கன்னட எழுத்தாளரும் களச்செயற்பாட்டாளருமான தேவனூர் மகாதேவன் (Devanur Mahadeva) கடந்தாண்டு ஓர் இதழுக்கு கொடுத்த நேர்காணலில், அண்ணல் அம்பேத்கரையும் மகாத்மா காந்தியையும் ஒருவருக்கு ஒருவர் எதிரியாக நிறுத்தும் போக்கிலிருந்து மக்களாட்சிக் குடியரசின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் வெளியேற வேண்டிய கட்டாய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று கூறியிருந்தார். 

ambedkar 286உண்மையான சமத்துவத்தை எட்டுவதில் அவர்கள் இருவரும் இணைந்தே செயல்பட்டிருக்கிறார்கள் என்ற பார்வையை நாம் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தும் போது, "அறியாமையிலும் துன்பத்திலும் புரண்டு கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களைத் தட்டி எழுப்பியதன் மூலம் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தன்னுடைய சமூக அரசியல் பயணத்தைத் தொடங்கினார்கள். அதே போன்று மகாத்மா காந்தியடிகள் அவர்களும் இந்து-சாதி வருணாசிரமச் சமூகத்தில் மூழ்கி, அமுங்கி போய்க் கிடந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பண்பாட்டு நிலைகளையும் மாற்றுவதற்கும் முன்னேற்றத்திற்கும் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்தார். இவற்றையெல்லாம் மேலோட்டமாக பார்க்கின்றபொழுது, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சமூகச் செயல்பாடுகளில் காந்தியடிகள் ஊடு பாவவில்லை என்பதுபோல் தோற்றமளிக்கலாம். ஆனால் இந்து மத சாதிச் சமூக கிணற்றில் மூழ்கிக் கிடந்த மக்களை காந்தியடிகள் ஓரளவுக்கு அவற்றிலிருந்து விடுவித்து மேல்நோக்கிக் கொண்டு வராமல் இருந்திருந்தால், அம்பேத்கர் அவர்களின் சமூகச் சீர்திருத்த செயல்பாடுகளை அவர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று நான் கருதுகிறேன்" என்று அவர் குறிப்பிட்டுச் செல்கிறார்.

 இதுகுறித்து மகாதேவன் மேலும் கூறும்போது, "இந்தியச் சாதிய சமூகம் அதன் தளைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று இந்து மதத்தின் ’சாவருணர்கள்’ (Savarnas) விரும்புவதாக நாம் புரிந்து கொண்டால், அதற்கு காந்தியின் தேவை மிக இன்றியமையாதது. அதேபோன்று அடித்தட்டு தலித்திய மக்களின் குடியுரிமைகள் காக்கப்பட வேண்டுமென்றால், அதற்கு அம்பேத்கர் அவர்களின் தேவை அதனினும் இன்றியமையாதது. காந்தியையும் அண்ணல் அம்பேத்கரையும் நாம் ஒருங்கே, ஓரணியில் சமூகக் களத்தில் முன்னிறுத்த வேண்டும்" என்கிறார்.

 அண்ணலையும் மகாத்மாவையும் இணைத்துக் காணும் இந்தப் பார்வையில் மகாதேவன் மேலும் குறிப்பிடுவது, "காந்தியடிகள் தீண்டாமையை பாவம் என்று கூறினார்; அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தீண்டாமையை ஒரு குற்றம் என்று கூறினார். ஆனால் மேற்கண்ட இருவர்களின் கூற்றையும் நாம் ஏன் எதிரெதிர் நிலையில் வைத்துக் காண்கிறோம்? தீண்டாமை பற்றிய இந்த இரண்டு பார்வைகளுமே மிக இன்றியமையாதது என்று புரிந்து கொள்வதுதான் அறிவுடமை" என்று அவர் கூறுகிறார். மகாதேவன் அவர்களின் இந்த நேர்காணலை ராசமி முனிக்கெம்பண்ணா (Rashmi Munikempanna) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

