி ஒரு சுற்றறிக்கையை விட்டு திடீர் தாக்குதல் தொடுத்த "முன்னாள் செயலர்" தரப்புக்கு பதிலடியாக, வினவில் அறிவிக்கக் கூடாது என்பது தெரிந்தும் விலகலை அறிவித்து, திடீர் தாக்குதலை தொடுப்பதில்தான் கவனம் செலுத்தியிருக்கிறார், மருதையன்.

வெளியேறியபின் உள்ளிருக்கும் தமது ஆதரவாளர்களை வெளியேற்றுகிற வேலைக்கும், தன்பக்கம் ஆதரவாளர்களை இழுத்து உறுதிபடுத்திட 'வரமாக' கிடைத்த சுப.தங்கராசுவின் 'மெகா' ஊழல் விடயத்தை பயன்படுத்தி, "முன்னாள் செயலர் தரப்பின் தவறுகளை அம்பலப்படுத்துகிற வேலைக்கும்தான் கவனம் செலுத்தினார்.

"தேர்தல் புறக்கணிப்பு என்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியுமா? என்ற கேள்வி, சென்ற (2019) நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே எழத் தொடங்கிவிட்ட" அவரது ஐயத்தை - அரசியல் முரண் கருத்தை பற்றி அமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும் தொடக்கநிலை அளவில்கூட விவாதிக்கவோ, கட்டுரை எழுதவோ மருதையன் கவனம் செலுத்தவில்லை. மருதையனின் 'புதிய முடிவு' இப்படி நேர்மையின்றி பயணப்பட்டு வந்துள்ளது.

தமது திமுக ஆதரவு நிலைப்பாட்டிற்கு மருதையன் தந்த கோட்பாட்டு விளக்கம் என்ன தெரியுமா?

"முன்னாள் செயலர்" தரப்பினர், "போலி ஜனநாயகத் தேர்தல் புறக்கணிப்பை" போர்த் தந்திரம் என்று கூறி "கார்பரேட் - காவி பாசிச" செயல் தந்திரத்தோடு இடதுசாரி வறட்டு சூத்திரவாத அடிப்படையில் ஒட்ட வைத்திருக்கிறார்களாம். ஆனால், மருதையன் மட்டுமே லெனின் வழியில் இரண்டையும் செயல்தந்திரமாக ஒருங்கே பார்த்திருக்கிறாராம்.

தேர்தல் புறக்கணிப்பு / பங்கேற்பு என்ற செயல்தந்திரத்திற்கான போர்த் தந்திரம் எது? இச்செயல் தந்திரம் அப்போர்தந்திரத்திற்கு எப்படி சேவை செய்யும்? செயல், போர் தந்திரங்கள் எந்த இலக்கை நோக்கி?

'இந்திய சமுதாயப் பொருளாதார படிவ' ஆய்வுப்படி, அரை நிலக்கிழாரிய அரை காலனிய நாடு என்றும் சோசலிசத்திற்கு முந்தைய புதிய ஜனநாகப் புரட்சி என்றும் ஆயுதந்தாங்கிய - செந்தளப் பிரதேசங்களைக் கட்டிய "நீண்ட கால மக்கள் யுத்தம்" புரட்சிக்கான பாதை என்றும் இப்பாதைக்கு தேர்தல் புறக்கணிப்பே பொருத்தமானது என்றும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்புடைய எடுத்த 'முன்னாள் செயலர்' சார்ந்த அமைப்பின் நிலைப்பாடு தவறு எனில், மருதையன் எடுத்த 'புதிய முடிவை'யும் அதேவழியில் தொடர்பு படுத்தி சரியென நிறுவியிருக்க வேண்டும்.

'வறட்டுவாத சூத்திரம்' என்ற குற்றச்சாட்டோடு கடந்துவிடுகிறார். அவரது ஆதரவாளர்கள் போட்டி பிளீனம் நடத்தி "முன்னாள் செயலர்" அமைப்பின் நிலைப்பாட்டு அடிப்படையில்தான் ஒத்த பல கருத்துகளை முன்வைத்தார்கள். அவர்களுக்காவது மருதையன் விளக்கியிருக்க வேண்டும்.

