கால்நடை வளர்ப்பில் பெண்களின் பங்கை விட ஆண்களின் பங்கே அதிகமாக இருந்தது. மேய்ச்சலுக்காகக் கால்நடைகளைத் தொலைவிடங்களுக்கு ஓட்டிச்சென்று மேய்ப்பது, இரவு நேரங்களில் அங்கேயே கிடையமர்த்திக் காவல் காப்பது முதலிய வேலைகளை ஆண்களே செய்தனர். கால் நடைகளைக் கொடிய காட்டு விலங்குகள் தூக்கிச் செல்லாதவாறு விழிப்புடன் பாதுகாக்கும் பணியையும் ஆண்களே மேற்கொண்டனர்.

maleஇரவு நேரங்களில் ஆடுகளும் மாடுகளும் காடுகளில் கிடையமர்த்த்பட்டமை குறித்தும் இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன.

‘ஒன்றமருடுக்கைக் கூழாரிடையன்
கன்றமர் நிரையொரு கானத்தல்கி’ என்று

இடையர்கள் இரவில் கானகத்தில் பசுக்களைக் கிடையமர்த்திக் காவல் காத்தமை குறித்துப் பெரும்பாணாற்றுப்படை (175 - 176) பேசுகிறது. ‘தகர்விரவு துருவை வெள்ளையொடு விரை இக் கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும் பல்யாட்டின நிரை’ என்று ஆடுகள் இரவில் காட்டில் கிடையமர்த்தப் பட்டமை குறித்து மலை படுகடாம் (414 - 416) கூறுகிறது.

பாசிலைதொடுத்த உவலைக் கண்ணி
மாசூணுடுக்கை மடி வாயிடையன்
சிறுதலை யாயமொடு குறுகல்செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலம் ‘என்று புறநானூறு (54) கூறுகிறது.

இரவு நேரத்தில் காட்டில் கிடையமர்த்தப் பட்டுள்ள கால்நடைகளைக் கொடிய விலங்குகள் தூக்கிச் சென்று விடாதபடி இடையர்கள் கிடையைச் சுற்றித் தீயை வளர்த்துக் காவல் காத்தனர். இதனை,

‘துய்ம்மயிரடக்கிய சேக்கையன்ன
மெய்யுரித்தடக்கிய மிதிய தட்பள்ளித்
தீத்துணையாகச் சேந்தனிர்கழிமின்’

(மெல்லிய தலைமயிரையுடைய சேணமிட்ட படுக்கையை யொத்த ஆடுகளின் மெய்யை உரித்து ஒன்றாகத் தைத்த வார் மிதித்த தோற்படுக்கையிலே, கொடிய விலங்குள் வாராதபடி இடையர் நெருப்பு வளர்த்துக் தங்கியுள்ளனர். அவர்கள் துணையாகத் தங்கிச் செல்வீர்களாக) என்று மதுரைக் காஞ்சி (418 -20) கூறுகிறது.

காடுகளில் கிடையமர்த்தப்பட்ட ஆநிரைகளையும் ஆட்டுநிரைகளையும் வெட்சி சூடி வந்;த வேற்றுப்புலத்தார். கவர்ந்து செல்லாதவாறு பாதுகாக்கும் பணிகளிலும் ஆடவரே ஈடுபட்டிருந்தனர். அப்போது நிகழ்ந்த போர்களில் அவர்கள் தம் உயிரையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டனர். இப்போர்கள் வெட்சிப் போர் என்றும் கரந்தைப் போர்என்றும்குறிப்பிடப்பட்டன.சங்க காலத்தில் கால்நடைகளுக்காக நடைபெற்ற இப்போர்கள் குறித்தும் போரில் வீரர்கள் உயிர் நீத்தது குறித்தும் சங்க இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. அது குறித்து முன்னர்க் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு, ஆண்களின் உழைப்பாலும் பாதுகாப்பு முயற்சிகளாலும் சமூகத்தில் கால்நடைச் செல்வம் பெருகியது. அதனால் மக்களின் வாழ்க்கை முன்னிலும் மேம்பட்ட நிலையினை அடைந்தது. கால்நடைகள் சமூகத்தின் முக்கியமான செல்வமாயின.

‘கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றையவை’ - குறள் (400) என்று வள்ளுவரும் செல்வத்தைக் குறிப்பதற்கு மாடு என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது நோக்கத்தக்கது. சமூகத்தில் கால்நடைச் செல்வம் பெருகியது. அப்பெருக்கத்துக் காரணமாக ஆண் இருந்தான்.

