modi nithishkumarநடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் பிஜேபி கூட்டணி தோற்றுவிடும் என்றே பெரும்பாலான மக்கள் எண்ணினார்கள். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கையற்ற சிலர் மட்டுமே பிஜேபி வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்து வென்றுவிடும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பீகாரின் அரசியல் களத்தில் பிஜேபி செய்துக் கொண்டிருந்த சாதிய, மதவாத செயல்திட்டங்களை நன்கு அறிந்து வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே நிச்சயம் தெரிந்திருந்தது பிஜேபியின் வெற்றி என்பது உறுதியானது என்று.

லாலுபிரசாத்தும் நிதிஷ் குமாரும் தன்னை பிற்படுத்தப்பட்ட மக்களின் நலம் விரும்பிகளாக காட்டிக் கொண்டாலும் நிதிஷ் குமார் குர்மி சமூகத்தை சேர்ந்தவராவர். முக்கியமான பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக குர்மிக்கள் இருந்த போதும் யாதவர்களுடன் ஒப்பிடும்போது எண்ணிக்கையில் குறைவாகவும் அதிகாரமற்றவர்களாகவுமே பீகாரில் இருந்தனர். இதன் காரணமாக நிதிஷ் குமார் லாலுவிடமிருந்து பிரிந்து பிற்பட்ட சாதியினர் மட்டுமே கொண்ட ஒரு ஆதரவு மையத்தை உருவாக்கிக் கொண்டார்.

இதற்கு அடுத்து எண்ணிக்கையில் பெரும்பான்மையானவர்களாக இருந்த யாதவர்கள் இந்துத்துவத் திட்டத்துடன் தொடர்புப்படுத்தியே தங்களை எப்போதும் அடையாளப்படுத்திக் கொண்டனர். உண்மையில் பீகாரில் பகல்பூரில் நடந்த கலவரங்களையும் சேர்த்து இசுலாமியர்களுக்கு எதிராக எழுந்த மோதல்களிலெல்லாம் யாதவர்களே முன்னிலை வகித்தனர்.

பிஜேபி பசு பாதுகாப்பினைப் பற்றி பேசியதும், மதுராவை தங்களின் அரசியல் திட்டத்தில் சேர்த்துக் கொண்டதும், கிருஷ்ணனுக்கு முன்னுரிமை கொடுத்ததும் அவர்களை பிஜேபிக்கு இணக்கமான மனநிலையில் கொண்டுவந்து நிறுத்தியது.

உபி தாத்ரியில் முகமது அக்லக் என்ற இஸ்லாமியர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக 2015 ஆண்டு செப்டம்பர் மாதம் அடித்துக் கொல்லப்பட்டார். இதை வைத்து பிஜேபி பீகாரில் அரசியல் செய்ய முற்பட்ட போது லாலு பிரசாத் இந்துக்களிலும் மாட்டிறைச்சி உண்போர் உள்ளனர், எனவே இவ்விவகாரத்தை இனவாதப் பிரச்சினையாக உருவாக்க வேண்டாம் என பிஜேபியை எச்சரித்தார்.

இதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு லாலுவின் கட்சி பசுவதையையும், மாட்டிறைச்சி உண்பதையும் ஆதரிக்கின்றது என்றும் இதன் மூலம் லாலு யாதவர்களை இழிவுபடுத்திவிட்டார் எனவும் பரப்புரை செய்தார்கள். மோடியும் இதையே திரும்பத் திரும்ப பேசினார். இது கொஞ்சம் கொஞ்சமாக பீகாரில் பிஜேபியின் கரத்தை வலுப்படுத்தியது.

இஸ்லாமியர்களுக்கு எதிரான சிந்தனைப்போக்கு வளர்வதைக் கண்டு அச்சமடைந்த நிதிஷ் குமார் கூட தன்னை இஸ்லாமிய மக்களின் பிரதிநிதி என்ற சொல்லிக்கொள்ள அச்சப்பட்டார்.

2015 ஆண்டு தேர்தலை முற்படுத்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் தேர்தலாக மாற்ற லாலு பிரசாத் முயன்ற போது அதனை பிஜேபி இந்து முஸ்லிம் தேர்தலாக மாற்ற முயற்சித்தது. தேர்தலில் பிஜேபி தோற்றால் தீபாவளி பண்டிகை பாகிஸ்தானில் கொண்டாடப்படும் என அமித்ஷா மதவெறியை கக்கினார்.

இப்படி யாதவர்களை மதரீதியாக இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தூண்டிவிட்டும், நிதிஷின் கைவசம் ஏற்கெனவே வலுவாக உள்ள குர்மி சமூகத்தின் வாக்குகளை உறுதிப்படுத்தியுமே பிஜேபி நிதிஷ் கூட்டணி வென்றிருக்கின்றது.

இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது அதில் ஐக்கிய ஜனதா தளம் 43, பா.ஜ.க 74 வி.ஐ.பி. ஹெச்.ஏ.எம். போன்றவை தலா 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

மகாகட்பந்தன் கூட்டணியில் ஆர்.ஜே.டி. - 75, காங்கிரஸ் -19, இடதுசாரிகள் – 16 தொகுதிகளிலும் வென்று மொத்தம் 110 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அசாதுதீன் ஓவைஸியின் அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமீன் கட்சி (AIMIM) ஐந்து இடங்களையும், மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தலைமையிலான லோக்ஜனசக்தி ஒரு இடத்தையும் மற்ற கட்சிகள் 8 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

ஒரு பக்கம் பிஜேபி கூட்டணி வென்றிருந்தாலும் இன்னொரு பக்கம் நம்பிக்கையளிக்கும் வகையில் சி.பி.ஐ, சி.பி.எம், சி.பி.எம் (எல்) ஆகிய மூன்று கம்யூனிஸ்ட் கட்சிகளும் 29 இடங்களில் போட்டியிட்டு 16 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது பீகாரில் பாசிசத்துக்கு எதிரான உழைப்பாளர்களின் எழுச்சியையே காட்டுகின்றது.

