Karunanidhiஅதெல்லாம் ஒரு பொற்காலம். மகாபலி சக்கரவர்த்தி மறுபிறவி எடுத்து தமிழ்நாட்டை ஆண்டுவந்த காலம். ஆண்டிற்கு ஆறுமாதங்களாவது கிராமத்து வாய்க்கால்களில் தொடர்ந்தாற்போல் தண்ணீர் வந்து கொண்டிருந்த காலம். குளிப்பதற்காக வாய்க்காலுக்குப்போகிறவர்கள் மீன் பிடித்துத் திரும்பிவந்த காலம். துள்ளத்துடிக்க மீன்குழம்பு வைத்து சாப்பிட்ட காலம். துண்டின் ஒரு முனையை கழுத்தில் முடிச்சுப்போட்டுக் கொள்ளவேண்டும். மறுமுனையை இரண்டு கைகளிலும் விரித்துப்பிடித்து, வாய்க்கால் ஓரங்களில் பரத்தித் தூக்கினால் வெள்ளி மீன்கள் துண்டுக்குள் துள்ளிக்கொண்டு கிடக்கும்.

துண்டேந்தி மீன்பிடிக்கும் தத்துவத்தை கட்சிக்கு நிதி வசூலிப்பதற்காக ஆதியில் கையாண்டவர்கள் திராவிடக் கட்சிக்காரர்கள்தான். பொதுக்கூட்டங்களிலும், மாநாடுகளிலும் தொண்டர்கள் துண்டேந்தி வருவார்கள். தலைவர்கள் மைக்கில் அறிவிப்பு கொடுப்பார்கள். அப்போதெல்லாம் ரூபாய் நோட்டுக்கள் பணக்காரர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். அதாவது காங்கிரஸகாரர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், துண்டுகளில் சில்லறைக்காசுகள் மட்டுமே துள்ளி விழும். துண்டுகளில் திரட்டப்பட்டவை வெறும் காசுகள் மட்டுமல்ல; உணர்வுகள்; நாம் என்கிற உணர்வு.

திராவிட முன்னேற்றக்கழகம் சந்தித்த முதல் தேர்தலில் வெறும் எழுபதாயிரம் ரூபாய் தேர்தல் நிதியாக வசூலிக்கப்பட்டதாக ஒரு செய்தி. அண்ணாவின் கூட்டத்தில் தேர்தல் நிதியாக கோழியும், ஆடும், பறங்கிக்காயும் கொடுக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். மனிதனுக்கு மட்டுமா பரிணாம வளர்ச்சி? கட்சிக்கும் பொதுவானதல்லவா பரிணாமம்? அதற்கப்புறம் டிக்கெட்டுகள் அச்சடித்து கட்சிநிதி, வளர்ச்சி நிதி, போராட்டநிதி, வழக்குநிதி இப்படியெல்லாம் போய்க்கொண்டிருந்தது இந்த பரிணாமம்.

இந்த டிக்கெட்டுகள் எல்லாம் ரூபாய் நோட்டுக்களைப்போல் நாசிக் நகரத்து அச்சகத்தில் அச்சடிக்கப்படவில்லை. உள்ளூர் அச்சகங்களில் சாணிப்பேப்பரில் அதுவும் கட்சிக்காக உழைத்துக் கொண்டிருந்தவர்களின் அச்சகங்களில் ஓசியில் அடித்துக்கொடுக்கப்பட்டதை நான் அறிவேன். யார்வேண்டுமானாலும்...அதாவது கட்சியில் குரல் ஓங்கி ஒலிக்கும் யார்வேண்டுமானாலும் இதுபோன்ற டிக்கெட் புத்தகங்களை அச்சடித்து வசூல் செய்ய வாய்ப்புக் கொடுத்தது இந்த பரிணாமம்.


ஒரு கால கட்டத்தில் திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு தேர்தல் நிதியாக ரூபாய் பத்து லட்சம் வசூல் செய்ய வேண்டும் என்று அண்ணா இலக்கு நிர்ணயித்திருந்தாராம். ஆனால் கலைஞர் பதினோரு லட்சரூபாய் வசூல் செய்து "திருவாளர் பதினோரு லட்சம்" என்று அண்ணாவால் பாராட்டுப் பெற்றாராம்.