 புதுதில்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது காந்தியும் அம்பேத்கரும் இணைந்திருப்பது போன்ற புகைப்படங்களும் வாசகங்களும் அடங்கிய பதாகைகளைத் தாங்கிப் பிடித்து நின்றதைக் கண்டபொழுது, எனக்கு தேவனூர் மகாதேவனின் சொற்கள் நினைவுக்கு வந்தது. இது முன்னுதாரணமற்ற ஓர் அரிய நிகழ்வு. காந்தியடிகளும் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் தனித்தனியே கொண்டாடப்படுவது தான் இன்றும் வழமையாக உள்ளது. அவர்களை ஒருவருக்கொருவர் எதிர்நிலையில் வைத்துக் காணும் போக்குதான் இங்கு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

 கடந்த காலங்களில், காந்தியடிகளினால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்கள் இந்த இரண்டு தலைவர்களையும் எதிரெதிர் நிலையில் வைத்து வாதம் செய்து கொண்டிருந்தார்கள். 1930, 1940 ஆகிய காலகட்டங்களில், காந்தியடிகளின் கொள்கைகளையும் அவருடையச் சமூகக் கருத்துக்களையும் தருக்க ரீதியாக மட்டுமே அண்ணல் அம்பேத்கர் விமர்சித்துக் கொண்டிருந்தார். இதைத் தாண்டி அவர்களது அன்புக்குரிய காந்தியடிகளை அவர் வேறு எந்த வகையிலும் எதிர்நிலையில் விமர்சித்தது இல்லை.

காந்தியப் பற்றாளர்கள் அம்பேத்கரை விமர்சிக்கும்போது, 1942 ஆம் ஆண்டுகளில் மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் ”வெள்ளையனே வெளியேறு இயக்கம்” (Quit India Movement) இங்கே நிகழ்ந்து கொண்டிருந்தபொழுது, அம்பேத்கர் பிரித்தானிய காலனி ஆதிக்கத்திற்கு ஆதரவாக வக்காலத்து வாங்கினார் என்றும், வைசிராயின் ஆட்சிமன்றக் குழுவில் தான் தொடர்ந்து பணியாற்றப் போவதாகச் சூளுரைத்தார் என்றும் கூறி அவரை விமர்சிக்கிறார்கள்.

கடந்த சில பத்தாண்டுகளாக, அம்பேத்கரியவாதிகள் காந்தியடிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். காந்தியடிகள் இந்து-சாதியச் சமூக அமைப்பை, அரைமனதோடும் ஒரு பலவீனமான வழியிலும் தான் மறுசீரமைப்பு செய்ய முனைந்தார் என்பது அவர்களது பார்வை. அம்பேத்கரியவாதிகள் தங்களது தலைவரை போற்றிப் பேசும்போது, காந்தியடிகள் தன்னுடைய அடுத்த அரசியல் வாரிசாக ஜவஹர்லால் நேருவையே கருதினார் என்றும், இந்தியா ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றப் பின்னால் அமைக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவில் நேருவும் அண்ணல் அம்பேத்கரும் இணைந்து செயல்பட்டிருந்தபோதும், அன்றைய அமைச்சரவையின் தலைவராக இருந்த நேரு அவர்கள் அண்ணலின் திறமையையும் அறிவுக்கூர்மையும் பயன்படுத்திக் கொள்வதை தவிர்த்தார் என்றும் விமர்சிக்கிறார்கள்.

 உத்தரப் பிரதேசம், மகாராட்டிரம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த தலித்திய அறிஞர்கள் காந்தியடிகளை ஈவு இரக்கமின்றி, மிகக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆனால் கன்னடம் போன்ற மாநிலங்களில் அடித்தட்டு மக்கள் வரலாற்று ஆய்வு (subaltern studies and writings) பற்றிய புரிதலும் அதுகுறித்து எழுதுபவர்களும் இருப்பதனால் அவர்கள் பரந்துபட்ட பார்வையை கொண்டிருக்கிறார்கள். சமூக மற்றும் அரசியல் செயல்பாடுகளில் காந்தியும் அண்ணல் அம்பேத்கரும் செய்த பணிகள் என்பது ஒன்றையொன்று நிறைவு செய்து கொள்கின்றன என்ற பார்வையை நாம் பெற வேண்டியதின் அவசியத்தை, கன்னட மாநிலத்தின் மறைந்த எழுத்தாளர் டி. ஆர். நாகராஜ் அவர்கள் தன்னுடைய எரியும் பாதங்கள் (The Flaming Feet,D.R. Nagaraj) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

இந்து-சாதிய சமூகத்தில் நிலவிவந்த தீண்டாமையை ஒழிப்பதற்கும் அதன் சாதியக் கட்டமைப்பில் பல தீவிரமான உள்ளார்ந்த மறுசீரமைப்புகளை செய்ய வேண்டும் என்பதற்கான அழுத்தங்கள் ஒரே சமயத்தில் ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களிடமிருந்து வருவதற்கு அம்பேத்கர் அவர்களும் உயர்சாதிச் சமூக சீர்திருத்தவாதிகளிடமிருந்து வருவதற்கு மகாத்மா காந்தியடிகளும் காரணமாக விளங்கினார்கள்.