தேர்தல் புறக்கணிப்பு - பங்கெடுப்பு என்ற "இரண்டு பாதைகளைப் பின்பற்றியவர்களும் நடைமுறையில் தோல்வி கண்டிருப்பதே நம்முன்னுள்ள அனுபவம். இரண்டையும் நிராகரித்த மக்கள் திரள் பாதை என்ற மூன்றாவது வழி குறித்து கோட்பாட்டளவில் பேசியிருக்கிறோம். ஆனால் இடதுசாரிகள்_நடைமுறையில் பின்பற்றத்தக்க முன்னுதாரணம் என்று கூறுமளவிற்கு புதிய வெளிச்சம் எதையும் காட்ட முடியவில்லை" என்று கூறுகிறார் மருதையன். அதாவது கோட்பாடு பேசியாகிவிட்டது; நடைமுறையில் புதிய வெளிச்சமில்லை என்று மட்டுமே குறிப்பிடுகிறார்.

இதில், மா-லெ குழுக்கள் தேர்தல் பாதை - அழித்தொழிப்பு பாதை தவிர்த்து மூன்றாவது ஒன்றையே மக்கள் திரள் பாதை என்று சொல்லி வருகின்றனர். ஆனால் மருதையன் தனக்கு வசதியாக திரித்துக் கொள்கிறார்.

மேலும், இவர்கள் வளர உதவியதாக கூறும் கோயில் கருவறை நுழைவுப் போராட்டம் முதல் அரசு கட்டமைப்பு நெருக்கடி வரையான செயல்தந்திர இயக்கங்கள் அனைத்தும் புதிய வெளிச்சம் காட்டவில்லை என எடுத்துக்கொள்ள வேண்டுமா என்றும் தெரியவில்லை.

தேர்தலில் பங்கேற்கின்ற பஞ்சாப் மா-லெ குழுக்கள் சார்ந்த விவசாயிகளின் செயல்பாடே, டில்லி விவசாயிகள் போராட்டத்திற்கு தொடக்கமாகவும் பிறகு ஜாட் சாதி, காப் பஞ்சாயத்து என பிற விவசாய சங்கங்களிடையேயும் பரவி இன்று வரை மோடி, உச்ச நீதி மன்றம், அம்பானி, அதானிகளை அச்சுறுத்தி வருவதற்கு காரணமாகவும் இருக்கிறது; இது இந்திய நாடாளுமன்ற அரசியலில் அரியதொரு நிகழ்வு என்கிறார் மருதையன்.

அதாவது தேர்தலில் பங்கெடுப்பவர்களாலும் நம்பிக்கையுள்ளவர்களாலும் நாடாளுமன்றத்தையே அச்சுறுத்துகிற இயக்கத்தை வெளியே கட்டி எழுப்ப முடிந்திருக்கிறதாம். தேர்தலில் நம்பிக்கை இல்லாதவர்கள் சாதிக்காததை பஞ்சாப் விவசாயிகள் சாதித்ததனால் மருதையன் தேர்தலைப் புறக்கணிப்பது தவறு என முடிவெடுத்தார்.

அதாவது தமது ஐயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்றால்... லிபரேசன், நியுடெமாக்ரசி பாதை சரி; இனி எனது பயணம் அது போன்றதே என்றுதானே நேரடியாகச் சொல்ல வேண்டும்? அதைவிடுத்து பாசிசத்தை முறியடிக்க இந்தத் தேர்தலுக்கு மட்டுமான சாத்தியமான நிலைப்பாடு, Breathing space... என்றெல்லாம் சொற்சிலம்பம் ஆடுவானேன்?

டில்லி விவசாயிகள் போராட்டத்தின் ஆய்வு, எப்படி 'திமுக ஆதரவு' என்ற முடிவுக்கு இட்டுச் செல்லும்? என கேள்வி உங்களுக்கு தோன்றினால், "தேர்தல் பங்கேற்பு - புறக்கணிப்பு என்ற எளிமைப்படுத்தப்பட்ட இருமை எதிர்வுச் சட்டகத்தின் வழியாகவே அனைத்தையும் பார்க்கின்ற ஆணவப் பார்வை"யாளர்களுக்கு உண்மை புரியாது என சாடுகிறார்.

தேர்தலில் பங்கெடுத்த வலது, இடது கம்யூனிஸ்டுகள், லிபரேசன், நியூ டெமாக்ரசி போன்ற குழுக்கள் தந்த அனுபவத்தின் ஆய்வுக்குள் சென்று அவர்கள் செய்த தவறுகள் என்ன, அதற்கு இவரது மாற்று என்ன, அது எப்படி புதிய வகை என்பதையாவது விளக்கினாரா என்றால் அதுவுமில்லை.