இந்தி எதிர்ப்புப்போராட்ட காலத்தில் போராட்டநிதி வசூல் செய்யப்பட்டதை மறக்க முடியாது. ஒரு ஓவல்டின் டப்பாவில் ஓட்டையை போட்டுக்கொண்டால் உண்டியல் தயார். வழியோடு போகிற அன்றைய பஸ்களை மாணவர்கள் நிறுத்தி உண்டியலை குலுக்குவார்கள். பொதுமக்கள் தாராளமாக அதில் காசு போடுவதற்கு அப்போதெல்லாம் நிறைய காரணங்கள் இருந்தன. மாணவர்கள் டீ குடிப்பதெல்லாம் அன்றைய கால கட்டத்தில் அபூர்வமானது. பெட்டிக்கடைகளில் விற்கும் தின்பண்டங்களே போராட்டக்காரர்களுக்கு போதுமானதாக இருந்தது. ஆரம்பத்தில் உண்டியல் வசூல் பொறுப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டது. அனுபவம் கூடிப்போனபிறகு உண்டியல்கள் உண்மையான கடத்தலுக்கு ஆளாகிப்போயின.

ஆட்சியைப் பிடித்ததும் நாடெங்கும் நடைபெற்ற பாராட்டு விழாக்களை அவசியம் குறிப்பிட்டாகவேண்டும். பத்தடிக்கு ஒரு டியூப் லைட், பாராட்டு பெறும் தலைவர்களுக்கு மலராடை, மலர் கிரீடம், வாள், கேடயம், விளக்குத் தோரணங்கள், அலங்கார வளைவுகள் என்றெல்லாம் கோமாளித்தனமான செலவுகள். இதெற்கெல்லாம் பணம்? இருக்கவே இருக்கிறது வசூல். இந்த காலகட்டம் கொஞ்சம் வசதியாகிப் போயிருந்தது. ரசீது புத்தகங்கள் கொஞ்சம் பெரியதாகவும், வரிசை எண்கள் கொடுத்தும் அச்சடிக்கப்பட்டன. தொண்டர்கள் கடமை உணர்வோடு வசூலில் இறங்கினாலும், கணக்கு விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாடு இருந்தது. என்னதான் இருந்தாலும் பொறுப்பாளர்கள் கண்ணியத்திற்குரியவர்கள் இல்லையா? திராவிடக் கட்சியின் வசூல் வரலாற்றில் பிணக்கம் ஏற்பட்டதால்தான் எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறினார் என்பதை இடைச்செருகலாக இந்த இடத்தில் சேர்த்துக்கொள்க.

அன்றைய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சாமானியர்களாயிருந்தனர். அவர்களுக்கு தொகுதிமக்கள் சார்பாக கார் வழங்கவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் "சட்டமன்ற உறுப்பினர் கார் நிதி" வசூல் செய்யப்பட்டதை குறிப்பிடாமல் போனால் வரலாறு என்னை மன்னிக்காது. இப்போதெல்லாம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதிமக்கள் சார்பாக ஏன் கார் வழங்கப்படுவதில்லை என்பது தெரியவில்லை.

நிதிவசூல் பரிமாணத்தில் என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தாகி விட்டது. வளர்ச்சி நிதி, வழக்கு நிதி, குடும்ப நிதி, போராட்ட நிதி, வறட்சி நிவாரண நிதி, வெள்ள நிவாரண நிதி, போர் நிதி, அகதிகள் நிதி, கட்டிட நிதி என்று பட்டியல் நீண்டுகொண்டே போனது. இயற்கை சக்திகள்கூட இந்த வசூல் விவகாரங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தன என்றால் இவர்களின் அதிர்ஷ்டத்தைப் பாருங்களேன்!

