prtest reportமக்கள் கண்காணிப்பகம் களஆய்வில் கண்டறிந்தவைகளும் பரிந்துரைகளும் 

கடலூர் மாவட்டம், நெய்வேலி நகர் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்கள் ஆகியோர் சட்டத்திற்குப் புறம்பாக வியாபாரி செல்வமுருகனை 28.10.2020 அன்று காவல் கட்டுப்பாட்டில் எடுத்து, சித்திரவதை செய்து 30.10.2020 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தியதன் விளைவாகவும், நீதிமன்ற நடுவர், மருத்துவர் மற்றும் சிறை அதிகாரிகள் ஆகியோரின் கவனக்குறைவாலும் வியாபாரி செல்வமுருகன் 04.11.2020 அன்று மரணமடைந்தது தொடர்பாக மக்கள் கண்காணிப்பகத்தின் உண்மை அறியும் குழுவினர் சம்பவ இடத்திற்கு 12.11.2020 அன்று நேரில் சென்று கள ஆய்வு செய்தனர்.

இச்சம்பவம் குறித்து எமது உண்மை அறியும் குழு கண்டறிந்தவைகளும் அரசிற்கு முன்வைக்கும் பரிந்துரைகளும் 17.11.2020 அன்று செவ்வாய் காலை 11.00 மணிக்கு மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் வெளியிடுகிற கள ஆய்வு அறிக்கை.

மக்கள் கண்காணிப்பகத்தின் உண்மை அறியும் குழு:

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் கிளைச் சிறையில் நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்களால் கொடூரமாக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட வியாபாரி செல்வமுருகன் நீதிமன்றக் காவலுக்கு சென்ற பிறகு 04.11.2020 அன்று மரணமடைந்தது தொடர்பாக அது குறித்த உண்மைநிலையை அறியும் பொருட்டு மக்கள் கண்காணிப்பகம் வழக்கறிஞர் J.கென்னடி தலைமையிலான கீழ்க்கண்ட உண்மையறியும் குழுவினை சம்பவ இடத்திற்கு 12.11.2020 அன்று நேரில் அனுப்பி கள ஆய்வு மேற்கொண்டது.

  1. மருத்துவர். பாஸ்கர், தடயவியல் நிபுணர், Melmaruvathur Adhiparasakthi Institute of Medical Sciences & Research, காஞ்சிபுரம்
  2. திரு.ஆசிர்வாதம், மக்கள் கண்காணிப்பகம்
  3. திருமிகு.பிரியா, மக்கள் கண்காணிப்பகம்
  4. திரு.ஆனந்தராஜ், மனித உரிமைச் செயற்பாட்டாளர், மதுரை
  5. திரு.இரவிந்திரன், வழக்கறிஞர் மற்றும் முதுகலை சட்டவியல் மாணவர், TISS, மும்பை
  6. திரு.சாஹா, வழக்கறிஞர் மற்றும் முதுகலை சட்டவியல் மாணவர், TISS, மும்பை
  7. திரு.அய்யாகண்ணு, HRCPS, புதுச்சேரி

களஆய்வும் சம்பவ சாட்சிகளும்:

மக்கள் கண்காணிப்பகத்தின் உண்மை அறியும் குழுவினர் 12.11.2020 அன்று சம்பவம் நடந்த நெய்வேலி நகரம், விருத்தாசலம், கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் குழுவாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சம்பவத்தோடு தொடர்புடைய கீழ்க்கண்ட சாட்சிகளை அடையாளம் கண்டு அவர்களது வாக்குமூலம் பெறப்பட்டது.

  1. திருமிகு.பிரேமா (34),க/பெ (லேட்) செல்வமுருகன்
  2. திரு.இராஜா (39), த/பெ.கணேசன்
  3. திரு.இராஜா பாரதி (26), த/பெ.குமார்
  4. திரு.ஆனந்தராஜ் த/பெ.பாலகிருஷ்ணன்
  5. திரு.மணிவேல், ஜெயிலர், விருதாச்சலம் கிளைச் சிறை
  6. திரு.வேலு, ஜெயிலர், விருதாச்சலம் கிளைச் சிறை
  7. திரு.சசிகுமார், சிறைக் கண்காணிப்பாளர், விருதாச்சலம் கிளைச் சிறை
  8. திரு.ஆறுமுகம், காவல் ஆய்வாளர், நெய்வேலி நகர காவல்நிலையம் வடகுத்து
  9. மருத்துவர்.மகேஸ்வரி, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை
  10. மருத்துவர்.தினகரன், விருதாச்சலம் அரசு மருத்துவமனை
  11. மருத்துவர்.பிரசன்னா, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
  12. திரு.M.ஸ்ரீ அபினவ், காவல்துறை கண்காணிப்பாளர், கடலூர்

எமது உண்மை அறியும் குழு நேரில் களஆய்வு செய்வது குறித்து முறையாக மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், காவல்துணைக் கண்காணிப்பாளர், நெய்வேலி, காவல் ஆய்வாளர், நெய்வேலி நகர காவல்நிலையம், விருதாச்சலம் கிளைச் சிறை அதிகாரிகள், காவல் துணைத்தலைவர், காவல்துறை தலைவர், காவல்துறை இயக்குனர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எமது குழுவினர் இச்சம்பவம் தொடர்பாக பெற்ற வாக்குமூலங்கள், சந்தித்த சாட்சிகள், சேகரித்த ஆவணங்கள், நேரில் கண்டவைகள் மூலம் கீழ்க்கண்ட கண்டறிந்தவைகளையும், பரிந்துரைகளையும் முன்வைக்கிறோம். 

கண்டறிந்தவைகள்:

செல்வமுருகன் குடும்ப விவரம்: செல்வமுருகன் (38/2020) – பிரேமா (36/2020) தம்பதியினருக்கு மன்மதன் (17/2020) எனும் மகனும், லீனா (11/2020) எனும் மகளும் உள்ளனர். நெய்வேலியில் முந்திரிக்கொட்டையை உரித்து முந்திரி பருப்பு எடுக்கும் கமிசன் வணிக தொழிலை செல்வமுருகன் செய்து வந்தார். இவர் ஸ்ரீ சக்தி நகர், இந்திரா நகர் வடக்கு பஞ்சாயத்து, நெய்வேலி பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்திற்கும் செல்வமுருகனுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு:

இந்திரா நகர் அருகே ஸ்ரீசக்தி நகர் பகுதியில் உள்ள செல்வமுருகனின் வீட்டிற்கு முன்பாக புதியதாக சாலை அமைப்பதற்காக அரசிடம் ஒப்பந்தம் எடுத்தவர் ஜல்லி கற்களை கொட்டியுள்ளார்.

7.10.2020 அன்று காலையில் தனது வீட்டிற்கு முன்பாக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டிருந்ததை பார்த்த செல்வமுருகன் ஒப்பந்ததாரரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு “யாரைக் கேட்டு என் வீட்டு முன்பு ஜல்லி கொட்டுனீர்கள்... இதனால் எனது காரை வெளியே எடுக்க முடியவில்லை, நான் முந்திரிக்கொட்டை எடுப்பதற்காக தூத்துக்குடி போக வேண்டும், அதனால் உடனே என் வீட்டு முன்பு உள்ள ஜல்லியை எடுக்க வேண்டும்” என பேசியுள்ளார். இதனால் செல்வமுருகனுக்கும் ஒப்பந்ததாரருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பின்பு அதிமுக கட்சியின் குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலாளரும் குறிஞ்சிப்பாடி ஒன்றிய சேர்மனின் கணவருமான கோவிந்தராஜ் மற்றும் அவரோடு சுமார் 10 நபர்கள் 8.10.2020 அன்று காலை சுமார் 8 மணியளவில் செல்வமுருகன் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது செல்வமுருகன் வீட்டில் இல்லாததால் மனைவி பிரேமாவிடம், “உன் புருசன் என்ன இந்த ஏரியாவில் பெரிய ஆளா? கான்ட்ராக்ட்காரரை மிரட்டி இருக்கான், ஒழுங்கா இருக்கச் சொல்லு” என எச்சரித்து விட்டு சென்றுள்ளனர்.

ஒன்றியச் செயலாளர் சென்ற சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த செல்வமுருகனிடம் நடந்த சம்பவத்தை மனைவி பிரேமா கூறியுள்ளார். இதனால் செல்வமுருகன் காலை 8.30 மணிக்கு நெய்வேலி நகர் காவல் நிலையத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் ஒப்பந்ததாரர் மீதும் புகார் கொடுத்துள்ளார்.

செல்வமுருகன் கொடுத்த புகாரினை விசாரிப்பதற்காக 8.10.2020 அன்று இரவு சுமார் 7 மணியளவில் வீட்டிலிருந்த செல்வமுருகனை இரண்டு போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

காவல் நிலையத்தில் விசாரணையின் போது காவல் ஆய்வாளர் ஆறுமுகம், “ஒன்றியச் செயலாளருக்கு எதிராக நீ புகார் கொடுத்துள்ளாய், அவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? அவரிடம் மோதாதே, நீ எந்த தொழிலும் செய்ய முடியாது” என்று எச்சரித்துள்ளார். இதனால் ஆய்வாளர் ஆறுமுகத்திற்கும் செல்வமுருகனுக்கும் கடும் விவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆய்வாளரை செல்வமுருகன் “நீ யோக்கியமா” என விமர்சித்து பேசியுள்ளார். இறுதியில் ஆய்வாளர் மிரட்டியதால் தான் கொடுத்த புகாரினை செல்வமுருகன் வாபஸ் பெற்றுள்ளார். இது தான் செல்வமுருகனுக்கும் ஆய்வாளர் ஆறுமுகத்திற்கும் ஏற்பட்ட முதல் முரண்பாடாகும்.

