SaveJournalismFromBrahmanism 1தமிழ்நாட்டு வரலாற்றில் பல நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு பார்ப்பன ஆதிக்கத்தோடு மிகக் கடுமையான போராட்டத்தைத் தொடங்கியவர் தோழர் பெரியார். சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என பல இயக்கங்களின் தலைவராக இயங்கினாலும், அவரது பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரின் தொடக்கம் “குடிஅரசு” எனும் ஊடகம் தான். வடநாடுகளில் பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரைத் தொடங்கிய தோழர் அம்பேத்கரின் தொடக்கமும் “மூக்நாயக்” எனும் ஊடகம் ஏடுதான். பார்ப்பனப் பத்திரிகைகளின் நிலை பற்றிய தோழர் அம்பேத்கரின் வரிகள்....

“வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்தியாவைப் பற்றிய செய்திகளைப் பார்த்தால், காங்கிரஸ் கட்சி தான் ஒட்டுமொத்த இந்திய மக்களின் பிரதிநிதியாகத் திகழ்கிறது என்று தான் எண்ணுவார்கள். தலித் மக்கள் உட்பட அனைவரின் பிரதிநிதியாக காங்கிரஸ் கட்சியைத்தான் கருதுவார்கள்.

இதற்கு முக்கிய காரணம் தலித் மக்களுக்கென்று தனியாக ஓர் ஊடகம் இல்லை. காங்கிரஸின் கருத்துக்களுக்கு மாற்றான உண்மைகளை எழுத பட்டியலின மக்களிடம் பத்திரிகைகள் எதுவுமே இல்லை. பெரும் வணிக நிறுவனங்களின் விளம்பர வருவாய் இல்லாமல் எவரும் பத்திரிகைகளை நடத்த முடியாது. பட்டியலின மக்களுக்கு ஆதரவாகவோ, காங்கிரசுக்கு எதிராகவோ விளம்பரங்களை அளிக்க எந்த வணிக நிறுவனங்களும் தயாராக இல்லை.

இந்தியாவின் முதன்மையான செய்தி நிறுவனமாக அசோசியேட் பிரஸ்ஸில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் அனைவருமே தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள். எனவே இந்தியாவிலுள்ள எந்தப் பத்திரிகையும் பட்டியலின மக்களுக்கு ஆதரவாகவோ, காங்கிரசுக்கு எதிராகவோ எந்தச் செய்தியையும் வெளியிடாது.”

1943 இல் பூனேயில் நடைபெற்ற மகாதேவ் கோவிந்த் ராணடேயின் 101 வது பிறந்தநாளில் தோழர் அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்த சுருக்கமான வரிகள் இவை.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்த இந்திய ஊடகங்களின் நிலை இன்றுவரை மாறவில்லை. அன்று ஊடகங்கள் காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதில்லை. இன்று பா.ஜ.க.வை எதிர்க்க முடியவில்லை என்ற அளவில் தான் மாறுதல் நடந்துள்ளது. காங்கிரசோ, பா.ஜ.க.வோ யார் ஆட்சி நடத்தினாலும் ஊடகத் துறையில் நிலவும் இறுக்கமான பார்ப்பன ஆதிக்கம் துளிகூடக் குறையவில்லை என்பதை கடந்த 2019 ஆண்டு OXFAM நிறுவனம் வெளியிட்டRepresentation of Marginalised Caste Groups in Indian Newsroom சர்வே உறுதிப்படுத்துகிறது.

ஆக்ஸ்ஃபார்ம் சர்வே ரிப்போர்ட்டைப் பார்ப்பதற்கு முன் இந்திய வணிக நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு வணிக நிறுவனங்களைப் பற்றிப் பார்ப்போம். ஏனெனில் இவைதான் ஊடகத் துறையை இயக்குகின்றன என்பதை நாம் அறிவோம்.

இந்தியாவின் 1000 முன்னணி கார்ப்பரேட் கம்பெனிகளின் நிர்வாகத்தில் பார்ப்பன ஆதிக்கம்

Total 9052

Category

Board Members

Percentage

பார்ப்பனர் & உயர்ஜாதிகள்

8387

92.7%

பிற்படுத்தப்பட்டோர்

346

3.87%

தாழ்த்தப்பட்டோர்

319

3.57%

Source: EPW August 2012

SaveJournalismFromBrahmanism 2இந்திய தேசிய வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களும், பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜென்ட்களும் 100 விழுக்காடு பனியாக்களாகவே இருக்கிறார்கள். இந்த பனியா மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளின் வணிகக் கொள்ளையை பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்க வலைக்குள் வைத்திருக்கிறார்கள். 2012 ஆம் ஆண்டிலும்கூட இது தான் இந்தியாவின் நிலை. இதைத்தான் 1947-லேயே பெரியார், “இந்திய விடுதலை என்பது ஆங்கிலேயர்கள் இந்தியாவிலுள்ள பார்ப்பன, பனியாக்களுக்குச் செய்து கொடுத்த மேட்ஓவர்” என்றார்.

