modi amit and yogiகடந்த மாதம் பிஜேபி ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேச அரசு கட்டாய மத மாற்றத்துக்கு எதிரான அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டத்தின் மூலம், கட்டாயப்படுத்தியோ, நேர்மையற்ற முறையிலோ, மத மாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக இந்தச் சட்டம் இஸ்லாமிய ஆண்களை இந்து பெண்கள் காதலித்து திருமணம் செய்யக்கூடாது என்ற பார்ப்பன பாசிச சிந்தனையில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

இந்த அவசரச் சட்டத்தின்படி, திருமணத்துக்காக பெண்கள் மதம் மாறினால் அது செல்லாது என அறிவிக்கப்படும். திருமணத்துக்குப் பிறகு மத மாற்றம் செய்து கொள்ள விரும்புபவர்கள், மாவட்ட நீதிமன்றத்தில் அதற்காக விண்ணப்பித்தாக வேண்டும்.

தற்போது இந்தச் சட்டம் அவசரமாக கொண்டு வரப்பட்டிருப்பது போல தெரிந்தாலும் பல ஆண்டுகளாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரத்தை தூண்டிவிட இப்படியான பொய்யை ஒரு ஆயுதமாகவே சனாதன கும்பல் பயன்படுத்தி வந்திருக்கின்றது.

கருத்துருவாக்கம் என்ற கலையில் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பலுக்கு இணையான ஒரு குற்றக் கும்பல் உலகிலேயே கிடையாது என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய ஹதியாவை அவரது கணவரிடம் இருந்து வம்படியாக பிரித்து வைத்து ‘லவ் ஜிகாத்’ என்ற பொய்யைப் பரப்பியது.

பின்னால் நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின் ஹதியா தன் காதல் கணவரோடு வாழ ‘மேன்மை மிகு நீதிமன்றத்தால்’ அனுமதிக்கப்பட்டார்.

ஓர் இஸ்லாமிய ஆண் ஓர் இந்துப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தால் அதற்குப் பெயர் லவ் ஜிகாத் என்று சொல்லும் இந்தக் கும்பல் ஓர் இந்து ஆண் இஸ்லாமியப் பெண்ணை மணந்தால் அதற்கு என்ன பெயர் என்று சொல்வதில்லை ஒருவேளை அது ‘லவ் கர்வாப்ஸி’யாக இருக்கலாம்.

திவ்யா இளவரசன் காதல் ஜோடியைப் பிரித்து வைத்து, திவ்யா மற்றும் அவரது அம்மாவின் வாழ்க்கையைச் சூனியமாக்கிய ராமதாஸ் உருவாக்கி வைத்த ‘நாடகக் காதல்’ என்ற சொல்லை ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல் உருவாக்கி வைத்திருக்கும் ‘லவ் ஜிகாத்’ என்ற வார்த்தையோடு நம்மால் ஒப்பிட முடியும். இரண்டுமே அரசியலில் பொறுக்கித் தின்ன சாதி வெறியர்களும், மத வெறியர்களும் திட்டமிட்டுப் பரப்பும் அயோக்கியத்தனமான பரப்புரைகள் தான்.

தற்போது யோகி ஆதித்யநாத் அரசால் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்தச் சட்டத்தின் மூலம் உ.பியில் பலர் திட்டமிட்டு பழி வாங்கப்பட்டு வருகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தின் குஷிநகர் காவல்துறையினர் இன்னும் ஒருபடி மேலே போய் இஸ்லாமியப் பெண்ணை மணந்து கொண்ட ஒரு இஸ்லாமிய ஆணை பொய்யான தகவலின் அடிப்படையில் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அடித்து உதைத்திருக்கின்றனர்.

பின்னர் மணம் செய்துகொண்ட பெண் முஸ்லிம் என்பதை அவரின் ஆதார் உள்ளிட்ட ஆதாரங்களை சரிபார்த்த பின்னே அவரின் கணவரை காவல் நிலையத்தில் இருந்து விடுவித்திருக்கின்றார்கள்.

