பகுதி 1: ஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன?

பகுதி 2: ஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்!

பகுதி 3: முக்கிய பிரச்சினையின்போது புறக்கணிக்கப்பட்ட இந்திய நலன்

பகுதி 4

எண்ணெய், அது சார்ந்த டாலர், அதனை நிர்வகிக்கும் வங்கித் துறை, நிலைப்படுத்தும் ஆயுத உற்பத்தி, உயர்தொழில் நுட்ப பொருட்களான விமான உற்பத்தி, மகிழுந்து போன்ற அதிக லாபம் தரும் துறைகளை நோக்கி நகர்ந்தன அமெரிக்க நிறுவனங்கள். அதிக உழைப்பாளர்களைக் கோரும், குறைந்த லாபம் தரும் பொருள் உற்பத்தியை ஆசிய நாடுகளுக்குத் தள்ளி விட்டன. முதலில் விமானத் தயாரிப்பு வரை தொழில்நுட்பம் வளர்ந்திருந்த ஜப்பானின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, தனக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்ய வைத்தது அமெரிக்கா. அதன் வளர்ச்சிப் போக்கில் அங்கே உற்பத்தி செலவு அதிகமாகவே முறையான கல்வி, மருத்துவம் வழங்கப்பட்டு திறமையான, அதே சமயம் மலிவான உழைப்பாளர்களைக் கொண்ட சீனாவை நோக்கி உற்பத்தியை நகர்த்தினார்கள்.

modi with chinese pmசீனப் புரட்சிக்கு பின்பு விவசாயம் தன்னிறைவை அடைந்து, தொழில்மயத்தை நோக்கி நகரத் தயாராய் இருந்தது சீனா. பொருட்களை உற்பத்தி செய்யத் தேவையான மூலப்பொருட்களையும், அதே சமயம் அவற்றை விற்பதற்கான மிகப் பெரும் சந்தையையும் வைத்திருந்தது. ஏன் இந்தியா அப்படி ஒன்றும் அந்த நேரத்தில் வைத்திருக்கவில்லையா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு முதலில் தற்சார்பு பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப முயன்றது. அதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியோ, குறிப்பாக விவசாய வளர்ச்சியில் தன்னிறைவையோ அடையவில்லை. வறுமையைப் போக்க, விவசாய உற்பத்தியைப் பெருக்க பசுமைப் புரட்சியை (Green revolution) 1965ல் ஆரம்பித்து 1980 வரை போராடிக் கொண்டிருந்தது.

இந்தியா உணவுக்கு போராடிக் கொண்டிருக்கும் போதே, எழுபதுகளில் சில குறிப்பிட்ட தொழில்துறைகளை தனியார்மயப்படுத்த அனுமதித்தது. இதனால் குறிப்பிட்ட சதவீதத்தினர் மேம்பட்ட வாழ்க்கையை அடைந்தாலும் பெரும்பாலோர் உறுதிப்படுத்தப்பட்ட வேலையோ, உணவோ, கல்வியோ, மருத்துவமோ இல்லாத ஏற்றத்தாழ்வான நிலை. இந்தியாவில் நிலப்பகிர்வோ, விவசாய வளர்ச்சியோ, அதன் மூலமாக அவர்களின் வாங்கும் சக்தியோ பெருமளவு உயர்ந்திருக்கவில்லை. தொழில்துறை வளர்ச்சியும் மட்டுப்படுத்தப் பட்டதாகவே இருந்தது. இதைப் படித்ததும் இந்தியாவை மட்டம் தட்டுவதே உங்கள் வேலை என அலுத்துக் கொள்ளலாம். சரி உண்மை என்ன என்று சற்று புள்ளிவிவரங்கள் வழி பார்ப்போம்.

