மானுட வரலாற்றில் இப்படியொரு வேதனை நிகழ்வை இதுகாறும் இச்சமூகம் எதிர்கொண்டதில்லை. கடந்த நூறாண்டுகளில் மனித குலம் காணாத உயிக்கொல்லித் தொற்று நோயாக கொரோனா உருவெடுத்துள்ளது. உலக நாடுகளெல்லாம் அஞ்சுமளவிற்கு இந்நோயின் கோரதாண்டவம் நிலைபெறத் துவங்கியிருக்கிறது. வல்லரசு நாடுகளால் கூட தாக்குப் பிடிக்க முடியாத அளவிற்கு மிகக் கொடூர பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் பாகுபாடின்றித் தொற்றிப் பரவிக் கொண்டிருக்கும் இந்நோயை “சர்வதேச பேரழிவு நோய்” என உலக சுகாதார நிறுவனம் பிரகடனம் செய்துள்ளது. 

corona migrant labourers to nativeஊரடங்கு முறை

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றுநோயின் விளைவாக இந்தியாவில் ஊரடங்கு முறை நடைமுறைக்கு வந்தது. இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 22ஆம் நாளன்று ஒரு நாள் மக்கள் அடைப்பு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் 25ஆம் நாள் முதல் ஏப்ரல் 14 வரையிலான 28 நாட்கள் இந்தியா முழுவதும் கடும் ஊரடங்குமுறை அமுல்படுத்தப்பட்டது. திடீரென நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முறையால் கடுமையான பாதிப்புகளை பொதுமக்களும் சாமானியர்களும் எதிர்கொள்ளும் நிலை உருவானது. அந்தந்த மாநிலங்கள் தங்கள் எல்லைகளை மூடின. மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன. அந்தந்த பகுதிகளுக்குள் மக்கள் முடங்கும் அபாயம் உருவானது. மக்களை நெறிப்படுத்தும் பணியை காவல்துறை செய்தது. இதுபோன்ற ஊரடங்கு முறையை அறிவிப்பதற்கு முன், முறையாக பின்பற்ற வேண்டிய எதையும் செய்யாமால் அவசர கோலத்தில் அறிவித்த செயல் பெரும் சிக்கலை உருவாக்கியிருக்கிறது.

இந்த அறிவிப்பினால் யாரெல்லாம் பாதிப்படைவார்கள்? ஏழைகளின் நிலை என்னாவாகும்? அவர்களுக்கான மாற்று ஏற்பாடு என்ன? புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை என்னாவாகும்? என்பது குறித்தெல்லாம் அக்கறை காட்டாமல், விவாதிக்காமல் சனநாயக மரபுக்கு விரோதமாக இந்த அறிவிப்பு திடீரென வெளியிடப்பட்ட செயல் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஊரடங்கு முறையினை நிலைநாட்டுவதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஊரடங்கு முறையினை எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் அறிவித்ததே பெரும் சிக்கலை உருவாக்கியது.

பட்டினியை போக்கியதா அரசு நிவாரணம்?

ஊரடங்கின் போது, வேலைக்குச் செல்ல இயலாமல், வருமானம் இல்லாமல் கொடூரப் பாதிப்பிற்கு தினக் கூலிகள் ஆளானார்கள். ரேசன் கடைகள் மூலமாக வழக்கமாக வழங்கும் அரிசி, கோதுமை இவற்றோடு, விலை இல்லாமல் துவரம்பருப்பு 1 கிலோ, சீனி ஒரு நபருக்கு 500 கிராம் வீதம், பாமாயில் 1 லிட்டர் மற்றும் ஒரு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கி தனது கடமையை மாநில அரசு முடித்துக் கொண்டது. எவ்வித வேலையும் இல்லாமல் வீட்டில் முடங்கிக்கிடக்கும் மக்களுக்கு இந்த நிவாரணம் போதுமா? ரேசன் அட்டையே இல்லாமல் நாடோடிகளாக இருப்பவர்களை எந்த அரசு கவனிக்கும்? யார் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவார்கள்? இவர்களுக்கு ரேஷன்கார்டு கொடுக்கப்படாததற்கு யார் காரணம்? என்கிற கேள்விக்கு அரசு செவி சாய்க்காத நிலையில் தொழிலாளர்கள் பட்டினிச் சூழலுக்கு ஆளானார்கள்.