பாலுக்கு உறைதெளித்தல், விடிகாலைப்பொழுதில் தயிர்கடைதல், வெண்ணெய் எடுத்தல், நெய்யுருக்குதல், பாலும் தயிரும் மோரும் நெய்யும் விற்றுப் பண்ட மாற்றாக நெல்லும் எருமைக் கன்றும் வாங்கிவருதல் முதலிய வேலைகளோடு பெண்ணின் பணி முடங்கி விட்டது. இதனைப் பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. இவ்வாறு கால்நடை வாள்ப்பில் பெண்ணின் பணி வீட்டோடு முடங்கி விட்ட நிலையில், ஆண் வெட்சிசூடி நிரை கவர்தலும் கரந்தை சூடிநிரை மீட்டலும் ஆகிய போர்ச்செயல்களில் ஈடுபட்டுச் சமூகத்தின் கால்நடைச் செல்வத்தைப் பெருக்கிப் பாதுகாத்து வரலானான்.

கால்நடைகளின் பெருக்கத்துக்கு ஆண்காரணமாக இருந்தான். அதனால் சமூகத்தில் ஆணின் கை ஓங்கியது. நிலை உயர்ந்தது. அந்தஸ்து மேம்பட்டது. இங்கு ‘கால்நடைவளர்ப்பு தந்தைவழிச் சமுதாயத்தை ஏற்படுத்தியது. அது ஆணின் ஆதிக்கத்திற்கும் தனிச் சொத்துடைமைக்கும் வழி கோலியது’ என்று பேரறிஞர் ராகுல்ஜி அவர்கள் கூறியிருப்பது நம் கவனத்துக்குரியதாகிறது. (நூல் : மனித சமுதயாம் : ராகுல்ஜி)

உண்டாட்டு

வெட்சி கரந்தைப் போர்களில் ஈடுபட்டு வென்று மீண்ட வீரர்களைப் பெருமைப் படுத்துவதற்காக ஊரவர் உண்டாட்டு நிகழ்த்திக் கொண்டிடாடிய நிகழ்வுகளைச் சங்க இலக்கியங்கள் சுவைபடப் பேசுகின்றன. உண்டாட்டு நிகழ்வுகளின் போது வீரர்கள் பாராட்டப்பட்டனர், மதித்துப் போற்றப்பட்டனர். ஊரே திரண்டு ஒப்பனைசெய்து புதுக்கோலம் புனைந்து புத்துணவு சமைத்து மதுப்பிழிந்து விடை வீழ்த்தி வெற்றி வீரர்களைப் பாராட்டியது. இது குறித்துத்த பாடல் வருமாறு :

‘நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின்
பாசுவலிட்ட புன்காற் பந்தர்ப்
புனல் தருமிள மணல் நிறையப் பெய்மின்
ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று
நிரையெடு வரூஉ மென்னைக்கு
உழையோர் தன்னினும் பெஞ்சாயலரே’

(மதுவையும் அலைத்துண்ணும்படி பிழிமின் : ஆட்டு விடையையும் படுமின், பசிய தழையாலே வேயப்பட்ட புல்லிய காலையுடைய பந்தரின் கீழ் நீர் கிழித்துக் கொண்டுவரப்பட்ட இளைய மணலை நிரம்பப் பரப்புமி;ன். பகைவரது தூசிப்படையினை முறித்துப் பெயர்ந்து போதுகிற தனது படைக்குப் பின்னே நின்று நிரையுடனே வருகின்ற என் இறைவனுக்குப் பக்க மறவராய் நிரை கொண்டு வருவோர் அவனினும் பெரிய இளைப்பையுடையர்) என்று, வீரர்கள் உண்டாட்டு நிகழ்த்திப் பாராட்டப் பட்டதைப் புறநானூறு (262) கூறுகிறது.

ஆண்கள் வெட்சிப்போர் உடற்றி வெற்றி பெற்று வேற்றுப்புலத்தாரது ஆநிரைகளைக் கவர்ந்து வந்து தம் கணத்தின் கால் நடைகளைச் செல்வங்களைப் பெருக்கினார்கள். அதன் பொருட்டே ஊரவர் உண்டாட்டு நிகழ்த்தி வீரரை மகிழ்வித்தனர் என்பதை இங்கு நாம் காண்கிறோம். சமூகத்தின் செல்வத்தைப் பெருக்கும் செயலில் ஈடுபட்ட ஆண் அனைவராலும் மதிக்கப்படும் நிலையை எய்தினான். சமூகத்தின் தலைமையிடத்தில் இருந்த பெண் படிப்படியாகப் பின்னுக்குத்தள்ளப்படுகிறாள். ஆண் முன்னிலைக்கு வருகிறான். இதனை இந்நிகழ்வுகள் தெளிவாக உணர்த்துகின்றன.