காவல்துறை கட்டுப்பாட்டில் செல்வமுருகன்:

கடந்த 28.10.2020 அன்று காலை 10 மணியளவில் செல்வமுருகன் தனது வீட்டில் இருந்து புறப்படும் போது தனது மனைவியிடம், “நான் வியாபாரம் தொடர்பாக வடலூர் செல்கிறேன், அது முடிந்தவுடன் உடனே வந்துவிடுவேன்” என்று கூறிவிட்டுச் செல்கிறார். அன்று மதியம் 3 மணி ஆகியும் செல்வமுருகன் வீட்டிற்கு வராததால், மனைவி பிரேமா தனது தொலைபேசியில் (7598104161) இருந்து செல்வமுருகனது தொலைபேசிக்கு (8012236388) அழைத்துள்ளார்.

ஆனால், அவர் தொலைபேசியை எடுக்காததால், தனது உறவினர் பிரியதர்ஷினி அவர்களையும் வடலூரில் உள்ள தனது உறவினர் காந்தி அவர்களையும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் பிரேமா தனது மகளை அழைத்துக்கொண்டு வடலூர் சென்று உறவினர் காந்தி அவர்கள் துணையுடன் தனது கணவரை தேடியுள்ளார். அன்று மாலை 6 மணி ஆகியும் தனது கணவர் கிடைக்காததால், பிரேமா

வடலூர் நகர் காவல்நிலையத்திற்கு புகார் கொடுப்பதற்காக செல்கிறார். அங்கே பிரேமா புகாரை பெற மறுத்த காவலர்கள், அவரை நெய்வேலி நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்கள். பின்னர் அன்று இரவு 8 மணியளவில் நெய்வேலி நகர் காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க செல்கிறார்.

நெய்வேலி நகர் காவல்நிலையத்திலும் பிரமா அளித்த புகாரை பெற மறுத்து நாளை காலை வந்து புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர். காவல்நிலையத்தில் இருந்து பிரேமாவும், அவரது மகளும், உறவினர் காந்தி அவர்களும் புறப்படும் போது ஒரு காவலர் அவர்கள் மூவரையும் நிற்கச்செயது புகைப்படம் எடுத்துள்ளார். 

செல்வமுருகன் அன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்று வராத நிலையில் அவரது மனைவியும் மகளும் வடலூர் சென்று இரவு வரை தேடியும் கிடைக்காத நிலையில், தனது கணவர் காணாமல்போனது குறித்து புகார் அளிப்பதற்காக வடலூர் நகர் காவல் நிலையம் மற்றும் நெய்வேலி நகர் காவல் நிலையம் சென்றும் அவர்கள் பிரேமா அளித்த புகாரை பெற மறுத்துள்ளனர்.

மேற்கண்ட இரு காவல் நிலையங்களும் “ஒரு நபர் காணாமல்போனது” குறித்த புகாரை பெற மறுத்த செயல் லலிடா குமாரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிரானதாகும். காவல்துறையினர், உடனடியாக மனைவி பிரேமா அளித்த புகாரை பெற்று, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதனை கோட்ட அளவில், மாவட்ட அளவில் உள்ள உயர் காவல்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். இவை எதுவும் நடக்கவில்லை என்பதை கண்டறிய முடிகிறது.

பிரேமா தனது மகள் மற்றும் உறவினர் காந்தி ஆகியோருடன் நெய்வேலி காவல் நிலையத்தை விட்டு வெளியேறி சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த நெய்வேலி காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகம், காவலர்கள் சுதாகர், அறிவழகன் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளரின் சிறப்பு புலன்விசாரணைக் குழுவைச்சேர்ந்த காவலர்கள் ஆகியோர் பிரேமாவை தடுத்து நிறுத்தி ஏன் காவல் நிலையம் வந்தீர்கள் எனக் கேட்டுள்ளனர்.

தனது கணவர் காணாமல்போனது குறித்து புகார் அளிக்க வந்ததாக கூறியுள்ளார். அப்போது காவல் ஆய்வாளர் ஆறுமுகம், உனது கணவர் மீது நிறைய திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதன் மூலம் செல்வமுருகன் காணாமல் போனது குறித்த புகாரினை நெய்வேலி காவல்துறையினர் வாங்க மறுத்து பிரேமாவை திருப்பி அனுப்பிய செயலுக்கும் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் செல்வமுருகன் மீது பல திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியதற்கும் இடையே தொடர்பு இருப்பதாகவே தெரிகிறது. மேலும் செல்வமுருகன் எங்கே இருக்கிறார் என்பது காவல் ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட காவலர்களுக்கு தெரிந்த நிலையிலேயே தான் செல்வமுருகனின் மனைவி புகார் பதிவு செய்யப்படாமல் மறுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

நெய்வேலியில் உள்ள “ராணி – ராணி” தங்கும் விடுதியில் செல்வமுருகன் காவல் கட்டுப்பாட்டில் இருந்த போது அவரது மனைவி நேரில் பார்த்த காட்சி:

கடந்த 29.10.2020 அன்று காலை 10 மணியளவில், செல்வமுருகன் மனைவி பிரேமாவின் தொலைபேசிக்கு அவரது கணவர் செல்வமுருகன் தொலைபேசியில் (8012236388) இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், தான் காவலர் என்றும் உடனடியாக ராணி – ராணி தங்கும் விடுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.

அன்று காலை 11:30 மணியளவில், பிரேமா தனது 11 வயது மகள் லீனாவை அழைத்துக்கொண்டு நெய்வேலி ஆர்ச் கேட் அருகேயுள்ள பொன்னுசாமி மிலிடரி ஹோட்டல் எதிரே உள்ள ராணி – ராணி தங்கும் விடுதி நோக்கிச் சென்றுள்ளார். விடுதியின் நுழைவு வாயிலில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் இருக்கும்போது காவல்துணைக் கண்காணிப்பாளர் அலுவலக புலன்விசாரணைக் குழுவைச்சேர்ந்த சுதாகர் என்ற காவலரும் மற்றொரு காவலரும் அவர்களது அருகே வந்து நின்றுள்ளனர்.

அங்கே அவர்கள் நின்றிருந்த போது, ராணி – ராணி தங்கும் விடுதியின் உள்ளே இருந்து இரு காவலர்கள் செல்வமுருகனை வெளியே கைத்தாங்கலாக பிடித்து அழைத்து வந்துள்ளார்கள். செல்வமுருகனால் நடக்க இயலாத நிலையிலேயே அவர்கள் இருவரும் அவரைப் பிடித்துக்கொண்டு நடந்து வந்துள்ளனர். இதனைக் கண்ட பிரேமாவிற்கு கடும் அதிர்ச்சியும் கடும் மனவேதனையும் ஏற்பட்டுள்ளது. செல்வமுருகன் கழுத்துப் பகுதியைச் சுற்றிலும் வீக்கம் இருப்பதை கண்டுள்ளார்.

அப்போது காவலர் சுதாகர், “செல்வமுருகன் ஒரு பெண்ணுடைய 10 பவுன் தங்க செயினை திருடி விட்டார் என்றும் ஆகவே அவளுக்கு உடனடியாக 5 லட்சம் ரூபாய் கொடுக்க ஏற்பாடு செய்திடுமாறும் அப்போது தான் செல்வமுருகன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாது என்று கூறியுள்ளார். அப்போது செல்வமுருகன் தன் மனைவி பிரேமாவிடம், நான் எந்த தவறும் செய்யவில்லை, என் மீது வேண்டுமென்றே பொய்யாக இந்த திருட்டு வழக்கு போட காவல்துறையினர் முயற்சிக்கிறார்கள், உன்னிடம் பணம் பறிக்க வேண்டும் என்றே நினைத்து செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

கடந்த 28.10.2020 அன்று இரவு முழுவதும் ராணி – ராணி தங்கும் விடுதியில் நெய்வேலி காவல்துறையினர் தன்னை சட்ட விரோதமாக அடைத்து வைத்து கடுமையாக சித்திரவதை செய்தனர், அதனால் தான் என்னால் நடக்க கூட முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும், மிகக்கொடூரமாக தன்னுடைய தொண்டைக்குள் லத்தியை உள்நுழைத்து அமுக்கியுள்ளனர், அதன் விளைவாக தான் தன்னுடைய தொண்டைப் பகுதி முழுவதும் அதீத வீக்கத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். தன் கணவரை விடுவிக்குமாறு காவல்துறையினரை 20 நிமிடங்களுக்கு மேலாக கெஞ்சி கேட்டும் அவர்கள் மறுத்துவிட்டதால், அவர்கள் கேட்ட பணத்தை தர மறுத்து அங்கிருந்து பிரேமா சென்றுள்ளார். 