இந்நிலையில் மீண்டும் ஏப்ரல் 15 முதல் மே 3 வரையில் ஊரடங்கு நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும் என அரசுகள் அறிவித்தன. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி பிற மாநிலத்தைச் சேர்ந்த 1,79,518 நபர்கள் பதிவு செய்த தொழிலாளர்களாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசின் 17 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களாக 27 லட்சம் பேர் உள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு கூடுதலாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அரசின் நிவாரண உதவி பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கே கிடைக்காத போது, பதிவு செய்ய இயலாமல் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நிலை என்னவாகும்? இவர்களெல்லாம் கைலாசம் போய் நிவாரணத்தைக் கேட்கணுமா? ஏழைத் தொழிலாளர்களின் பட்டினியைப் போக்குவது குறித்து அரசுகள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அரசு நிவாரணம் வழங்கும்போது பதிவு செய்தவரா? ஆவணம் இருக்கிறதா? என்றெல்லாம் பார்க்காமல் அவர்களின் பட்டினிச் சூழலை பார்த்து நிவாரணம் வழங்க வேண்டும். அதுவே மனிதம் கொண்ட அரசுக்கு அழகாகும்.

வீடில்லாதவர்கள் எங்கே இருப்பார்கள்?:

ஊரடங்கின் துவக்கத்தில், விழித்திரு... விலகியிரு... வீட்டிலிரு... என்பது அரசின் சொல்லாடலாக மூளை முடுக்கெல்லாம் பரப்புரை செய்யப்பட்டது. அப்போது, வீடில்லாதவர்கள் எங்கே இருப்பார்கள்? என்ற கேள்வியை இச்சமூகம் எழுப்பியது. நாளாக நாளாக வீட்டில் இருப்போரும் பெரும் துயரத்திற்கு ஆளாகும் நிலை உருவானது. பசி – பட்டினி என்பது பேசுபொருளானது. பல ஏழ்மைக் குடும்பங்கள் பட்டினியால் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஒரு வேளைச் சோறு என்பதே சாத்தியப்படாது என்ற சூழல் நீடிக்குமோ என்ற அச்சம் நிலைப் பெறத் தொடங்கியது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை:

இந்நிலையில் மாநிலம் கடந்து பிழைப்பிற்காக தமிழகம் வந்த லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை கொடூரத்தின் உச்சத்திற்கே சென்றது. அவர்களின் துயர நிலை படிப்படியாக வெளிவரத் துவங்கின. தற்போதைய ஊரடங்கு, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் சீர்குலைத்துள்ளது. இந்தியாவில் ஊரடங்கு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஊரடங்கின் விளைவாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 4 கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசி - பட்டினியால் விரட்டப்பட்ட தொழிலாளர்கள்:

ஊரடங்கின் துவக்கத்தில் கிழக்கு டெல்லியின் ஆனந்த விகார் பகுதியில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கனமான உடமைகளுடன் தங்களது பச்சிளம் குழந்தைகளை தலையில் சுமந்து கொண்டு சிறுவர்கள், வயதானவர்களுடன் இடைவிடாமல் அணிவகுத்துச் சென்ற காட்சியை கண்டு நாடே அதிர்ச்சிக்குள்ளானது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க தனிமனித இடைவெளியை உலகமே பேசிக் கொண்டிருக்கும் போது, ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ஏன் இவ்வாறு பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார்கள்? அவர்களுக்கு அறிவில்லையா? என்று கேட்கும் ஊடகங்களுக்கும் பொதுச் சமூகத்திற்கும் ஆளும் அரசுகளுக்கும் அவர்களின் நிலையை புரிந்து கொள்ளும் அறிவிருக்கிறதா? என்ற எதிர்க்கேள்வியை எழுப்ப வேண்டிய தருணமிது.

அவர்கள் கொரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து தப்பிக்க இவ்வளவு வேகமாக செல்லவில்லை. பசி, பட்டினியிலிருந்து தப்பிக்கவே தங்கள் சொந்த ஊரை நோக்கி விரைகிறார்கள்... விரைந்து கொண்டிருக்கிறார்கள்... விரைவார்கள் என்பதை அதிகார வர்க்கம் எப்போது உணரும்?. இந்தக் காட்சி டெல்லி ஆனந்த விகார் பகுதியில் மட்டும் நடந்தவையல்ல. நாடுமுழுவதும் நடந்தவை. ஒரே இரவில் தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழந்தார்கள். ஒரு ரூபாய் வருமானம் இல்லை, அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காத நிலை, தங்கியிருக்கும் இடத்துக்கு வாடகை செலுத்த பணம் இல்லை, தான் வேலை செய்த பெரு நிறுவனங்கள் கைவிரித்த நிலை, குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட இயலா கையறு நிலை, நாட்கள் செல்லச்செல்ல பசியின் கொடுமை, வறுமையின் உச்சம்.... இவைகளால் நூற்றுக்கணக்கான மைல்கள் இருந்தாலும் சொந்த ஊருக்கு சென்றுவிடுவது என தீர்மானித்தே நடைபயணமாக பயணித்தார்கள்.... பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை புரிந்து கொள்வதற்கு நாம் மனிதம் கொண்ட மனிதனாக மாற வேண்டும்.

