modi ambani adani fireமோடி - எடப்பாடி கும்பல் புதிய வேளாண் சட்டங்களை நியாயப்படுத்துவதற்கு பொதுவெளியில் இரண்டு முக்கிய காரணங்களை முன்வைத்துப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

1) புதிய சட்டங்கள் “இடைத் தரகர்களை ஒழிப்பதன் மூலம் வியாபாரிகளிடம் விவசாயிகள் நேரடியாக பேரம்பேச முடியும். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்க வழிசெய்கிறது” 2) “புதிய சட்டங்களால் பாதிக்கப்படும் இடைத்தரகர்களும், வியாபாரிகளும்தான் விவசாயிகளைப் போராட தூண்டிவிடுகிறார்கள்” என்கிறார்கள்.

மீடியாக்களும் இதற்கு சொம்படிக்கின்றன. இதைப் படிக்கும் கேட்கும் ‘நடுநிலையாளர்’கள் “மோடி நல்லதுதானே செய்கிறார்” என்று மகுடி ஊத ஆரம்பிக்கிறார்கள்! இது உண்மையா? இடைத்தரகர்கள் என்பவர்கள் யார்? விவசாயம் சார்ந்த வர்த்தகத்தில் அவர்களின் பங்கு பாத்திரம் என்ன? என்பதை புரிந்துகொள்ள வேண்டுமானால் நடைமுறையின் உண்மை நிலவரங்களிலிருந்து பரிசீலிக்க வேண்டும்!

இடைத்தரகர் என்று பொதுவாக குறிப்பிட்டாலும் நடைமுறையில் இவர்கள் இருவேறு வகையினராக உள்ளனர். இதில் முதல்வகைப் பிரிவினர், உற்பத்தியாளரான விவசாயிகளுக்கும், பொருளை கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கும் உறவுப் பாலமாக இருந்து அந்த பரிவர்த்தனையை இருதரப்பும் சுமூகமாக முடித்துக் கொள்ள உதவுபவர்கள்.

ஒரு வியாபாரி ஒரு புதிய இடத்திற்கு கொள்முதல் செய்யப் போகும்போது, அங்குள்ள இடைத்தரகர்கள் இல்லாமல் தொழிலில் இறங்கமாட்டார். ஏனென்றால், உள்ளூரை சேர்ந்தவர் என்ற முறையில், அங்குள்ள விவசாயிகளின் சமூகப் பின்னணி, பொருளாதார நிலமை, குடும்பப் பிரச்சனை கள், தனிநபரின் பலம் - பலவீனம் ஆகியவற்றை நன்கு அறிந்தவர்களாக இடைத் தரகர்கள் இருப்பார்கள்.

பரிவர்த்தனையின் நம்பகத்தன்மைக்கு இந்த விவரங்கள் வியாபாரிகளுக்கு தேவைப்படுகிறது. மேலும் உள்ளூர்காரர் என்ற முறையில் விவசாயிகளை எளிதாக அணுகுவதற்கும் இடைத்தரகர் என்பவர் வியாபாரிகளுக்கு அவசியமான நபராக இருக்கிறார்.

கொள்முதல் வியாபாரம் மட்டுமல்லாமல், நில விற்பனை மற்றும் குத்தகை, ஒத்திக்கு விடுவது, நிலத்தின் பேரில் வட்டிக்கடன் வாங்குவது, கொடுப்பது ஆகியவற்றிலும் இடைத்தரகர்கள் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. (இங்கு குருமூர்த்தி, தமிழருவி மணியன் போன்ற அரசியல் தரகர்களையும், ரஃபேல் பீரங்கி கொள்முதல் தரகர்களையும் இவர்களோடு இணைத்து குழப்பிக் கொள்ளக் கூடாது!) ஒரு கொள்முதலோ, வர்த்தகமோ நடந்து முடிந்தால் அதன் பணமதிப்பிற்கு ஏற்ப 1% அல்லது 2% கமிஷன் இருதரப்பிலிருந்தும் இவர்களுக்கு கமிசனாகக் கிடைக்கும். சில நேரங்களில் இதில் மோசடிகளும், ஏமாற்று வேலைகளும் நடக்கிறது என்பதையும் ஏற்கத்தான் வேண்டும்!