இதன் மூலம் செல்வமுருகன் கடந்த 28.10.2020 அன்று முதல் நெய்வேலி காவல்துறையினர் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளார் என்பதையும் அவர் சட்ட விரோதமாக ராணி – ராணி தங்கும் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்துள்ளார் என்பதையும் அங்கே அவர் கடுமையான சித்திரவதைக்கு ஆளாகியுள்ளார் என்பதையும் அதன் விளைவாக அவரால் நடக்கவும் பேசவும் முடியவில்லை என்பதையும் அறிய முடிகிறது. 

ராணி – ராணி தங்கும் விடுதியில் இருந்து செல்வமுருகன் நெய்வேலி காவல்நிலையத்திற்கு மாற்றம்:

பிரேமா தன் கணவர் செல்வமுருகனை காவல்துறையினரின் சட்டவிரோத அடைப்பில் இருந்து விடுவிக்க முடியாமல் அவதியுற்ற நிலையில், மீண்டும் ஒரு முறை தன் மகள் லீனாவுடன் 30.10.2020 அன்று காலை 10.45 மணியளவில் நெய்வேலி நகர் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கே செல்வமுருகன் கைவிலங்கு பூட்டப்பட்ட நிலையில் காவலரால் வெளியே அழைத்து வரப்பட்டார். கொரோனா பரிசோதனை செய்வதற்காக செல்வமுருகன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதாக காவலர்களால் பிரேமாவிற்கு தெரிவிக்கப்பட்டது. அதுபோல் செல்வமுருகன் காவல்நிலையத்திற்கு வெளியே இருந்த வெள்ளை நிற காவல் வாகனத்தில் ஏற்றப்பட்டார். சிறிது நேரத்திற்கு பின்னர், செல்வமுருகன் மீண்டும் காவல்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

பிரேமா காவல்நிலையத்திற்குள் சென்ற போது காவல் எழுத்தர் இருக்கைக்கு அருகே கையும் காலும் விலங்கால் பூட்டப்பட்ட நிலையில் செல்வமுருகன் இருப்பதை நேரில் பார்த்துள்ளார். அப்போது செல்வமுருகனின் கால் குதிங்கால் பகுதி இரத்தம் வடிந்த நிலையில் பெருங்காயத்தோடு இருந்துள்ளது. அவரது தொண்டைப் பகுதியிலும் கடும் வீக்கம் இருந்துள்ளது.

பிரேமா காவல்நிலையத்தை விட்டு வெளியேறும்போது காவல் ஆய்வாளர் அவரை அவரது அறைக்கு அழைத்துள்ளார். அப்போது காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மிகவும் முரட்டுத்தனமாகவும், முறையற்ற விதமாகவும், மோசமான மற்றும் பாலியல் ரீதியான வசவுச் சொற்களால் பிரேமாவை திட்டி மிரட்டியுள்ளார்.

அவரது கணவர் செல்வமுருகன் கொள்ளையடித்த, திருடிய பொருட்களில் தான் அவரும் அவரது குடும்பத்தினரும் வாழ்ந்து வந்ததாக கூறியுள்ளார். அன்று பிரேமா அணிந்திருந்த தங்க சங்கிலியும் திருடப்பட்ட ஒன்று தான் என காவல் ஆய்வாளர் ஆறுமுகம் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது கணவர் செல்வமுருகன் தப்பித்ததைப் போன்று இனி ஆய்வாளரிடமிருந்து தப்ப முடியாது என்று கூறி அவர் அச்சுறுத்தப்பட்டார்.

காவல் ஆய்வாளர் சில வாரங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை மனதில் வைத்து தான் பழிவாங்கும் எண்ணத்தோடு இப்போது நடந்து கொள்கிறார் என்பதை தெளிவாக உணர்ந்த பிரேமா மனம் உடைந்த நிலைக்கு சென்றுள்ளார். காவல் ஆய்வாளரின் பழிவாங்கும் போக்கினை உணர்ந்த நிலையில், பிரேமா காவல்நிலையத்தை விட்டு மதியம் 12.30 மணியளவில் வெளியேறி, தனது கணவர் செல்வமுருகனை விடுவிக்க ஒரு வழக்கறிஞரை முறையாக ஈடுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

அன்றைய தினமே இரவு 8.30 மணியளவில் பிரேமா அவர்களுக்கு அவரின் கணவர் தொலைபேசியில் இருந்து பிரேமாவிற்கு அழைப்பு வந்துள்ளது. பிரேமாவின் கணவர் செல்வமுருகன் மிகவும் பலவீனமான குரலில் தன்னை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு விருத்தாச்சலம் கிளைச் சிறைக்கு கொண்டு செல்ல காவல்துறையினர் தனியார் வாகனத்தை வாடகைக்கு ஏற்படுத்தி கொடுக்குமாறு தன்னிடம் கூறுவதாகக் கூறியுள்ளார்.

கணவர் கூறியதற்கு பிரேமா பதில் கூறுவதற்கு முன்பே தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. சிறிது நேரத்திற்குப் பின்பு மற்றொரு போலீஸ் அதிகாரி செல்வமுருகன் செல்போனில் இருந்து பிரேமாவைத் தொடர்பு கொண்டு ரூ. 5000/- பணம் கேட்டுள்ளனர். இதனையடுத்து பிரேமா தனது மகன் மன்மதனிடம் ரூ. 5000/- மற்றும் செல்வமுருகன் உபயோகப்படுத்துவதற்கு சில துணிகளையும் காவல் நிலையத்திற்கு கொடுத்து அனுப்பியுள்ளார்.

மன்மதன் பணத்தையும் துணிகளையும் வாங்கிக் கொண்டு காவல் நிலையத்திற்கு இரவு 9.45 மணியளவிற்கு சென்றுள்ளார். அப்பொழுது காவல் நிலையத்திற்கு வெளியே சில காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற மன்மதனை பார்த்து விசாரித்து பணத்தைக் கேட்டுள்ளார்கள். அதற்கு மன்மதன் தன் தந்தையை நேராக பார்த்துதான் பணத்தை தருவதாகக் கூறியுள்ளார். அதன் பின்னர்தான் காவல்துறையினர் செல்வமுருகனைப் பார்ப்பதற்கு மகன் மன்மதனை அனுமதித்தனர்.

காவல் நிலையத்திற்குள் சென்ற மன்மதன், தனது தந்தை செல்வமுருகனைப் பார்த்து ரூ. 5000/- பணம் மற்றும் அவரது துணிகளை கொடுத்துள்ளார். அப்பொழுது செல்வமுருகன் தொண்டையில் வீக்கம் இருப்பதையும் மிகவும் கடுமையான வலியால் அவதிப்படுவதையும் மன்மதன் நேரில் பார்த்துள்ளார். அதன்பின் செல்வமுருகன், தன்னுடைய முதுகு, குதிங்கால், பிட்டம் பகுதியில் காயங்கள் இருப்பதாக மன்மதனிடம் கூறியுள்ளார்.

தந்தை வலியால் துடிப்பதைக் கண்ட மன்மதன், தந்தையிடம் ஆறுதல் சொல்லியுள்ளார். இதனால் பிரேமாவை விட கூடுதலாக, அவரது மகன் மன்மதனும் 30 ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு காவல் நிலையத்தில் தனது தந்தை காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு சங்கிலியால் கட்டப்பட்டிருப்பதையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு செல்வமுருகனுக்கு உடம்பில் உள்ள காயங்களை கண்ட முக்கியமான சாட்சி ஆவார்.

02.11.2020 அன்று விருத்தாச்சலம் கிளைச் சிறையில், நீதிமன்றக் காவலில் செல்வமுருகன் இருந்த போது:

02.11.2020 அன்று விருத்தாச்சலம் கிளைச் சிறையில் உள்ள தனது கணவர் செல்வமுருகனை பார்ப்பதற்காக பிரேமா, தனது உறவினர் பிரியதர்ஷினி, அவரது கணவர் திருமாவளவன், மற்றும் திருமாவளவனின் தம்பி D. காந்தியுடன் இன்னோவா (Innova) காரில் சென்றுள்ளார்கள். பிரேமா தனது கணவரைப் பார்க்க விண்ணப்பித்து, காத்திருந்த நேரத்தில் இரண்டு காவலர்கள் செல்வமுருகனை கிளைச் சிறையிலிருந்து அழைத்து வருவதைப் பார்த்துள்ளார்.

விசாரித்தபோது, தனது கணவரை விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் செல்வதாகவும் அங்கே வந்து அவர்களை பார்க்குமாறும் கூறியுள்ளனர். பிரேமா தன் உறவினர்களுடன் அந்த ஆட்டோவைப் பின் தொடர்ந்து மதியம் சுமார் 2.00 மணியளவில் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்கு சென்ற போது, மருத்துவர்கள் தனது கணவருக்கு டிரிப்ஸ் ஏற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, பசியில் இருந்த கணவருக்கு காவலரிடம் அனுமதி பெற்று, உணவு வாங்கச் சென்றுள்ளனர். பிரேமா தனது கணவரின் தொண்டையில் வீக்கம் இருப்பதைப் பார்த்துள்ளார்.