ஆணாதிக்கம் தலைதூக்கியது. பெண் பின்னுக்குத்தள்ளப்பட்டாள், தனியுடைமைச்சிந்தனை தோற்றம் கொள்ளலாயிற்று. இது வரையிலும் (கண சமூகத்தின் செல்வம் கட்டுக்குள் இருந்தவரையில்) வெட்சி வீரன் வேற்றுப்புலம் சென்று போருடற்றித் தான் கவர்ந்து வந்த ஆநிரைகள் மீது உரிமை ஏதும் கெண்டாடவில்லை.அவன் தான் கவர்ந்து வந்த ஆநிரைகள் அனைத்தையும் கண சமூகத்துக்கே பொதுவாக ஆக்கினான். இது குறித்து முன்னர்க் கூறப்பட்டுள்ளது.

ஆண் ஆதிக்கம் தலையெடுத்தல்

காலவோட்டத்தில் சமூகத்தின் செல்வ நிலை உயர்ந்தது. கால்நடைகளும் உணவு தானியங்களும் உபரி நிலையை எட்டின. இந்நிலை ஏற்பட ஆணே காரணமாக இருந்தான். வெட்சி வீரன், தான் கரந்தையாரை வென்று கவர்ந்து வந்த ஆநிரை மீது உரிமை கொண்டாடத் தொடங்கினான். தான் கவர்ந்து வந்த ஆநிரைகளைப் பிறருக்கு அளிக்கும் உரிமையைத்தானே மேற்கொண்டு விட்டான். ஆம், தனக்குக் கள் வழங்கிய கள் விலைளாட்டிக்கே பசுவை முதலாவதாகக்கொடுக்க முன் வந்தான். இங்கு, அவன் தான் வாழ்ந்த கண சமூகத்தின் நடைமுறை குறித்துக் கவலைப்படவில்லை. மாறாக, தான் கவர்ந்து வந்த பசுக்களின் மீது தனக்குள்ள உரிமையை நிலைநாட்டுவதிலேயே அக்கறை செலுத்தினான். அவனது செயலை ‘நிறுத்த ஆயம் தலைச் சென்றுண்டு” (தான் கொண்டு வந்து நிறுத்தின நிரையைக் கள் விலைக்கு நேராகக் கொடுத்துக்கள் உண்டான்) என்னும் புறநானூற்றுப்பாடலடி உணர்த்துகிறது.

‘நாளாதந்து நறவு நொடை தொலைச்சி”

(விடியற்காலத்தில் தான் கவர்ந்து வந்த ஆநிரையைக் கள்ளுக்கு விலையாகத் தந்தான்) என்னும் பெரும்பாணாற்றுப்படை பாடல் வரியும் இதனை வலியுறுத்துகிறது எனலாம். ‘கால்நடை மந்தைகள் சொகுசுப்பொருட்கள் மீது தனியுடைமை தோன்றியதானது, தனி நபர்களிடையில் பண்ட மாற்றுதலுக்குக்கொண்டு வந்துவிட்டது” என்ற எங்கல்ஸ் அவர்களின் கூற்று இங்கு நம் கவனத்துக்குரியதாகிறது. (நூல். குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்) கள்ளுக்கு விலையாகப்பசு தரப்படுகிறது.

தலைவனது இச்செயல் கணசமூகத்தில் இதுவரை நிகழாதது, ஆனாலும் மறுப்பு எதுவுமின்றிச் சமூகம் அதை ஏற்றுக்கொண்டது. கீழ்வரும் புறநானூற்றுப் பாடலடிகள் இதனையே உணர்த்துகின்றன.