கமிசன் மண்டிகள்:

இவர்கள் இரண்டாவது பிரிவினர். காய்கறிகள், பழங்கள், பூ, கிழங்குகள், போன்ற விளைபொருள்களை உள்ளூர் அல்லது நகர கமின் மண்டிகளில் மூலமாக விவசாயிகள் விற்கிறார்கள். இந்த மண்டிகள் விற்பனைத் தொகையில் விவசாயிகளிடம் 10% கமினை எடுத்துக்கொள்கிறார்கள். தவிர எழுத்துக்கூலி, மகிமை என மேலும் 2 ரூபாயை சுருட்டிவிடுவார்கள். மேலும் எடை மோசடி, உள்விலை, என்ற மோசடிகளும் நடக்கும்! இத்தகைய மண்டிகள் நடத்துவோருக்கும், இதற்கு முன்பு கூறிய இடைத் தரகர்களுக்கும் பெரிய வேறுபாடு உண்டு.

முதல்வகை இடைத்தரகர்கள் சொந்தமாக பணமுதலீடு எதுவும் செய்வதில்லை. மக்களோடு தனக்குள்ள நெருக்கத்தையும், தனிமனித நேர்மையையும் மட்டுமே முதலீடாகக் கொண்டவர்கள். ஆனால் மண்டிகள் அப்படியல்ல. மண்டி நடத்துவோர் 10% கமிசன் பெறுவதோடு நிற்பதில்லை.

விவசாயிகளுக்கு விதை, உரம், மருந்து போன்ற இடுபொருள்களுக்கு பணமாகவோ, அல்லது பொருள்களாகவோ கொடுப்பதன் மூலம் தன்னிடம் மட்டுமே விற்கவேண்டும் என்று விவசாயிகளுக்கு கடிவாளம் போடுவார்கள். வியாபாரிகளுடன் ரகசிய பேரம்பேசி, ஏலம் விடாமலே வியாபாரிக்கு சாதகமான விலையை தீர்மானித்து, வியாபாரிகளிடமும் ஒரு கமின் அடிப்பார்கள்! விவசாயிக்கு சந்தை விலைக்கும் குறைவான விலையைக் கொடுத்துவிட்டு, வியாபாரிகளிடம் கூடுதல்விலைக்கு விற்றும் கொள்ளையடிப்பார்கள்! அல்லது காய்கறிகளை மண்டிக்காரரே தரம்பிரித்து, அதிகவிலை கிடைக்கும் நகரத்து சந்தைகளுக்கு கொண்டுசென்று அதிக லாபத்திற்கு விற்பார்கள்!

இவ்வாறு கமிசன் மண்டிகள் தங்களை பலவழிகளில் ஏமாற்றி கூடுதல் லாபம் சம்பாதிப்பது விவசாயிகளுக்கு வெளிப்படையாகவே தெரியும். தெரிந்தும் இந்த வளையத்தை விட்டு விவசாயிகள் வெளியேற முடியாமல் தவிப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று அவர்களிடம் நிலவுகின்ற மூலதனப் பற்றாக்குறை! இரண்டு, தங்கள் விளைபொருளை மொத்தமாக விற்பதற்கு விவசாயிகளுக்கு வேறுவழியில்லை! இதனால் நாம் ஏமாற்றப்படுகிறோம், சுரண்டப்படுகிறோம் என்பதை நன்றாக அறிந்தே இக்கொடுமைகளை சகித்துக்கொண்டு தொடர்கிறார்கள்.

தங்களின் மூலதனப் பற்றாக்குறையை சிறு-குறு விவசாயிகள் இரண்டு வழிகளில் ஈடுகட்டிக்கொள்கிறார்கள். ஒன்று ஏதாவதொரு வடிவத்தில் வட்டிக்கடன் வாங்குவது. அல்லது கமிசன் மண்டிகளில் முன்பணமாக கடன்பெறுவது. (மண்டிகளில் வாங்கும் முன்பணத்திற்கு வட்டி இல்லை என்பது கூடுதல் சாதகமானது.) நடைமுறையில் இதைத்தவிர இவர்களுக்கு வேறுவழியில்லை! 75% சிறு-குறு விவசாயிகள் மேற்கண்ட இருவழிகளையும் பயன்படுத்துகிறார்கள்!