உபியில் இப்படி நடப்பது ஒன்றும் புதிதல்ல. காசியாபாத்தில் 22.12.2017 அன்று நடக்கவிருந்த இந்து - முஸ்லீம் மதக்கலப்புத் திருமண விழாவில் புகுந்து ஆர்.எஸ்.எஸ் கும்பல் கலவரம் செய்தது.

ஆனால் அந்தப் பெண்ணின் தந்தை புஷ்பேந்திர குமார் தன்னுடைய சம்மதத்தின் பேரிலேயே திருமணம் நடைபெறுவதால் இதில் தலையிட ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு அனுமதியில்லை என சொல்லி ஆர்எஸ்எஸ் ரவுடி கும்பலை விரட்டிவிட்டார்.

அதே போல காதல் திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியினரை முசாஃபர்நகர் ரெஸ்டாரண்ட் ஒன்றில் இருந்து பிடித்துப் போன ஆர்.எஸ்.எஸ் ரவுடி கும்பல் பெண்ணின் இசுலாமியா கணவனுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டனர்.

இன்னொரு இடத்தில் இசுலாமியரை மணம் செய்து கொண்டு கிராம வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மீண்டும் பெற்றோர்கள் இருக்கும் கிராமத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்து, இன்னொரு திருமணத்தினை சொந்த சாதியில் நடத்தி வைத்து அராஜகம் செய்தனர்.

சாமானிய மனிதர்கள் தான் இப்படி ஆர்எஸ்எஸ் ரவுடி கும்பலால் மிரட்டப் படுகின்றார்கள் என்றில்லை இந்தி நடிகர் சையப் அலிகான் – கரீனா கபூர் திருமணத்தின் போதும், இதே லவ் ஜிகாத்தை முன்னிறுத்தி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

இது போன்ற பொய்யை உபியில் மட்டுமல்ல சங்கிகள் எங்கெல்லாம் உள்ளார்களோ அங்கெல்லாம் பரப்பி வருகின்றார்கள். இஸ்லாமிய இளைஞர்கள் மோசடியான தந்திரங்கள் மூலம் இந்துப்பெண்களை மயக்கித் தம் வலைகளில் வீழ்த்தி அப்பெண்களை மதமாற்றம் செய்வதாகவும் அப்படிச் செய்வதன் மூலம் இஸ்லாமிய மக்கள் தொகையை அதிகப்படுத்தி இந்துக்களை சிறுபான்மையினராக்க முயற்சிப்பதாகவும் ஆதாரமற்ற பொய்யைக் கூச்சமே இல்லாமல் பரப்புகின்றனர்.

இதன் மூலம் இந்துக்களிடையே இஸ்லாமியர்கள் மீது வெறுப்பையும் சந்தேகத்தையும், இந்துப் பெண்களின் பெற்றோர்களிடையே அச்சத்தையும் உருவாக்கி தேர்தலில் இந்து ஓட்டு வங்கியை அதிகரிப்பதுதான் இந்த பாசிஸ்ட்டுகளின் திட்டமாகும்.

லவ் ஜிகாத்தை தடுப்பதற்காக உபியில் ‘ரோமியோக்களுக்கு எதிரான படை’, ‘இந்து யுவ வாகினி’ போன்ற பொறுக்கிக் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. உபி முதல்வர் யோகி “அவர்கள் (அதாவது முஸ்லிம்கள்) ஒரு இந்துப் பெண்ணை எடுத்துக் கொண்டால், நாம் நூறு முசுலீம் பெண்களை எடுத்துக் கொள்வோம்” என்று ஏற்கெனவே பிரகடப்படுத்தி இருக்கின்றார் என்பதை பார்க்கும் போது தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் சட்டத்தின் வன்மம் இப்போது தொடங்கியதில்லை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

இந்திய அரசியல் சட்டத்தின் 21ஆவது பிரிவு, ஒருவர் விரும்புகிற மதத்தைப் பின்பற்றும் உரிமையை வழங்கினாலும் அந்த உரிமையை நாம் பெற முடியாமல் பாசிச கும்பல் தனக்கு கிடைத்திருக்கும் அதிகாரத்தின் மூலம் தடுத்து வருகின்றது.

