corona poor coupleஇன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு கற்பிதங்களை மானிட சமூகத்திற்குத் தந்திருக்கிறது. சீனாவில் மையம் கொண்டு உலகை சூறாவளியாக சுற்றி வரும் இந்த கொரோனா ஆயிரக்கணக்கான உயிர்களை ஈவு இரக்கமின்றி தின்று தீர்த்து விட்டது. வேட்கை தணியாமல் இன்னும் வேட்டையைத் தொடர்கிறது. மருத்துவ உலகம் அதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது. நான் பெரியவனா? நீ பெரியவனா? என்ற சட்டாம் பிள்ளைத்தனம் எல்லாம் அடங்கி, கொரோனாவை வெல்லல் என்ற ஒற்றை இலக்கோடு உலகம் பயணிக்கிறது.

உலகத்தில் பெரும்பாலான நாடுகள் மக்களை வீட்டுக்குள் அடைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் உலகத்தில் வேறு நிகழ்வுகளே நடைபெறாததைப் போல, 24 மணி நேரமும் விளம்பரங்களோடு கொரோனாவைப் பற்றிய தொகுப்புகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. மக்களை அடிமைப்படுத்துவதற்கு இது ஒரு புது யுக்தி. கொரோனா தொடர்பாக செய்ய வேண்டிய விழிப்புணர்வு வேலையை ஒழுங்காக செய்யவில்லை என்பது வேறு.

நம்மிடையே வைரஸ் தொற்றை விட வதந்தித் தொற்று தான் வேகமாகப் பரவியது. குடும்ப வறுமையைப் போக்க கூலி வேலைக்காக கேரளா மாநிலம் சென்று மதுரை திரும்பியவருக்கு காய்ச்சலும் களைப்பும் இருந்ததால், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக நினைத்து, அவரையும் அவரின் தாயரையும் வேற்றுக்கிரகவாசிகளைப் பார்ப்பது போல் பார்த்து மருத்துவமவமனைக்குத் தகவல் தெரிவித்தனர். அவசர கால ஊர்தி வருகை தர தாமதம் ஆனதால் சரக்கு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்ததோடு, செல்பேசியில் படமும் எடுத்து முகநூலில் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் பரப்பினார்கள். மருத்துவப் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இருப்பினும் தன்னைப் பற்றிய செய்தி சமூக வலைதளங்களில் பரவுவதை அறிந்த அந்த நபர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பை இருப்பில் ஒன்றைக் கழித்து, கணக்கு காட்டி வழக்கை முடித்திருக்கலாம். ஆனால் தற்கொலை செய்து கொண்டவரின் மனம் எப்படிப் பட்ட உளவியல் சிக்கலைச் சந்தித்திருக்கும்? அவரின் குடும்பம் எத்தகைய வேதனையையும் அவமானத்தையும் அனுபவித்திருக்கும்? காய்ச்சல், இருமல் இருந்தாலே அது கொரோனா தொற்றாகத் தான் இருக்க வேண்டுமா என்ன? பிழைப்புக்காகவும், கோவில்களுக்காகவும் வந்த வடமாநில அப்பாவிகளை வாட்ஸ் அப் வதந்தியால் குழந்தைத் திருடர்கள் என நினைத்து அடித்துக் கொன்ற நமக்கு இது ஒன்றும் புதிதல்ல.

மருத்துவப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டி அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கைகள் தட்டினோம், மணிகள் ஒலித்தோம். இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே சென்னையில் நடந்த நிகழ்வு ஆச்சரியத்தையும், பலருக்கு வெறுப்பையும் அளித்தது. சென்னை மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று, சிகிச்சை பலனிக்காமல் மரணித்த மருத்துவர் ஒருவரின் உடலை அம்பத்தூர் மின் மயானத்திற்கு எரியூட்ட எடுத்துச் செல்லப்பட்டபோது, இந்த இடத்தில் எரியூட்டினால் எங்கள் பகுதிக்கு கொரோனா தொற்று பரவும் என்று சொல்லி தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்திய பொதுமக்களின் அறியாமையை என்னவென்று சொல்வது?அதற்குப் பிறகாவது அதில் சுகாதாரத் துறை போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, கவனம் செலுத்தி இருந்தால், கீழ்ப்பாக்கத்தில் அதே நிகழ்வு நடை பெற்று இருக்குமா?

தூய்மைப் பணியாளர்களுக்கு பாத பூஜை செய்வதும், அவர்களுக்கு உணவுப் பொருள்கள் உள்ளிட்ட உதவிகள் செய்வதும் வரவேற்புக்குரியதே; ஆனால் சில இடங்களில் அவர்களை அடித்து ஆடைகளைக் கிழித்து சாக்கடையில் தள்ளுவதும், இரண்டாம் தர குடிமக்களைப் போல் நடத்துவதும், ஒருமையில் பேசுவதும், நடந்து கொண்டுதான் இருக்கிறது. முதலில் சொன்னது மிகக் குறைந்த இடங்களிலும், இரண்டாவது சொன்னது அதிக இடங்களிலும் நடக்கிறது என்பது மறுக்க இயலா உண்மை.

