kovai gnaniகோவை முத்துக்களில் ஒன்று கோவை ஞானி....மறைந்தார் என்பது உள்ளே ஏதோ இனம் புரியாத தவிப்பை ஏற்படுத்துகிறது. எல்லாம் பார்த்தவர். தமிழின் எல்லை வரை சென்று பார்த்தவரும்.

எனக்குள் பழைய நினைவுகள் வந்து அலைமோதுகிறது. முதல் முறையாக 'ஆசான் 'அகன் அய்யாவுடன்... நான் 'தம்பி' காதலாரா.. 'டியர்' கோபி சேகுவேரா.. அபி சார் எல்லாரும் சென்று பார்த்தது..... பேசியது.... இன்னமும் மூளைக்குள்.... தமிழ் சிறகாய் படபடக்கிறது.

அகன் அய்யா தன்னை அறிமுகம் செய்து கொண்டு.. எங்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப் படுத்தினார். அபி சார் ஏற்கனவே அவரிடம் அறிமுகம் இருந்த போதிலும், மீண்டும் ஒரு முறை கை குலுக்களில்... திறன் ஆய்வு செய்யப் பட்டோம். குழந்தையின் மிருதுவோடு.... மென் சோகப் படிதலென... அவரின் கையின் குளிர்ச்சி.... தித்திக்கும் முக்திக்கும் அமுதுக்கும்... தமிழ் என்றே பேர்... என்று காட்டுக் கத்து கத்திய கவிதைக்காரன் எனக்கு, கடிவாளம் போட்டது.

பழுத்த அறிவின் பக்குவத்தோடு வார்த்தைகள் எழுந்தன. நிறைகுடம் ஒருபோதும் தளும்பாது என்று அருகில் நின்று புரிந்து கொண்ட தருணத்தை அகன் அய்யாவுக்கே காணிக்கை ஆக்குகிறேன்.

அவரின் பணிவோடு... அவரைப் பின் தொடர்ந்த போது ஞானி அய்யா பொதுவாக கேள்வியும் கேட்டு பதிலும் கூறினார். அகன் அய்யா கொண்டு வந்திருந்த "எழுத்து" தோழர்கள் எழுதி அவரே தொகுத்த, "தொலைந்து போன வானவில்" நூலையும்...இந்திய பாப்லோ நெருடா...அல்லது சிலியின் தமிழன்பன்...குறித்து பல அறிஞர் பெருமக்கள்... எழுதிய ஆய்வுரைகள் அகன் அய்யாவால் தொகுக்கப்பட்ட "தமிழன்பன் ஒரு மகாகவி"- என்ற நூலையும் கோவை ஞானி அய்யாவிடம் கொடுத்து... வாழ்த்து பெற்றோம். அவர் வானம் கொஞ்சம் பெற்றோம்.

எடுத்துக் கோர்ந்த வார்த்தைகளை தெளிவான உச்சரிப்பில் ஒரு தியானத்தைப் போல செய்தார். பார்த்துக் கொண்டே இருந்தோம். ஒரு கரு உருவாகி மெல்ல மெல்ல கவிதையாக.. மாறுவதை பட்டாம் பூச்சியின் வண்ணம் சுமந்து கண்டடைந்தோம்.

"ஒரு கட்டத்தில் எல்லாருமே ஓய்ந்து விட்ட பொழுதில்.... 'தமிழன்பன்' மட்டும்.. இன்னும் இன்னும் அசுர வேகம் எடுத்துக் கொண்டிருக்கிறார்... இல்லையா!"- என்று வியந்து, அதே சமயம்.. ஒரு சம காலத்துக் கவிஞனைக் கொண்டாடும் தோரணையில் அழுத்தம் திருத்தமாக அவர் மொழி ஆண்ட விதம்.. நாம் கற்றுக் கொள்ள வேண்டியது. அந்த வியப்பு..... நாம் கொண்டாடப் பட வேண்டியது. வீரியமுள்ள சக எழுத்தாளனை படிக்காத, மனது வந்து பாராட்டாத எந்த எழுத்தாளனும்.... அவனுக்கென்ற ஓர் உன்னத இடத்தைப் பிடிக்கவே முடியாது என்று மூளையின் நரம்புகளில் எல்லாம் உணரப் பட்ட கணம்..... கனம்.