‘பச்சூன் தின்று பைந்நிணம் பெருத்த
எச்சில் ஈர்ங்கை விற்புறந்திமிரிப்
புலம் புக்கனனே புல்லணற்காளை
ஒரு முறை உண்ணா அளவைப் பெருநிரை
ஊர்ப்புறம் நிறையத்தருகுவன் யார்க்கும்
தொடுதலோம்புமதி முதுகட் சாடி
ஆதரக் கழுமிய துகளன்
காய்தலும் உண்டு அக்கள்வெய் யோனே”

(செவ்வித்தசையைத்தின்று செவ்வி நிணம் மிக்க எச்சிலாகிய ஈரம் உடைய கையை வில்லின் புறத்தே திமிர்ந்து புல்லிய தாடியையுடைய காளை, வேற்று நாட்டின்கட்புக்கான். இவ்விருந்த மறவர் ஒருகால் உண்பதன் முன்னே பெரிய ஆநிரையை இவ்வூர்ப் புறமெல்லாம் நிற்பக் கொடு தருகுவன். அதற்பொருட்டு முதிர்ந்த மதுவையுடைய சாடியை யாவர்க்கும் வாராது தொடுதலைப் பாதுகாப்பீராக. ஆவைக் கொண்டுவரக்கலந்த தூளியையுடையனாய் அம்மதுவை விரும்புவோன் விடாய்த்தலும் உண்டாம்) என்று புறநானூறு (258) கூறுகிறது.

வெட்சிப்போரில் வென்று வந்த வீரனைப்பாராட்டும் பொருட்டு நடைபெற்ற உண்டாட்டில், ‘யார்க்கும் தொடுதல் ஓம்புமதி ஆதரக் கழுமிய துகளன் காய்தலும் உண்டு அக்கள்வெய்யோனே” (முதிர்ந்த மதுவையுடைய சாடியை யாவர்க்கும் வாராது தொடுதலைப்பாதுகாப்பீராக. ஆவைக் கொண்டுவரக்கலந்த தூளியையுடையனாய் அம்மதுவை விரும்புவோன் விடாய்த்தலும் உண்டு) என்ற ஊரவரின் கூற்று, தனிமனித வழிபாடு தலை தூக்கிவிட்ட நிலையினையும் தான் கவர்ந்து வந்த ஆநிரைகளின் மேல் தனக்குள்ள உரிமையை நிலைநாட்டத் தலைவன் முற்பட்டபோது ஊரவர் அதனை மறுப்பு ஏதுமின்றி ஏற்றுக் கொண்டதனையும் உணர்த்துகிறது. இந்நிகழ்வு சமூகத்தில் செல்வப் பெருக்கு தனியுடைமைச் சிந்தனை தோன்றுவதற்குவழி வகுத்ததைக் காட்டுகிறது என்பது மிகையன்று.

சமூகத்தின் செல்வப்பெருக்கிற்குக் காரணமானவன் என்ற நிலையில், தலைமையிடத்தைப் பெண்ணிடமிருந்து அபகரித்துக் கொண்ட ஆண் இப்போது ஊர் மன்றத்தில் நடுநாயகமாக அமர்ந்து ஊரை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொண்டு விட்டான்.

‘புன்புலந்தழீஇய அங்குடிச் சீநூர்க்
குமிழுண்வெள்ளை மறுவாய் பெயர்த்த
வெண்காழ் தாய வண்காற்பந்தர்
இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப்
பாணரோடிருந்த நாணுடை நெடுந்தகை’

(புன்செய்கள் சூழ்ந்துள்ள அழகிய குடிகள் வாழும் சீறூரின் கண் குமிழம்பழத்தையுண்ணும் வெள்ளாடுகள் எருவாய் வழியாக வெளிப்படுத்திய வெள்ளிய கொட்டை போன்ற பிழுக்கைகள் பரந்து கிடக்கின்ற வளவிய கால்கள் நிறுத்தப்பட்ட பந்தரின் கீழ் இடையன் கொளுத்திய சிறு சுடரையுடைய விளக்கொளியில் பாணர் சூழ்ந்திருக்க, அவரிடையே நாணமாகிய நற்பண்பையுடைய நெடுந்தகையாகிய தலைவன் வீற்றிருந்தான்) என்னும் புறநானூற்றுப் (32-4) பாடலடிகள், ஆண்கள் சமூகத்தின் தலைமையிடத்துக்கு உயர்ந்து விட்டதனையும் பெண்ணிடமிருந்து தலைமையிடத்தை அபகரித்துக் கொண்டதனையும் தெளிவாக உணர்த்துகின்றன.