மேலும் அவரால் படுக்கையை விட்டு நகர இயலவில்லை. எனவே பிரேமா, தனது கணவரை கவனமாகத் தூக்கி தோள்மீது சாய்த்து உணவை ஊட்டுவதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் செல்வமுருகனால் ஒரு வாய்க்கு மேல் உணவு உண்ண முடியவில்லை. பிறகு மருத்துவர்கள் பிரேமாவிடம் செல்வமுருகன் மிகவும் பலவீனமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

மேலும் தங்கள் மருத்துவமனையில் போதுமான வசதி இல்லாத காரணத்தினால் உங்கள் கணவர் செல்வமுருகனை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்க்குமாறு பரிந்துரைத்துள்ளனர். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த காவலர்கள் மருத்துவர் தினகரனை தனியாக அழைத்துச் சென்று ரகசியமாகப் பேசியுள்ளனர். இதன் பின் செல்வமுருகன் மேற்கொண்டு சிகிச்சை ஏதும் இன்றி விருத்தாச்சலம் கிளைச் சிறைக்கு காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கள ஆய்வுக்குழு தெளிவான முடிவிற்கு வருவது என்னவென்றால் செல்வமுருகன், விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். அங்குள்ள மருத்துவரால் கடலூர் அரசு மருத்துவமனைக்கு மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

ஆனால் காவலருடன் தனிப்பட்ட உரையாடலுக்குப் பிறகு காவலர்களின் குறுக்கீட்டால் மேம்பட்ட சிகிச்சையை மறுபரிசீலனை செய்தார். காவலர்களின் செயல்களும் உடல்மொழிகளும் வேறு ஒருவரின் அறிவுறுத்தலின்படி இருப்பது என்பது தெளிவாகின்றது. மருத்துவர் மேம்பட்ட சிகிச்சையின் முடிவை மறுபரிசீலனை செய்தார். இறுதியில் செல்வமுருகன் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல் மறுபடியும் விருத்தாச்சலம் கிளைச் சிறைக்கே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

செல்வமுருகன் கடந்த அக்டோபர் 28 மற்றும் 29 நாட்களில் ராணி – ராணி தங்கும் விடுதியில் சட்டத்திற்குப் புறம்பாக நெய்வேலி காவல்துறையினரால் அடைத்து வைத்து கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டார் என்பதை இராஜா த/பெ.கணேசன் அவரது வாக்குமூலத்தின் வாயிலாக அறிய முடிகிறது.

கடந்த 04.11.2020 அன்று இரவு சுமார் 9.00 மணியளவில் விருத்தாச்சலம் கிளைச் சிறையில் இருந்து பிரேமாவிற்கு தொலைபேசி வாயிலாக தனது கணவர் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு சுமார் 10.30 மணியளவில் பிரியதர்ஷினி மற்றும் காந்தியுடன் பிரேமா விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். தனது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடத்திலேயே இறந்துவிட்டார் என்பதை மற்றவர்கள் பேசும் போது தெரியவந்தது.

இதன் மூலம் செல்வமுருகன் 28.10.2020 காவல் அடைப்புக்கு கூட்டிச் செல்லப்பட்டு 30.10.2020 வரை சட்ட விரோத தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது தெரிய வருகிறது. முதலில் செல்வமுருகன் ராணி & ராணி லாட்ஜில் சித்திரவதை செய்யப்பட்டு 29.10.2020 அன்று இரவில் நெய்வேலி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அவர் 30.10.2020 அன்று இரவு நெய்வேலி நீதித்துறை நடுவரால் விருத்தாச்சலம் கிளைச் சிறைக்கு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 02.11.2020 அன்று தனது உடலில் ஏற்பட்ட காயங்களால் அரசு மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். விருத்தாச்சலம் அரசு மருத்துவமனை மருத்துவர் தினகரனின் கடலூர் அரசு மருத்துவமனைக்கு செல்வமுருகனை மேல் சிகிச்சைக்காக மாற்றம் செய்ய பரிந்துரைத்தது நிராகரிக்கப்பட்டது. இதற்குப் பதிலாக விருத்தாச்சலம் கிளைச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 04.11.2020 அன்று உயிரிழந்துள்ளார்.

செல்வமுருகன் சித்திரவதையை நேரில் கண்ட சாட்சி:

கடந்த அக்டோபர் 28 அன்று இரவு 11 மணியளவில் நெய்வேலி காவல்துறையினர் இராஜா த/பெ.கணேசன் வீட்டிற்குச் சென்று அவரை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அவரை ராணி – ராணி தங்கும் விடுதிக்கு காவல் வாகனத்தில் கொண்டு செல்லும் வழியில் அதே வாகனத்தில் செல்வமுருகன் இருப்பதை கவனித்துள்ளார்.

இவர்கள் இருவரும் ராணி – ராணி தங்கும் விடுதியில் சட்டத்திற்குப் புறம்பாக காவல் அடைப்பில் வைக்கப்பட்டு கொச்சையான வார்த்தைகளாலும் இரும்புக் கம்பியால் கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதை இராஜா வாக்குமூலத்தில் இருந்து அறிய முடிகிறது. 

கடும் சித்திரவதையின் விளைவால், இராஜாவுக்கு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ச்சியாக தாக்கப்பட்டால் அவர் இறந்துவிடுவார் என்று போலீசாருக்கு செல்வமுருகன் தெரிவித்துள்ளார். அதன்படி, இராஜா மீதான தாக்குதல் குறைந்து, செல்வமுருகன் மீதான சித்திரவதை தொடர்ந்தது. செல்வமுருகன் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட போது, அதை நேரில் பார்த்த கண்ணுற்ற சாட்சியாக இராஜா இருந்தார் என்பதை இராஜா வாக்குமூலத்தில் இருந்து அறிய முடிகிறது. 

அக்டோபர் 28 அன்று காலை செல்வமுருகன் தனது வீட்டில் இருந்து வடலூருக்கு செல்லும் வழியில் நெய்வேலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை இராஜா வாக்குமூலத்தில் இருந்து அறிய முடிகிறது. 

மறுநாள் அக்டோபர் 29 அன்று, இராஜா வைக்கப்பட்டிருந்த அறைக்கு பக்கத்து அறையில் காவல் அடைப்பில் கடும் சித்திரவதையால் வலி தாங்க முடியாமல் கதறி அழுத செல்வமுருகனின் அழுகை சத்தத்தை இராஜா கேட்டுள்ளார் என்பதை அவரது வாக்குமூலத்தில் இருந்து அறியமுடிகிறது. 

அக்டோபர் 29 அன்று மாலை 4 மணி மணியளவில், இராஜாவிடம் இருந்த ரூ.3000/- தொகையை எடுத்துக் கொண்டு நெய்வேலி காவல்துறையினர் அவரை விடுவித்துள்ளனர். காவலர்கள் இராஜாவை வெளியே விடுவித்தபோது, அவரால் நடக்க முடியவில்லை, அவரை விடுதியிலிருந்து அழைத்துச் செல்ல அவரது மைத்துனர் கார்த்திக் மற்றும் அவரது சகோதரர் தேவர் ஆகியோர் வந்து அழைத்துச்சென்றுள்ளனர். 

ராணி & ராணி தங்கும் விடுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது என்பதை இராஜா வாக்குமூலத்திலிருந்து அறிய முடிகிறது. 

இராஜா வாக்குமூலத்தில் இருந்து, 2020 அக்டோபர் 28 அன்று காலை 10 மணியளவில் செல்வமுருகன் தனது வீட்டை விட்டு வெளியேறிய உடனேயே அவரை நெய்வேலி காவல்துறையினர் சட்டவிரோதமாக கைது செய்து அவரை ராணி & ராணி தங்கும் விடுதியில் சட்டவிரோதமாக வைத்து கொடூர முறையில் சித்திரவதை செய்து, 2020 அக்டோபர் 30 அன்று அவரை நீதிமன்றக் காவலுக்கு மாற்றியுள்ளனர் என்பதை உறுதியாக அறிந்திட முடிகிறது. 

2020 அக்டோபர் 28 அன்று செல்வமுருகனை கைது செய்தல், சட்டவிரோதமாக தடுத்து வைத்தல் மற்றும் சித்திரவதை செய்தல் உள்ளிட்ட அனைத்து சட்டவிரோத செயல்களுக்கும் முதல் சாட்சியாக இராஜா இருந்துள்ளார் என்பதையும் அறிந்திட முடிகிறது.

எமது உண்மை கண்டறியும் குழுவுக்கு கூடுதல் சாட்சியாக எம்.என்.சி. நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் திரு.ராஜா பாரதி த/பெ.குமார், அவர்களின் வாக்குமூலம் கிடைத்தது. இவர் வீட்டில் இருந்த போது, நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம் (சீருடையில் இருந்தார்) மற்றும் சீருடை அணியாத காவலரால் கடந்த 29.10.2020 அன்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜமங்களத்தில் ஒரு குறிப்பிட்ட வீட்டை அடையாளம் காட்ட அவர்களுடன் வருமாறு கூறி இராஜா பாரதியை அழைத்துச் சென்றுள்ளனர்.

இருப்பினும், அவர்கள் பயணித்த சுமோ வாகனம் ராஜமங்கலத்தில் உள்ள வீட்டை அடைந்தபோதும், வாகனத்தை அங்கே நிறுத்தாமல் அதிகாலை 1 மணியளவில் ராணி & ராணி லாட்ஜின் பின்பக்கம் உள்ள தெருவுக்கு அழைத்துச்சென்றனர். அங்கே ஒரு குறிப்பிட்ட தகவலை சொல்லுமாறு இராஜா பாரதியை காவலர்கள் அடித்து நெய்வேலி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இராஜா பாரதிக்கு தெரியாத ஒன்றைப் பற்றி அவர் தொடர்ந்து காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டுள்ளார். இராஜா பாரதியை அங்கிருந்த ஒரு மேஜையில் படுக்க வைத்து கைவிலங்கு பூட்டி அடித்துள்ளனர்.