உண்மையில் இந்தியாவும் சீனாவும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்தான் அந்நியரிடம் இருந்து விடுதலை பெற்றன. இரண்டின் பொருளாதார நிலையும் ஒரே நிலையில்தான் அப்போது இருந்தது. 1961ல் 666 மில்லியன் மக்களை கொண்ட சீனா 50 பில்லியன் உள்நாட்டு உற்பத்தியைக் (GDP) கொண்டிருந்து. இந்தியா 439 மில்லியன் மக்களையும், 39.2 பில்லியன் ஜிடிபியையும் கொண்டிருந்தது. அடுத்த இருபது வருடங்களில் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பொருளாதார வளர்ச்சியையே அடைந்தன. சீனா 1981-ல் 989 மில்லியன் மக்களையும், 195.9 பில்லியன் ஜிடிபியைக் கொண்டதாகவும், இந்தியா 684 மில்லியன் மக்களையும் 193.5 பில்லியன் ஜிடிபியியைக் கொண்டதாகவும் வளர்ந்தன. உண்மையில் சீனாவை விட பொருளாதாரத்தில் சற்று அதிகமாகவே இந்தியா வளர்ந்திருந்தது. அப்புறம் ஏன் குறை சொல்லித் திரிகிறீர்கள் என்று கேட்கலாம். பொருளாதார வளர்ச்சியில் ஒன்றாக வளர்ந்தாலும் மனிதவள மேம்பாட்டில் இரண்டும் வெவ்வேறான வளர்ச்சியாக அல்லவா இருக்கிறது! 1950ல் மனிதவள மேம்பட்டு குறியீட்டு எண்ணில் சீனா 0.163, இந்தியா 0.160 என ஒரே நிலையில் இருந்தாலும், 1973ல் சீனா 0.407 ஆக உயர்ந்திருக்க, இந்தியா 0.289 ஆகப் பின்தங்கி விட்டிருந்தது.

80களில் சீன மக்களில் 67 சதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும், சராசரியாக 64 வருடங்கள் வாழக் கூடியவர்களாகவும் வளர்ந்திருந்தார்கள். இந்தியாவிலோ 40.8 சதம் பேர் மட்டுமே கல்வியறிவு கொண்டவர்களாகவும் சராசரியாக வெறும் 54 வருடங்கள் மட்டுமே வாழக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். 1990க்குப் பிறகு இரு நாடுகளும் ஒரே மாதிரியாக தொழில்மயமாவதை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். இந்தியாவில் வெளிநாடுகளில் இருந்து தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது. சீனாவிலும் இதேபோன்றே அனுமதித்தார்கள். ஆனால் ஒரு நிபந்தனையோடு, அமெரிக்க நிறுவனங்கள் உள்ளூரில் ஏதாவது ஒரு நிறுவனத்துடன் இணைந்தே உற்பத்தி செய்ய வேண்டும், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்தத் தொழில்நுட்பம் சீனாவிற்கு சொந்தம் என்ற நிபந்தனையுடன்.

சீனாவுக்கு முழுமையான தொழில் வளர்ச்சி வேண்டும், அமெரிக்காவுக்கு மலிவான உற்பத்தியும், சீனாவின் மாபெரும் சந்தையும் வேண்டும். இருநாடுகளின் தேவையும் நிறைவடையும் வகையில் ஒப்பந்தம் செய்து கொண்டு உற்பத்தி தொடங்கப்பட்டது. அவர்கள் இன்னொன்றையும் கவனமாகச் செய்தார்கள். அவர்கள் அதிக தொழிலாளர்களைக் கோருகின்ற தொழில்களைத் தெரிவுசெய்து உற்பத்தி செய்ய ஆரம்பித்தார்கள். அதற்கு நேர்மாறாக நமது நாட்டில் தொழில்நுட்ப இறக்குமதி அனுமதிக்கப்பட்ட பிறகு உற்பத்தித் துறையில் தொழிலாளர்கள் குறைய ஆரம்பித்தார்கள். அதாவது இங்கு தொழிலார்களை குறைத்து உற்பத்தியைப் பெருக்கி, பெரும் லாபம் ஈட்டவே முற்பட்டார்கள். அங்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டு, செல்வம் குறிப்பிட்ட அளவு பரவலாக சென்றடைந்தது. இங்கு செல்வம் உள்ளவரிடமே மேலும், மேலும் குவிந்தது.

அங்கே தொழில் முனைய விரும்பும் எவரும் ஊக்குவிக்கப்பட்டு முதலாளிகளாக வளர்ச்சியடைய எல்லா வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. இங்கே எந்தத் தொழிலையும் தொடங்க உரிமம் பெற வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, இருக்கும் நிறுவனங்களுக்கு எந்தப் போட்டியும் வராமல் பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள். 1980ல் உலகமயமாக்கம் அறிமுகப்படுத்தியதிலிருந்து அடுத்த பத்தாண்டுகளில் (1990) இந்தியாவின் ஜிடிபி (1980-1990 186.3-321 டாலர்கள்) சீனாவுக்கு நிகரான வளர்ச்சியை (1980-1990 191.1-360 டாலர்கள்) பெற்று இருந்தாலும், சீனாவில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 66-ல் இருந்து 78 சதத்திற்கு உயர்ந்தது. இந்தியாவிலோ 41ல் இருந்து 48 சதத்திற்கு மட்டுமே உயர்ந்தது. 

தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்குப் பிறகான பொருளாதாரப் பாய்ச்சல்

1990 தகவல் தொழிநுட்பப் புரட்சி பொருள் உற்பத்திப் பெருக்கத்துக்கு வித்திட்டு, உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியது. ஜிடிபி என்பது ஒரு நாட்டின் மக்கள் எவ்வளவு பொருட்களை, அதிலும் குறிப்பாக எவ்வளவு மதிப்பு மிக்க பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள் எனக் கொண்டால், அந்த மதிப்பு மிக்க பொருட்களை உருவாக்கத் தேவையான புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து இருக்கிறார்கள் என்பதில்தான் அடங்கியிருக்கிறது. அதோடு அதனை உருவாக்கும் அளவுக்கு அறிவும், அந்த அறிவின் அடிப்படையான உயர்தரமான கல்வியையும் பெற்றிருக்கிறார்கள் என்பது பொருள்.

எழுபதுகளில் உலகப் பணம் எனும் பொருளைக் கண்டறிந்த அமெரிக்காவின் ஜிடிபி 1 ட்ரில்லியனில் இருந்து எண்பதுக்குள் 3 ட்ரில்லியனாக உயர்ந்தது. எதிரிகள் அனைவரையும் வென்று எல்லோருடைய சந்தையையும் தாராளமாகத் திறக்க வைத்து, தாராளமயம் எனும் புதிய பொருளாதாரக் பொருளாதார கொள்கையைக் கண்டறிந்த பிறகு அது 6 ட்ரில்லியனாக வளர்ந்தது. தொன்னூறுகளில் தகவல் தொழில்நுட்பத்தை உருவாக்கி, கணினி, கைப்பேசி என புதிய பொருட்களை சந்தைக்கு அறிமுகம் செய்து, அது 2000-ல் 10 ட்ரில்லியனாக பெருக்கிக் கொண்டது.

இதே காலகட்டங்களில் அமெரிக்காவிற்கு இணையாக வர்த்தக வங்கி சேவைகள், விமானம், மகிழுந்து, எண்ணெய், வேளாண்பொருட்கள், வேதிப்பொருட்கள் மற்றும் ராணுவத் தளவாடங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்த பிரான்சு, ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் செல்வங்களும் பெருமளவு வளர்ச்சி கண்டன. இந்த உற்பத்தியில் பெரும் பங்கு கொண்ட சீனா 90-2000 காலத்திய பத்தாண்டுகளில் (360 பில்லியனில் இருந்து 1 ட்ரில்லியன்) மூன்று மடங்கு வளர்ச்சி கண்டது. இந்தத் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக் காலத்திலும் அதிகத் தொழிலாளர்களை கோருகின்ற உற்பத்தித் துறையையே தேர்ந்தெடுத்தது. அதோடு முக்கியமாக சீனா என்பதுகளுக்குப் பின்பு வாங்கிய தொழில்நுட்பங்களைச் சார்ந்தே காலம் கழிக்கவில்லை. அப்படி வாங்கிய தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்று மேம்படுத்தி புதிய பொருட்களை உற்பத்தி செய்ய முனைந்தார்கள். அந்த முனைப்பிற்கு ஏதுவாக அந்நாட்டு மக்களுக்கு முழு கல்வியறிவை (91%) எட்டச் செய்தார்கள். படிப்படியாக சொந்தமாக உற்பத்தி செய்யும் திறனை அடைந்து ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்தார்கள். உலகின் உற்பத்திக் கூடம் என்று பெயர் பெற்றார்கள்.

விவசாயத் தன்னிறைவில் இருந்து தொழில்மயமாகும் முயற்சியில் சீனா வெற்றி பெற்றது. எனில் இந்தியா அதில் தோல்வி அடைந்து விட்டதா என்று கேட்டால், இல்லை என்று சொல்வீர்களா? ஏன் 1990-க்குப் பிறகு தொலைக்காட்சி, கைபேசி நவீன சாதனங்களும் நம்மையும் வந்தடைந்திருக்கிறதே, எனில் நாமும் வளர்ந்து தானே இருக்கிறோம் எனக் கேட்கலாம். இவை எல்லாம் நம்மை வந்தடைந்தே தவிர நாம் உருவாக்கியவை அல்ல. அதனாலேயே நமது நாட்டில் பொருள் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களின் அளவு சொற்பமாகவும், விவசாயம் மற்றும் சேவைத் துறையில் மிக அதிகமாகவும் உள்ளது. இந்த இரு துறைகளும் அதிக மதிப்பு வாய்ந்த எந்தப் பொருட்களையும் உற்பத்தி செய்வதில்லை.