அகன் அய்யா... வாசித்துக் காட்டிய தொலைந்து போன வானவில்லின் தொகுப்பாசிரியர் உரை... ஞானி அய்யாவின் மனக் கண்ணில்... ஒரு கவிதைக் காட்டை விதைத்திருக்கும். விதைகள் உறங்கா பொழுதுகளாய் மீண்டும் அக்கவிதை செய்ய ஒரு படைப்பாளி மீண்டும் விதையாகி விடுவதிலே தான் மும்முரமாய் இருக்கிறான். அவர் அப்படித்தான் இருந்தார்.

"ஒரு மண்ணின் விடுதலைக்கு எந்த இலக்கியம் பயன் பட்டதோ.. ஒரு மனிதனின் அவலம் நீங்க எந்த இலக்கியம் பயன்பட்டதோ...அநியாயத்திற்கு எதிராகக் குரல் எழுப்பி கிளர்ச்சியை எந்த இலக்கியம் உண்டாக்கியதோ.... அந்த இலக்கியம்தான் மக்கள் இலக்கியமாக மாறும் தன்மையைப் பெறும் என்பது நம் விடுதலைக்குக் காரணமான பாரதியின் படைப்புகளிலும்... பாரதிதாசனின் வரிகளிலும்...பட்டுக்கோட்டையாரின் வரிகளிலும் உண்மையாப் போனது..... "- இப்படி தொடரும்..... உரைக்குள் உறங்கா கத்தி ஒன்று இருக்க..... அதை எடுத்து எழுதுகோல் ஆக்குங்கள்..... . உன் மைக்குள் உண்மை இருக்க.. அதுதான்... இலக்கியமாகும்.

இலக்கிய தத்துவத்தில் தத்துவமும் இலக்கியமே. இலக்கியங்கள் சில போது வெளிப்படாமலும் உறைந்திருக்கும் உரைவாளின் உன்னதம் போல.

அதன் பிறகு இன்னும் இரண்டு முறை அவரிடம் சென்றிருக்கிறேன். ஒருமுறை 'தகவு' மின்னிதலுக்கு பேட்டி எடுக்க. இன்னொரு முறை என் "எறும்பு முட்டுது யானை சாயுது" நூலை நூல் ஆவதற்கு முன்பே படித்துக் காட்ட.

இதழுக்கு நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் தந்த பதிலெல்லாம் கால பொக்கிஷம். காட்டாறு கத்தும் குரலோசை.

படிக்க படிக்க... ரசித்துக் கொண்டே வந்தவர்..."அப்பப்பா.... எனக்கு பக்கத்துலேயே இப்படி ஒரு கவிஞனா...(அவர் வெள்ளக்கிணர் பிரிவு. நான் கவுண்டம்பாளையம் ) சந்தோசமா இருக்கு... தொடர்ந்து எழுதுங்க" என்று மெல்லிய குரலில்.... மெய்மறந்த தமிழோடு அவர் பேசியது இன்னமும் காதுக்குள் ரீங்காரமிடுக்கிறது.

தம்பி காதலாராவின் பெயரைக் கேட்டு கேட்டு சிலாகித்த மனதை கொண்டாடாமல் இருக்க இயலாது.

பேச்சு ஆன்மா பக்கம் சென்றது. புத்தன் பக்கம் சென்றது. பக்கம் பக்கமாய் தர்க்கங்கள் அவரிடம். மிக நுட்பமாய் கவனித்தோம்... அவர் கருத்து திடம். அன்று மாலை வரை பேசிக் கொண்டிருந்து விட்டு வந்தோம்.

அதன் பிறகு போகும் சூழல் கிடைக்கவில்லை. இதோ இன்று மரணம் அவரை வாரி அணைத்துக் கொண்டது. எப்போதும் இருக்கும்.... அதே வேகத்தோடு மரணத்தையும் அவர் அலசி ஆராய்ந்து தான் ஏற்றுக் கொண்டிருப்பார்.

கோவை ஞானி அய்யாவுக்கு மரணம் என்றெல்லாம் ஒன்று கிடையாது. சாகாவரம் அவரின் எழுத்துக்கள்.

அவர் அன்று கொடுத்த நூல் "இந்திய தத்துவத்தில் பிரச்சினைகள்" இதோ என் மேசையில்... என்னை பார்த்து அவரைப் போலவே முணுமுணுக்கிறது. நான் உற்று கவனிக்க ஆரம்பிக்கிறேன்.

- கவிஜி

Pin It