தேர்தல்நிதி வசூல் நுணுக்கங்கள் திரவிடக்கட்சியால் வளர்த்தெடுக்கப்பட்டாலும் இன்று அது எல்லா கட்சிகளிலும் கிளை பரப்பி நிற்பதுதான் ஆச்சரியமான விஷயம். இந்த நுணுக்கத்திற்காக பேடண்ட் உரிமை கோரப்படாதது அதைவிட ஆச்சரியமான விஷயம். இப்போதெல்லாம் தேர்தல் நிதி கேட்கப்படுவதில்லை....ஆமாம்...தேர்தல் நிதி கேட்கப்படுவதில்லை. தேர்தல்நிதி கிழிக்கப்படுகிறது. பல்வேறு நாணயவாரிகளில் அச்சடிக்கப்படும் இந்த ரசீதுகளின் குறைந்தபட்ச தொடக்கம் ஆயிரம் ரூபாய். வியாபாரிகளின் கடை அளவு, வியாபாரத்தின் அளவு, கடை சாலையை ஆக்கிரமித்திருக்கும் இடத்தின் பரப்பளவு, கடையில் இருக்கும் கண்ணாடி ஷோ கேஸ்களின் கனஅளவு, இவற்றையெல்லாம் பொறுத்து அவருக்கு ஒரு ரசீது கிழிக்கப்படும். வழுவழுப்பான பேப்பரில் அழகாக அச்சடிக்கப்பட்ட இந்த ரசீதுகளை தடவிப்பார்த்ததில் என்னுடைய நண்பருக்கு பணத்தை பறிகொடுத்த சோகம் மறந்துபோனது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

கட்சி வசூல்செய்யும் நிதி இப்படியென்றால் வேட்பாளர் தன்னுடைய சொந்த செல்வாக்கில் வசூல் செய்வது வேறு விஷயம். சாதிசெல்வாக்கு மிக்கவரை தேர்தல் வேட்பாளராக நிறுத்தினால் கட்சியில் இருந்து அவருக்கு தேர்தல் நிதி கொடுக்கவேண்டிய அவசியம் இருக்காது. வேட்பாளரின் சாதியைச் சேர்ந்தவர்களும் நண்பர்களும் ஒரு குறிப்பிட்ட தொகையை கவரில்போட்டு வேட்பாளரிடம் கொடுத்து விட்டால் வேட்பாளரின் பணப்பிரச்சினை தீர்ந்தது. ஆட்சிக்கு வந்ததும் தகுந்த கைமாறு செய்துவிடவேண்டியது என்பதுதான் இங்கே எழுதப்படாத ஒப்பந்தம்.

இந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பது ஈழத்தமிழர்களுக்கான நிவாரண நிதிவசூல். ஈழத்தமிழர்கள் சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்கும் விடுதலைப்புலிகளின் எதிர்தாக்குதலுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதும், தமிழினத்தை காப்பாற்ற ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவ்வாறு செய்பவர்களை நையாண்டி செய்யவேண்டும் என்ற நோக்கத்திலும் இந்தக்கட்டுரை எழுதப்படவில்லை.

தமிழ் நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை மூடிப்புதைக்கும் நோக்கத்தில்தான் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவுக்கரம் நீட்டப்பட்டிருக்கிறது என்று ஐயப்படுவதற்கு போதுமான காரணங்கள் இருப்பதுதான் இந்தக்கட்டுரையின் உந்துசக்தி.

அனைத்துக் கட்சிக்கூட்டத்தின் நடு மையமான தீர்மானமே இரண்டு வாரத்திற்குள் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வோம் என்பதுதான். ஆனால் மழையில் நனைந்தபடி மனித சங்கிலி...கின்னஸ் சாதனை என்றெல்லாம் பிரச்சினை திசைதிரும்பிப் போய்க்கொண்டிருக்கிறது.

