அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்பது எப்போதுமே மனித சமூகத்துக்கு ஒரு கனவு அரசியலாகவே இருந்து வருகின்றது. காரணம் அறம் என்பதுகூட இங்கே வர்க்கம் சார்ந்தே கட்டமைக்கப் படுகின்றது. ஒடுக்கும் வர்க்கத்தின் அறம் என்பதும், ஒடுக்கப்படும் வர்க்கத்தின் அறம் என்பதும் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் வெவ்வேறு எதிரெதிர் நிலைகளைக் கொண்டது. சமூகங்கள் எப்போது வர்க்கங்களாக பிளவுபட்டதோ அப்போதே இது ஏற்பட்டு விட்டது.

ஆண்டான் அடிமை சமூகத்திலும், நிலப்பிரபுத்துவ சமூகத்திலும், முதலாளித்துவ சமூகத்திலும் ஆளும் வர்க்கத்திற்கு ஓர் அறமும், ஆளப்படும் வர்க்கத்திற்கு ஓர் அறமுமே இருந்தது. ‘அடுத்தவன் சொத்திற்கு ஆசைப்படாதே’ என்பதும் அறம்தான். ‘சொத்து வைத்திருப்பதே தவறு’ என்பதும் அறம்தான். முன்னது முதலாளித்துவ அறம், பின்னது கம்யூனிச அறம். இரண்டுமே தன்னளவில் தனது கருத்துக்களை நிலைநாட்ட கருத்தியல் ஆயுதங்களை வைத்திருக்கின்றன. பெரும்பான்மையான மக்கள் இதில் எந்த வகையான கருத்தியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் சிந்திக்கப் பயிற்றுவிக்கப்பட்டு இருக்கின்றார்களோ, எந்த சித்தாந்தம் சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்துகின்றதோ அதற்கு ஏற்றாற்போலவே ஆளும் வர்க்கத்தைப் படைக்கின்றார்கள்.

rajini 338மோசடிப் பேர்வழிகளும், சீரழிவுவாதிகளும், கொள்ளைக்காரர்களும், ஊழல் பேர்வழிகளும், சாதி வெறியர்களும், மத வெறியர்களும், பாலியல் குற்றவாளிகளும், கந்துவட்டிக் கும்பலும், பொறுக்கிகளும் இன்று சமூகத்தின் ஆளும் வர்க்கமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் பெரும்பான்மையான மக்கள் இன்று நிலப்பிரப்புத்துவ சிந்தனை முறையில் இருந்து தன்னை துண்டித்துக் கொள்ளாததும், அப்படியே துண்டித்துக் கொண்டிருந்தாலும் அதற்கு மாற்றாக முதலாளித்துவ சிந்தனை முறையை முழுவதுமாக ஏற்றுக் கொண்டதுமே ஆகும்.

அப்படி இல்லாமல் ஒருவேளை பெரும்பான்மையான மக்கள் தங்களை சோசலிச சிந்தனாமுறைக்கு மாற்றிக் கொண்டிருந்தால், இந்நேரம் சீரழிந்த இந்தச் சமூக அமைப்பை புரட்சியின் மூலம் என்றோ தூக்கி எறிந்து இருப்பார்கள். ஆனால் சகித்துக் கொள்ளுதல் என்பது எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளுதல் என்ற அடிப்படையில் அது அடிமை சிந்தனையாக மாறி விட்டதால், பெரும்பான்மை மக்களின் வாழ்க்கைக்கு எதிராக செயல்படும் நபர்களையும், அதை நியாயப்படுத்தும் புல்லுருவிகளையும் அவர்கள் சகித்துக் கொண்டு மெளனமாகக் கடந்து சென்று விடுகின்றார்கள்.

அதனால்தான் ரஜினிகாந்த போன்ற நபர்களால் இங்கே மிக எளிதாக பெரும்பான்மை மக்களின் நலனுக்கு எதிரான கருத்துக்களைக் கூட நியாயப்படுத்திப் பேசிவிட்டு, குற்ற உணர்வின்றி செல்ல முடிகின்றது. சமீப காலமாக செய்தியாளர்களை ரஜினி சந்திப்பதும், அங்கே சமூகத்தின் பொதுக் கருத்தியலுக்கு எதிராகப் பேசுவதும் வாடிக்கையாக மாறி இருக்கின்றது.

ஸ்டெரிலைட் போராட்டத்திற்கு தீவிரவாதிகள்தான் காரணம் என்று சொன்னதில் இருந்து பெரியார் மீது அவதூறாக குற்றச்சாட்டை முன்வைத்தது வரை அவரது நடவடிக்கைகள் அனைத்துமே சினிமாத்தனத்துடன் திட்டமிட்டு வடிவமைக்கப் பட்டதாகவே இருக்கின்றது. அவர் முன்வைக்கும் அனைத்துக் கருத்துக்களும் சற்றேறக் குறைய அல்ல, முழுவதுமாகவே ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்தியலாகவே இருக்கின்றது.