இந்தியச் சமூகத்தில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதன் இயல்பான போக்காக பொருளாதாரத்தையும் வணிகத்தையும் பார்ப்பனர்களே ஆள்கிறார்கள். அதன் விளைவாக இந்திய ஊடகத் துறையிலும் பார்ப்பன ஆதிக்கம் வெறிபிடித்தாடுகிறது.

கடந்த 2006 இல் Centre for the Study of Developing Societies (CSDS) என்ற புது டில்லியில் உள்ள நிறுவனம் இந்தியாவின் ஊடகத் துறையில் ஓர் ஆய்வை நடத்தியது. நமக்கு எந்தச் செய்தி வர வேண்டும், இன்று தொலைக் காட்சிகளில் எந்தச் செய்தி விவாதிக்கப்பட வேண்டும் என்பதை நிர்ணயிப்பவர்கள் இந்த மூத்த பத்திரிக்கையாளர்கள் தான். ஆங்கில, இந்தி மொழிகளில் வெளியாகும் அச்சு, காட்சி, இணையதளம் என அனைத்து துறை சார்ந்தும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பார்ப்பன

உயர்ஜாதி

OBC

SC/ST

Muslims

Cristians

88%

4%

0%

3%

2.3%

Source: CSDS, The Hindu 05.06.2006

இந்த ஆய்வில் மக்கள் தொகையில் 5 சதவீதம் மட்டும் உள்ள பார்ப்பனர்கள் 49 சதவீதம் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ராஜ்புத்திரர், காயஸ்தா போன்ற ஆதிக்க ஜாதிகளையும் சேர்த்து 88 சதவீதம் உள்ளனர். குறிப்பாக ஆங்கில செய்தி ஊடகங்களில் பிற்படுத்தப் பட்டவர்கள் வெறும் 1 சதவீதம் தான் இருக்கின்றனர். தாழ்த்தப் பட்டவர்கள் எதிலுமே இல்லை.

Oxfam Report 2019

இதன் பிறகு 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று Oxfam International என்ற சர்வதேச நிறுவனம் இந்திய ஊடகத் துறையில் நடத்திய மிக விரிவான ஒரு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கை இந்திய ஊடகத் துறையில் நிலவும் பார்ப்பன ஆதிக்கத்தை அம்பலப்படுத்தியது.

மதுவந்திகளும், மாரிதாஸ்களும் அகில இந்திய ட்ரெண்ட் ஆவதற்கும், இதுபோன்ற ஆய்வறிக்கைகள் யாருக்குமே தெரியாமல் போவதற்கும் மேலே கூறப்பட்ட பார்ப்பனர்களின் ஊடக ஆதிக்கமே அடிப்படைக் காரணம்.

உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் நாடாகவும், நிறவெறிக்கு இன்றுவரை ஆப்ரிக்க அமெரிக்கர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கும் நாடுமான அமெரிக்காவில் கூட ஊடகத் துறையில் ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமை இருக்கிறது.

Wall Street 17.10%, USA Today 18.70%, NewYork Times 16.20, Washington Post 19.50%, Los Angels Times18.70% - source: Tehelka June 19.2004

ஆனால் இந்தியாவில் இதழியல் என்ற துறை தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை பார்ப்பன ஆதிக்கத்தின் வெறியாட்டம் முடிவுக்கு வரவில்லை.

இந்த நாட்டில் பாராளுமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், பத்திரிகை ஆகிய நான்கும் ஜனநாயகத்தின் தூண்களாகக் கூறப்படுகின்றன. இந்தத் தூண்களில் பாராளுமன்றம், நிர்வாகம் இரண்டு துறையிலும் பார்ப்பனர் அல்லாதோர் ஓரளவு பிரதிநிதித்துவம் பெற்று வருகின்றனர். அதை ஒழிப்பதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நீதித் துறையிலும், ஊடகத் துறையிலும் பார்ப்பன, பனியா, காயஸ்தா, பூமிகார், ராஜ்புத்திரர்களின் ஆதிக்கங்களை எவரும் கேள்வி கேட்கவே முடியாத பயங்கரமான பார்ப்பனச் சூழல் நிலவுகிறது.