திருவள்ளூர் மாவட்டம் அகரம் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கார்த்திக் தன் நிலத்தில் விளைந்த காய்கறிகளை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு கொண்டு செல்ல காவல் துறையினர் அனுமதி மறுத்ததையடுத்து, தான் கொண்டு வந்த காய்கறிகளோடு தன் விரக்தியையும் சேர்த்து சாலையில் கொட்டிவிட்டு வெறும் சாக்குகளை உதறி தன் தோளில் போட்டுக் கொண்டு வீட்டிற்கு நடையைக் கட்டினார். அது ஊடக வெளிச்சத்தால் ஊரெல்லாம் பரவத் தொடங்கியது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அந்த விவசாயியின் வீட்டிற்கே நேரில் சென்று ஆறுதல் சொன்னது, எளிய மனிதர்களுக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை துளிர்க்கச் செய்திருக்கிறது. ஊடக வெளிச்சம் பெறாத இன்னும் பல விவசாயிகள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்தவர்கள் எத்தனை பேர்?

கும்பகோணத்திலிருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அறிவழகன் என்ற முதியவர் தன் மனைவியை மிதிவண்டி மூலம் அழைத்துச் சென்றதை பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு இருந்தன. நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்ட அவரின் மனவலிமை மலையைவிட பெரியது, பாராட்டிற்குரியது. இருப்பினும் இந்த செய்தி நம்முள் ஏதோ ஓர் இனம் புரியாத சோகத்தையும், குற்றஉணர்வையும் உண்டாக்குகிறது. சிகிச்சை முடிந்து வரும் போது, அங்குள்ள காவலர்கள் வாகன ஏற்பாடு செய்து அனுப்பியது ஆறுதல் அளிக்கிறது என்றாலும், சைக்கிள் பயணத்தை நம்மால் தவிர்த்திருக்க முடியாதா?

 தமிழ் நாட்டிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் இலட்சக்கணக்கானவர்கள் டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் வேலைக்காகச் சென்றவர்கள், திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், செய்வது அறியாமல் நிலைகுலைந்து போயினர். பேருந்து இரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால் வேலை செய்யும் இடத்திலேயே தங்கி இருக்க அரசால் அறிவுறுத்தப்பட்டதால் அங்கேயே தங்கி இருந்து நாட்களைக் கடத்தினர். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் வேலையும் இல்லை, செலவுக்கு கையில் பணமும் இல்லை. இந்தக் காரணத்தால், சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். அவர்கள் மூட்டை முடிச்சிகளோடு, குடும்பம் குடும்பமாக தேசிய நெடுஞ்சாலைகளில், நடந்து சென்ற காட்சியை தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் பார்த்தபோது, நம்மையும் அறியாமல் நம்முடைய விழிகள் நீர் சிந்தின. தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் ஆவத்திப்பாளையதிலிருந்து நாக்பூரில் வேலை பார்த்த இளைஞர் லோகேஷ் நடைபயணத்தில் சொந்த ஊருக்கு வரும் போது, ஆந்திர முகாமில் தங்க வைக்கப்பட்ட போது மாரடைப்பால் மரணமுற்ற நிகழ்வு சோகத்தின் உச்சம். இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்பது? ஆட்சியாளர்களா? அரசு அலுவலர்களா? சமூகமா? 

கொரோனா வைரஸ் தொற்றால் உலகப் பொருளாதாரமே படுபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இந்த சருக்கலில் நாமும் விதிவிலக்கல்ல. ஆயிரக்கணக்கான அன்றாடம் காய்ச்சிகளின் வீட்டு அடுப்புகள் தினசரி வேலையை நம்பித்தான் எரிவதற்குக் காத்திருக்கின்றன. இந்த நேரத்தில் அரசின் நியாய விலைக் கடைகள், அரசு, தன்னார்வலர்களின் உதவிகள் கைகொடுக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. சிகை அலங்காரத் தொழிலாளி, தச்சர், கொத்தனார் உள்ளிட்ட கட்டிடத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், ஒட்டுனர்கள் போன்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் அன்றாட வேலைக்கான ஊதியம் சில நேர்வுகளில் மருத்துவம், கல்வி, திருமணம் போன்ற காரணங்களால் பற்றாக்குறை ஏற்படும் போது, இவர்கள் கந்துவட்டிக் கும்பலிடம் கையேந்தும் நிலை ஏற்படுகிறது. அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளே கடன் தவணைகளுக்கு கறார் காட்டும்போது, கந்துவட்டிக்காரர்களைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இனிமேலாவது அனைவருக்கும் நிவாரணம் என்ற ஓட்டுச் சித்தாந்தத்தை கைவிட்டு வறுமையில் தள்ளாடும் குடும்பங்கள், தனிமையில் விடப்பட்ட முதியவர்கள், அனாதைகள் போன்றோரை சரியாகவும் நேர்மையாகவும் கணக்கிட்டு அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்வதே உண்மையான மக்கள் தொண்டாக இருக்க முடியும்.

- கா.இரவிச்சந்திரன்