பெண் அடிமையாக்கப்படுதல்

முல்லை நிலத்தில் மேய்ச்சல் சமூகத்தில் ஆண் தலைமை இடத்தில் இருந்து ஊர் விவகாரங்களையும் சமூக விவகாரங்களையும் கவனித்து நிர்வகித்த பாங்கினையும் பெண் அடிமைநிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதனையும் அவ்வையாரின் புறப்பாடற்பகுதி அமைவுற எடுத்துக் காட்டுகிறது. அப்பகுதி இது :

‘களர்ப்படு கூவற்றோண்டி நாளும்
புலைத்தி கழீஇய தூவெள்ளறுவை
தாதெருமறுகின் மாசுண விருந்து
பலர் குறை செய்த மலர் தாரண்ணல்’ - புறநானூறு : 311

(களர் நிலத்துண்டாகிய கூவலைத் தோண்டி நாடோறும் வண்ணாத்தி துவைத்து வெளுத்த தூயவெள்ளிய ஆடை, எருப்பொடி பரந்த தெருவில் எழும் அழுக்குப்படிய இருந்து பலர்க்கும் இன்றியமையாத செயல்களைச் செய்து உதவிய, பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையணிந்த, தலைவன்) என்னும் இப்பாடல் வரிகள், ஆண் சமூகத்தின் தலைமையிடத்துக்கு உயர்த்தப்பட்டதனையும் பெண் அடிமைநிலைக்குத் தள்ளப்பட்டதையும் தௌ;ளிதின் உணர்த்துகின்றன.

‘கன்றமர் நிரையொடு கானத்தல்கிய ஒன்றமருடுக்கைக் கூழாரிடையன்’ காலவோட்டத்தில் கணசமூகத்தின் கால்நடைச் செல்வம் பெருகிய நிலையில் ‘பலர் குறைசெய்;த மலர்தார் அண்ணல்’ என்று புலவர்கள் போற்றும்படியாக கணசமூகததின் தலைவனாக உயர்நிலை எய்தினான்.

அன்று ‘இற்பொலி மகடூஉ’ எனப் புலவர்களால் ஏற்றமுடன் போற்றப்பட்ட பெண், இன்று தலைவனது அழுக்குப்படிந்த ஆடைகளை வெளுத்துக் கொடுக்கும் புலைத்தியாக அடிமைநிலைக்குத் தள்ளப்பட்டு விட்டாள். இந்நிகழ்வுகள் தாய்வழிச் சமூகம் தூக்கியெறியப்பட்டு தந்தை வழிச் சமூகம் தோன்றி நிலைபெற்று விட்டதைத் தெளிவுபடக் காட்டுகின்றன. தந்தை வழிச் சமூகம் அடிமைச் சமூகம் தோன்றவதற்கு வழி வகுத்துக் கொடுத்தது. காட்டிலே,

‘மேம்பாலுறைத்த வோரியோங்கு மிசைக்
கோட்டவுங் கொடியவும் விரைஇக்காட்ட
பல்பூ மிடைந்த படலைக்கண்ணி ‘யனாய்
‘செந்தீத்திட்ட கருந்துளைக் குழலின்
இன்றீம் பாலை’ யையும்
‘புழற்கோட்டுத்தொடுத்த மரற்புரி நரம்பின்
வில்யாழிசைக்கும் விரலெறிகுறிஞ்சி’ யையும்

‘பல்காற்பறவை கிளை செத்தோர்க்கும்’ படியாக குழலும் யாழும் இசைத்த ‘பாசிலைத் தொடுத்த உவலை கண்ணி மாசூணுடுக்கை மடிவாய் இடையன்’ இப்போது தலைவனது ஏவலின்படி, ஊரினுள் பந்தரில் விளக்கேற்றுதல் முதலிய குற்றேவல் செய்யும் பணியாளனாக அடிமையாக ஆக்கப்பட்டான். இவ்வாறு தந்தை வழிச் சமூகம் அடிமைச் சமூகம் தோன்ற வழி வகுத்ததனைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

இங்கே, காட்டு மிராண்டித்தனமான போர் வீரனும் வேட்டைக்காரனும் வீட்டில் இரண்டாம் ஸ்தானத்தை வகித்து பெண்ணுக்கு முதலிடம் தருவதில் திருப் தியடைந்திருந்தார்கள். மென்மையடைந்த ஆட்டிடையனோ, தனது செல்வத்தைக் காட்டி முண்டியடித்து முதலிடத்தைப் பிடித்துக் கொண்டு பெண்ணை இரண்டாம் ஸ்தானத்துக்குத் தள்ளி விட்டான்’ என்ற எங்கல்ஸ் அவர்களின் கவித்துவமான வரிகள், மேற்குறித்த சங்க இலக்கியப்பாடலடிகள் கூறும் செய்தியோடு ஒப்பு நோக்கத்தக்கவையாகும்.

(‘சங்க காலத் தமிழகத்தின் சமுக நிலை - மார்க்சீய நோக்கில் சங்க இலக்கிய ஆய்வு’ என்ற நூலிலிருந்து)