அதே அறையில் செல்வமுருகன் தரையில் படுத்து சுவரில் சாய்ந்து இருப்பதை நேரில் கண்டுள்ளார். செல்வமுருகன் பேச முடியாமல், மிகவும் பலவீனமாக இருப்பதைக் கண்டுள்ளார். அதன்பிறகு, ராஜபாரதி மீண்டும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார். பின், அவரை ஆனந்த் மற்றும் பிரபாகரின் வீட்டைக் காண்பிப்பதற்காக காவல் நிலையத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். ராஜபாரதி இரண்டு வீடுகளையும் காட்டியதும், அவரை அவரது வீட்டின் அருகே சாலையில் விட்டுச் சென்றனர்.

அடுத்த நாள், ராஜபாரதி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக செல்லும் போது, அவருக்கு காவலரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், அவர் அடையாளம் காட்டிய இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்படுவார்கள் என்று மிரட்டியுள்ளார். அதனால், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை.

கடும் சித்திரவதையின் காரணமாக வேலை செய்ய முடியாமல், பல நாட்கள் நடக்க முடியாத சூழலில் இருந்துள்ளார் என்பதை எமது களஆய்வுக் குழுவினர் சந்தித்த போது ராஜாபாரதி கூறியுள்ளார். தனக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்றும் எமது குழுவினரிடம் ராஜபாரதி கூறினார்.

ராஜாபாரதி வாக்குமூலத்தின் வாயிலாக, காவல் சித்திரவதையால் இறந்து போன செல்வமுருகன் உண்மையில் அக்டோபர் 30 அன்று காலையில் நெய்வேலி நகர காவல் நிலையத்தில் இருந்தார் என்பதை உறுதியாக கண்டறிய முடிகிறது. மேலும் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான காவலர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யும் பழக்கத்தில் இருந்து வருவதை அறிய முடிகிறது. இவ்வாறு சித்திரவதை செய்யப்படுவோர் மூலம் பெரும் தொகையை பெற்ற பிறகு அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பதும் தெரிகிறது.

முந்திரி வியாபரம் செய்து வரும் பாலகிருஷ்ணன் மகன் ஆனந்த் அவர்களை கள ஆய்வுக் குழுவினர் சந்தித்தனர். 29.10.2020 அன்று இரவு ஆனந்த் வீட்டில் இருந்த பொழுது ஆய்வாளர் ஆறுமுகம், ஆனந்த் வீட்டிற்குச் சென்று வலுக்கட்டாயமாகக் காரில் ஏற்றி ஆனந்திற்குத் தெரியாத ஒரு சம்பவத்திற்கு ஒத்துக்கொள்ளுமாறு கூறி கட்டாயப்படுத்தி உள்ளார்.

காவல் நிலையத்திற்கு ஆனந்தைக் கொண்டுச் சென்ற பின்பு காவல் நிலையத்தில் ஆரஞ்ச் கலர் பனியன் மற்றும் சாண்டல் நிற பேண்ட் அணிந்து தரையில் படுத்திருந்த செல்வமுருகனை பார்த்துள்ளார். அப்பொழுது செல்வமுருகன் மகிவும் பரிதாபத்திற்குரிய நிலையில் இருந்ததாகக் கூறினார். மேலும் கையை சங்கிலி போட்டு கட்டி இருந்ததாகவும், அவர் நடக்க முடியாத நிலையில் மிகவும் சோர்வாக இருந்ததாகவும் கூறினார்.

தாகத்தில் செல்வமுருகன் தண்ணீர் கேட்டபொழுது, காவலர்கள் தண்ணீர் தர மறுத்துவிட்டதாகவும், செல்வமுருகன் தொடர்ந்து அதிகாலை 3.00 மணி வரை தண்ணீர் கேட்டுக் கொண்டு இருந்ததாகவும் அதன் பின்னரே செல்வமுருகனுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் செல்வமுருகனை போலீசார் காலை 6.00 மணிக்கு எழுப்பிவிட்டதாகவும் அவரால் சரியாக எழுந்திருக்க முடியாமல் தடுமாறியதையும், அப்பொழுது காவலர்கள் செல்வமுருகனைத் தூக்கி எழுப்பிவிட்டதாகவும் கூறினார். பின் செல்வமுருகனை கட்டாயப்படுத்தி அவர் அணிந்திருந்த ஆடையினை களையச்செய்து பிட்டம் மற்றும் கால் பகுதிகளில் உள்ள காயத்திற்கு ஒரு மருந்தினை போட்டுள்ளனர்.

அப்பொழுது செல்வமுருகனுக்கு பிட்டம் பகுதியில் உள்ள காயத்தை ஆனந்த நேரடியாகப் பார்த்த சாட்சி ஆவார். மேலும் பிட்டம் அருகில் சில காயங்கள் இருந்ததையும், செல்வமுருகனின் இரண்டு கைள் வீங்கி, கைகளை தூக்குவதற்கே கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தார். காவல் நிலையத்தில் இருந்த பொழுது அவருக்கு சாப்பிட இட்லி கொடுக்கப்பட்டதாகவும் இவை அனைத்தும் மருத்துவ சான்றிதழ் பெற அழைத்துச் செல்வதற்கு முன்பு செய்த சடங்காக மட்டுமே பார்க்கப்படுகிறது.

மேலும் காவல் நிலையத்திற்கு செல்வமுருகனின் மனைவி வந்த பொழுது காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் ஒருவர் செல்வமுருகனின் மனைவி அணிந்திருந்தத்செயினை பற்றி விசாரித்ததாக கூறினார். 30.10.2020 அன்று காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்திற்கும், காவல்துறையின் சித்திரவதையால் செல்வமுருகனுக்கு ஏற்பட்ட காயத்திற்கும், செல்வமுருகன் அணிந்திருந்த ஆடைக்கும் ஆனந்த் மிக முக்கியமான சாட்சி ஆவார்.

ஆனந்த தன்னுடைய செல்வாக்கினால் எவ்வித வழக்கும் இன்றி வெளியே வந்தார். மேலும் ஜெயபிரகாஷ் மற்றும் ராஜாபாரதியை விடுவிப்பதற்காக காவல் ஆய்வாளர் ஆறுமுகம் ஒவ்வொருவரிடமும். ரூ. 35,000/- பணத்தினை பெற்றுள்ளார் என்பதும் கள ஆய்வின் பொழுது கள ஆய்வுக் குழுவினரால் கண்டறியப்படுகிறது.

கள ஆய்வுக் குழுவினர் செல்வமுருகனை ரிமாண்ட் செய்வதற்கு உடற்தகுதி சான்றிதழ் அளித்த குறிஞ்சிப்பாடி மருத்துவ அதிகாரி மகேஸ்வரி அவர்களை நேரடியாக சந்தித்தனர். செல்வமுருகனை பரிசோதிக்க நெய்வேலி நகர் காவல் நிலைய காவலர்கள் 30.10.2020 அன்று இரவு சுமார் 10.00 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும், பணியில் இருக்கக்கூடிய மருத்துவர் அந்த சமயத்தில் இல்லாததால் மருத்துவ அதிகாரி மகேஸ்வரி செல்வமுருகனை பரிசோதனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

செல்வமுருகன் சாதாரணமாக இறந்ததாகவும், இதற்கு முன் அவர் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை எவரும் தெரியப்படுத்தவில்லை என்று அதனால் வலிப்புக்கு எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை என்றும் கூறினார். இதன் மூலமாக மருத்துவர் மகேஸ்வரி அளித்த வாய்வழி வாக்குமூலத்தின் அடிப்படையில் மருத்துவர் மகேஸ்வரி அவருடைய பணியை செய்யத் தவறி செல்வமுருகனை நீதிமன்றக் காவலில் அடைப்பதற்கு தகுதிச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

இந்த மாதிரியான வழக்குகளில் பெரும்பாலும் நீதிமன்ற காவலில் அடைப்பதற்கு இரவு நேரத்திலேயே போலீசாரால் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். குறிப்பாக சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகும் மருத்துவர் மகேஸ்வரி சிறிதும் பொறுப்பில்லாமல் மருத்துவ பரிசோதனை செய்தது கண்டனத்திற்குரியது.

கள ஆய்வுக் குழுவினர் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனை கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ அதிகாரி மருத்தவர் தினகரன் அவர்களை நேரடியாகச் சந்தித்தனர். செல்வமுருகனை கடந்த 02.11.2020 அன்று காலை சுமார் 11.00 மணியளவில் சிகிச்சைக்காக இரண்டு எஸ்கார்ட்ஸ் காவலர்கள் அழைத்து வந்ததாகவும், அழைத்து வந்த இரண்டு காவலர்களும் செல்வமுருகனுக்கு வலிப்பு வந்ததாகக் கூறி உள்ளனர்.

