englishசுட்டாலும் இது தான் நிஜம். ஆங்கிலம் ஒரு வியாபார மொழி. இங்கு வியாபாரம் தான் வாழ்வின் அடித்தளம். ஆக ஒன்றையொன்று சார்ந்து தான் இயங்க முடியும். அது தான் நடக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளீர் மரபில் வந்து விட்டு இன்னொரு மொழியை இழிவாக பேசுவதை... பார்ப்பதை அருவருப்போடு தான் காண வேண்டி இருக்கிறது.

ஏன் ஒரு தமிழ் நூலைப் பற்றி ஆங்கிலத்தில் எழுத கூடாதா.

வாட்சப்... மூஞ்சி புக்... டிவிட்டர்... யூ டியூப் எல்லாம் நாமா கண்டு பிடிச்சோம். ஆனா உபயோகப்படுத்தறோம்ல. போடற பேண்ட்ல இருந்து ஜட்டி வரை வடிவமைப்பு அந்நியனோடதுதான. பேசற செல்போனை யார் கொண்டு வந்தா. கரண்ட் நாமளா கண்டு புடிச்சோம்.

டிவி.. டெலிபோனு... கணிப்பொறி... கார்... விமானம்... இப்டி சொல்லிட்டே போலாம். இந்த உலகம் இயற்கையானது. அதிலிருந்து அந்தந்த மண் சார்ந்த உடலமைப்பில்... மொழி வளர்ப்பில் மனித குலம் தன்னைத் தக்க வைத்துக் கொண்டது.

எல்லா மனிதனுக்கும் ஆதி மொழி ஒன்னு தான. அந்தம் மொழி ஒன்னு தான. இதுல என்ன நான் பெருசு நீ சிறுசு. உலகத்துக்கே முன்னோடி நாம். அதில் பொறுப்பு தானே இருக்க வேண்டும்... தவிர வெற்றுப் பெருமை எதற்கு.

எந்த மொழியில் கண்டுபிடிப்புகள் அதிகமாக இருக்கிறதோ அந்த மொழி ஆட்சி செய்யும். அது தான்... நடந்து கொண்டிருக்கிறது. (ஆட்சி என்ற பதத்தை பழம் நேர்மையாக புரிந்துக் கொண்டு மக்கள் ஆட்சியா மன்னர் ஆட்சியா என்று சொல்லெடுத்துக் கொண்டு வந்து விடாதீர்கள் மக்கா)

ஏன் கவிஞன் எல்லாருமே... செந்தமிழில் தான் பேசிட்டு இருக்கணுமா... வழக்குத் தமிழுக்கு அந்நியமானவர்களா எழுத்தாளர்கள்.

180 ரூவாய் குடுத்து ஒரு புக்கு வாங்க முடியல. ஏன் புக்க இங்கிலீஷில அறிமுகப்படுத்தற... கன்னடத்துல அறிமுகப்படுத்தறன்னு இல்லாத நொட்டை.

தட்டுல ஒரு நேர சோறு வரணும்னாவே எத்தனை ஊரு சேர்ந்திருக்கணும் தெரியுமா... எத்தனை ஊரு மொழி கலந்திருக்கும்... தெரியுமா. அதை விட்டு தமிழ்லதான் பேசுவேன்... தமிழ்லதான் தூங்குவேன்னு சொல்றதெல்லாம்.. 21 ம் நூற்றாண்டின் அபத்தம்.

தமிழ் எங்கள் உணர்வில் கலந்திருக்கிறது. அது ஒரு போதும் நீங்கள் நினைப்பது போல அழியாது. கிட்டத்தட்ட 2000 வருஷத்துக்கு முன்னால ரத்தமும் சதையுமா உருவான மொழி. அது எப்படி அழியும். அழிய எப்படி விடுவோம்.

ஆனால் வாழ்க்கை ஓட்டத்துக்கு எந்த மொழி தேவையோ அந்த மொழியை கையில் எடுப்போம். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று முன்னோர் சொன்னானே... அப்போ ஒருவேளை திரைகடல் ஆப்பிரிக்கா மொழி பேசுது என்றால் அம்மொழியைக் கற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.

