அகதிகளாய் தவிக்கும் அயல்நாட்டு அகதிகளுக்கு புகலிடமும், மருந்து, மருந்துவவசதிகள், உணவு கொடுத்து ஆதரிக்க வேண்டிய ஒரேயொரு அயல்நாடு இந்தியா, அகதிகளை அழிப்பதற்கு ஆயுதங்களையும், படைக்கருவிகளையும் அசுர இலங்கையரசுக்கு கொடுத்து உதவுவது போன்ற மனிதாபிமானமற்ற செயல் உலகில் எங்கும் கிடையாது. காந்தி பிறந்த தேசமே இதைச்செய்தால் இது காந்தியை கிளறி எடுத்து மீண்டும் மீண்டும் கொல்வதாக அமையும். காந்தியையே சுட்டதேசத்தில் நீதியை எதிர்பார்க்க இயலுமா? காந்தியை எத்தனை காலம், எத்தனை தடவை கொல்லப் போகிறீர்கள்?

காந்தியின் பெயரை தமது பின்பெயராகக் கொண்டவர்களுக்குக் காந்தியின் பெயரால் கூட இரக்கம், இதயத்தில் ஈரம் இல்லை என்றால் இனி இது உலகில் யாருக்கு வரும். 2009 ஆண்டில் இப்படி இராட்சதர்களா? என்று பலநாட்டவர்கள் கேட்பது உங்கள் காதுகளுக்குக் கேட்டவில்லையா?

உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதிகளை இன்று நீங்களும் புலிகளா என்று கூறிய கருணாநிதியின் மாநிலவரசு பொலிஸ் குண்டர்களை விட்டு அடித்திருக்கிறது. தமிழ், தமிழின் காவலர் என்று பட்டங்களை பறைசாற்றிக் கொண்டிருக்கும் கருணாநிதி ஐயாவுக்கு கண்தான் கெட்டுவிட்டது என்று கறுப்புக்கண்ணாடி போட்டார். காதுமா கேட்காது போய்விட்டது?

ஈழத்தமிழரின் ஈனநிலையை அரசியல் துரும்பாக ஆட்டம் காட்டாமல் ஈரமுள்ள இதயங்களுடன் இந்திய அரசியற்கட்சிகள் களம் இறங்குவது முக்கியமானது. இந்திய மத்திய அரசு ஈழத்திலுள்ள அகதிகளுக்கு உணவு, மருந்து, மருத்துவ வசதிகளைத்தான் செய்து கொடுக்கவில்லை. அகதிகளை அழிக்காமல் இருப்பதற்கு ஆயுதங்களையும், போர்கருவிகளையும், படையணிகளையும் அசுர இலங்கை அரசுக்குக் கொடுக்காமல் இருந்தாலே போதும். இன்றைய ஈழத்தமிழர் அழிவுக்கு இந்திய அரசே முக்கிய காரணம் என்றால் மிகையாகாது.

ஒரே ஒரு இராஜிவ் காந்தியின் இழப்புக்காக எத்தனை இராஜி காந்திகள் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். கணவனை இழந்த சோனியா காந்திக்குக் கூட இது புரியவில்லை என்றால், எமது நிலை யாருக்குப் புரியும். சோனியாவின் கணவன்தான் கணவன் மற்றவர்களின் கணவர்கள் என்ன பிணமா? இதுதான் இத்தாலிய சோனியாவின் செயலா?

நாம் அரசியல் கதைக்கவில்லை, மனிதமும், மனிதாபிமானத்தைப் பற்றியுமே கதைக்கிறோம். ஒரு சாதாரண இந்தியக் குடிமகனாக இருந்து இதயம் வெடித்துத் தீயில் தன்னை தீயாக்கிய முத்துக்குமாருக்கு இருக்கும் உணர்வு ஆட்சியில் ஒட்டிக்கொண்டு, மத்திய அரசுக்கு சாமரை வீசும் தமிழ்நாட்டு அரசுத் தலைவருக்கும், அவரின் சேனைக்கும் ஏன் வரவில்லை. தீக்குளிப்பை இன்று செய்திருக்க வேண்டியவர் கருணாநிதியும் அவரின் சேனையும் அல்லவா!!

தமிழ், தமிழ் என்றும், தமிழுக்காக உயிர்விடும் கருணாநிதிப் பாட்டாவிடம் ஒரு வேண்டுகோள். தமிழர் இருக்கும் வரைதான் தமிழ்வாழும். தமிழர் உமக்கு முன்னால் சாகும் போதும், ஈன இலங்கை அரசு ஈழத்தமிழர்களைக் காவு கொள்ளும் போதும், கண்ணை மூடி கனவுகாணும் ஐயா! உமது கடைசிக்காலம், அந்திமக்காலத்தில், இதுவரை செய்த பாவங்களுக்காக ஒரு புண்ணியமாவது செய்ய எண்ணலாமல்லவா? இன்னும் ஏன் ஆட்சிக்கட்டிலை கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். காலன் கட்டிலுடன் காத்திருக்கிறதே.

உலகின் ஆதிக்க வெறியர்களும், ஆயுதவிசர்களும் சிறுபான்மை இனத்தின் குரல்வளைகளை நசுக்கி பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுமானால், பயங்கரவாதிகள் ஒன்று சேரவேண்டி இருக்கும். இப்படி இவர்கள் ஒன்று கூடிப்போராடுவார்களேயானால் உலகம் எங்கிலும் போர்க்களமாக இருக்கும்.

கடைசி இரண்டு மாதத்துக்குள் சோனியா காந்திபோல் எத்தனை விதவைகளை இந்திய மத்திய அரசு ஈழத்தில் உருவாக்கியிருக்கிறது. இது சோனியாவின் பழிவாங்கலா? கறுப்பினத் தமிழர்களின் கணவர்கள் மனிதர்களே இல்லையா? இந்திரா காந்தியைக் கொன்ற பஞ்சாபியரை ஏன் உங்களால் பழிவாங்க முடியவில்லை? ஒரு பெண்ணாய், தாயாய், தாரமான சோனியாவால் எப்படி இப்படி கல்லாக இருக்க முடிகிறது? மகாத்மா காந்தியை மீண்டும் மீண்டும் கொல்லாதீர்கள். காந்தியின் பெயரைக் காவி அதைக் களங்கப்படுத்தாதீர்கள். 

- நோர்வே நக்கீரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)