காவலர்கள் கூறியதன் அடிப்படையில் மருத்துவர் தினகரன் வலிப்பு நோய்க்கு சிகிச்சை அளித்துள்ளார். மேலும் செல்வமுருகன் உடலில் காயங்கள் இருந்ததையும் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தார். இருப்பினும் மருத்துவர் தினகரன் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் செல்வமுருகன் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மறுபடியும் விருத்தாச்சலம் கிளைச்சிறைக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்பது கள ஆய்வுக் குழுவினருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. மேலும் அவர் மீண்டும் கிளைச்சிறைக்கு அனுப்பப்படாமல் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் செல்வமுருகன் உயிரோடு இருந்திருப்பார்.

கள ஆய்வுக் குழுவினர் விருத்தாச்சலம் கிளைச் சிறைக்கு சென்று அங்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் காவல் துறையின் சித்திரவதையால் கொலை செய்யப்பட்ட செல்வமுருகன் 31.10.2020 அன்று அதிகாலை சுமார் 1.00 மணியளவில் நெய்வேலி நகர் காவல் நிலைய தலைமைக் காவலர் சதீஷ்பாபு மற்றும் காவலர் சுமன் கிளைச் சிறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

வழக்கு எண் 1053/2020 மற்றும் வழக்கு எண் 1073/2020-ன் கீழ் செல்வமுருகன் நீதிமன்றக் காவலுக்கு விருத்தாச்சலம் கிளைச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்பொழுது செல்வமுருகன் உடன் பிரபாகரன் த/பொ. பாலமுருகன் வழக்கு எண் 757/2020 என்பவரும் நீதிமன்றக் காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார்.

கிளைச் சிறையில் செல்வமுருகனை பரிசோதிக்கும் போது, அவருக்கு வலிப்பு நோய் உள்ளதாகவும், அதற்காக அவர் தொடர் சிகிச்சை எடுத்து வந்ததாகவும் சிறைத்துறை அதிகாரிகளிடம் கூறியதாக சிறைத்துறை அதிகாரிகள் கள ஆய்வுக் குழுவினரிடம் கூறினர். மேலும் செல்வமுருகனுக்கு முதுகில் ஒரு காயம் இருந்ததாகவும் இடது கால் மற்றும் இடது கையில் காயங்கள் மற்றும் வீக்கங்கள் இருந்ததாகவும் இடது காலில் உள்ள நரம்புகள் வெட்டப்பட்டு இரத்தம் வடிந்த நிலையில் இருந்ததாகவும் கூறி உள்ளனர்.

மேற்கூறிய காயங்கள் அனைத்தும் கவனமாக சிறைத்துறை அதிகாரிகளால் எஸ்கார்ட்ஸ் காவலர்கள் முன்பே பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த காயங்கள் அனைத்தும் செல்வமுருகன், நெய்வேலி நகர் காவல் துறையினரால் கடந்த 28.10.2020 மற்றும் 29.10.2020 அன்று சட்டவிரோமாக அடைத்து வைக்கப்பட்டு, காவல்துறையினரால் சித்திவதைக்கு உள்ளாக்கப்பட்டு ஏற்பட்ட காயங்கள் ஆகும்.

செல்வமுருகனின் காயங்களை அவரது மனைவி பிரேமா, மகன் மன்மதன் மற்றும் காவல்துறையினரால் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த ஆனந்தி மற்றும் ராஜா அவர்களும் முக்கியமான சாட்சியங்கள் ஆவார்கள். அதன்பின் கடந்த 31.10.2020 அன்று அதிகாலை சுமார் 1.00 மணியளவில் விருத்தாச்சலம் கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்ட செல்வமுருகனுக்கு ஏற்பட்ட காயங்களை ரிமாண்ட் செய்வதற்கு முன் உடல் பரிசோதனை செய்த மருத்துவர் மகேஸ்வரியால் குறிக்கப்படவில்லை என்பது கள ஆய்வு குழுவினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

செல்வமுருகனுக்கு கடந்த 02.11.2020 அன்று காலை சுமார் 7.15 மணியளவில் வலிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதை கள ஆய்வுக் குழுவினர் விருத்தாச்சலம் கிளைச் சிறை கண்காணிப்பாளர் அவர்களை நேரடியாக சந்தித்ததன் அடிப்படையில் தெரிய வருகிறது. அதன் பின் போலீஸ் எஸ்கார்ட்ஸ் சரவணன் (HE1048) தலைமைக் காவலர் நெய்வேலி நகர் காவல் நிலையம் மற்றும் காவலர் தேசிகன் மூலம் செல்வமுருகன் மருத்துவ சிகிச்சைக்காக காலை சுமார் 11.45 மணியளவில் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார்.

அதன்பின் செல்வமுருகனுக்கு கடந்த 4.11.2020 அன்று இரவு 12.15 மணியளவில் மறுபடியும் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு உள்ளது. உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோ மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் முதல் உதவி கொடுக்கும் தருணத்திலேயே செல்வமுருகன் இறந்துவிட்டார்.

செல்வமுருகன் மீது நெய்வேலி நகர் காவல் நலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 11.10.2020 அன்று குற்ற எண் 1053 u/s 457 & 380, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும், மற்றொரு வழக்கு எண் 1053 30.10.2020 அன்று காவ்யா த/பெ. தன்ராஜ் அவர்களின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை காலை 9.00 மணியளவில் பறித்துச் சென்றதாக காலை 10.00 மணியளவில் செல்வமுருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

நெய்வேலி டவுன் காவல் நிலையத்தில் காவலர் கட்டுப்பாட்டில் இருந்த பொழுது குற்ற எண் 1053-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட குற்றத்தை செல்வமுருகன் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் செல்வமுருகன் ஒரே காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு நெய்வேலி நீதித்துறை நடுவர் முன்பு அவரது வீட்டில் இரவு 10.00 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டு இரவு 11.00 மணியளவில் ரிமாண்ட் உத்தரவினை வாங்கி 31.10.2020 அன்று அதிகாலை 1.00 மணியளவில் விருத்தாச்சலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கினைப் பற்றி கள ஆய்வுக் குழுவினர் விசாரிக்கும் பொழுது நெய்வேலி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் பார் அசோசியேசன் கீழ் பணியாற்றக்கூடிய பணியாளர்கள்மற்றும் வழக்கறிஞர்கள் காவல்துறையினரால் ராணி & ராணி லாட்ஜில் சட்டவிரோமாக அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளான செல்வமுருகன் பற்றி தெரிந்து இருந்தது.

இதனை கள ஆய்வுக் குழுவினருடன் பகிர்ந்தனர். வழக்கறிஞர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலமும் மற்ற பிற ஆவணங்கள் மூலமும் செல்வமுருகன் காவல் அய்வாளர் ஆறுமுகத்தால் ஏற்கெனவே அவர்களுக்கு இடையே உள்ள முரண்பாட்டால் குறி வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

ஆரம்பத்தில் ஆய்வாளர் ஆறுமுகம் செல்வமுருகன் மீது வழக்குப் பதிவு செய்யாமல் செல்வமுருகனை சித்திரவதை செய்து, அவரது மனைவி பிரேமாவை மிரட்டி ஒரு பெருந்தொகை பறிக்க திட்டம் தீட்டியது தெரிய வருகிறது. காவல்துறையினரால் செல்வமுருகன் சட்டவிரோத காவலுக்கு உட்படுத்தப்பட்டு, காவல்துறையினரால் பல்வேறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, பல்வேறு காயங்கள், அதன் வலியால் பாதிக்கப்பட்டு அதனால் வலிப்பு நோய் ஏற்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்த பொழுது இறந்துள்ளார்.

பரிந்துரைகள்:

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்த செல்வமுருகன் கடந்த 4.11.2020 அன்று காவல் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டதை மக்கள் கண்காணிப்பகம் வரவேற்கிறது. அதே நேரத்தில் இந்திய குற்றவியல் நடைமுறைச்சடம் பிரிவு 302 இன் கீழ் இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கை உடனடியாக சிபிசிஐடியால் பதிவு செய்யப்பட வேண்டும்.

மேலும் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் டி.எஸ்.பி. அலுவலக குற்றப் பிரிவு சிறப்புக் குழுவைச் சார்ந்த சுதாகர், அறிவழகன் மற்றும் பெயர் தெரியாத ஆனால் சாட்சிகளால் எளிதில் அடையாளம் காணகூடிய பிற காவலர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் கோருகிறது.

நெய்வேலியில் உள்ள ராணி & ராணி லாட்ஜில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களை அகற்றுவது, வழக்கை வெற்றிகரமாகத் தொடர உதவும் சாட்சிகளை அச்சுறுத்துவது போன்ற ஆதாரங்களை அழிக்கும் பணியைக் காவல் ஆய்வ்வாளர் ஏற்கெனவே தொடங்கிவிட்டார்.

தற்போது காவல் ஆய்வாளர் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவலை அறிந்த உடன் , கடந்த நவம்பர் 13 ஆம் தேதி தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அவர்களுக்கு மக்கள் கண்காணிப்பகம் ஒரு அவசரக் கடிதம் அனுப்பியது. அதில் காவல் ஆய்வாளரை இடமாற்றம் செய்தது போதுமானது அல்ல என்று நாங்கள் கருதுகிறோம். எனவே திட்டமிட்டு அழிக்கப்பட்டு வரும் அனைத்து ஆதாரங்களையும் பாதுகாக்கும் நோக்கில் மற்றும் இந்த வழக்கின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம்.