இதை முடிவுக்குக் கொண்டு வர ஊடகத் துறையில் வகுப்புவாரி இடஒதுக்கீட்டை - ஜாதிவாரி இடஒதுக்கீட்டை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முழக்கத்தைத் தீவிரமாகப் பரப்ப வேண்டிய - அதற்காகப் போராட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

SaveJournalismFromBrahmanism 3அகில இந்திய நிலைமைக்கு எதிராக, தமிழ்நாட்டில் மட்டும் குணசேகரன்களும், ஜீவசகாப்தன்களும் ஊடகத் துறையில் வளர்கிறார்கள் என்று ஆரியம் அலறுகிறது. இதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு.

திராவிடர் இயக்கங்களின் முதற்கட்டம் என்பது நீதிக்கட்சி என நாம் அறிவோம். அந்தக் கட்சி தொடங்கப் படுவதற்கு முன்பே 1916 ஆம் ஆண்டு பார்ப்பனரல்லாதோர் விடுதலைக்காக “தென்னிந்திய மக்கள் சங்கம்” என்ற பெயரில் ஒரு ஜாயிண்ட் ஸ்டாக் கம்பெனி தொடங்க வேண்டும். அக் கம்பெனியில் சார்பில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மொழிகளில் இதழ்கள் தொடங்கப்பட வேண்டும்” என்று தான் முடிவு செய்யப்பட்டது. அப்படித்தான் “ஜஸ்டிஸ்” ஏடு தொடங்கப்பட்டது. அதன்பிறகு தான் நீதிக்கட்சியையே தொடங்கினார்கள்.

அதன்பிறகு 1927 இல் இதழியல் துறையில் நிலவும் பார்ப்பன ஆதிக்கம் பற்றி தோழர் பெரியார் கூறுகிறார்.....

“நமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கென்று வெகு காலமாகவே அதாவது ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே மதம், வேதம், கடவுள், மோட்சம் என்னும் பெயர்களால் பலவித ஆதாரங்களையும் ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் தாங்களே உயர்ந்தோர்களாயிருந்து கொண்டு, நம்மை ஏய்த்துத் தாழ்த்தி வயிறு வளர்ப்பதல்லாமல், அரசியல், சுயராஜ்யம், தேசீயம், தேசீயப் பத்திரிகை, தேச சேவை என்கிற பெயர்களாலும் பலவித இயக்கங்களையும் பத்திரிகைகளையும் உண்டாக்கிக் கொண்டு அதன் மூலமும் நாங்களே தேசபக்தி உள்ளவர்கள் என்றும், தங்களுடைய பத்திரிகைகளே தேசீயப் பத்திரிகைகள் என்றும் நமது பணத்திலேயே விளம்பரப்படுத்திக் கொண்டு நம்மை தாழ்த்தி மிதித்து மேலேறி பல வழிகளிலும் வயிறு வளர்க்க ஆதிக்கம் தேடி வைத்துக் கொண்டு விட்டார்கள்.

இவைகளில் எல்லாவற்றையும் விட நமக்குப் பெரிய ஆபத்தாயிருப்பது பார்ப்பனப் பத்திரிகைகளே. அப்பத்திரிகைகளின் செல்வாக்கு நம் நாட்டை அடியோடு முற்றுகை போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் இப்பார்ப்பனக் கொடுமை முற்றுகையிலிருந்தும் அன்னிய ஆட்சிக் கொடுமை முறைகளிலிருந்தும் தப்ப வேண்டுமானால் இப்பார்ப்பனப் பத்திரிகைகளைப் பார்த்து ஏமாறுவதையும் அதுகளுக்கு அடிமைகளாவதையும் ஒழித்தாலல்லது கண்டிப்பாய் முடியவே முடியாத நிலைமையில் இருக்கிறோம்”. - தோழர் பெரியார், குடி அரசு - 30.01.1927

திராவிடர் இயக்கங்களும், தலைவர்களும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக முன்னனெடுத்த இதழியல் புரட்சியானது தமிழ்நாட்டு ஊடகங்களில் பார்ப்பனரல்லாதோர் வளர்ந்ததற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக அனைத்துத் தளங்களிலும் பார்ப்பனரல்லாத மக்கள் விடுதலை பெற அடிப்படையாக இருக்கிறது.

தமிழ்நாட்டு ஊடகங்களில் வளர்ந்து வரும் பார்ப்பனரல்லாதோர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும். அதற்காக அகில இந்திய அளவில் நமது உரிமைப் போரைத் தொடங்க வேண்டும். “அகில இந்திய ஊடகங்களில் வெறிபிடித்தாடும் பார்ப்பன ஆதிக்கம் அழிக்கப்பட வேண்டும். ஊடகங்களிலும் ஜாதிவாரி இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்த வேண்டுமென - வகுப்புரிமைப் போரைத் தொடங்குவோம்!” #SaveJournalismfromBrahmanism

(TNYouthForce அமைப்புக்காக எழுதியது)

- அதிஅசுரன்