ஒருவேளை கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிகப்படியான தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தால் கூடுதலான இடங்களில் அது வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகளை வெறும் ஊறுகாய்கள் போல பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் கார்ப்ரேட் கட்சிகளின் ஆண்டை மனோபாவம்தான் இன்று அதன் சறுக்கலுக்கும் காரணமாக அமைந்திருக்கின்றது.

ஆனால் சில அரசியல் விஞ்ஞானிகளோ ஏன் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பதைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் மகா கட்பந்தன் கூட்டணியின் தோல்விக்கு அசாதுதீன் ஓவைஸியின் மீது குற்றச்சாட்டுகளை வைக்கின்றார்கள்.

அந்தக் கட்சி சீமாஞ்சல் பகுதியில் 5 தொகுதிகளில் வென்றிருக்கிறது. சீமாஞ்சல் கணிசமாக உள்ள முஸ்லிம்கள் மற்றும் யாதவ சமூகத்தின் வாக்குகளை அவர் பிரிக்காமல் இருந்திருந்தால் மகா கட்பந்தன் கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் என ஆரூடம் சொல்கின்றார்கள்.

ஆனால் ஓவைஸியோ “ உபா சட்டத்தில் பாஜக கொண்டுவந்த திருத்தத்தை காங்கிரஸ் ஆதரித்ததையும் ஏற்கெனவே “மகா கட்பந்தன் கூட்டணியில் இருந்த நிதிஷ் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு என்ன காரணம் என்றும், இந்துத்துவ கட்சியான சிவசேனாவுடன் மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருப்பதின் யோக்கியதையும்” “பிஹார் தேர்தலில் மகா கட்பந்தனின் தோல்விக்கு நாங்கள் காரணம் என்றால் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு என்ன காரணம்?” என்று கேள்வி கேள்வி எழுப்பி காங்கிரசு கூட்டணியின் கையாலாகதனத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

இஸ்லாமிய மக்கள் ஓவைஸியை நம்பும் அளவுக்கு காங்கிரசையோ, ஆர்.ஜே.டியோ தற்போது நம்பவில்லை என்பதைத்தான் உண்மை நிலவரம் காட்டுகின்றது. மேலும் காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை என்பதற்காகவே மற்ற கட்சிகளை குற்றம் சொல்வது அருவருக்கத்தக்க செயல்படாகும்.

தோற்றுப் போனதற்கு காங்கிரசின் ஓட்டாண்டித்தனத்தைப் பற்றி பேசாமல் அடுத்தவர்கள் மீது பழியைப் போட்டு தப்பித்துக் கொள்வது எந்த வகையிலும் கட்சியை வளர்க்க உதவப்போவதில்லை. இந்தியா முழுவதும் காங்கிரசு கட்சி அழிவை நோக்கி செல்கின்றது என்பதைத்தான் நாம் கடந்த பல தேர்தல்கள் மூலம் கண்டு வருகின்றோம்.

ஒருவேளை ஓவைசி காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்தால் அது நினைப்பது போல நடந்திருக்கலாம் ஆனால் அந்த வெற்றி ஓவைசி மூலம் கிடைத்த வெற்றியாக இருந்திருக்குமே ஒழிய காங்கிரசால் கிடைத்த வெற்றியாக இருந்திருக்காது.

ஆனால் பீகாரில் ஏற்கெனவே பிஜேபி பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் விதைத்து வைத்திருக்கும் இஸ்லாமிய வெறுப்பு அதற்கு நிச்சயம் இடம் கொடுத்திருக்காது என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். அதற்கு சாட்சி ஓவைசி இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருப்பதுதான்.

20 தொகுதிகளில் போட்டியிட்ட ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் 5 தொகுதிகளைப் மட்டுமே கைப்பற்றியுள்ளது. ஆனால் காங்கிரஸ் போட்டியிட்ட 70 இடங்களில் வெறும் 19 இடங்களில் மட்டுமே வென்றிருக்கின்றது. மேலும் ஏஐஎம்ஐஎம் 8க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 4ஆவது இடத்தையே பிடித்திருக்கின்றது. அதனால் மகா கட்பந்தனின் தோல்விக்கு முழு பொறுப்பும் காங்கிரஸை மட்டுமே சாரும்.

பிஜேபியின் சாதிய, மதவாத அரசியலை எதிர்கொள்ளும் எந்த திராணியும் அற்ற கட்சியாக காங்கிரஸ் இருக்கின்றது. பிற்பட்ட சாதிகளையும், தலித்துகளையும் பிஜேபியால் வென்றெடுக்க முடியாதபடி அவர்களை கோட்பாடு ரீதியாக வென்றெடுத்தால் மட்டுமே பிஜேபியின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட முடியும். ஆனால் அடிப்படையில் அப்படியான எந்த கோட்பாட்டு வலிமையும் அற்ற ஒரு மிதவாத இந்துத்துவா கட்சியாகவே காங்கிரஸ் உள்ளது.

உண்மையில் பிஜேபிக்கு மாற்றாக வலிமையான கட்சியை நாம் உருவாக்க வேண்டும் என நினைத்தால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கரங்களை வலிமையாக்குவதுதான் ஒரே வழி. திரும்பத் திரும்ப மாநில கட்சிகள் காங்கிரஸை நம்பி கரை சேர நினைப்பது நிச்சயம் அழிவுப்பாதைக்கே கொண்டு செல்லும்.

- செ.கார்கி