இந்தப் பார்வையை பொருத்தமட்டில், நண்பர்களான கன்னட எழுத்தாளர் நாகராஜ் அவர்களும் தேவனூர் மகாதேவன் அவர்களும் ஒருமித்தக் கருத்தினைக் கொண்டிருக்கிறார்கள் என்று நாம் நிச்சயமாகக் கூற முடியும்.

அம்பேத்கரையும் காந்தியையும் மிகப் பரந்துபட்ட அளவில் ஆய்வு செய்திருக்கும் நாகராஜன் மற்றும் தேவனூர் மகாதேவன் ஆகியோரின் படைப்புகளைப் பற்றியோ அல்லது அவர்களைப் பற்றியோ புதுதில்லி சாகின்பாக்கில் (Shaheen Bagh) போராடிக் கொண்டிருக்கும் பெண்களும் அல்லது ஜாமியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்களும் அறிந்து வைத்திருக்கிறார்களோ இல்லையோ தெரியாது. ஆனால் அந்த இரண்டு கன்னட எழுத்தாளர்களின் கருத்தாக்கங்களுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்கியிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

கருநாடகத்தைச் சேர்ந்த அந்த இரண்டு படைப்பாளிகளைப் போலவே, புதுதில்லியில் போராடிக் கொண்டிருப்பவர்களும் இந்தப் பொது சமூகத்திற்கு ஓர் அழுத்தமான செய்தியைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதாவது காந்தியையும் அம்பேத்கரையும் தொடர்ந்து வழிவழியாகப் பின்பற்றி வருபவர்கள் இனி அவர்களை தனித்தனியாக முன்னிறுத்துவதிலிருந்து விடுபட்டு, மக்களாட்சியையும் இந்திய பன்மைத்துவத்தையும் சர்வாதிகார பாசிச கும்பலிடமிருந்து காப்பாற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் ஜனநாயகப் போராட்டங்களில் மகாத்மா காந்தியடிகளையும் அண்ணல் அம்பேத்கர் அவர்களையும் ஒரு புள்ளியில் இணைத்து களப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் வலியுறுத்திச் செல்கிறார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.

 gandhi 300புதுதில்லி சாகின்பாக்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இசுலாமியப் பெண்கள் போராட்டத்தை நேரில் சென்று பார்வையிட்டு வந்த பிறகு, அந்தப் போராட்டத்தை பற்றிய ஒரு நீண்ட பதிவினை, உமர் அஹமது எனும் புது தில்லியைச் சேர்ந்த எழுத்தாளர் தனது ’கீச்சகம்’ பக்கத்தில் (twitter) பதிவிட்டிருந்தார். குறிப்பாக அந்தப் போராட்டத்தில், போராட்டக்காரர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்தப் பதாகைகளில் அம்பேத்கரும் காந்தியும் இணைந்திருப்பது போன்ற பதாகைகள் மிக அதிகமாக தென்பட்டன. அவ்வாறு வைத்திருப்பதற்கு என்ன காரணம் என்று பல்வேறு செய்திகளை அவர் பதிவிட்டு செல்லும் பொழுதே குறிப்பாக ஒரு செய்தியை அதில் பதிவு செய்கிறார். அதாவது, போராட்டக்காரர்கள் காந்தியையும் அம்பேத்கரையும் இணைத்து முன்னெடுப்பதற்கான காரணம், "மக்கள் தங்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்த தலைவருக்கு நன்றி சொல்வதிலிருந்து கடந்து, சுதந்திரமான குடிமக்களாக வாழும் உரிமை உடையவர்களாக தொடர்ந்து தங்களை நிலைநாட்டிக் கொள்வதற்கு உரிய மக்களாட்சி ஆயுதங்களை வழங்கிச் சென்றுள்ள அந்த தலைவருக்கு நன்றி சொல்லத் தொடங்கி விட்டார்கள்" என்று அதில் குறிப்பிடுகிறார்.

