தமிழகத்தின் தற்போதைய அரசியல் இலங்கை நெருக்கடியை சுற்றியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. போர்நிறுத்த உடன்பாட்டை தன்னிச்சையாகவே முறித்து புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை சிங்கள அரசு தொடங்கியதிலிருந்தே இலங்கை அரசுக்கு எதிரான நிலை மக்கள் மத்தியில் தமிழக அரசியல் கட்சிகளால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனுடன் தமிழக மீனவர்கள் தாக்குதலும் இணைந்து கொண்டது. புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர். தமிழகத்திற்கு அகதிகளாக வருபவர் எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்க அதே நேரம் இலங்கையிலும் ஊரைவிட்டு வெளியேறி காடுகளில் குடியேறி வருவதாகவும் செய்திகள் வருகின்றன. அண்மையில் இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டையொட்டி புலிகள் போர்நிறுத்தம் அறிவித்திருந்தும் அதை மறுத்த இலங்கை அரசு மாநாடு நடந்துகொண்டிருக்கும் போதும் விமானத் தாக்குதலில் ஈடுபட்டது. இதுபோன்ற செய்திகள் வரத்தொடங்கியதும் தமிழக ஓட்டுக்கட்சிகளுக்கு இலங்கைத் தமிழர்கள் ஞாபகம் வர ஒவ்வொருவராக குரல் கொடுக்க த்தொடங்கினர்.

LTTEயாழ் சாலை மூடப்பட்டதும் மருந்துப்பொருட்கள்கூட இல்லாமல் தவித்தபோது செஞ்சிலுவை சங்கம் மூலம் மருந்தும் உணவுப்பொருட்களும் அனுப்ப முயற்சி நடந்தது. அதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டிக்க மனமில்லாத ஓட்டுகட்சிகள் தற்போது இலங்கை தமிழர்மீது பாசம் வந்து குரல் கொடுக்கின்றன.

இன்னும் இரண்டு வாரத்திற்கும் போர்நிறுத்தம் செய்ய இலங்கை அரசை நடுவண் அரசு வற்புறுத்த வேண்டும் இல்லாவிடின் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்று முதல்வர் தலைமையில் கூடிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதில் இருந்து இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியது. அதிமுக, மதிமுக, பாஜக, தேமுதிக தவிர ஏனைய கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டன. பின்னர் மதிமுகவும் தனது உறுப்பினர்களும் தேவைப்பட்டால் பதவிவிலகுவர் என அறிவித்தது. தொடர்ந்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வகுப்புகளை புற‌க்கணித்து போராட்டம் நடத்தினர். வ‌க்கீல்க‌ளும் நீதிம‌ன்ற‌த்தைப் புற‌க்க‌ணித்து போராட்ட‌ம் ந‌டத்தின‌ர்.

ந‌டிக‌ர் ச‌ங்க‌மும் திரைப்ப‌ட‌ த‌யாரிப்பாள‌ர் ச‌ங்க‌மும் ராமேஸ்வ‌ர‌ம், சென்னையில் பேர‌ணி உண்ணாவிர‌த‌ம் என‌ அறிவித்துள்ள‌ன‌. இவை எல்லாவ‌ற்றிற்கும் மேலாக‌ சேல‌த்தில் சிறைக்கைதிக‌ள் 800க்கும் அதிக‌மானோர் இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ உண்ணாவிர‌த‌மிருந்த‌ன‌ர். இதில் சிறைக்கு வெளியே ந‌க்ச‌ல் அமைப்பின் வேண்டுகோளின்ப‌டியே சிறைக்குள் உண்ணாவிர‌த‌ம் ந‌ட‌ந்த‌து எனும் த‌க‌வ‌லால் சிறைத்துறையே அதிர்ச்சிய‌டைந்துள்ள‌து. இத்த‌னைக்குப் பிற‌கும் ந‌டுவ‌ண் அர‌சு அமைதியாக‌ அறிவித்திருக்கிற‌து, இல‌ங்கையின் உள்நாட்டுப் பிர‌ச்ச‌னையில் இந்தியா த‌லையிடாது. ஆனால் இந்திரா ஐஐ வ‌கை ராடார்க‌ளும், எல்70 வ‌கை விமான‌ எதிர்ப்பு துப்பாக்கிக‌ளும் இன்னும் ஏராள‌மான‌ ஆயுத‌ங்க‌ளும் தொழில்நுட்ப‌ உத‌விக்காக‌ ஆட்க‌ளையும் கொடுத்த‌து இல‌ங்கையின் உள்நாட்டுப் பிர‌ச்ச‌னையில்லையா?