மூத்த மொழி தமிழ். அதில் மாற்று கருத்தே இல்ல. அதே நேரம் முத்த மொழி தானே இன்டெர்வியூயில் பேசுகிறார்கள். இன்னொரு மொழி கற்றுக் கொள்கையில் இன்னொரு முறை பிறக்கிறோம் என்பதுதானே முதுமொழி.

இந்த உலகம் கலப்புகளால் ஆனது. முதலில் அதை ஒப்புக் கொள்ள வேண்டும். இன்னும் நிலா சோறு தின்னுகிட்டே இருப்போம் என்பதெல்லாம் கவிதைக்கு உதவும். கறிக்கு உதவாது. ஆண்ட பரம்பரை அண்டா பரம்பரை எல்லாம் மூணு தலை முறை தாண்டி மூடிக் கொண்டு இருக்கும்.

இதில் சிலருக்கு என் பெயரில் தான் பிரச்னை. ஜ என்ன தமிழ் மொழியா... ஜி என்ன தந்தை மொழியா என்று. அதை கேட்க பயன்படுவது கூட முகநூலும் வாட்ஸப்பும்தான். இப்ப நான் கேக்கறேன்... இந்த ரெண்டும் என்ன நம்ம பாட்டன் வீட்டு முற்றம் கண்டு பிடிச்ச நிலா சோறு சமாச்சாரமா.

மாங்கு மாங்குனு பக்க பக்கமாக எழுதி குவிக்கறேன். அதுல ஒரு கவிதையை... ஒரு கட்டுரையை.. ஒரு கதையை... ஒரு நேர்காணலை படிச்சிட்டு விவாதிக்க முடியல. என் பேர்ல இருக்கற ஜி தான்.. ஜ தான் இப்ப பிரச்னை.

இல்லையா. பேர்ல என்ன வந்துருக்கு. வடமொழி வங்கமொழின்னு. பழங்குட்டைல ஊறிக் கிடப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. நமக்கு பாரதியும் ஒன்னு தான். கீட்சும் ஒன்னு தான். தாகூரும் ஒன்னு தான். மண்டோவும் ஒன்னு தான்.

தாஸ்தாவெஸ்கியும் ஒன்னு தான். காபிரியேலும் ஒன்னு தான். சேகுவேராவை கும்புடறவனுக்கு... ஹிந்திக்காரன் என்ன.. மராட்டிக்காரன் என்ன. எல்லாரும் அண்ணன் தம்பி தான்.

இங்கிலீஸ்காரன் பிரெஞ்சுகாரன்லாம் நெருங்கிய சொந்தம் தான். ஆஸ்திரேலியாகாரன்லாம் மாமன் மச்சான். தேவைப்பட்டா அவன் மொழில பேசுவோம். எழுதுவோம். எனக்கு தமிழ் தெரிவதால் தமிழில் எழுதுகிறேன். அவ்ளோ தான்.

மீண்டும் நினைவூட்டுகிறேன்,. யாதும் ஊரே யாவரும் கேளீர் மரபு நமது. மொழி பற்றுதான் தேவையே தவிர மொழி வெறி அல்ல. அதையும் தாண்டி ஆங்கிலத்தில் விளம்பரம் செய்வது ஒரு வகை மார்க்கெட்டிங் ஸ்ட்ரேட்டஜி. 24 மணி நேரமும் தமிழை சுமந்து சுமந்து கூன் ஆகி விடாமல் இருக்க அவ்வப்போது நிமிர்ந்து போகோ சேனலும் பாருங்கள்.

தமிழை உண்மையாக உள்வாங்குவருக்கு சுமை தெரியாது. அது சிறகு பொருத்தும். எங்களுக்கு இருப்பது சிறகு. சிறகுள்ள பறவைக்கு எம்மொழியும் செம்மொழி தான்.

- கவிஜி