Rajapakse and Pranab Mukarjeeஅதிகபட்ச நடவடிக்கையாக முதல்வர் கருதுவது பிரணாப் முகர்ஜியின் சந்திப்பு மட்டும்தான். தமிழக மக்களின் எதிர்பார்ப்பு அதுவல்ல. ஒட்டுமொத்த மக்கள் பிரதிநிதிகளும் பதவி துறக்கவேண்டும் என்பதும், உணர்வுபூர்வமான ஒற்றுமையை உலகிற்கு சொல்லவேண்டும் என்பதுதான். இன்றைக்கு ஈழப்பிரச்சினையில் தமிழர்கள் எப்படி நடந்து கொண்டார்களோ இதைப்போலத்தான் நாளை எதிர்கொள்ள இருக்கிற கர்நாடக, கேரள பிரச்சினைகளிலும் தமிழர்கள் நடந்து கொள்வார்கள் என்ற எண்ணத்தை விதைக்கத் தவறிவிட்டனர் தமிழக மக்கள் பிரதிநிதிகள்.

மற்ற கட்சித்தலைவர்கள் எப்படியாவது போகட்டும். குறைந்தபட்சம் முதல்வராவது முன்மாதிரியாக நடந்துகொண்டிருக்கலாம். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களை அனுப்பி வைத்திருந்தால்கூட இதே பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்திருக்கத்தான் போகிறார். சொல்லப் போனால் சோனியாகாந்திகூட முதல்வரை சமாதானப்படுத்த சென்னைக்கு வந்திருக்கலாம். தமிழக மக்களிடையே சரிந்துவரும் செல்வாக்கை தூக்கிநிறுத்த கிடைத்த ஒரு வாய்ப்பை முதல்வர் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

முதல்வரின் இப்போதைய அறிக்கைகள் மோசத்திலிருந்து மிகமோசம் என்கிற நிலைக்குப் போயிருக்கிறது. மத்திய அரசு இயன்றவரை உதவி வருவதாகவும், அதனுடைய அதிகார எல்லையையும் நாம் உணரவேண்டாமா என்று முதல்வர் இப்போது கேட்கிறார். இந்தக்கேள்வி இதற்குமுன்னரே கிராமத்து டீக்கடை பெஞ்சுகளில் எழுப்பப்பட்டு விட்டது. அனைத்துக்கட்சிக் கூட்டத்தின் தீர்மானங்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடியவை என்பது, அந்த தீர்மானங்கள் எழுதப்படும்போது எப்படித் தெரியாமல் போயிற்று? இரண்டுமுறை பதவி இழந்த தி.மு.க. மூன்றாவது முறையாக ஒருமுறை தமிழ் உணர்விற்காக பதவி இழந்தால் தமிழ்நாடு ஒன்றும் இப்போதைக் காட்டிலும் இன்னும் இருட்டாகப் போய்விடாது. மாறாக ஃபீனிக்ஸ் பறவைபோல நீங்கள் எழுந்துவரத்தான் அது உதவும்.

இதெயெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது, நடிகர் விஜயகாந்த் சொல்வதுபோல் மக்கள் பிரச்சினைகளை திசை திருப்புவதற்காகத்தான் இலங்கைத்தமிழர் பிரச்சினையை முதல்வர் கையிலெடுத்துக் கொண்டாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அணுசக்தி ஒப்பந்தம் பற்றி இடியோசையாக முழங்கிய கட்சிகளின் குரல்கள் டமார ஒலியாக குறைந்தது. அப்புறம் கீச்சுக்குரலாகி இப்போது மியாவ் மியாவ் ஆக முனகல் கேட்கிறது.

ஒக்கனேக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், முல்லைப்பெரியாறு பிரச்சினை, ரேஷன் அரிசி கடத்தல், ஆற்று மணல் கடத்தல் இவையெல்லாம் எங்கேயோ கேட்டகுரலாகிப் போய்விட்டன. விலைவாசி உயர்வால் ஏழை மக்களின் இன்னல்களை இனிபேசுவாரில்லை. மின்சார தட்டுப்பாடால் வீடுகள் இருண்டுபோனதை விளக்கிச்சொல்ல யாருக்கும் நேரமில்லை. மூடப்பட்ட தொழிற்சாலைகள் வெறும் புள்ளிவிவரங்களில் மூழ்கிப்போய்விட்டன. பருவமழை பொய்த்துப்போனதன் தாக்கம் சம்பா அறுவடைநேரத்தில் வெளிப்படத்தான் போகிறது. விளைந்த நெல்லை கொள்முதல் செய்வதில் இருக்கும் குளறுபடிகளால் நொந்துபோன விவசாயிக்கு ஆதரவுக்கரம் நீட்ட ஆளில்லை.