அவரது அந்தக் கீச்சகப் பதிவினை படித்த பிறகு அவரது அந்த கீச்சகப் பக்கத்திலேயே நான் ஒரு பதிலை (RETWEETED) எழுதினேன். அந்த பதிலுரையில் நான் கூறியிருந்ததாவது : "உங்களது கருத்தை நான் ஏற்கிறேன். ஆனால் ஒரேயொரு எச்சரிக்கை உணர்வை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன். அதாவது, இந்து- இஸ்லாமிய ஒற்றுமை என்ற விடயத்தை மட்டும் எடுத்துக் கொண்டோமென்றால், காந்திக்கு நிகராக அந்தப் பணியை செய்தவர் எவருமில்லை என்று என்னால் கூற முடியும். ஏன் நேரு கூட அவருக்கு இணையாக முடியாது. இது மிகவும் விரிவாக விளக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் காந்தியையும் அம்பேத்கரையும் எதிரெதிர் நிலையிலேயே வைத்து பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு, காந்தியும் அம்பேத்கரும் ஒன்றாக இணைத்து களம் காணப்பட வேண்டியவர்கள் என்று, தங்களது போராட்டங்களின் மூலம் அவர்கள் விடுக்கும் செய்தி மிகவும் போற்றுதலுக்கு உரிய ஒரு செயல்" என்று பதிலுரை (retweeted) இட்டிருந்தேன்.

எனது பதில் உரையைக் கண்டு கொண்ட பின் எழுத்தாளர் திரு அகமது அவர்கள், எனது அந்தக் கருத்தின் மீது மீள்பதிலிடும்போது, "உங்களுடைய கருத்தில் நான் முழுமையும் உடன்படுகின்றேன். சமூக அரசியலில் அவர்கள் இருவரும் ஆற்றிய பங்களிப்புகளில் உள்ள வேறுபாடுகளை குறிப்பிடுவதோடு மட்டுமல்லாமல், அந்தச் சமூக அரசியல் பணியில் அவர்கள் ஒருவரை ஒருவர் எவ்வாறு நிறைவு செய்து கொள்கிறார்கள், ஒருவரை ஒருவர் எவ்வாறு தழுவி நிற்கிறார்கள் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதை நான் பெரிதும் ஆமோதிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

எழுத்தாளர் அகமது மேலும் கூறும்போது, "விடுதலைப் போராட்ட காலக்கட்டத்தில், சமூகப் பணிகளில் ஈடுபட்டிருந்த தலைவர்களுக்கு இடையே அவர்கள் மேற்கொண்ட சமூகப் பணிகளின் அடிப்படையில் வேறுபாடுகள் இருந்திருக்கலாம் (ஒருவேளை அதில் அவர்கள் தோல்வியும் அடைந்து இருக்கலாம்). அத்தகைய தலைவர்களில் தங்களின் மேம்பாட்டிற்கு உதவக் கூடிய தலைவர்களை தேர்ந்துடுத்துக் கொள்வதும் அந்த மக்களின் விருப்புரிமை சார்ந்தது. ஆனால், ஒரு குறிப்பிட்ட தலைவரின் அரசியல் சமூகப் பணியை புகழ்வதற்காக, இன்னொருவரின் சமூகப் பணியை இடித்து உரைப்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை" என்கிறார்.

 அண்மையில் ஆளும் பாஜக ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எழுந்திருக்கும் போராட்டங்கள் பல வகைகளிலும் நம்மை உற்சாகப்படுத்தி இருக்கின்றன என்றால், அதற்கு மிக முக்கியமான காரணம், இந்தப் போராட்டங்களில் மிகப் பெரும் திரளாக பெண்கள் பங்கேற்றதோடு மட்டுமின்றி அவர்களே போராட்டங்களை தலைமையேற்று நடத்திச் சென்றார்கள் என்பதுதான். அந்த வகையில் பார்க்கும்பொழுது பெண்களின் இந்தக் குடிமைப் போராட்டப் பண்பின் எழுச்சியோடு, அம்பேத்கரும் காந்தியும் இணைந்து எழுந்திருப்பது மிகப் பொருத்தமான ஒன்று. பாலின சமத்துவத்தை இம்மியளவும் விட்டுக் கொடுக்காத அம்பேத்கர், தனது மேற்பார்வையில் கொண்டு வரப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்திலும் அதனை எதிரொலிக்கச் செய்தார் என்பதோடு மட்டுமின்றி, இந்து மதச் சட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதிலும் அவர் மிகத் தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்தார்.