பார்ப்பன ஒற்றைக் கலாச்சாரத்தின் கீழ் பன்மை மொழி, பண்பாடுகளை உடைய மக்களை எல்லாம் அணிதிரட்ட முயற்சிக்கின்றது. ஆனால் உண்மையில் இந்தியாவில் ஒற்றைக் கலாச்சாரம் எப்போதுமே வெற்றி பெற்றதில்லை என்பதுதான் வரலாறு.

தூய்மையான கலாச்சாரம் என்று எதுவுமே உலகில் இல்லை. அனைத்துமே கலந்து பிணைந்து பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆனால் சங்கி முட்டாள் கூட்டம் இன்னமும் தூய கலாச்சாரம் என்ற ஒன்று இருப்பதாக பிதற்றிக் கொண்டு திரிகின்றது.

ஒரு சிலரை தவிர பெரும்பாலான இஸ்லாமிய மன்னர்கள் இந்து மதத்தையும் அதன் கலாச்சாரத்தையும் ஆதரித்தே வந்தனர். முகலாயர்கள் இந்தியக் கலாச்சாரத்துடன் ஒன்று கூடி செயல்பட்டதே அவர்கள் நீண்ட காலம் ஆட்சி புரிந்ததன் ரகசியமாகும்.

இஸ்லாம் பார்ப்பனியத்தால் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு பெரும் போக்கிடமாக இருந்தது. தங்களது தன்மானத்தையும் சுயமரியாதையும் இஸ்லாம் அங்கீகரித்ததால்தான் பெரும்பாலான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் இஸ்லாத்துக்கு மதம் மாறினார்கள்.

தங்களிடம் அடிமையாய் இருந்தவர்கள் இஸ்லாத்துக்கு ஓடிவிட்டார்கள் என்ற வஞ்சம்தான் இன்றுவரை பார்ப்பன கும்பலைப் பிடித்து உலுக்கிக் கொண்டு இருக்கின்றது. அதன் வெளிப்பாடுதான் லவ் ஜிகாத் போன்ற பாசிச சட்டங்கள்.

மதம் ஒரு போதும் தேசிய உணர்வை தீர்மானிக்கும் காரணி கிடையாது. ஆனால் இந்து தேசியவாதத்தை தூக்கிப்பிடிக்கும் பார்ப்பன, பார்ப்பன பாதம்தாங்கி கும்பல்கள் திட்டமிட்டே பார்ப்பன இந்து தேசியவாதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே இந்தியனாக வாழ முடியும் என அயோக்கியத்தனமாக பேசி வருகின்றனர்.

முஸ்லிமும், இந்துவும், கிருஸ்தவனும் இந்த நாட்டின் குடிமக்கள். ஒரு நாட்டின் குடிமக்கள் தங்களுக்குள் பரஸ்பரம் மனமிணைந்து வாழ்வது அவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமையாகும். அதை மறுப்பது என்பது கேடுகெட்ட பிற்போக்கு சனாதன பாசிச சிந்தனையாகும்.

ஒருவன் முஸ்லிமாக வாழ வேண்டுமா, கிருஸ்தவனாக வாழ வேண்டுமா, இல்லை இந்துமத்தில் சூத்திரன் பட்டத்தோடு வாழ வேண்டுமா என்பதெல்லாம் அவனவனின் தன்மானமும் சுயமரியாதையும் சம்மந்தப்பட்டது. அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.

அதனால் காதல் திருமணத்தை அதுவும் சாதிக் கடந்த, மதம் கடந்த காதல் திருமணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனும் தன்னுடைய வாழ்வின் குறிக்கோளாக ஏற்று செயல்படுத்த வேண்டும் என்பதுதான் பாசிசத்துக்கு எதிரான அனைவரின் எண்ணமாகவும் உள்ளது.

- செ.கார்கி