ஆக, அவரது கருத்து இந்திய சமூகப் பொருளியல், வர்க்கம், புரட்சி மற்றும் அதற்கான பாதையின் தொடர்ச்சியான ஆய்விலிருந்தோ, ஏற்கனவே இந்நிலைப்பாட்டை நடைமுறை படுத்தியவர்களது அனுபவங்களின் ஆய்விலிருந்தோ வளர்ந்ததாக இல்லை; விவரங்களிலிருந்து முடிவை நோக்கியும் இல்லை. மாறாக குறுங்குழுவயப்பட்ட, குட்டிமுதலாளிய வகைப்பட்ட முடிவிற்கு பின் விவரங்களைப் பூட்டி அதையும் வார்த்தை ஜாலங்களால் முறுக்கி முறுக்கி சிந்தித்து கோனார் உரை எழுதி நியாயப்படுத்தியதாகவே இருக்கிறது.

மேலும் "திமுக அணிக்கு வாக்களிப்போம்" நிலைப்பாடு "முன்னாள் செயலர்" தரப்பினருக்கும் மீண்டும் ஒரு திடீர் தாக்குதலாக அதாவது ஒரே பெயரில் அமைப்புகள் நடத்தும் தமது ஆதரவாளர்களான காளியப்பன், முகுந்தன், ராஜூ, வாஞ்சிநாதன், கோவன் போன்றவர்கள் வழியே நெருக்கடியாக அமையும் என கணக்கு போட்டுள்ளார், மருதையன்.

அதே போல் "முன்னாள் செயலர்" தரப்பினரும் அவர்களது செய்தி தொடர்பாளர் மருது என்பவர் மூலம் பதில் காணொளி போட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள்.

ஆனால் மருதையனது ஆதரவாளர்களோ, முழுவதுமாக சறுக்காமல் சுதாரித்து கொண்டவர்கள் போல், "முன்னாள் செயலர்" தரப்புக்கும் மருதையனுக்கும் 'இடைவெளி'யில் தங்கி புறக்கணிப்பீர் - தோற்கடிப்பீர் - வாக்களிப்பீர் முரண்களுக்குள் மையத்தை தேர்ந்தெடுத்து ஊசலாடுகிறார்கள்.

வேட்பாளரா, வாக்காளரா என்பதில் அரைக்கிணறு தாண்டிய மருதையன், கால் கிணறு தாண்டிய ஆதரவாளர்களை இழுக்கிறார். வரத் தயங்குவது 'பார்ப்பனிய மேட்டிமைத்தனம்" என முத்திரை வேறு குத்துகிறார்.

மூத்த தோழர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை தமது ஆதரவாளர்களுக்கும் கொடுத்தால் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? "தோற்கடிப்பீர்" 'நிலை'க்கு விளக்கம் சொல்லவே பரிதவிக்கிறார்கள்.

கோவனுக்கு சில வரி பாடலும் - குறைந்த நேரமும் இடிக்கிறதாம்! மற்றவர்களுக்கு பல வார்த்தைகளும் மணித் துளிகளும் போதவில்லையாம்! இன்னொரு பக்கம், கடலூரில் "தோற்கடிப்பீர்" பரப்புரைச் செய்தவர்களை பாஜகவினர் தாக்கியதைக்கூட 'மருதையனின் கோனார் உரையிலிருந்தே', "முந்தைய தேர்தல்களில் காங்கிரசு இப்படி ரவுடித்தனம் செய்ததில்லை" என்று விடை எழுதுகிறார்கள்.

மருதையனின் பல கோனார் உரைவீச்சுகள் லிபரேசன், சுசி குழுவினர் சில பத்தாண்டுகளாக விவாதித்த பழைய சரக்குகள்தான்.

//இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் அதிகாரவர்க்கம், நீதிமன்றம், ஊடகம் ஆகிய மூன்றும் போல் அல்லாமல் நாடாளுமன்றங்கள் - சட்டமன்றங்கள் மட்டுமே மக்களுக்கு பதில் சொல்ல பொறுப்புள்ள (accountability) ஒரு துறை. மற்ற மூன்றையும் அணுகுவது போல் அதையும் அணுகுவது - பயன்படுத்துவது தவறில்லை.//

பாஜக மற்ற மூன்று துறைகளையும் கபளீகரம் செய்ய இந்த நாடாளுமன்ற விழுமியங்களையும் மீறி, தில்லுமுல்லுகள் மூலமே உள் நுழைந்தார்கள்; குறுக்கு வழியில் மாநிலங்களில் ஆளுங்கட்சியாகிறார்கள் என்கிற போது எங்கே இருக்கிறது, "அக்கவுண்டபிலிட்டி" பயம்? ஊழல் செய்து சிறை சென்ற அல்லது மக்கள் விரோத சட்டங்களுக்கு ஆதரவளித்த சட்டமன்ற உறுப்பினர், மீண்டும் அதே தொகுதியில் மக்களிடம் வாக்கைப் பெற்று வெற்றி பெறும்போது "அக்கவுண்டபிலிட்டி" என்ன ஆனது? ஊருக்குள் மீண்டும் வாக்கு கேட்டு வராதே என "அக்கவுண்டபிலிட்டி"யை காட்டுகிற - எதிர்க்கிற மக்கள் மீதுதான் சட்டம் பாய்ந்து தாக்குகிறது.

இந்த "அக்கவுண்டபிலிட்டி" பயனற்று இருப்பதை அம்பலப்படுத்திதான் தேர்ந்தெடுத்தவனுக்கு திருப்பி அழைக்கும் உரிமை வேண்டும் என்று முன் வைக்கப்படுவது மருதையனுக்கு தெரியாததல்ல.

தேர்ந்தெடுக்கப்படாத ஊடகத் துறையிலும் அந்த "அக்கவுண்டபிலிட்டி" இருக்கிறதே? பொய் அல்லது மக்கள் விரோத கருத்தை வெளியிடுகிற இதழை - ஊடகத்தை கேள்விக் கேட்கிற - நிராகரிக்கிற வாய்ப்பு உள்ளது. தேர்தலிலாவது நிராகரிக்க 5 வருடம் காத்திருக்க வேண்டும்; ஊடகத்துறையிலோ மக்கள் உடனடியாக செய்யலாம்.

ஆக, தனது தேர்தல் சறுக்கல் முடிவுக்கு தேவையான துறையை மட்டும் பூதக்கண்ணாடி வைத்துக் காட்டுகிறார், மருதையன்.

மேலும், ஆளும் வர்க்க மிரட்டலால் பிரபல ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதை சமூக ஊடகங்கள் அம்பலப்படுத்துகிற கூடுதல் வாய்ப்பு தொழில்நுட்பத்தால் மக்களுக்கு அரும்பியிருக்கிற (வரம்புக்குட்பட்டது எந்நேரமும் பறிக்கப்படலாம் என்றாலும்) சூழலில்தான்... வாக்கிற்கு பணம் தருகிற - பெறுகிற முறையை 'இயல்பாக்கி' வரும் சமயத்தில்தான்... EVM Fraud மூலம் தேர்தல் முறை - நாடாளுமன்ற ஜனநாயகம் பல்லிளிக்கிற சமயத்தில்தான்.... இப்படி 'பயாஸ்கோப்' காட்டுகிறார், மருதையன்.

//ஆர்எஸ்எஸ் இயக்கம் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி ஏறக்குறைய ஒரே காலத்தில், ஒத்த அமைப்பு வடிவங்களில் இந்தியாவில் தொடங்கப்பட்டவை. ஆர்எஸ்எஸ் வளர்ச்சி கண்டுள்ளது; கம்யூனிஸ்டுகள் வளராமல் சிதறுண்டு இருப்பது ஆராயப்பட வேண்டும்.//

"நாடாளுமன்ற வழிமுறையா, நாடாளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வழிமுறையா என்பது குறித்து இடதுசாரிகளைப் போல வெகு நீண்ட சித்தாந்த விவாதங்களை ஆர்.எஸ்.எஸ். காரர்கள் நடத்தியதில்லை. இருப்பினும் நடைமுறையில் இவ்விரண்டையும் மிகவும் சாமர்த்தியமாகக் கையாண்டு வருபவர்கள் அவர்கள்தான்" என்ற அய்ஜாஸ் அகமது கூற்றை ஒப்புக் கொண்ட மருதையன், ஆயுத வன்முறை உள்ளி்ட்ட சட்டவிரோத வன்முறைகளை சங்கிகள் அதிகம் பயன்படுத்தி வந்தாலும், மாவோயிஸ்டுகள்தான் சட்டவிரோதிகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்.