மகாத்மா காந்தியடிகள் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில், குறிப்பாக அவரது மனைவியிடம் நடந்து கொள்ளும் விதத்தில் ஒரு வழக்கமான இந்துக் குடும்பத் தலைவனைப் போலவே நடந்து கொண்டார் என்றாலும், பொதுவெளியில், அவரது சமூக வாழ்க்கையைப் பொருத்தமட்டில், அவர் பெண்களின் விடுதலைக்காக மிகப் பெரிய பங்காற்றியுள்ளார் என்பதே உண்மை.

 பெண்களின் விடுதலைக்காக ஒரு குரல் கொடுத்ததன் விளைவினால் தான், 1925 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரோஜினி நாயுடு என்ற ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார். மிக முற்போக்கான மக்களாட்சி முறைமையைக் கொண்ட மேற்கு உலகு என்று நாம் பெரிதும் வியந்துதோதுகின்ற எந்த நாட்டிலும் இவ்வாறு ஒரு பெண், ஒரு பெரும்பான்மை கட்சியின் தலைவராக அந்தக் காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமல்லாது, கமலாதேவி சட்டோபாத்யாயா, உஷா மேத்தா, மிருதுளா சாராபாய், அனீஸ் கித்வாய், சுபத்ரா ஜோஷி, அருணா ஆசஃப் அலி, ஹன்சா மேத்தா (Kamaladevi Chattopadhyay, Usha Mehta, Mridula Sarabhai, Anis Kidwai, Subhadra Joshi, Aruna Asaf Ali, and Hansa Mehta) போன்ற எண்ணற்ற பெண் இயக்க முன்னோடிகள் உருவாவதற்கும் காந்தி மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தார். காந்தியின் பெண்ணிய விடுதலை உணர்வினால் இவர்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டார்கள்.

 குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின் போது, போராட்டக்காரர்கள் தங்கள் கரங்களில் ஏந்தியிருந்த போராட்ட முழக்கப் பதாகைகளில் ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கி அம்பேத்கர் அவர்கள் எழுப்பிய மிகப் புகழ் பெற்ற முழக்கமான "கற்பி, அணி திரட்டு, போராடு" (educate, organise, and agitate) என்ற வாசகத்தை தாங்கிய பதாகைகள் அதிகம் தென்பட்டன. பெண்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் நோக்கி, தத்தம் விடுதலைக்காக போராட அம்பேத்கர் விடுத்த அழைப்பை, அவரது காலத்திற்கு பிறகு பல்வேறு அம்பேத்கரிய அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வந்ததே இதற்கு முழுக்க முழுக்க காரணம். அதேபோன்று, மக்களாட்சி குடியரசையும் இந்தியாவின் பன்மைத்துவத்தையும் இந்துத்துவ பெரும்பான்மைவாதத்திடமிருந்து காப்பாற்றுவதற்காக தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களானது, இந்து - இஸ்லாமிய ஒற்றுமைக்காக காந்தி நடத்திய போராட்டங்களை ஒத்திருக்கின்றன.

எனவே, கன்னட எழுத்தாளர் தேவனூர் மகாதேவன் கூறுவதைப் போல, இந்து பேரினவாதம் ஏற்படுத்தும் அச்ச உணர்வை முறியடிக்க வேண்டுமெனில் மகாத்மா காந்தியடிகளும் அண்ணல் அம்பேத்கரையும் ஒன்றிணைத்து களம் காண வேண்டிய அரசியல் தேவை இன்று எழுந்துள்ளது. "நான் கோட்சே தேசத்தில் காந்தியுடன் இணைந்து நிற்கின்றேன்" என்று வாரணாசியைச் சேர்ந்த ஒரு 16 வயதுச் சிறுவன் கூறியிருப்பதை நாம் கவனமாக உற்று நோக்க வேண்டும் என்று தனது நேர்காணலில் தேவனூர் மகாதேவன் பதிவுசெய்திருக்கிறார்.

