Vijaykanthதாங்கள் கட்சி ஆரம்பித்த பொழுது, ‘தயவுசெய்து விஜயகாந்தை முழுநேர அரசியல்வாதியாக ஒத்துக்கொள்ளுங்கள், அப்படியாவது தமிழ் சினிமா பிழைத்துப் போகட்டும்’ என்று எஸ்எம்எஸ் ஒன்று தமிழ்நாட்டில் உலாவந்ததை தாங்கள் அறிவீர்கள். நீங்கள் கட்சி ஆரம்பித்த விசயத்தை ஒரு தொலைக்காட்சி தனது விளையாட்டுச் செய்திகளின் கீழ் வகைப்படுத்தி சொன்னதாக ஒரு கிண்டல் இப்போதும் புழக்கத்தில் இருக்கிறது. ஒரு முதலாளியாக இருந்து பெரும் மூலதனத்தில் கல்லூரியும், கல்யாண மண்டபமும் கட்டியது போன்றுதான் இப்போது ஒரு கட்சியையும் நீங்கள் தொடங்கியிருப்பதாகவும் சொல்லப்படுவதுண்டு. நான் அப்படியெல்லாம் தங்களை குறைத்து மதிப்பிடவில்லை.

தமிழகத்தை ஆண்ட / ஆள்கிற கட்சிகளின் மீது அதிருப்தி கொண்டுள்ள மக்களில் ஒரு பகுதியினர் தங்களின் தலைமையின் கீழ் அணிதிரண்டிருக்கும் எதார்த்தத்தைக் கண்ட பிறகு பலரும் தங்களைப் பற்றிய கருத்துகளை மாற்றிக் கொண்டுள்ளனர். மக்கள் உங்கள் பின்னே அணிதிரள்வதற்கான காரணங்கள் எதுவாக இருந்தபோதிலும், நீங்கள் இன்று தமிழ்நாட்டில் ஒரு அரசியல் சக்தி என்பது புறக்கணிக்க முடியாத உண்மை. ஆனால், கல்லூரியின் தாளாளாராகவும் கல்யாண மண்டப உரிமையாளராகவும் உங்களது மனம்போன போக்கில் பேசித் திரிவதைப் போல, ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் உங்களுக்குத் தோன்றியதையெல்லாம் பேசத் துணியாதீர்கள் என்று சொல்லவே இந்த திறந்த மடலை எழுத வேண்டியுள்ளது.

2008 செப்டம்பர் 14 ம் நாள் தங்களது கட்சியின் இளைஞர் அமைப்புக்கான கொடியை அறிமுகப்படுத்தி செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்ததை தொலைக்காட்சியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தங்களது இளைஞர் அமைப்பின் கொடியில் இரண்டு ஆண்கள் மட்டுமே இருந்ததைக் கண்டபோது, இளைஞர் என்ற சொல் பேண்ட் சட்டை போட்ட ஆண்களை மட்டுமே குறிக்கக்கூடியதா- வேட்டி/ கோவணம் கட்டுகிறவர்களில் உள்ள இளவயதினர் இந்த இளைஞர் என்ற விளிப்புக்குள் வரமாட்டார்களா என்ற கேள்வி எனக்கு வந்து தொலைத்தது. அரசியல் என்பது ஆண்கள் மேய்ந்து திரியும் அநாமத்துக் காடு என்கிற மனநிலை தங்களுக்கிருப்பதையும் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஒரு ஒப்புக்குக்கூட பெண்ணையும் சமமாய் பொதுவெளியில் இணைத்துப் பார்க்கும் மனநிலை உங்களுக்கு வாய்க்காமல் போனதற்கான காரணங்களை நுணுகி ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. ஒரு சராசரி ஆண் என்கிற இயல்பான மனப்பதிவைத் தாண்டுவது சினிமாவில் அடிக்கிற ஜம்ப் போல அத்தனை எளிதானதல்ல.

