இலங்கைத் தமிழர் பாதுக்காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

இலங்கையில் உடனடியாகப் போர்நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு அப்பாவித் தமிழர்களின் உயிர்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 4-ஆம் தேதி அன்று பொதுவேலை நிறுத்தம் மேற்கொள்ளும்படி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்திருப்பது சட்ட விரோதமானது என தமிழக அரசு தவறான பிரச்சாரம் செய்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உச்சநீதிமன்றம் பந்த் செய்வதற்கு எதிராகக் கூறியுள்ள கருத்தினைத் திரித்துக் கூறி மக்களை மிரட்டுவதற்கு தமிழக அரசு முயல்கிறது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகுதான் மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் சுயவேலை மறுப்புப் போராட்டங்களும் கடையடைப்புப் போராட்டங்களும் நடத்திருக்கின்றன என்பதனை தமிழக அரசின் கவனத்திற்குச் சுட்டி காட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், மாணவர்கள், திரைப்படத் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தமிழர்களும் பிப்ரவரி 4-ஆம் தேதியன்று தங்களுக்குத் தாங்களே சுயவேலை மறுப்புச் செய்து தங்கள் இல்லங்களிலேயே இருக்குமாறு மிக்க பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன். பொது வேலை நிறுத்தத்தை முறியடிக்க தமிழக அரசு தவறான பிரச்சாரத்திலும், மிரட்டல் நடவடிக்கையிலும் ஈடுபட்டு இருப்பது அப்பட்டமான ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அனைத்துத் தமிழர்களும் பொதுவேலை நிறுத்தம் வெற்றிபெற துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

போராட்டங்களின்போது எந்த இடத்திலும் சிறுஅளவு வன்முறை ஏற்படாமலும், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் இல்லாமலும் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன். பொது வேலைநிறுத்தம், கறுப்புக்கொடி ஊர்வலம் ஆகியவற்றை நடத்துவது குறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள், மற்றும் அமைப்புகளின் மாவட்ட பொறுப்பாளர்கள் அவசரமாகக்கூடித் திட்டங்கள் வகுத்துச் செயல்படுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்:

ஈழத்தமிழர்களின் அவலநிலையைக் கண்டும், இந்திய அரசின் செயலற்ற நிலையைக் கன்டும் பல இடங்களில் மாணவர்கள் சாகும்வரை உண்ணாநிலை போராட்டங்களை நடத்திவரும் செய்திகளும், மற்றும் சில இடங்களில் உணர்வாளர்கள் சிலர் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் செயல்களையும் அறிந்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அத்தனை தலைவர்களும் அளவிடமுடியாத மனவேதனை அடைந்திருக்கிறோம். தமிழக மக்களும் பதற்றமடைந்துள்ளனர். மாணவர்கள் மற்றும் உணர்வாளர்களின் உணர்வுகளை மதித்துப் பாராட்டும் அதே வேளையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் ஒன்றுபட்டுப் பெரும்போராட்டங்கள் நடத்த இருப்பதால் ஆங்காங்கே நடைபெறும் இத்தகைய போராட்டங்களைக் கைவிடுமாறு அனைவரையும் அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

Pin It