“நிலம் மட்டுமே விவசாயிகளுக்கு சொந்தம். அதில் விளையும் பொருள்கள் எங்களுக்கு சொந்தம். ஏனென்றால் நிலத்தில் வேலை செய்யும் கூலிஆள் சம்பளத்திலிருந்து, அவரின் பிள்ளைகளின் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு, அனைத்தையும் நாங்கள் முன்பணமாகக் கொடுத்து உதவுகிறோம்” என்று ஒரு கமிசன் மண்டிக்காரர் கூறுவது எளிதாகப் புறக்கணித்துவிட முடியாத உண்மை.

வியாபாரிகளின் கட்டுப்பாட்டில் விவசாயம்!

இதுதவிர, சீசன் காலங்களில் முட்டைக்கோஸ், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற பணப்பயிர் விவசாயத்தில் அறுவடைக்கு முன்பாகவே மொத்த விளைச்சலையும் கொள்முதல் செய்துகொள்வதாக ஒப்புக்கொண்டு ஒரு பெரிய தொகையை விவசாயிகளுக்கு முன்பணமாகக் கொடுத்து உறுதிப்படுத்திக்கொள்ளும் பெரிய வியாபாரிகளும் இருக்கிறார்கள்.(இங்கும் வட்டியில்லை).

இத்தகைய ஊகவர்த்தக வியாபாரிகள் ஒவ்வொருவரும் சுமார் 50 முதல் 100 ஏக்கர் வரையிலான விவசாயத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள்! இவர்களுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மொத்த வியாபாரிகளிடம் நெருக்கமான தொடர்பு உள்ளது. சந்தையில் ஒரு பொருளின் விலை அதிகரித்து வருவதாக இருந்தால், இவர்கள் அதே பொருளை விலைக் குறைவாக கிடைக்கும் பிற மாநிலங்களிலிருந்து வாங்கிவந்து உள்ளூர் மண்டிகளில் நிரப்பி விடுவார்கள். இவ்வாறு உள்ளூர் மண்டிகளில் நேற்று 50 ரூபாய்க்கு ஏலம்போன கத்திரியை அடுத்தநாளே 20 ரூபாய்க்கு சரித்துவிடுவார்கள்! இதன்மூலம் தாங்கள் முன்பணம் கொடுத்த விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்யும் சூழலை உருவாக்கிக் கொள்கின்றனர்.

இவ்வாறு இன்றைய விவசாயத்திலும், விவசாயிகளின் பொருளாதார வாழ்விலும் பிரிக்க முடியாத அங்கமாக இடைத்தரகர்களும், கமிசன்மண்டிக் காரர்களும், சிறுவியாபாரிகளும், வட்டிக்காரர்களும் பின்னிப் பிணைந்துள்ளனர். இது தொன்றுதொட்டு நீடித்துவரும் ஒரு நடைமுறைதான்.

ஆனாலும் சிறு விவசாயிகளுக்கு வழங்கிவந்த மானியங்கள், வாங்கிக்கடன் போன்ற சலுகைகளை அரசு கைவிட்டு விட்ட இன்றைய சூழலில், இந்த ‘கூட்டுப் பிணைப்பு’தான் சிறு - குறு விவசாயிகளை இன்னமும் விவசாயத்தில் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

சிறு-குறு விவசாயிகளிடம் எதார்த்தமாக நிலவும் பற்றாக்குறையான பொருளாதார வாழ்நிலையும், வறுமையும்தான், அவர்களின் பேரம்பேசும் தகுதியை இழக்கச் செய்கிறது. கமிசன்மண்டி, மற்றும் வியாபாரிகளிடம் தங்களது வாழ்நாள் உழைப்பின் பலனை இழப்பதற்கும் இதுதான் அடிப்படை! சிறுவிவசாயிகள் மட்டுமல்ல, நடுத்தர, பணக்கார விவசாயிகளில் பலரின் நிலமையும் இன்று இதுபோலவே நீடிக்கிறது.

உதாரணமாக தென்னை விவசாயத்தை எடுத்துக் கொள்வோம். மொத்த தேங்காய் வியாபாரிகள் குறைவான மரங்கள் இருக்கும் தென்னை விவசாயிகளின் தோட்டங்களை குத்தகை, ஒத்தியாக எடுத்துக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். தற்போது இதில் புதிய கொள்முதல்முறையை வியாபாரிகள் பின்பற்றி வருகின்றனர்.

மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு தொகையை நிர்ணயித்து விவசாயிகளுக்கு கொடுத்துவிட்டு, நிலத்தின்பேரில் ஈட்டுக்கடன் கொடுத்ததாக பத்திரப்பதிவு செய்து கொள்வார்கள். நிலப்பராமரிப்பு முழுவதையும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அறுவடையை மட்டும் வியாபாரி மொத்தமாக எடுத்துக் கொள்வார்.

வியாபாரியிடம் வாங்கும் தொகைக்கு 2 ரூபாய் வட்டியும் கொடுத்து, தேங்காய்களை நடப்பு விலையிலிருந்து ஒருரூபாய் குறைத்தும் கொடுக்க வேண்டும்! வெட்டுக்கூலி, வண்டி வாடகையும் விவசாயிதான் சுமக்க வேண்டும்! இச்செலவுகள் போக மீதியை அசல் தொகையில் வரவு வைத்துக் கொள்வார்கள்.

இதற்கிடையில் அவசர செலவுகளுக்கு விவசாயி பணம் வாங்கினால் அதுவும் அசலில் சேர்ந்து வட்டி குட்டி போட்டுவிடும்! இம்முறையில் சிக்கிய சில பணக்கார விவசாயிகள் இறுதியில் நிலத்தையே வியாபாரிகளிடம் பறிகொடுத்த கதைகளும் உண்டு!

இவ்வாறு கமிசன் மண்டிகள், மொத்த வியாபாரிகள், மற்றும் வட்டிக்காரர்களிடம் சிக்குண்டு கிடக்கும் விவசாயிகளை மீட்டெடுக்கவும், சுயசார்பாக விவசாயம் செய்யவைக்கவும் மத்திய மாநில அரசுகள் இதுவரை உருப்படியான எந்தவொரு முயற்சியும் செய்யவில்லை. மாறாக ஏற்கனவே இவர்களுக்கு அரசு வழங்கிவந்த சலுகைகளையும் பறித்து, மீளவே முடியாத நெருக்கடியில் அவர்களை தள்ளிவிடும் வேலையைத்தான் செய்து வந்தார்கள். இவர்கள்தான் இப்போது விவசாயிகளை காப்பாற்றப் போவதாக மீடியாக்களில் அருள்வாக்கு சொல்லி வருகிறார்கள்.

சைடு மிர்ரரை திருப்பினால் ஆட்டோ ஒடுமா?

புதிய சட்டங்கள் மூலம், “இடைத் தரகர்களை ஒழிக்கப் போவதாவும்”, இதனால் “விவசாயிகள் வியாபாரிகளிடம் பேரம்பேச வாய்ப்பு கிடைக்கிறது” என்றும், அதனால் “விவசாயிகள் கூடுதல் லாபம் பெறமுடியும்” என்று மோடியும் அவரது எடுபிடிகளும் கூறி வருகிறார்கள்.

அதாவது, சிறு - குறு விவசாயிகளை அவர்களது பொருளாதார இழிநிலையிலிருந்து விடுவிக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல், சில மேல்பூச்சு வேலைகளை மட்டும் செய்தாலே விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைத்து விடும் என்ற பொய் தோற்றத்தை உருவாக்க ஆட்சியாளர்கள் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள்.

இது ஏற்கனவே தோற்றுப் போன ஒரு நடைமுறை. உதாரணமாக, இதே காரணத்தைக் கூறித்தான் கலைஞர் ஆட்சியில் ‘உழவர் சந்தை’யை கொண்டு வந்தார்கள். இன்று உழவர் சந்தையில் விவசாயிகள் என்ற அடையாள அட்டையுடன் சிறு வியாபாரிகள்தான் முழுக்க ஆக்கிரமித்துள்ளனர்! மொத்த வியாபாரிகளின் சரக்குதான் அங்கு விற்பனையாகிறது! விவசாயிகள் வியாபாரிகளாக மாறுமளவுக்கு அவர்களது வாழ்நிலை இன்னமும் முன்னேற்றம் அடையவில்லை என்பதற்கு இதுவே கண்கூடான சாட்சியாக உள்ளது!

மோடி கூறுவதைப்போல கமிசன் மண்டிகளை ஒழித்துவிட்டால் சிறு-குறு விவசாயிகளின் மூலதனப் பற்றாக் குறையை யார் இட்டு நிரப்புவது? அதற்கு புதிய சட்டத்தில் ஒருவழியும் இல்லை. ஏற்கனவே இவர்களுக்கு வழங்கிவந்த மானியங்கள், வங்கிக்கடன் சலுகைகள் ஆகியவற்றை அரசுகள் எப்போதோ கைவிட்டு விட்டன என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்!