உதாரணமாக 2000-ல் 57% தொழிலாளர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23% மதிப்புடைய பொருட்களை உற்பத்தி செய்திருக்கிறார்கள். இதே காலகட்டத்தில் சீனாவில் 50% தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டாலும் அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு 14.68% மட்டுமே. இந்த மிகப் பெரும் உற்பத்தி பின்னடைவால் 1990 - வரை சீனாவிற்கு இணையாக வளர்ந்து கொண்டிருந்த இந்தியா (321 பில்லியன் ஜிடிபி) 2000-ல் 468 பில்லியன் அளவே வளர்ந்து பின்தங்கியது. இந்தப் பின்னடைவு நம் பிரதமர் சொல்வது போல எல்லா காரணங்களுக்கும் நேருவின் காங்கிரஸ் ஆட்சியால்தான் ஏற்பட்டது என்று சொல்ல முடியாது. இது வரலாற்றுப் பூர்வமானது.

இந்தியா என்ற நாடு எல்லா பகுதிகளையும் ஒருங்கிணைத்து 1950ல் தான் உருவாக்கப்பட்டது. எல்லா மாநில மக்களும் எல்லா (இன) சாதி மக்களும் கல்வி, பொருளாதராத்தில் ஒரே சீரான நிலையில் இருக்கவில்லை. ஐம்பதுகளுக்குப் பிறகும் ஒரே மாதிரியாக வளரவில்லை. பிற மாநிலங்களை விட வரலாற்று ரீதியாக கல்வி மற்றும் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்திருந்த தென்மாநிலங்கள் இந்தத் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக் காலத்தில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றன. எனினும் சீனாவைப் போன்று விவசாயம் முழுமையாக வளர்ச்சி அடைந்து, அதன் போக்கில் தொழிலாளர்களின் வாங்கும் திறன் அதிகரித்து, அதனைப் பூர்த்தி செய்ய தொழில் வளர்ச்சி, அந்தத் தொழில் வளர்ச்சி அடையத் தேவையான தரமான உணவு, கல்வி, மருத்துவம் அளித்து உருவாக்கப்பட்ட மக்கள் என்பதாக இல்லை. அதனால் இந்தப் பொருட்களின் உற்பத்தியில் பங்கேற்கும் சூழல் இங்கே இல்லை. ஆனால், இந்த ஒப்பிடத்தக்க அளவில் தென்மாநிலங்களில் மேம்பட்ட தொழிலாளர்கள், ஆங்கிலேயேர்களின் மேலாதிக்கம், இந்தி எதிர்ப்பால் இங்கே நிலவிய ஆங்கில மொழித்திறனுடன் கூடிய கல்வி அறிவும், சேவைத் துறையான மென்பொருட்களை உற்பத்தி செய்யும் அளவில் பங்கேற்க முடிந்தது. இந்த இருக்கும் குறைந்த அறிவுத் திறனுடன் உள்ள மனித வளத்தை மென்பொருட்களை (software) உருவாக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த காலகட்டங்களில் பயன்படுத்திக் கொண்டன.

இங்கே துறைமுகங்கள் அருகில் இருப்பதாலும், மூலப்பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட அளவு தரமான தொழிலாளர்கள் கிடைப்பதாலும் பன்னாட்டு நிறுவனங்கள் வாகன உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நிறுவி தங்களது உற்பத்திக்குப் பயன்படுத்திக் கொண்டன. முன்பு போலவே தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்து, எண்ணெய் சுத்திகரிப்பு, ஆடைகள், மருந்துப் பொருட்கள், மென்பொருட்கள், ஆபரணங்கள் ஆகிய பொருட்களை இங்கே பெருமளவு இந்த காலகட்டத்தில் உற்பத்தி செய்தாலும், அதில் சுயமான தொழில்நுட்பங்களையோ, புதிய பயன்பொருட்களையோ உற்பத்தி செய்யும் முனைப்போ இல்லை. அந்த முனைப்பில்லாத சூழலில் அதற்கு அடிப்படையான கல்வி, மருத்துவம் கொடுத்து மனிதவளத்தை மேம்படுத்தவில்லை. 2001-ஆம் ஆண்டு வரையிலும் இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்களின் அளவு வெறும் 61% (சீனா 91%) மட்டுமே.

(தொடரும்)

- சூறாவளி