சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41, சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
www.daseindia.org

போரினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மருத்துவ வசதி வழங்கிடுக. அனுமதி வழங்கினால் தமிழக மருத்துவர்கள் போரினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மருத்துவ சிகிச்சை வழங்கத் தயார்.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

முல்லைத்தீவுப் பகுதிகளில் இலங்கைத் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இதனால் அப்பாவி தமிழர்கள் ஏராளமாகக் கொல்லப்படுகின்றனர். மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. போதிய மருந்துப் பொருட்களும், மருத்துவ வசதிகளும் இன்றி போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் அவதிப்படுகின்றனர். ஏராளமான குழந்தைகளும் பேறுகால தாய்மார்களும் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், எல்லைகளற்ற டாக்டர்கள் அமைப்பை முழுமையாக பயன்படுத்தவேண்டும். அனுமதி வழங்கினால் தமிழக மருத்துவர்கள் போரினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மருத்துவ சிகிச்சை வழங்கத் தயார்.

மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படும் இலங்கை அரசை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும். ஐ.நா.சபை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தவும், இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதி வழியில் அரசியல் தீர்வு காணவும் இந்திய அரசும் சர்வதேச நாடுகளும் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்காக திருச்சி மரு த்துவக் கல்லூரி மாணவர்களால் சேகரிக்கப்பட்டு 10.11.08 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் தமிழக அரசால் இலங்கைத் தமிழர்களுக்கு இதுவரை அனுப்பப்படாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீணாகிக் கொண்டிருக்கிறது. அதை உடனடியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பிவைக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு

டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்
பொதுசெயலாளர், டி.ஏ.எஸ்.ஈ

தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத் தாக்குதல்களை உடனடியாக தடுத்து நிறுத்திடுக.
மத்திய-மாநில அரசுகளுக்கு தமிழ்நாடு அறிவியல் பேரவை தஞ்சை கருத்தரங்கம் வேண்டுகோள்.


இது குறித்து இவ்வமைப்பின் மாநில அமைப்பாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

தமிழக மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை உருவாக்கிடவும், சமூக -பொருளாதார-கலாச்சார மற்றும் வாழ்வியல் பிரச்சனைகளில் அறிவியல் ரீதியான தீர்வை கண்டிட உதவிடவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரழிவு மேலாண்மை, பாலின சமத்துவம், நலவாழ்வு உள்ளிட்ட பிரச்சனைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு அறிவியல் பேரவை என்ற அமைப்பு தொடங்கப்படுகிறது. இதில் அனைத்து துறையினரும் இணைந்து செயல்படலாம். இவ்வமைப்பின் தஞ்சை மாவட்ட தொடக்க விழா 31.01.09 சனி மாலை தஞ்சை யூனியன் கிளப் மார்ஷ் ஹாலில் சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் யூ.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. தாவூத் பாட்ஷா மற்றும் செவிலியர் சங்கத் தலைவி மாரி முன்னிலை வகித்தனர். பாரி வரவேற்புரையாற்றினார்.

மாநில அமைப்பாளர் டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத் அறிவியல் பேரவையை தொடக்கிவைத்து பேரவையின் நோக்கங்கள் பற்றி விளக்கினார். இந்நிகழ்வையொட்டி பயங்கரவாதத்தின் தோற்றுவாயும் தீர்வுகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் டி .ஞானையா, சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய டாக்டர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் டாக்டர்.தி.மோகன் ஆகியோர் உரையாற்றினர். ஜெ.கலந்தர் நன்றி நவின்றார்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இலங்கை ராணுவத்திற்கு இந்தியா ராணுவ உதவி உள்ளிட்ட உதவிகளை வழங்கக் கூடாது, இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதி வழியில் அரசியல் தீர்வு காணவேண்டும், இதற்கு இந்திய அரசு இலங்கையை வற்புறுத்த வேண்டும், ஈழத்தமிழ் மக்களுக்கு உணவு, உடை, மருந்துப் பொருட்களை சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உடன் வழங்கிடவேண்டும் என இக்கருத்தரங்கம் கேட்டுக்கொள்கிறது .

உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்திய நாடாளுமன்றமும் தாக்குதலுக்கு உள்ளானது. இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பலர் இறந்தது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. பயங்கரவாதம் மனிதகுல பொது எதிரி. பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இருந்துவருகிறது. அதை எதிர்த்து அனைத்து பகுதி மக்களும் போராட வேண்டும் என இக் கருத்தரங்கம் கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு,
டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்
அமைப்பாளர், தமிழ் நாடு அறிவியல் பேரவை. 
-
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It