karunanidhi copyஅண்மையில் கமலஹாசன் சக்கர நாற்காலி பற்றி திருவாய் மலர்ந்தருளியது பற்றி நாம் பேசியாக வேண்டும். இது திமிர்த்தனத்தின் உச்சம் , முட்டாள்தனத்தின் எச்சம், ஆகவே இதனை நாம் கண்டித்தாக வேண்டும்.

அதற்கு முன்பு கமலின் 'ஆக்டிவ் லைப்' (அவரது சொற்கள்தான்) ஆரோக்கியத்தையும் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட கலைஞரின் தள்ளாமையையும் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

2015 கடைசியில் தொடர்ச்சியான பெருமழை காரணமாக சென்னை நகரமே வெள்ளக்காடாகி மக்கள் உணவும் நீரும் உடையும் போர்வையும் இன்றி தவித்தபோது கமலஹாசன் என்ன செய்தார்.

தன் வீட்டு சாளரம் வழியாக மழையை வேடிக்கை பார்த்ததை தவிர வேறொன்றையும் செய்யவில்லை. இதை அவரே சொல்லியிருக்கிறார். தனது ரசிகர்களை மன்றத்தில் அமைப்பாக திரட்டி வைத்திருந்தாலும் மக்களின் துயர் துடைக்க அந்த இளைஞர்களின் ஆற்றலை கூட பயன்படுத்த அவர் முனையவில்லை.

ஆனால் கலைஞரின் சக்கர நாற்காலி மக்களின் துயர் துடைக்க உருண்டோடி வந்தது. தி மு க தொண்டர்களின் உதவியோடு மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை வழங்கினார் கலைஞர்.

துயரத்தில் தவிக்கும் மக்களின் நிலை கண்டும் ஆரோக்கிய கமல் வாளாவிருந்ததற்கும் தள்ளாமையால் அவதியுற்று கொண்டிருந்த கலைஞர் துயர் துடைக்க சக்கர நாற்காலியில் அமர்ந்தேனும் வந்ததற்கும் என்ன காரணம் ? மக்கள் மீது கொண்டிருக்கும் நேசம்தான் காரணம். அது கலைஞரிடம் தாராளமாக இருந்ததால் மக்களின் துயரை கண்டபின்னும் அவரால் வாளாவிருக்க இயலவில்லை.

கமலுக்கோ அது துளியளவும் இல்லாததால் அவரால் துயர் போக்க வர இயலவில்லை நாயின் மடியில் பால் இருப்பதால் நமக்கென்ன பயன் என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு. ஆம் கமலின் ஆரோக்கியம் நாயின் மடிப்பால்தான்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு செய்தியும் உள்ளது. ஊடகங்களில் கமலஹாசன் மிகப்பெரிய அறிவாளி என்று ஊதிப் பெருக்கி கொண்டிருக்கிறார்கள். அவருக்கு அவரது துறைச் சார்ந்த அறிவு இருக்கலாம், ஆனால் பொது அறிவு கிஞ்சிற்றும் இல்லாத ஞான சூன்யம்தான் அவர் என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

உலகில் வாழும் அனைத்து மனிதர்களிடமும் பல்வேறு இயலாமைகள் உள்ளன. எல்லா மனிதர்களும் கடலில் தத்தளிக்கும் நீச்சல் தெரியாதவர்களை காப்பாற்றி விட முடியாது.

எல்லா மனிதர்களும் மான் முயல் போன்ற ஆபத்தில்லாத விலங்குகளை கூட வேட்டையாடி விட முடியாது, எல்லா மனிதர்களும் பற்றி எரியும் தீயை அணைத்து விட முடியாது. எல்லா மனிதர்களும் விண்வெளி பயணம் மேற்கொண்டு விட முடியாது. இப்படி முடிவின்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

இவையெல்லாம் இயலாமை என்று யாரும் கொள்வதில்லை.அப்படியானால் இயலாமை என்பது என்ன?

ஒரு மனிதன் தான் ஏற்றுக் கொண்டுள்ள அல்லது தனக்கு ஏற்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்ற இயலாத அளவிற்கு வலுவிழந்து போவதை இயலாமை என்று சொல்லலாம்.

கலைஞர் ஏற்றுக் கொண்ட பொறுப்புகளான கட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சி தலைவர், முதலமைச்சர் ஆகிய அனைத்துமே உடல் உழைப்பை கோருவன அல்ல.

மூளை உழைப்பைக் கோருபவையே அவை. நிர்வாகத்திறன், உடன் முடிவெடுக்கும் துணிவு, திறன், பேச்சாற்றல் ஆகியனவே அப்பணிகளை நிறைவேற்ற தேவை. அவை கலைஞரிடம் தேவைக்கு அதிகமாக இருந்ததை இந்த நாடே அறியும்.

ஆகவே திருவாளர் கமலே, இயலாமை கலைஞரிடம் இருக்கவில்லை. உங்கள் மூளையில்தான் உள்ளது.

- திப்பு