இச்சூழலில் சிறு - குறு விவசாயிகள் தங்கள் விவசாயத்தை எப்படி தொடர்வார்கள்? விவசாயத்தைக் கைகழுவிவிட்டு நிலத்திலிருந்தும் விவசாயத்திலிருந்தும் வெளியேறுவதுதான் இவர்களின் முன்னுள்ள ஒரே வழியாக இருக்கும்! வெளியேறியவர்கள் எங்கு போவார்கள்? ஏற்கனவே வேலைதேடி நகரங்களில் குவிந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் கூட்டத்தில் புதிதாக இவர்களும் ஒட்டிக்கொள்வார்கள். இதைத்தவிர வேறு என்னவழி இருக்கிறது இந்த நாட்டில்?

“வியாபாரிகளிடம் விவசாயிகள் பேரம்பேசி விற்கமுடியும்” என்கிறார் மத்திய வேளாண் அமைச்சர் தோமர்! விவசாயத்தின் நடைமுறை அறிவே இல்லாத ஒரு மனிதனால்தான் இப்படி பேச முடியும்! கடந்த காலத்தில், “வியாபாரிகள் கூட்டணி சேர்ந்து விலையை தீர்மானிக்கிறார்கள். விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள் இதனால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை” என்பதால்தான் அரசு கொள்முதல், வேளாண் விற்பனை மையம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், வேளாண் கூட்டுறவு வங்கி, உழவர்சந்தை போன்ற திட்டங்களை அரசுகள் அமுல்படுத்தி வந்தது! ஆனால் இப்போது “வியாபாரிகளிடம் நேரடியாக விற்றால் விவசாயிகளுக்கு கூடுதல்லாபம் கிடைக்கும்” என்று 1960-க்கு முந்தைய நிலைக்கு விவசாயிகளை தள்ளிவிடுகிறார் மோடி!

மேலும், இங்கு அமைச்சர் குறிப்பிடுவது ஏற்கனவே விவசாயிகளுடன் தொடர்புள்ள சாதாரண வியாபாரிகளை அல்ல. ரிலையன்ஸ், அதானி, அமேசான், வால்மார்ட் போன்ற கார்பரேட் வியாபாரிகளையே குறிப்பிடுகிறார்.

பேரம் பேசுவதற்கு இவர்களிடம் இடமேயில்லை! பொருள்களின் தரத்தையும், விலையையும் அவர்களே தீர்மானித்து கொண்டுதான் கொள்முதலுக்கு வருவார்கள்! தரமற்றவை என்று இவர்கள் ஒதுக்கி விட்ட கழிவுகளை முடிந்தால் உள்ளூர் சந்தைகளில் கூறுகட்டி விற்கலாம். இல்லையென்றால் குப்பையில் வீசிவிட்டுப் போக வேண்டும்! உள்நாட்டு வியாபாரிகளுக்குப் பதிலாக கார்பரேட் வியாபாரிகளிடம் நம் விவசாயிகளை பலிகொடுப்பதுதான் இவர்கள் அரங்கேற்றும் புதிய மாற்றம்!

கார்ப்பரேட்டுகளின் காலடியில் நமது விவசாயம்!

புதிய வேளாண் சட்டங்கள், இதுவரை நாட்டில் அமுலாக்கப்பட்டு வந்த சட்டங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழலில், மாறுபட்ட நோக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டில் 1960-க்கு முன்பு நிலவிய கடும்வறட்சி, வறுமை, பட்டினிச்சாவு ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கத்தில் பசுமைப் புரட்சி திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வேளாண்மைத் துறையில் முழுமையாக அரசின் கட்டுப்பாடுகள் இருந்துவந்தது.

விதை- உரம்- மருந்து, உழவுக்கருவிகள் ஆகியவற்றை மானியமாகக் கொடுத்தும், பாசன வசதிகளை அரசு முதலீட்டில் செய்து கொடுத்தும் நெல் கோதுமை உற்பத்தியைப் பெருக்கியது அரசு. விளைபொருள்களுக்கு அரசே விலையை தீர்மானித்தது. அரசே கொள்முதலும் செய்து, அதனை அரசின் சேமிப்புக் கிடங்குகளில் பாதுகாத்தது. நாடெங்கும் தொடங்கிய ரேசன்கடைகள் மூலம் அரசே மானியவிலையில் மக்களுக்கு விற்பனையும் செய்துவந்தது. வருகிறது!