செய்திகள் கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கும் 24X7 செய்திச் சேனல்கள் ரஜினி வீட்டு வாசலில் அவர் உதிக்கும் முத்துக்களுக்காக எப்போதுமே காத்துக் கிடக்கின்றன. ரஜினியின் படம் ஓடவில்லை என்றாலும், அவரின் கருத்துக்கு தமிழ்ச் சமூகம் மதிப்பளிப்பதாக ஒரு தோற்றத்தை அவை திட்டமிட்டு உருவாக்குகின்றன. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி சங்கிகள் எப்படி கத்தி, கூப்பாடு போட்டாலும் அதைக் கேட்பதற்கு ஆள் இல்லாததால் அவர்கள் ரஜினி போன்ற நபர்களை வைத்து தங்களின் கருத்துக்களுக்கான நியாயத்தை உருவாக்க முடியும் என்று நம்பிக்கை வைத்து ரஜினியை இயக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். ரஜினியும் அதற்குக் குறை வைக்காமல் நடந்து கொள்கின்றார்.

ஆனால் ரஜினி ஏன் இப்படி பகிரங்கமாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்தியலை ஆதரிக்கின்றார் என்பது பலருக்குப் புரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதற்கான அடிப்படைக் காரணம் தற்போது வெளிப்பட்டு இருக்கின்றது. அதுதான் ரஜினி, கந்துவட்டிக்காரன் என்பது. கடந்த 2002 - 2003 மற்றும் 2004 - 2005 ஆகிய ஆண்டுகளுக்கான வருமானத்தை மறைத்து ரஜினிகாந்த் வரி ஏய்ப்பு செய்தார் எனக் கூறி அவருக்கு வருமானவரித் துறை அபராதம் விதித்திருந்தது. ஆனால் ரஜினிகாந்த் அந்த அபராதத் தொகைகளை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததால், கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மீது வருமான வரித் துறை வழக்கு தொடர்ந்திருந்தது. ஆனால் தற்போது முழு சங்கியாக ரஜினி மாறி விட்டதால், அவர் வருமான வரித் துறையில் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் அவர் மீது தொடரப்பட்ட வரி ஏய்ப்பு வழக்கை வருமானவரித் துறை வாபஸ் பெற்றுள்ளது.

அவர் வருமானத் துறை அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் “கடந்த 2002- 2003 ஆம் ஆண்டில் ஆறு பேருக்கு அதாவது 2 கோடியே 63 லட்சம் கடன் வழங்கினேன். அதில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. நிகர வருமானமான ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கு அப்போதே வரி செலுத்தி விட்டேன். அதேபோல கோபாலகிருஷ்ண ரெட்டிக்கு 18 சதவீத வட்டியில் ரூபாய் ஒரு கோடியே 95 லட்சம் கொடுத்தேன். அர்ஜூன் லால், சசி பூஷண், சோனி பிரதாப் ஆகியோருக்கு 68 லட்சம் கொடுத்துள்ளேன். 2003- 2004 ஆம் ஆண்டில் முரளி பிரசாத் அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் கடன் கொடுத்தேன். அதற்கு அடுத்த ஆண்டில் அதாவது 2004 - 2005 ஆம் ஆண்டில் கடனாகக் கொடுத்த ஒரு கோடியே 71 லட்சம் பணம் திரும்பி வரவில்லை. அதனால் நான் வட்டிக்குக் கொடுத்ததில் 33 லட்சத்து 93 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

எனவே கந்து வட்டிக்கு பணம் கொடுத்து சமூக சேவை செய்து நஷ்டப்பட்ட ரஜினியின் கோரிக்கையை கனிவாகப் பரிசீலித்த வருமான வரித்துறை, அவர் மீதான வரி ஏய்ப்பு வழக்கை கை விட்டிருக்கின்றது. பிஜேபிக்கு ஆதரவாக இருந்தால் எந்த மாதிரியான குற்றங்களில் ஈடுபட்டாலும் அவர்கள் காப்பாற்றப் படுவார்கள் என்பதை நாம் பார்த்துதான் வருகின்றோம். அதனால் ரஜினி மீதான வழக்கை வருமான வரித்துறை கைவிட்டது ஒன்றும் பெரிதில்லைதான். ஆனால் ரஜினி என்ற பிழைப்புவாதி ஏன் அரசிலுக்கு வருவேன், அரசியலுக்கு வருவேன் என்று ரசிகர்களை தன்னுடைய மொக்கைப் படங்களை எல்லாம் பொண்டாட்டியின் தாலியை அடமானம் வைத்தாவது பார்க்க வைத்தார் என்பதும், தன்னுடைய கட் அவுட்டர்களுக்கு பால் அபிசேகம் செய்ய வைத்தார் என்பதும், தன்னுடைய படங்கள் வெற்றி பெற மொட்டை போட வைத்தார் என்பதும், மண் சோறு தின்ன வைத்தார் என்பதும், எல்லாவற்றுக்கும் மேலாக ஏன் ரஜினி முழு சங்கியாக மாறினார் என்பதற்குமான காரணம் பணம் மட்டுமே என்பது முற்றுமுழுக்காக அம்பலப்பட்டு இருக்கின்றது.