கரும்புக்கு கூடுதல் விலை கேட்டு போர்க்கொடி தூக்கும் விவசாயிகள் வாதாடத் தொடங்கிவிட்டர்கள். கரும்பில் இருந்து மின்சாரம் எடுக்கிறீர்கள்; சாராயம் காய்ச்சுகிறீர்கள்; காகிதம் செய்கிறீர்கள்; வெறும் காட்டுக்கருவேல மரம் ஒரு டன் 2,500 க்கு விற்கும்போது கரும்புக்கு ஏன் 2,000 ரூபாய் கொடுக்கக்கூடாது என்று ஆணிஅடித்தாற்போல விவசாயிகள் கேட்கிறார்கள். சாராய வியாபாரத்தால் இலவசங்களை அள்ளி வீசும் நீங்கள் ஏன் அதனுடைய மூலப்பொருள் உற்பத்தியாளருக்கு கூடுதலாக கொடுக்கக்கூடாது? தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு கூடுதல் விலை கொடுக்கும் அரசு, மூலப்பொருளான கரும்புச்சக்கையின் சொந்தக்காரனுக்கு கூடுதலாக ஏன் காசு கொடுக்கக்கூடாது?....இப்படியெல்லாம் கோரிக்கைகள் வளர்ந்துகொண்டே போகின்றன. மாற்றுவழி தேட வேண்டாமா? பழக்கப்பட்ட காரியத்தை கையிலெடுத்துக் கொண்டதாகத்தான் நினைக்கத் தோன்றுகிறது...அதுதான் அந்த உண்டியல் வசூல். போகட்டும்...உண்டியல் குலுக்கும் ஓசை அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் யார் எதுசொன்னாலும் தமிழினத்துரோகியாகிப் போய்விடுவான்.

இத்தனை சந்தடியிலும் ஒரே ஒரு குரல்மட்டும் விடுதலைப்புலிகளின் இயக்கத்தை தடைசெய்யப்பட்ட இயக்கம் என்று மிகத்துணிவாக கூறிவருகிறது. ஒட்டுமொத்த தமிழகமும் பிழையாகப்பேசும் இந்த குரலுக்குரியவரை வெறுப்பாகப் பார்த்தாலும் சொன்னதையே திருப்பிச்சொல்லும் துணிச்சல் பாராட்டுக்குரியது.

சினிமாக்காரர்கள் இப்போது நிதி திரட்டியிருக்கிறார்கள். காசோலை வைத்திருப்பவர்களின் வரிசை நீண்டுகொண்டே இருக்கிறது. அமைச்சர்கள் தமிழர்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்து விட்டார்கள். இனிமேல் தொழிலதிபர்கள் வரிசையாக வருவார்கள்; அப்புறம் அதிகாரிகள்; அதற்குப் பின்னால் சங்கங்கள்; அரசு ஊழியர்களும் வருவார்கள் வழக்கமான ஒருநாள் ஊதியத்தோடு.

ஆனால் அண்ணாவின் முன்னிலையில் அன்று வைக்கப்பட்ட ஆடு, கோழி, பறங்கிக்காய் போன்ற எதையும் யாரும் கொண்டு வரமாட்டார்கள். அப்படிவைக்ககூடியவர்கள் எல்லாம் இப்போது வெகுதொலைவில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த உண்டியல் குலுக்கும் ஓசை மக்களவைத்தேர்தல் வரை ஓயாது. காசுகள் குலுங்கும் இந்த ஓசை உணர்வுகளின் ஓசை. நாம் என்ற உணர்வை தட்டியெழுப்பும் முயற்சி இது. சிந்தாமல் சிதறாமல் அதிகாரத்தை கைமாற்றிவிட உதவும் ஓசை இது. ஈழத்தமிழனுக்கு உதவும் ஓசை இதுவல்ல.

- மு.குருமூர்த்தி