 எல்லா அடிப்படை வாதங்களைப் (Fundamentalism) போலவே, இந்து பேரினவாத அடிப்படைவாதமும் முதலில் அதனைநோக்கி ஈர்க்கப்படுகிறவர்களின் சொந்தக் கண்களையே பிடுங்கி எறிகின்றது; அவர்களை குருடர்கள் ஆக்கி விடுகின்றது; பிறகு, எல்லாவிதமான பகுத்தறிவு வாதங்களிடமிருந்தும் அவர்களை அன்னியப்படுத்தி விடுகின்றது; பிறகு, அவர்களது இதயங்கள் ஒர் இரக்கமற்ற விலங்கினைப் போல் மடை மாற்றப்படுகின்றது; பிறகு, இந்து மதத்திற்காக அவர்கள் தங்களைத் தியாகம் செய்யச் சொல்லி தூண்டப்படுகிறார்கள். இந்தக் கொடும்போக்கு நாடு முழுவதும் இப்பொழுது பரவலாகிக் கொண்டு வருகிறது.

 அடிப்படைவாதத்தின் கூரியக் கோரைப்பற்களின் பிடிகளிலிருந்து நாம் நமது குழந்தைகளின் கண்களையும் அவர்களின் இதயங்களையும் அவர்களது சிந்தனைகளையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. காந்தியைக் கொன்ற கோட்சேவினுடைய ஆவி, மோட்சத்தை அடைந்த பிறகாவது, தலித் பெண்கள் காந்தியை அவர்தம் சமூகப் பணிக்கு மீண்டும் அழைத்து வருவது நன்று. இந்த விழிப்புணர்வு மட்டும் ஏற்படாமல் போகுமேயானால், இந்த அடிப்படைவாத பேராபத்து தலித் அரசியலின் அடிவேர் வரை போய்த் தாக்குமே என்று நான் பெரிதும் கவலையடைகிறேன்.

அம்பேத்கரும் காந்தியும் பிழைகளுக்கும் தவறுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்று கூற முடியாதுதான். அவர்கள் தவறுகள் செய்திருக்கக்கூடும். ஒருவரைப் பற்றி இன்னொருவர் பகை மனப்பான்மையும் தவறான கணிப்புகளையும் கொண்டிருந்திருக்கக் கூடும். ஆனால் செயற்கையாக அவர்களை எப்படி வேண்டுமானலும் வளைக்க முடியாது; அதேபோல் கண்மூடித்தனமாக அவர்களை பின்பற்றவும் முடியாது; கூடாது.

 காந்தியும் அம்பேத்கரும் இப்பூமியில் வாழ்ந்த காலத்தினின்று முற்றிலும் வேறுபட்ட சமூகப் பொருளாதார அரசியல் சூழல் நிலவுகின்ற ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 21-ஆம் நூற்றாண்டின் மூன்றாம் பத்தாண்டில் (Decade) நிலவுகின்ற அரசியல் மற்றும் தொழில்நுட்ப சவாலானது, இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலக்கட்டப் பகுதியில் நிலவிய அரசியல் மற்றும் தொழில்நுட்ப சவால்களிலிருந்து பெரிதும் வேறுபட்டுள்ளன. ஆயினும் சமூக விழுமியங்களும் சமூக அரசியல் சவால்களும் ஏறத்தாழ இருபதாம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் இருந்தது போலவே இப்பொழுதும் மாறாதத் தன்மையோடு விளங்குகிறது.

பாலினச் சமத்துவத்திற்கான போராட்டங்களும் சாதிய வேறுபாடுகளுக்கு எதிரான போராட்டங்களும் இன்னும் முற்றுப் பெறவில்லை. சமய நல்லிணக்கத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் போராட வேண்டிய தேவைகள் இன்றும் உயிர்ப்போடு இருக்கின்றது; உடனடி தேவையாகவும் ஆகிவிட்டன. பயங்கரவாத, தீய குணம் பொருந்திய இந்துப் பேரினவாதத்தை முறியடிக்க வேண்டுமெனில், மகாத்மா காந்தியடிகளையும் அண்ணல் அம்பேத்கரையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் நாம் ஒன்றிணைத்து களம் கண்டாக வேண்டும்.

மூலம் : https://thewire.in/history/ambedkar-gandhi-hindutva-anti-caa-protests

- இராமச்சந்திர குகா (வரலாற்றுப் பேரறிஞர்)

தமிழில்: ப. பிரபாகரன்