"நாடாளுமன்றப் படிகட்டுகளை விழுந்து கும்பிட்ட பின்னர்தான், நாடாளுமன்றத்துக்கு குழி பறிக்கும் வேலையை தொடங்கிய மோடி" போல் தேர்தலில் பங்கெடுக்கும் ஒரு கம்யூனிஸ்டால் செய்ய இயலுமா? கூடாதல்லவா? ஏனெனில், பாசிஸ்டுகளுக்கு வழிமுறை பற்றி கவலையில்லை.

கம்யூனிஸ்டுகளுக்கு வழிமுறையும் முக்கியம். பாசிஸ்டுகள் அதிகாரத்துவ அமைப்பு நடவடிக்கைகளால் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் ஜனநாயக நடவடிக்கைகளை 'கடைபிடிப்பதால்' சிதறுண்டு போகிறார்கள். பாசிசத்தின் வளர்ச்சியும்; கம்யூனிசத்தின் வீழ்ச்சியும் தற்காலிகம்தான்.

ஆனால், சித்தாந்த விவாதம் நடத்தாத ஆர்எஸ்எஸ், சட்டபூர்வ - சட்டவிரோத முறைகளை திறமையாக கையாளுகிற ஆர்எஸ்எஸ் என தவறாக மதிப்பிடுகிறார், மருதையன். மாவோயிஸ்டுகளின் ஆயுதத் தாக்குதலையும் ஆர்எஸ்எஸ்-ன் ஆயுதத் தாக்குதலையும் நேர் நிறுத்தி கம்யூனிஸ்டுகளைச் சாடுகிறார். வலது சந்தர்ப்பவாதம் அந்த அளவிற்கு அவர் கண்ணை மறைக்கிறது.

//காங்கிரசும் பாஜகவும் ஒன்றா? அதிமுகவும் திமுகவும் ஒன்றா?//

இல்லை. வேறுபாடு உடையவைதான். பாஜகவிற்குள் வாஜ்பாயும் அத்வானியும் ஒன்றா? மோடியும் அத்வானியும் ஒன்றா? அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஒன்றா? என்றுகூட கேட்கலாம். இல்லை என்றும் பதிலுரைக்கலாம். இப்படி ஒன்றை மற்றொன்றோடு ஒப்பீடு செய்தால், எல்லாம் வேறு வேறானவையே! ஓப்பீட்டளவில் எதிலும் சிறந்ததைத் தேர்ந்தெடுக்கலாம். இத்தகைய ஒப்பீட்டு ஆய்வு வர்க்க பகுப்பாய்விற்கு, வர்க்க நலனுக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியுமா?

ஆர்எஸ்எஸ்-யும் கம்யூனிஸ்டு கட்சிகளையும் நேர் நிறுத்திய இவர்கள், பாஜகவையும் காங்கிரசையும் எதிர் நிறுத்தி ஒன்றா என கேட்பது என்ன வர்க்கப் பார்வையோ?

//பாசிச அபாயத்தை முறியடிக்க ஆளும் வர்க்க சக்திகளோடு கூட்டணி - ஐக்கியம் அமைக்கலாம்; ஆளும் வர்க்க முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்வதும் மார்க்சியமே.//

தேர்தல் அதன் உள்ளடக்கத்தில் ஆளும் வர்க்கத்தினருக்கு எதிரான போரா? தேர்தலில் வர்க்க முரண்பாடு அடிப்படையில்தான் கட்சிகளின் அணி சேர்க்கை நிகழ்கிறதா? ஆளும் வர்க்க முரண்பாட்டைப் பயன்படுத்திக் கொள்ள, ஆளப்படும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் - குழுக்களிடையே தேர்தலிலாவது ஒருங்கிணைப்பு இருக்கிறதா?

பாஜக மதவெறி பாசிசமும் காங்கிரசு போலி மதச்சார்பின்மை பாசிசமும் தங்களுக்குள் காட்டும் வேறுபாடு என்பது மக்களை ஒடுக்குவதற்கே, 'உங்களை' கபளீகரம் செய்வதற்கே! இதுவும் தெரிந்தே ஆதரிக்கும் உங்களிடம், ஆளும் வர்க்க முரண்பாட்டைப் பயன்படுத்தி வளர்வதற்கல்ல; சிபிஜ-சிபிஎம் போல் முழுகாமல் மீள்வதற்குரிய திட்டமாவது இருக்கிறதா?