மாண்டுவிடாத மனிதம் 

இன்னும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் செய்வதறியாது, இருக்கும் இடத்தை விட்டும் செல்ல இயலாது பெரும் துன்பத்தை எதிர்கொள்ளும் நிலையில் சிக்கித் தவிக்கிறார்கள். பல தன்னார்வ அமைப்புகள் இதுபோன்று பட்டினியால் வாடும் தொழிலாளர்களுக்கு உணவளித்தார்கள். நேர்மையாக, மனித நேயத்தோடு செயலாற்றும் மாவட்ட ஆட்சியர்கள், அரசு அலுவலர்கள், காவல்துறையினர் ஆங்காங்கே நேசக்கரம் நீட்டியிருப்பதை பெரும் நிம்மதியோடு உணர முடிந்தது. மனிதம் மாண்டுவிடவில்லை... இன்னும் உசிரோடு துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த உள்ளங்கள் உணர்த்தியிருக்கிறது.

உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு 

ஊரடங்கு தொடர்ந்து நீண்டு கொண்டே செல்கிறது. இது காலத்தின் கட்டாயம் என்கிறது அரசு. வரும் மே 3ஆம் நாளுக்கு பிறகும் கூட ஊரடங்கு மீண்டும் நீள்வதாகவே தெரிகிறது. இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் அவர்கள் மத்தியில் பணியாற்றும் அமைப்புகளும் அரசிற்கு முன்வைத்த கோரிக்கையை நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்துள்ளது. நாடு முழுவதும் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பிற நபர்கள் சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இவர்கள் தங்கள் சொந்த பகுதிக்கு செல்வதற்கான பேருந்துகளை அந்தந்த மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் அந்த பேருந்துகள் முழுமையாக கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்திகரிக்கப்பட வேண்டுமெனவும் பேருந்து இருக்கைகளில் பாதுகாப்பான சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமெனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நடைமுறைக்கு ஒவ்வாத அறிவிப்பை எப்படி வெளியிடுகிறார்கள்? லட்சக்கணக்கான தொழிலாளர்கள் எத்தனை ஆயிரம் பேருந்துகளில் பயணிப்பது? பேருந்தில் சமூக இடைவெளியோடு பயணம் செய்யவேண்டும் என்று சொல்வது நடைமுறைச் சாத்தியமா? இதற்கென சிறப்பு இரயில் சேவையை மத்திய அரசு அறிவித்திருக்க வேண்டாமா? தேவையான இரயில் நிலையங்களில் விலையில்லா உணவவை வழங்கி அவர்களை மாண்போடு அனுப்பி வைப்பதே அரசுக்கு அழகு. மேலும் இதனை செம்மையாக செயல்படுத்த பொறுப்பான நோடல் அதிகாரிகளை நியமிக்க வேண்டுமெனவும் இதற்கென சிறப்பு நெறிமுறைகளை உருவாக்க வேண்டுமெனவும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. சொந்த ஊர்களுக்குச் செல்லும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, நோய் தாக்குதல் இல்லாத நபர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமென இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் மே 4 முதல் மே 17 வரையில் ஊரடங்கு நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 

பட்டினியை போக்குங்கள்! 

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை அரசுகள் எப்படி விரைவாக செயல்படுத்தப் போகின்றன என்பது பெரும் கேள்வியாகவே இருக்கிறது. திருப்பூர் உள்ளிட்ட பல பெரு நகரங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கள் ஊருக்கு எப்போது திரும்புவோம் என்று காத்துக்கிடக்கிறார்கள். கொரோனோ பரிசோதனை செய்யப்பட வேண்டிய ஆயிரக்கணக்கானோர் உள்நாட்டிலேயே காத்திருக்கும் நிலையில் இருக்கிற குறைந்த பரிசோதனைக் கருவிகளை வைத்துக்கொண்டு அரசு என்ன செய்யப்போகிறது? என்பது பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. நம் தமிழகத்தில் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உணவு ஏற்பாடுகளை முழுவீச்சில் செய்வது தான் இப்போதைக்கு அவசியத் தேவையாக இருக்கிறது. முதலில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பட்டினியைப் போக்குங்கள்.

- கா.கணேசன்