எங்கு மோசடித்தனமும், கபடத்தனமும், அயோக்கியத்தனமும் இருக்கின்றதோ அங்கெல்லாம் பார்ப்பனியமும் முதலாளித்துவமும் இருக்கும். ரஜினி என்ற கந்துவட்டிகாரன் ரசிகர்களின் உணர்வுகளை எல்லாம் பணமாக்கியது போதாமல், அதைப் பல மடங்கு பெருக்க கந்துவட்டிக்கும் விட்டிருக்கின்றார். இப்போதும் அதை காப்பாற்றிக் கொள்ளத்தான் சங்கிகளின் ஊதுகுழலாக தன்னை மாற்றிக் கொண்டிருக்கின்றார். எப்படி ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன் யோக்கியனாக இருக்க மாட்டனோ அதே போல அவனை ஆதரிப்பவனும் யோக்கியனாக இருக்க மாட்டான். தான் சட்டப்படிதான் கந்துவட்டிக்கு விட்டதாக தற்போது ரஜினி சொல்கின்றார். அதாவது அதில் எந்தத் தவறும் இல்லை என்கின்றார். அதை அறம் சார்ந்த செயலாக கட்டமைக்க முயல்கின்றார். அதைத் தான் கட்டுரையில் முதலில் நாம் சொன்னோம். ரஜினியின் அறம் என்பது முதலாளிய சமூகத்தில் வாழும் ஒரு பிழைப்புவாதியின், அற்பவாதியின் அறம். அதை நிச்சயமாக நியாயப்படுத்த முடியும். ஆனால் ரஜினிக்காக தன்னுடைய சொந்தப் பொருளாதாரத்தை இழந்த அவரது ரசிகர்களுக்கு? அவர்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

ரஜினியிடம் கந்துவட்டிக்குப் பணம் வாங்கியவர்கள் அதை மீண்டும் கந்துவட்டிக்கும், மீட்டர் வட்டிக்கும், எக்ஸ்பிரஸ் வட்டிக்கும் சாமானிய மக்களிடம் விட்டு எத்தனை பேரின் வாழ்வை நாசம் செய்திருப்பார்கள்..? எத்தனை குடும்பங்கள் தமிழகத்தில் கந்துவட்டியால் அழிந்தது என்று நமக்குத் தெரியும். பல பேரின் வாழ்க்கையை அழித்து அதன் மூலம் தன்னுடைய பணத்தை கட்டற்று பெருக்கும் ஒரு அயோக்கியன் தன்னை சமூகத்தில் யோக்கியனாக கட்டமைக்க முயல்கின்றான். தான் சொல்வதை மக்களை நம்பச் சொல்கின்றான். இப்படிப்பட்ட ஒருவரை தமிழகத்தில் ஆதரிப்பவவர்களும், அவரை முன்னிறுத்துபவர்களும் எவ்வளவு பெரிய அயோக்கியர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ரஜினியின் படத்தை வெளியிட்டதால் தாங்கள் நட்டமடைந்து விட்டதாக விநியோகஸ்தர்கள் ரஜினியின் வீட்டு வாசலில் காத்துக் கிடக்கின்றார்கள். படத்தின் பட்ஜெட்டில் 70 சதவீதத்தை ரஜினியும், முருகதாசும் சுருட்டிக் கொள்ள, நம்பி வாங்கிய விநியோகஸ்தர்களோ இன்று நடுத்தெருவில் நிற்கின்றார்கள். ஆனால் ரஜினியோ அதைப் பற்றி கவலைப்படாமல் CAA, NPR, NRCயை ஆதரித்துப் பேசுகின்றார். ஆசை வெட்கமறியாது என்பது எவ்வளவு உண்மை. 70 வயதாகியும் பணத்தாசை போகாமல் தன்னை நம்பியவர்களை ஒட்டச் சுரண்டி கொழுக்கும் ஒருவர் ஊருக்கு உபதேசம் செய்கின்றார். முதலமைச்சர் ஆவதற்குக் கனவு காண்கின்றார். காரணம், சாமானிய மக்கள் இன்னும் செருப்பை காலில் அணிவதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

- செ.கார்கி