தமிழகத்தில் திமுக அணிக்கு வாக்களிப்பது ஆளும் வர்க்க முரண்பாட்டைப் பயன்படுத்தி பாஜக பாசிசம் வராமல் அரண் அமைப்பது என்றால், மேற்கு வங்கத்தில் அந்த அதிர்ஸ்ட அணி யார், திரிணாமுல் காங்கிரசா, காங்.+மார்க்சிஸ்டா, லிபரேசன் இருக்கும் கூட்டணியா என்பதை மருதையன் விளக்குவாரா? தேர்தல் நடக்கும் ஒவ்வொரு மாநில மக்களுக்கும் மருதையன் வழிகாட்ட வேண்டும். ஏனெனில் மருதையன் பாசிச பாஜகவை இந்திய அளவில் முறியடிக்கும் நிலைப்பாட்டில் இருப்பவர் என நம்புகிறோம்.

"யாருக்கு வாக்களிப்பது என்பதை அந்தந்த மாநில தலைமை முடிவு செய்துக் கொள்வார்கள்; ஏற்றத் தாழ்வான சமூகத்தில் மாநிலத்துக்கு மாநிலம் தேர்தல் களத்திலும் பல முரணான முடிவுகள் இருக்கும்" என்பது சிபிஐ, சிபிஎம், லிபரேசன் போன்றவர்கள் கூட்டணி முரண்பாட்டிற்கு சொல்கிற விளக்கம். அதிலிருந்து எப்படி மருதையனது 'சாத்தியமான' முடிவு மாறுபட்டது?

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசு அணியை ஆதரிப்பதும் மார்க்சிஸ்டு அணியை நிராகரிப்பதும் கேரளத்தில் மார்க்சிஸ்டு அணியை ஆதரிப்பதும் காங்கிரசு அணியை நிராகரிப்பதும் போன்ற முரண்பட்ட முடிவுகள் தேர்தல் பாதைக்கு வெளியே பாசிசத்திற்கு எதிராக மக்களை திரட்ட பயனளிக்குமா? முரண்பட்ட மாநில வர்க்க சக்திகளை ஒருங்கிணைக்க என்ன திட்டம் உள்ளது? தள்ளி நின்று ஆதரவு கொடுத்து 'இப்படி' ஆளும்வர்க்க முரண்பாட்டைப் பயன்படுத்தினாலும் உங்களது திட்டங்களை முழுமையாக மக்களுக்கு அறிவியுங்கள்.

மூன்று மாநில விவசாயிகளைத் தாண்டி டில்லி விவசாயிகள் போராட்டம் வளராமல் நாடு தழுவிய அளவில் ஒருங்கிணைக்கப்படாமல் இருப்பதற்கான காரணத்தை மருதையன் ஆராய்ந்தாரா? ஆராய்ந்தால் இதற்கான விடை கிடைக்கும்.

//திமுக அரணாக தொடர்ந்து நிற்பதற்கு மக்கள் போராட்டங்கள் மூலம் புறநிலை அழுத்தம் கொடுக்க வேண்டும்//

அனிதா இறப்புக்குப்பின் தமிழகத்தில் எழுந்த நீட் எதிர்ப்பு போராட்டங்கள் பல தன்னெழுச்சியாக வெடித்தன; நீட் எதிர்ப்பில் எதிர்கட்சிகளோடு இணைந்துப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய திமுக, அந்த எழுச்சியைப் பயன்படுத்திப் போராட்டத்தை சாலைமறியல், பந்த் என அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று பாஜக-அதிமுக ஆளுங்கும்பலுக்கு பெரிய நெருக்கடி கொடுத்திருக்கலாம்.

ஆனால், திமுக அவ்வாறு செய்யவில்லை. பாஜக - அதிமுக ஆளுங்கும்பல் வேறு ஒரு பிரச்சினையை கிளப்பி திசைத் திருப்ப அதற்குப்பின் சென்றுவிட்டது. இறுதியில் நீட் தமிழகத்திற்கு வந்துவிட்டது.

கருணாநிதி - ஸ்டாலின் கைதானால் சாலையை மறித்து நெருக்கடி தருகிற திமுக, நீட் எதிர்ப்பில் அப்படி ஒரு நெருக்கடியைத் தரவில்லை. ஹிந்தி எதிர்ப்பு போராட்ட பெருமை பேசுகிற திமுக, அதுபோன்ற இயக்கத்தை இதுவரை கட்டியமைத்ததில்லை.