இந்த வழக்கின் முக்கியமான இடங்களில், வேண்டுமென்றே அலட்சியபோக்குடன் அதிகாரிகள் நடந்துள்ளதை மக்கள் கண்காணிப்பகத்தின் உண்மை கண்டறியும் குழு நேரிடையாக அடையாளம் கண்டுள்ளதால், நியாயமான விசாரணையை மேற்கொள்ள மக்கள் கண்காணிப்பகம் கீழ்க்கண்டவற்றைப் பரிந்துரைக்கிறது:

குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் மகேஸ்வரி அவர்கள் ஒரு பொறுப்புள்ள மருத்துவ அதிகாரியாகத் தனது கடமையை நிறைவேற்றுவதில் மிகுந்த அலட்சியம் காட்டியுள்ளார். குறிப்பாகக் கைதுசெய்த பின், சிறையில் அடைப்பதற்கு முன் ஆகிய இரண்டு நிலைகளிலும் பதிவு செய்ய வேண்டிய முக்கியமான மருத்துவக் காரணங்களைப் பதிவு செய்யவில்லை.

இதற்கு மாறாகப் பல்வேறு காயங்களால் பாதிக்கப்பட்டிருந்த செல்வமுருகனைச் சிறையில் அடைக்க மருத்துவ ரீதியாகத் தகுதியானவர் என்று சான்றிதழ் அளித்துள்ளார். எனவே நவம்பர் 13, 2020 அன்று இரவு 10 மணியளவில், டாக்டர் மகேஸ்வரி நடத்திய மருத்துவ பரிசோதனை குறித்து கடலூர் மாவட்ட சுகாதாரத் துறையின் இணை இயக்குநர் உடனடியாக மருத்துவர்கள் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்துமாறு பரிந்துரைக்கிறோம். கால தாமதமின்றி அடுத்த மூன்று நாட்களுக்குள் தேவையான விசாரணையை முடித்து, அந்த அறிக்கையை சிபிசிஐடி போலீசாருக்கு அளிக்க பரிந்துரைக்கின்றோம்.

விருதாச்சலம் கிளைச் சிறைச்சாலையினுடைய கண்காணிப்பாளரின் நடவடிக்கை குறித்து கடலூர்- சிறைத்துறை டி.ஐ.ஜி அவர்கள் விசாரணை நடத்த வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் பரிந்துரைக்கிறது, செல்வ முருகனின் இடது குதிகால் மீது ஏற்பட்ட இரத்தப்போக்கு காயம் உட்பட அனைத்து காயங்களையும் பார்த்தபின், அதற்குரிய மருத்துவ வசதிகள் விருதாச்சலம் கிளைச் சிறைச்சாலையில் இல்லாத போதிலும் அவரை அச்சிறையில் அடைத்தது ஏன்? விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் ஏன் அனுமதிக்கப்படவில்லை? எனவே டிஐஜி அவர்கள் உடனடியாக அடுத்த மூன்று நாட்களுக்குள் விசாரணையை முடித்து அதன் அறிக்கையை சிபிசிஐடிக்கு அளிக்க பரிந்துரைக்கின்றோம்.

இறந்து போன செல்வமுருகனின் முதற்கட்ட உடற்கூராய்வு அறிக்கை மற்றும் வீடியோ பதிவுகளை உடனடியாக 24 மணிநேரத்தில் வழங்க கடலூர் மாவட்ட ஆட்சியர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மக்கள் கண்காணிப்பகம் அவசர வேண்டுகோள் விடுக்கிறது. மேலும் இறந்தவரின் மனைவி பிரேமாவுக்கு அதை வழங்க வேண்டும். இதன் மூலம் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்.

செல்வா முருகனின் உடலை இன்னும் அவரது குடுமபத்தினர் வாங்கவில்லை.சவக்கிடங்கில் பராமரிக்கப்பட்டு வருகிறது. உடற்கூராய்வு அறிக்கை மற்றும் வீடியோ பதிவுகளை மருத்துவ நிபுணர் குழு முழுமையாக ஆராயும் வரை உடலை வாங்குமாறு அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்ககூடாது என்று பரிந்துரைக்கின்றோம்.

டாக்டர் மகேஸ்வரி அவர்கள் மனசாட்சியுடன் நடந்திருந்தால் செல்வமுருகனுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் உயிர் பிழைத்திருக்கக் கூடும். இவ்வாறு செய்யத் தவறிய டாக்டர் மகேஸ்வரி மீது குற்றவியல் நடுவர் மூலம் முறையான விசாரணை நடத்த மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் உத்தரவிட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றோம்.

காவல் மரணமடைந்த செல்வமுகனின் மனைவி பிரேமா, அவரது மகன் மற்றும் மகள், மன்மதன் மற்றும் லீலா மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகள் அனைவர்க்கும் சாட்சிகளைப் பாதுகாக்கும் திட்டம் 2019இன் அடிப்படையில் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், [இதற்கு முன் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் இருந்தவர்] மற்றும் டி.எஸ்.பி-இன் குற்றப் பிரிவு சிறப்பு விசாரணைக் குழுவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் மூலம் இந்த வழக்கின் சாட்சிகளுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படக்கூடாது. சாட்சிகளைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பான மாவட்டக் குற்றவியல் நீதிபதி, மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் இதை உறுதிப்படுத்த வேண்டும்.

சட்டவிரோத தடுப்புக்காவல் மற்றும் காவலில் சித்திரவதை காரணமாக ஏற்பட்ட இந்த மரணத்தின் காரணமாக மட்டுமே தங்களது ஒரே உணவுப்பொருளை இழந்த பிரேமாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக ரூ .20 லட்சம் செலுத்த வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் கோருகிறது. சாத்தான்குளத்தின் தந்தை மற்றும் மகன் காவலில் வைக்கப்பட்ட மரணம் மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அன்னைகரை முத்து ஆகியோரின் காவலில் மரணம் மற்றும் வனத்துறையின் கைகளில் சித்திரவதை செய்யப்பட்டதன் விளைவாக செய்யப்பட்டது. இந்த வழக்கில் செல்வா முருகனின் மனைவி பிரேமா, பட்டதாரி, உடனடியாக தனது தகுதிக்கு போதுமான அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்று பி.டபிள்யூ மேலும் கோருகிறது, அதே நேரத்தில் இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணைகள் தொடர்கின்றன, சாத்தான்குளம் வழக்கில் அரசு மேற்கொண்டது போல தமிழ்நாடு.

சாத்தான்குளம் காவலில் வைக்கப்பட்ட கொலை வழக்கை மாண்புமிகு மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஒரு சூ மோட்டோ பி.ஐ.எல் ஆக எடுத்துக் கொண்டது மற்றும் டி.ஜி.பி மற்றும் தலைமைச் செயலாளர் தமிழ்நாட்டை வழிநடத்தும் அவர்களின் பிரபுக்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் பீப்பிள்ஸ் வாட்ச். இத்தகைய காவலில் வைக்கும் வன்முறைகளைத் தவிர்ப்பதற்கு போதுமான தரங்களுடன் வெளியே வரவும், தலைமைச் செயலாளரும் டி.ஜி.பியும் குறைந்தபட்சம், எந்த தாமதமும் இன்றி, தமிழக அரசின் சுகாதாரத் துறையின் மூத்த செயற்பாட்டாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்.

சிறைத்துறை, காவல்துறை, மாநில காவல்துறை அறுவை சிகிச்சை நிபுணர், அரசு வக்கீல், மாநிலத்திற்குள் இருந்து மூத்த தடயவியல் நிபுணர்கள், மாநில மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைகள் அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் மற்றவர்கள் இதுபோன்ற விஷயங்களில் நிபுணத்துவமும் அனுபவமும் கொண்டவர்கள். பொலிஸ் நிலையங்களில் காவல்துறையினரால் மட்டுமல்லாமல், பின்பற்றப்பட வேண்டிய தரநிலைகள் தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களைக் கீழ்க்கண்டவாறு மக்கள் கண்காணிப்பகம் பரிந்துரைக்கிறது:

காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்கள் அவ்வப்போது கால இடைவெளியில் கண்காணிக்கப்பட வேண்டும். கண்காணிப்பு அறிக்கைகளின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சிறையில் அடைக்கும் முன் குற்றம் சாட்டப்பட்டவரின் உடற்தகுதி பற்றிய மருத்துவச் சான்று மருத்துவத் தரநிலைகளைப் பின்பற்றியிருக்க வேண்டும். 

பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிறுவனங்களின் பொறுப்பான அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் உடல் தகுதி அடிப்படையில் சிறையில் அனுமதிக்க மறுத்தல் அல்லது சேர்த்தல் போன்றவற்றில் பின்பற்ற வேண்டிய தரநெறிமுறைகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அருகிலுள்ள மாவட்ட அரசு மருத்துவமனை அல்லது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து போதுமான மருத்துவ சிகிச்சை வழங்கப்படுதல் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும்

குற்றம் சாட்டப்பட்டோரைக் காவல் நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கும், அங்கிருந்து நீதிமன்றத்திற்கும் பின்னர் சிறைச்சாலைக்கும் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவினை அரசே ஏற்கும் நடைமுறை பின்பற்றப்படவேண்டும்.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மட்டுமல்லாமல், சட்டவிரோத மரணத்தை விசாரிப்பதற்கான மினசோட்டா நெறிமுறை (2016) மற்றும் கையேட்டில் உள்ள, கூடுதல் சட்ட, தன்னிச்சையான மற்றும் தண்டனைச் சுருக்கம் மற்றும் 1999 'சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவுபடுத்தும் சிகிச்சை அல்லது தண்டனையின் விசாரணை மற்றும் ஆவணப்படுத்தல் குறித்த திருத்தப்பட்ட ஐக்கிய நாடுகளின் கையேடு அல்லது பொதுவாக “இஸ்தான்புல் நெறிமுறை” என அழைக்கப்படும் இவற்றை உடற் கூர்றாய்வு மேற்கொள்ளும்போது பின்பற்ற வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல் சித்திரவதை செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்காக நீதிபதிகள் முன் நேர் நிறுத்தும் போது குற்றவியல் நடுவர் இதுகாறும் எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் பரவலாகப் பதிவாகியுள்ளன என்ற உண்மையைப் பார்க்கும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் அடைக்க உத்தரவிடும் போது கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய குற்றவியல் நடைமுறைச் சட்டம், தமிழ்நாடு குற்றவியல் விதிகள்- 2019, அவ்வப்போது வெளியானஉச்சநீதிமன்றத் தீர்ப்புகள், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றைக் குற்றவியல் நடுவர் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதைக் கட்டாயமாக்குதல் அவசியமாகும்.

மேற்கூறியவற்றை குற்றவியல் நடுவர்களுக்கு விழிப்புணர்வுடன் நினைவூட்ட தமிழ்நாடு நீதித்துறை அகாடமி, மற்றும் அதன் பிராந்திய நீதித்துறை அகாடமிகளின் உதவியுடன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூலம் இணைய வழியில் பயிற்சி அளிக்க பரிந்துரைக்கிறோம்.

குறிப்பாக நீதித்துறையில் உள்ள பெண் நீதிபதிகளைக் கருத்தில் கொண்டு ரிமாண்ட் நேரத்தை வரையறை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான காவல் சித்திரவதை வழக்குகளில் இது நிச்சயமாக வரவேற்கத்தக்க ஒரு நடவடிக்கையாகும், மேலும் பெரும்பாலான சித்திரவதை வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் ரிமாண்ட் மிகவும் தாமதமாக நள்ளிரவுக்கு முன் அல்லது பின் நடைபெறுகிறது.

இதுபோன்ற நேரங்களில் பெண் | ஆண் நீதிபதிகள் வீட்டு உடையில் இருப்பதால் வழக்கமான பணிகளை மேற்கொள்வதில் இயல்பாகவே சிரமம் காணப்படுகிறது. எனவே விதிவிலக்கான அவசர வழக்குகளை காலை ஏழு மணிக்கு முன், இரவு ஏழு மணிக்குப் பின் ரிமாண்ட் செய்யவும், பிற வழக்குகளை காலை 10:30 மணிக்கு நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்ய பரிசீலிக்குமாறு மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியை வேண்டுகிறோம். இதன் மூலம் ரிமாண்ட் நேரத்தில் பின்பற்ற வேண்டிய அனைத்து நடைமுறை ஆணைகளையும் குற்றவியல் நடுவர்கள் பின்பற்ற ஒரு தெளிவான வாய்ப்பு கிட்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்ட நேரம், ரிமாண்ட் செய்யப்பட்ட நேரம் ஆகியவற்றைக் காவல் நிலையத்திற்குப் பொறுப்பான அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்ற சிறப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளுக்குத் தமிழ் நாடு காவல்துறை இயக்குநர் அல்லது தலைமை அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் பரிந்துரைக்கிறது.

இதற்கு விதிவிலக்காக அவசர அல்லது முக்கிய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரை இரவு நேரங்களில் ரிமாண்ட் செய்ய நேரிட்டால் அதை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்ற பின் ரிமாண்ட் செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் காவல் சித்திரவதையும், சட்ட விரோதக் காவலும் முன்னெப்போதை யும் விட நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைச் சமீப காலமாகக் காண முடிகிறது என்பதை மக்கள் கண்காணிப்பகம் நேர்மையுடன் இங்கே சுட்டிக் காட்டுகிறது. மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் அல்லது காவல் ஆணையர்கள் போன்றோர் தங்கள் கடமை தவறிக் கவனக்குறைவாகச் செயல்படுவதே இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

இவர்கள் அனைவராலும் விரிவான, தரமான உளவுத்துறை தகவல்களை அணுக முடியும், அதற்காகக் காவல் நிலையங்களின் பல்வேறு புலனாய்வுப் பிரிவுகள் கீழ் மட்டத்தில் காவல் நிலைய அளவிலும், மேல் மட்டத்தில் மாநில அளவிலும்செயல்படுகின்றன. காவல் சித்திரவதை, சட்ட விரோதக் காவல் ஆகியவற்றை மட்டுப்படுத்த ஒவ்வொரு காவல் நிலையத்தையும் கண்காணித்துக் காவல்துறை உதவி இயக்குநர் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்) அவர்களுக்கு மாவட்ட/ மாநிலப் புலனாய்வுப் பிரிவினர் தகவல் அளிக்க மாநிலப் புலனாய்வுத் தலைவர் வழிகாட்ட வேண்டும் என்ற நெறிமுறையை தமிழ் நாடு காவல்துறை இயக்குநர் உருவாக்கி உத்தரவிட வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் பரிந்துரைக்கிறது. இதன் மூலம் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் கடந்த காலங்களை விட மிகவும் தீவிரமாகத் தங்கள் மேற்பார்வைப் பணிகளை மேற்கொள்வதை இது உறுதி செய்ய முடியும். காவல் சித்திரவதை, சட்டவிரோதக் காவல் ஆகியவற்றை முன்பை விட உடனுக்குடன் தடுத்து மட்டுப்படுத்த முடியும்.

தமிழ் நாட்டில் நன்கு நிறுவப்பட்ட சட்ட உதவி ஆணையங்கள் மாநில, மாவட்ட, தாலுகா மட்டங்களில் உள்ளன. கூடுதலாக சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்திற்கான சிறப்புக் குழுக்கள் அவற்றுக்கு உதவுகின்றன. ஆகவே, சட்ட உதவி ஆணையத்தின் ஒவ்வொரு பிரிவும் 3 வழக்கறிஞர்களைக் கொண்ட ஒரு குழுவை நியமிக்க அறிவுறுத்த வேண்டும். அவர்களுள் ஒருவர் மூத்த வழக்கறிஞராகக் குறைந்தது பத்து ஆண்டுகள் குற்றவியல் நீதிமன்ற அனுவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

மின்னணு ஊடகங்களில் அல்லது சமூக வலைத்தளங்களில் அல்லது சட்ட உதவி மையங்கள் மூலமாக காவல் சித்திரவதை தொடர்பாக சேதி பெறப்படும்போது இவ்வழக்கறிஞர்கள் உண்மை கண்டறியும் குழுவாகச் செயல்பட வேண்டும். கண்டறிந்த உண்மைகளின் அடிப்படையில் இரவிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பகலில் மட்டுமல்லாது இரவிலும் பாதிப்புற்ற மக்களுக்குத் தோள் கொடுத்து உதவிட வேண்டும். எந்நேரமும் சட்ட உதவி ஆணையம் உதவும் கரமாக இருக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

காவல்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளின் காவல் வன்முறை, சட்டவிரோதக் காவல் போன்றவற்றால் பாதிக்கப்படுவதை மட்டுப்படுத்த இதுபோன்ற தீர்மானிக்கப்பட்டத் தடுப்பு நடவடிக்கை சட்ட உதவி ஆணையத்தால் உருவாக்கப்பட வேண்டும். இதுபோன்ற உடனடி நடவடிக்கைகள் தான் பிற்காலத்தில் கீழமை நீதிமன்றங்களிலும், உயர் நீதிமன்றங்களிலும் பல சட்டரீதியான தலையீடுகளுக்கு முன்னுதாரணமாய்த் திகழும்.

சட்ட உதவி ஆணையம் சார்பில் சட்டப் பயிற்சியை இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்யாத இளம் வழக்குரைஞர்களை ஒரு மாத காலத்திற்கு நியமனம் செய்து காவல் நிலையங்களைக் கண்காணிக்கச் செய்ய வேண்டும். அவர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தது மூன்று முறை காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட வேண்டும்.

அப்போது காவல் நிலையக் காவலில் உள்ளோரை நேரில் சந்தித்து அவர்கள் பற்றிய நிலையை அறிய வேண்டும். அவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மூத்த வழக்கறிஞர் உதவியுடன் சட்ட உதவி ஆணையம் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். காவல் நிலைய சுற்றுச்சுவருக்கு உள்ளேயும், வெளியேயும் சட்ட உதவி ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள இளம் வழக்குரைஞர்களின் புகைப்படம், கைபேசி எண் இடம் பெற வேண்டும். இதன் மூலம் காவலில் உள்ளோரின் குடும்பத்தினர் எளிதாக வழக்குரைஞர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள முடியும். இதன் மூலம் காவல் நிலைய சிசிடிவி பதிவுகளின் தேவையைத் தவிர்க்க முடியும்.

- மக்கள் கண்காணிப்பகம்