அன்றைய உள்ளூர் வியாபாரிகளின் கொள்ளையிலிருந்து விவசாயிகளையும், நுகர்வோராகிய பொதுமக்களையும் பாதுகாக்க பல்வேறு சட்டங்களையும், அரசு நிறுவனங்களையும் உருவாக்கினார்கள்! நில உச்சவரம்பு சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் தடைச்சட்டம், அரசின் நேரடிக் கொள்முதல், குறைந்தபட்ச ஆதரவு விலை, இந்திய உணவுக்கழகம் (FCI), கொள்முதல் நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள், மாநில-மத்திய- மாவட்ட கூட்டுறவு வங்கிகள், போன்றவை மேற்கண்ட மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டவை.

1995-க்குப்பின் சர்வதேச கார்பரேட் முதலாளிகளின் அதிகார மையமான உலக வர்த்தகக் கழகம் (WTO) நிறுவப்பட்டு, அதில் இந்திய அரசும் இணைந்து கொண்டது! இதன்பிறகு நாட்டில் அதுவரைப் பின்பற்றபட்டு வந்த ‘மக்கள்நல அரசு’ என்ற பெயரளவிலான நோக்கத்தையும் மத்திய அரசு படிப்படியாக கைவிடத் தொடங்கியது. மாற்றாக உலக வர்த்தகக் கழகம் (WTO) கைகாட்டிய கார்பரேட் முதலாளிகளின் நலனுக்கான அரசாக புதிய பரிணாமம் எடுத்தது.

கார்பரேட் முதலாளிகளின் நலனுக்கு எதிரான பழைய மக்கள்நல சட்டங்கள், கொள்கைகள், அரசு நிறுவனங்கள், கட்டுப்பாட்டு விதிமுறைகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு, கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு ஏற்ப அவைகள் திருத்தி அமைக்கப்பட்டு வருகின்றன. அவ்வழியில் இந்திய வேளாண்மைத் துறையை கார்பரேட் நலனுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதுதான் மோடியின் புதிய வேளாண் சட்டங்கள்! இந்த அரசியல் உண்மையை மூடிமறைப்பதில்தான் மோடி- எடப்பாடியின் பித்தலாட்டம் ஒளிந்துள்ளது.

கார்பரேட் நிறுவனங்கள் இந்திய விவசாயத்தில் கால்பதிப்பதற்கு, இங்குள்ள உள்ளூர் இடைத் தரகர்கள், கமிசன்மண்டிகள், சிறுவியாபாரிகள் மற்றும் சிறுவிவசாயிகளின் ‘கூட்டிணைப்பு’ பெரும்தடையாக இருக்கிறது! அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் பாணியில் பெரியளவிலான பண்ணை விவசாயம், ஒற்றைப்பயிர் மண்டலம், ஒரே இடத்தில் பெருமளவிலான கொள்முதல், நவீன தொழில் நுட்ப வேளாண்மை ஆகியவற்றை விரும்பும் கார்பரேட் முதலாளிகளுக்கு, இந்தியாவின் சிறு நிலவுடமையும், சிறுவீத உற்பத்தி முறையும் தடையாக இருக்கிறது. எனவே இந்த கட்டமைப்பை ஒழித்துக் கட்டவேண்டும் என்று கார்ப்பரேட்டுகளின் விரும்புகின்றன. அதைத்தான் WTO-வும் வலியுறுத்துகிறது.

சிறு-குறு விவசாயிகளை நிலத்திலிருந்து விரட்டுவதே நோக்கம்!

“இடைத்தரகர்களை ஒழிக்கப்போகிறோம்” “வியாபாரிகளிடம் விவசாயிகள் பேரம் பேசமுடியும்” என்ற மத்திய அரசின் வாதங்களுக்குப் பின்னால், விவசாயிகளில் 84%-ஆக உள்ள சிறு - குறு விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றும் கார்பரேட் முதலாளிகளின் விருப்பம் மறைந்திருக்கிறது! இதுதான் தற்போது அதிகமாக விவாதிக்கப்பட வேண்டிய சமூகப்பிரச்சனை. இப்பிரச்சனையில் தான் மோடி-எடப்பாடிக் கும்பலை கேள்விக்குள்ளாக்கி அம்பலப்படுத்த முடியும்!