எந்த ஒரு போராட்டத்தையும் தேர்தல் அரசியல் கண்ணோட்ட வரம்புக்கு வெளியே எடுத்துச் செல்வதற்கு திமுக தயாராக இல்லை. அதிமுக அடிமை ஆட்சியால்தான் எல்லா பாதிப்புகளும் வருகின்றன; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாற்றிவிடுவோம் என்ற மனநிலையை மக்களிடையே விதைப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். நீட், ஜிஎஸ்டி உள்ளிட்ட "மாநில சுயாட்சி" தொடர்பானவற்றிற்கே இந்த அணுகுமுறை என்றால் மற்றவை பற்றி கேட்கவேண்டாம்.

அதேபோல், வாக்குச்சீட்டு (Ballot Vote) முறையை நடைமுறைப்படுத்த கோருவதிலும் இன்றுவரை காங்கிரசும் திமுகவும் சட்ட வரம்புக்குள்ளேயே நிற்பதுகூட, தாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் EVM fraud வேலைகளை பாஜக போலவே தாமும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நப்பாசையில்தான். இப்படிப்பட்ட காங்கிரசு - திமுகவைதான் அரணாகப் பயன்படுத்தலாம் என்கிறார் மருதையன். திமுக மாற்றல்ல எனத் தெரிந்தாலும் இன்றைய அபாயகரமான சூழலில் 'நமக்கு' வேறு வழியில்லை எனப் பயங்காட்டுகிறார்.

பாசிச பாஜக வளர்ச்சியை தடுக்கும் அரணாக திமுக இல்லாமல் ஆட்சிக்கு வந்ததும் மாறினால் மக்களிடையே போராட்ட இயக்கங்களை உருவாக்கி புறநிலையாக அழுத்தம் கொடுத்து தடுக்க வேண்டுமாம். திமுகவிற்கு இன்று நிபந்தனை விதிக்கும் நிலையில் இல்லாத சக்திகளின் கற்பனை இது.

பாஜகவை எதிர்க்கிற பாதையில் விலகாமல் திமுக இருக்க, அதனுடன் கைகோர்த்து உள்ளிருந்து சுப வீரபாண்டியன்கள் நெருக்கடி தருகிறார்கள். கைகோர்க்காமல் வெளியிலிருந்து மக்கள் போராட்டங்களை கட்டி எழுப்பி மருதையன்கள் நெருக்கடி தரப் போகிறார்கள்.

ஸ்டெர்லைட் போல் வெளியிலிருந்து முற்போக்கு சக்திகள் போராட்டங்களைக் கட்டி எழுப்பி அழுத்தம் கொடுத்தால்தான் திமுக மக்கள் பக்கம் நின்று பாதுகாக்கும் என்றால் அதைத் தனித்தே - முன்பு போலவே தொடர்ந்து செய்யலாமே? அதாவது 'பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே'?

இவர்களது புறநிலை போராட்ட அழுத்தத்தையும் மீறி, திமுக ஆட்சியைப் பிடித்தபின் பாஜகவுடன் சமரசம் செய்து கொண்டால், 'வெளியிருப்புப் போராளிகள்' மக்கள்மீது பழி போட்டு தப்பித்துக் கொள்வார்களா? இல்லை 'உள்ளிருப்பு போராளியாக'வோ வேட்பாளராகவோ மாறி புதிய கோனார் உரை போடுவார்களா? மருதையனுக்கே வெளிச்சம்!

தமிழகத்தில் திமுகவும் மே.வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசும் கேரளாவில் சிபிஎம்மும் ஆட்சிக்கு வந்து அரணாக அமைகிறார்கள் என வைத்துக் கொள்வோம். இவர்களிடையே ஒரு ஐக்கியம் உருவாகவில்லை எனில், மருதையன் இந்திய அளவில் இயக்கம் நடத்தி புறநிலையிலிருந்து அழுத்தம் கொடுப்பாரோ? அப்பொழுது அந்த கூட்டணியில் மே.வ. திரிணாமுல் காங்கிரசும் மார்க்சிஸ்டுகளும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவார்களா?