பாதிக்க‌ப்ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு உண‌வுப்பொருட்க‌ளும் ம‌ருந்துக‌ளும் அனுப்ப‌வேண்டும் என்றால் அது இல‌ங்கையின் உள்நாட்டுப் பிர‌ச்ச‌னையாகிவிடும். நாடுக‌ள் வேறென்றாலும் பார்வை ஒன்றுதான். அர‌சை எதிர்ப்ப‌வ‌ர்க‌ள் ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள். ஆனால் இதுபோன்ற‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌குழுக்க‌ள் தான் இல‌ங்கையை ப‌ணிய‌வைக்க‌வும், மால‌த்தீவு ஆட்சி மாற்ற‌த்திற்கும் இந்தியாவுக்கு ப‌ய‌ன்ப‌ட்ட‌ன‌ர். ஆனால் இப்போதோ அப்பாவித் த‌மிழ‌ர்க‌ள் மீதான‌ தாக்குத‌லை நிறுத்த ‌வேண்டுமென்றால் அது புலி ஆத‌ர‌வாகிவிடும், அது இந்தியாவில் த‌ன்னுரிமை வேண்டிப் போராடும் குழுக்க‌ளுக்கு ஆத‌ர‌வாகிவிடும். ஓட்டுக்க‌ட்சிக‌ளின் நாட‌க‌ங்க‌ளும், ந‌டிக‌ ந‌டிகைய‌ர்க‌ளின் கூத்துக‌ளும் நிறைய‌ பார்த்தாகிவிட்ட‌து. ம‌க்க‌ள் நிலை என்ன‌?

இந்திய‌ன் எக்ஸ்பிர‌ஸ் நாளேடும், சிஃபோர் எனும் நிறுவ‌ன‌மும் இணைந்து ந‌ட‌த்திய‌ க‌ருத்துக்க‌ணிப்பில் த‌மிழ‌க‌த்தின் பெரும்பான்மையோர் இந்தியா இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ளுக்கு உத‌வ‌வேண்டும் என்று கூறியிருக்கிறார்க‌ள். ஆனால் வெறும் ஆத‌ர‌வு ம‌ட்டும் போதுமா? அது ம‌டியும் த‌மிழ‌ர்க‌ளைக் காப்பாற்றுமா? இந்த‌ மௌன‌மான‌ ஆத‌ர‌வைத்தான் அர‌சிய‌ல் பிழைப்புவாதிக‌ள் த‌ங்க‌ள் நாட‌க‌ங்க‌ள் மூல‌மும் அறிக்கைக‌ள் மூல‌மும் த‌ங்க‌ளுக்கான‌ ஆத‌ர‌வாக‌ உருமாற்ற‌ம் செய்துகொள்கிறார்க‌ள். இதுதான் இவ‌ர்க‌ளின் திடீர் த‌மிழ‌ர்ப‌ற்றுக்குக் கார‌ண‌ம்.

ம‌றுப‌க்க‌ம் வ‌ழ‌க்க‌ம் போல் ஜெய‌ல‌லிதாவும் பாஜ‌க‌வும் த‌ங்க‌ள் பாசிச‌ முக‌த்தை வெளிக்காட்டியிருக்கின்ற‌ன‌. இல‌ங்கையில் ந‌ட‌க்கும் யுத்த‌ம் புலிக‌ளுக்கு எதிரான‌து த‌மிழ்ம‌க்க‌ள் பாதிக்க‌ப்ப‌டுகிறார்க‌ள் என்று கூறிக்கொண்டு விடுத‌லைப்புலிக‌ள் எனும் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌த்தை ஆத‌ரிக்க‌க்கூடாது என்கிறார்க‌ள். இர‌ண்டு ல‌ட்ச‌த்திற்கும் மேற்ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ளை காடுக‌ளுக்குள் விர‌ட்டிவிட்ட‌, குழ‌ந்தைக‌ளைக் கூட‌ கொல்ல‌த் த‌ய‌ங்காத‌ சிங்க‌ள‌ வெறியாட்ட‌த்தை எதிர்ப்ப‌து இவ‌ர்க‌ளுக்கு ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்திற்கு ஆத‌ர‌வாக‌ தெரிகிற‌து. ம‌ற்றொரு ப‌க்க‌ம் புலிக‌ளின் செய‌ல்பாட்டை விம‌ர்சித்தாலோ த‌னித்த‌மிழ் இய‌க்க‌ங்க‌ளுக்கு அது சிங்க‌ள‌ வெறிய‌ர்க‌ளுக்கான‌ ஆத‌ர‌வாக‌ தெரிகிற‌து. புலிக‌ளை க‌ண்க‌ளை மூடிக்கொண்டு ஆத‌ரிக்க‌ வேண்டும் என்கிறார்க‌ள்.