இந்த 84% சிறுகுறு விவசாயிகள்தான் பொது மக்களுக்குத் தேவையான உணவுத் தானியங்களையும், எண்ணை வித்துக்களையும், காய்கறிகளையும், பயிரிட்டு வருகிறார்கள். இவர்களை விவசாயத்திலிருந்து வெளியேற்றும் எந்த முயற்சியும் உணவுப்பொருள் உற்பத்தியில் நாட்டின் சுயசார்பை பாதிக்கும்! ரேசன்மானியத் திட்டத்தை தொடர்வது சிக்கலாகும்! (இங்கு ரேசன்மானியம் பெறுவோரின் எண்ணிக்கையை சரிபாதியாக குறைக்க வேண்டும் என்று நிதி ஆயோக்-கிற்கு சாந்தகுமார் கமிட்டியின் பரிந்துரையை நினைவுபடுத்திக் கொள்ளவும்.) நிலத்திலிருந்து வெளியேற்றப்படும் 84% விவசாயிகளுக்கு வாழ்வளிக்க மோடிஅரசிடம் எந்தவொரு மாற்று வேலைவாய்ப்புத் திட்டமும் இல்லை!

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற மோடியின் வாக்குறுதி, அவரது வழக்கமான பொய்களில் ஒன்றாக கரைந்துவிட்டது. பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. கொள்கையினால் பல ஆயிரம் சிறு தொழில்நிறுவனங்கள் நலிந்து முடமாகி விட்டது! ஏற்கனவே கிராமப் புறங்களில் இருந்து வெளியேறிய கோடிக்கணக்கான மக்கள் புலம்பெயர் தொழிலாளிகளாக, நாடோடிகளாக திரிந்து கொண்டிருக்கின்றனர். கொரோனோ தொற்று மட்டும் இங்கு வராவிட்டால், இந்த சமூக அவலம் வெளிவராமலே மறைக்கப்பட்டிருக்கும்! புதிய வேளாண் சட்டங்களால் இந்த அவலம் மேலும் பலமடங்கு அதிகரிக்கும்!

கார்பரேட் முதலாளிகள் இந்த அவலத்தை கைகொட்டி வரவேற்கிறார்கள். ஏனென்றால் இது அவர்களுக்கு குறைந்த கூலிக்கு வேலையாள்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது! போடும் முதலீட்டுக்கு கூடுதல் லாபம் கிடைப்பதை உத்தரவாதம் செய்கிறது! ‘கார்பரேட்டுகளின் மகிழ்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி’ என்பதுதான் மோடி பரிவாரங்களின் கொள்கையும். அதனால்தான் “புதிய சட்டங்களை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை. வேண்டுமானால் சில சீர்திருத்தங்கள் மட்டும் செய்கிறோம்” என்று கறாராகப் பேசுகிறார்.

புதிய வேளாண் சட்டங்கள் இந்திய வேளாண்மை சமூகத்தின் எதார்த்த நிலமைகளை கணக்கில் கொள்ளவில்லை. மாறாக கார்பரேட் முதலாளிகளின் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு அமெரிக்க- ஐரோப்பிய பாணி உற்பத்தி முறையை இந்திய விவசாயத்தின் மீது முரட்டுத்தனமாக திணிக்கிறது இச்சட்டங்கள்!

இதன் எதிர்விளைவுகள் பெரும்பான்மையான சிறு - குறு விவசாயிகளை முடமாக்கி வறுமையின் படுகுழியில் தள்ளிவிடும்! உணவுப் பொருள் உற்பத்தியும், உணவுப் பாதுகாப்பும் கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடும்! உணவுப் பொருள்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துவிடும்! புதிய வேளாண் சட்டங்கள் மூலம் மோடிகும்பல் ஒரு மாபெரும் சமூகப் பேரழிவை நயவஞ்சகமாக அரங்கேற்றி வருகிறது. இதற்கு எதிரான போராட்டத்தின் பறையோசைதான் இன்றைய டெல்லி விவசாயிகளின் போராட்டம்!

- தேனி மாறன்