//தேர்தல் அரசியலுக்கு வெளியே போராடுவதற்குத் தேவைப்படுகின்ற ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கே, தேர்தலில் பாசிஸ்டுகளின் அணியைத் தோற்கடித்தாக வேண்டும். இந்த வாய்ப்பினைப் புறக்கணிக்குமாறு கூறுவது, நடைமுறையில் பாசிச எதிர்ப்பு சக்திகளை முடக்குவதற்கு மட்டுமே உதவும்.//

திமுக ஆட்சியைப் பிடித்த பிறகு ஜனநாயக உரிமைகள் பறிபோகலாம்; திமுகவின் வீராச்சாமிகளும் மாறன்களும் டி ஆர் பாலுக்களும் அம்பானி - அதானிக்கு விலை போகலாம்; கார்ப்பரேட்டிற்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஒடுக்கலாம் என்பது தெரிந்தே.

திமுக கேட்காமலே அதற்கு ஆதரவு கரம் நீட்டுகிறார்கள். பிற கூட்டணி கட்சிகள் திமுகவுடன் எந்த நிபந்தனையின்றி நம்பிக்கை அடிப்படையில் சேர்ந்துள்ளது போலவே, இவர்களும் ஆதரவளித்து, திமுக மாறினால் அப்பொழுது எதிர்த்து நிற்போம் என்றும் 'நடைமுறைத் தந்திர' போதனையளிக்கிறார்கள்.

ஆட்சி மாறினாலும் மக்களும் முற்போக்காளர்களும் வழக்கம்போல் பாசிச பாஜக பாசிசத்தோடு திமுகவின் அடக்குமுறையையும் எதிர்க்க வேண்டும்; அவர்களின் பாசிச எதிர்ப்பு பாசாங்கு நாடகங்களை தோலுரிக்க வேண்டும் என்றால் எதற்கு ஆதரவுக்கரம்?

இந்து முன்னணியின் விநாயகர் ஊர்வலத்தை அனுமதித்து, பெரியார் கைத்தடி போராட்டத்திற்கு தடைவிதித்த திமுகவை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். அது பாஜக பாசிசத்திற்கு எதிரான உங்கள் போராட்டங்களுக்கு திமுக எடுக்கப் போகும் 'அவதார'த்தைப் புரிய வைக்கும்.

திமுக ஆட்சிக்கு வந்து, மத்தியிலுள்ள பாஜகவின் பாசிசத்தை போலி - பாசாங்கு எதிர்ப்பு மூலம் மக்களை ஏமாற்றி வந்தாலும் "பாசிச எதிர்ப்பு சக்திகளை முடக்குவதற்கு சமமாகிவிடும்" என்பது பொருந்துமா? மருதையன் அம்பலப்படுத்தி, எதிர்த்து போராடமாட்டாரா?

பாசிஸ்டுகளின் அணியைத் தேர்தலில் தோற்கடிக்க, பாசிச எதிர்ப்பு சக்திகள் யார் என்பதை வரையறுக்க மார்க்சிய - வர்க்க அளவுகோல் தேவையில்லையா? பாட்டாளி வர்க்க புரட்சிகர சக்திகள், குட்டி முதலாளிய ஜனநாயக சக்திகள், முதலாளிய சமரச சக்திகள், பெரும் கார்ப்பரேட் முதலாளிகளான அம்பானி - அதானியால் பாதிக்கப்பட்ட பிற எதிர்புரட்சி ஆளும்வர்க்க சக்திகள் என்ற பகுப்பாய்வு தேவையில்லையா? புரட்சிகர சக்திகளுடன் ஒருங்கிணைப்பு, ஜனநாயக சக்திகளுடம் கூட்டு, ஆளும்வர்க்க முரண்பாட்டை பயன்படுத்தும் ஐக்கியம் என கிரமமான அணுகுமுறை தேவையில்லையா? நேரடியாக திமுக ஆதரவுதானா?

பாஜக பாசிச அபாயத்தை எதிர்க்க - தடுக்க அதன் அவசர தேவை கருதி சாத்தியமான முடிவு எடுக்காமல், இவ்வாறு விவாதிப்பது 'வறட்டுவாத - பழமைவாத மார்க்சிய பார்வை' என முத்திரை குத்தலாம்.

பாசிசத்தை எதிர்க்கும் பயணத்திற்கு குறுக்குவழியாக திமுக எனும் மண்குதிரையை கைகாட்டும் மருதையனும், அப்படிக் காட்ட மறுத்து நழுவும் பிறரும் பாஜக பாசிசத்திலிருந்து மக்களை கரை சேர்க்கப் போவதில்லை.

- ஞாலன்