இல‌ங்கையில் ந‌ட‌ப்ப‌து புலிக‌ளுக்கு எதிரான‌ போரா? த‌மிழ‌ர்க‌ளுக்கு எதிரான‌தா? நேச‌ன‌ல் போஸ்ட் என்ற‌ க‌ன‌டா நாட்டு இத‌ழுக்கு இல‌ங்கை ராணுவ‌ த‌ள‌ப‌தி ச‌ர‌த் பொன் சேகா அளித்துள்ள‌ பேட்டியில் இதை தெளிவாக‌க் கூறியுள்ளார். 'இந்த‌ நாடு சிங்க‌ள‌வ‌ர்க‌ள் நாடு என்ப‌தில் என‌க்கு அசைக்க‌முடியாத‌ ந‌ம்பிக்கை உள்ள‌து. சிறுபான்மை இன‌த்த‌வ‌ர் இங்கு தாராள‌மாய் வ‌சிக்க‌லாம், ஆனால் எந்த‌ உரிமையும் கோர‌க்கூடாது, கோர‌வும் முடியாது.' இதை எப்ப‌டி புலிக‌ளுக்கு எதிரான‌ போராக‌ எடுத்துக்கொள்ள‌ முடியும்? இல‌ங்கை ராஜ‌ப‌க்சே அர‌சைவிட‌ புலிக‌ள் திற‌மையாக‌ செய‌ல்ப‌டுகிறார்க‌ள் என்ப‌து வெளிப்ப‌டையாக‌வே தெரிகிற‌‌து. இல‌ங்கை ராணுவ‌ம் முழு வீச்சில் போர் ந‌ட‌த்தினாலும் புலிக‌ள் எதிர்த்தாக்குத‌ல் பாணியிலேயே த‌ங்க‌ள் போரை ந‌ட‌த்திக் கொண்டிருக்கிறார்க‌ள். இந்தியாவுக்கு எதிரான‌ எந்த‌வொரு ந‌ட‌வ‌டிக்கையிலும் ஈடுப‌ட‌ அவ‌ர்க‌ள் த‌யாராக‌ இல்லை.

ப‌ல‌ நாடுக‌ள் புலிக‌ளுக்கு த‌டை விதித்திருந்தாலும் இல‌ங்கை அர‌சை புலிக‌ளுட‌ன் பேச்சுவார்த்தை ந‌ட‌த்துமாறு உல‌க‌ நாடுக‌ள் அறிவுறுத்தி வ‌ருவ‌தே புலிக‌ளின் வெற்றியாக‌ இருக்கிற‌து. ஆனால் இது த‌னி ஈழ‌ம் வ‌ரை செல்லுமா என்ப‌தில் புலிக‌ளுக்கே ஐய‌ம் உண்டு. இல‌ங்கையும் போரை நீடித்துக்கொண்டே செல்ல முடியாது அதேநேர‌ம் புலிக‌ளை அழித்துவிட‌வும் முடியாது. இதில் சிக்கி வாழ்வை இழ‌ந்து கொண்டிருப்ப‌து இல‌ங்கை ம‌க்க‌ள். இல‌ங்கையின் பொருளாதார‌ம் பாதாள‌த்தில் வீழ்ந்து கிட‌க்கிற‌து. ம‌க்க‌ள் ஒன்று போரில் சாக‌வேண்டும் அல்ல‌து ப‌ட்டினியால் சாக‌ வேண்டும் என்கிற‌ நிலையிலிருக்கிறார்க‌ள். புலிக‌ளின் த‌லைமையில் ஈழ‌ம் அமைந்தாலுமே அங்கு ம‌க்க‌ள் வாழ்வு எப்ப‌டி இருக்கும்? இல‌ங்கை ராணுவ‌ ந‌ட‌வ‌டிக்கைக்கெதிராக‌ ப‌ன்னாட்டு த‌லையீட்டை கோருப‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் பொருளாதார‌த் த‌லையீட்டை ம‌றுக்க‌வா முடியும்.

புலிக‌ளுக்கெதிரான‌ ராணுவ‌ ந‌ட‌வ‌டிக்கையில் இந்திய‌ ந‌ல‌னும் அட‌க்க‌ம் என்று தெரிந்தும் த‌ம‌து இருப்பை தக்க‌வைப்ப‌த‌ற்காக‌ இந்தியாவை எதிர்க்க‌த் துணியாத புலிக‌ள் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் பிழைப்புவா‌திக‌ள் துணையுட‌ன் இந்தியாவிற்கு நிர்ப்ப‌ந்த‌ம் கொடுக்க‌ நினைக்கும் புலிக‌ள் இந்தியாவின் பொருளாதார‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளுக்கு இரையாகாம‌ல் காக்க‌ முடியும்?

ஈழ‌ ம‌க்க‌ள் இனியும் இழ‌ப்ப‌த‌ற்கு ஒன்றுமில்லை. ஆனால் அவ‌ர்க‌ள் க‌ட‌க்க‌வேண்டிய‌து நிறைய‌ இருக்கிற‌து. சிங்க‌ள‌ப் பேரின‌வாத‌மோ, புலிக‌ளோ, இந்தியாவோ வ‌ல்லூறுக‌ளுக்கு இரையாக‌ நிற்ப‌து அவ‌ர்க‌ள்தான். அவ‌ர்க‌ளின் வாழ்வு அவ‌ர்க‌ளின் கைக‌ளிலேயே. சிவ‌ந்து சீறி எழுவ‌திலேயே அவ‌ர்க‌ளின் வாழ்வு இருக்கிற‌து. அவ‌ர்க‌ளின் வாழ்நிலைச் சூழ‌ல் அப்பாட‌த்தை அவ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்கும். நிச்ச‌ய‌ம் ஈழ‌ம் ம‌ல‌ரும்.

- செங்கொடி

Pin It