அது உங்கள் கொடி, அதில் என்னமும் போட்டுக் கொள்ளுங்கள். அதற்கப்புறம் நீங்கள் திருவாய் மலர்ந்தருளிய விசயங்கள் தான் என் கவனத்தை ஈர்த்தவை. முதல்நாள் புதுதில்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு பற்றி கருத்து தெரிவிக்க வந்த நீங்கள், நாட்டின் உளவுத்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டதாகக் கூறினீர்கள். அது உண்மைதான். குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த பிறகே தனது அசகாயசூரத்தனங்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிற உளவுத்துறையும் இதர காவல்துறைப் பிரிவுகளும் அப்படியான பயங்கரத்தை தடுப்பதற்கு ஏன் முயற்சிப்பதில்லை என்ற கேள்வி எனக்கும் இருக்கிறது. கார்கிலில் நடந்த ஊடுருவலைக்கூட ஆடுமேய்க்கும் மலைகிராமத்து சிறுவன் ஒருவன்தான் கண்டறிந்து கூறினான் என்பது போன்ற சான்றுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அதற்கப்புறம் நீங்கள் பரிந்துரைத்த தீர்வு இருக்கிறதே அதுதான் அபத்தம். அதாவது நீங்கள் கட்சி ஆரம்பித்ததை விளையாட்டுச் செய்திகளில் தெரிவித்ததை நியாயப்படுத்தும் தன்மை கொண்டது.

பல சினிமாக்களில் தீவிர தேசபக்த காவல் அதிகாரியாக நடித்து தீவிரவாதிகளை பின்னி பெடலெடுத்திருக்கும் தங்களிடமோ அல்லது அதே வகைப்பட்ட படங்களில் தங்களைப் போலவே திரையில் தோன்றுகிற அர்ஜூன் போன்ற அல்பைகளிடமோ அந்த உளவுத்துறையை ஒப்படைக்குமாறு நீங்கள் கேட்டிருந்தால்கூட தப்பில்லை. ஒரு எக்ஸ்பீரியன்ஸ்டு ஆளூ கேக்குறாருப்பா என்று தமாஷாக போயிருக்கலாம்... ஆனால் உங்களது பரிந்துரை, இந்திராகாந்தியம்மா கொண்டு வந்த எமர்ஜென்சி மறுபடியும் இங்கே வந்தால்தான் எல்லாம் சரியாகும் என்பதுதான். திருவாளர் விஜயகாந்த் அவர்களே எமர்ஜென்சி என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? மற்றவர்களைப் போல தெளிந்துதான் பேசுகிறீர்களா என்று நான் கேட்கமாட்டேன், தெரிந்துதான் பேசுகிறீர்களா?

எமர்ஜென்சி வந்தால் உளவுத்துறை சரியாகிவிடும் என்கிற உங்கள் கணக்கும்கூட பொய்தான். எமர்ஜென்சியில் உளவுத்துறையின் வேலை நாட்டையோ மக்களையோ பாதுகாப்பதாய் இருக்கவில்லை. இந்திராகாந்தியின் எதேச்சதிகாரத்தை யாரெல்லாம் எதிர்க்கிறார்கள் என்று வேவு பார்க்கிற வேலையில்தான் அது ஈடுபட்டிருந்தது. உளவுத்துறை செயலற்றிருந்தால் அதற்குண்டான வழியைப் பார்க்காமல் இந்திய மக்கள் மறக்க நினைக்கிற எமர்ஜென்சி என்கிற அந்த கொடுங்கனவை ஏன் மறுபடியும் பரிந்துரைக்கிறீர்?

பிரிட்டிஷ் ரூல்தான் கரெக்ட் என்றும், மிலிட்டரி ரூல் வந்தால்தான் எல்லாம் சரியாகும் என்றும் பேசித்திரிகிற அபத்தக்களஞ்சியங்கள் பலரை ஏற்கனவே இந்தச் சமூகம் கண்டு காரியுமிழ்ந்திருக்கிறது என்பதை தாங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காலனியாதிக்கத்தின் கொடுமைகளையும் மிலிட்டரி ஆட்சியின் சர்வாதிகாரங்களையும் பற்றிய அரசியல் மற்றும் வரலாற்றுப் புரிதலற்றதான இப்பரிந்துரைகளுக்கு சற்றும் குறையாததுதான் எமர்ஜென்சியைப் பற்றிய தங்களது புளகாங்கிதமும்.

1971ஆம் ஆண்டு தேர்தல். ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார் இந்திராகாந்தி. பிரதமரின் தனிச்செயலாளராக இருந்த யஷ்பால் கபூர் என்கிற அரசு ஊழியர், அரசுப்பணியிலிருந்து விலகுவதற்கு முன்பாகவே, இந்திராவின் தேர்தல் முகவராக பணியாற்ற இசைவு தெரிவித்திருக்கிறார். ஆனால் 13.1.1971 அன்றுதான் பணிவிலகல் கடிதத்தை தந்திருக்கிறார். அதாவது, தேர்தல் முகவராகப் பணியாற்ற அவர் சம்மதம் தெரிவித்த தேதியில் அவர் ஒரு அரசு ஊழியராய் இருந்திருக்கிறார். அரசு ஊழியரான அவரை தன் தேர்தல் பணிக்கு பயன்படுத்தியதன் மூலம் இந்திராகாந்தி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் விதிகளுக்கு எதிராக செயல்பட்டிருப்பதாகவும், ஆகவே அவர் வெற்றிபெற்றது செல்லாதென அறிவிக்கக் கோரியும் இந்திராவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜ்நாராயணன் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் இந்திராவுக்கென்று அமைக்கப்பட்ட மேடைகள் உ.பி. அரசின் பொதுப்பணித்துறையால் கட்டப்பட்டதையும் ஒரு குற்றச்சாட்டாக ராஜ்நாராயணன் சேர்த்திருந்தார்.

வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் பிரிவு 123, விதி 7ன் படி இந்திராவின் நடவடிக்கைகள் தேர்தல் முறைகேடுகள் என்பதால் அவர் ரேபரேலியில் வெற்றி பெற்றது செல்லாதெனவும், இந்த முறைகேட்டில் ஈடுபட்டதற்காக அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக்கூடாதென தடைவிதித்தும் 1975 ஜூன் 12 ஆம் நாள் தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பின்படி ரேபரேலிக்கு மறுதேர்தல் நடத்தவேண்டும். ஆனால் இந்திராகாந்தி அங்கு மட்டுமல்ல நாட்டின் வேறெந்தத் தொகுதியிலும் ஆறாண்டுகளுக்கு போட்டியிட முடியாது. சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று ஒவ்வொரு படத்திலும் நீங்கள் உதிர்க்கும் வசனமெல்லாம் சாமான்யர்களுக்குத்தான் மிஸ்டர் விஜயகாந்த்- பதவியையும் அதிகாரத்தையும் இழக்கத் துணியாத இந்திரா காந்திக்கு அல்ல. எனவே அவர் இத்தீர்ப்புக்கு தடைவிதிக்குமாறு 20.6.1975 அன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்றத்தில் அப்போது விடுமுறைக்கால நீதிபதியாயிருந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர், இந்திரா காந்தி மக்களவை உறுப்பினராய் நீடிக்கலாமெனவும் ஆனால் அவை நடவடிக்கைகளில் ஈடுபடவோ வாக்களிக்கவோ உறுப்பினர் என்பதற்கான ஊதியம் பெறவோ உரிமையில்லை எனவும் 25.6.1975 மாலை 3 மணிக்கு தீர்ப்பளித்தார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று இந்திரா பதவி விலக வேண்டும் என்று நாடெங்கும் எதிர்ப்பலை கிளம்பியது. ஜூன் 25 ம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் பேரணி நாடு தழுவிய சத்தியாக்கிரக இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தது. தனக்கு ஏற்பட்ட நெருக்கடியை நாட்டுக்கு ஏற்பட்ட நெருக்கடியாய் சித்தரித்து தீர்ப்பு வெளியான ஒரு சில மணிகளிலேயே நெருக்கடி நிலையை அறிவிக்கத் துணிந்தார் இந்திரா. இதற்காக அமைச்சரவையைக் கூட கூட்டாமல், தன் கைப்பொம்மையாயும்- ஆகவே குடியரசுத் தலைவராயுமிருந்த ஃபக்ருதின் அலி அகமதிடம் 25 ம்தேதி பின்னிரவில் கையொப்பம் பெற்று 1975 ஜூன் 26 அதிகாலை முதல் இந்தியாவில் நெருக்கடி நிலையை அறிவித்தார் இந்திரா. சட்டத்திற்குட்பட்டு தான் இனியும் பதவியில் நீடிக்க முடியாது என்பதை அலகாபாத் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் தெளிவாக அறிவித்துவிட்ட நிலையில் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதற்காக இந்திராவும் அவரது செல்லமகன் சஞ்சய் காந்தியும் அல்லக்கைகளும் தேர்ந்தெடுத்த இழிவான- எதேச்சதிகார பாதைதான் எமர்ஜென்சி.

எமர்ஜென்சி வந்த வரலாறு இதுவாயிருக்க, அது ஏதோ ரயிலையும் பஸ்சையும் சரியான நேரத்தில் ஓட வைப்பதற்காக வந்தது போல நீங்கள் புகழ்வதில் என்ன நியாயம் இருக்கிறது? பைத்தியக்காரன் கிழித்தது கோவணத்துக்கு ஆச்சுது என்பது போல ஆயிரம் அட்டூழியங்கள் நிகழ்த்தப்பட்ட எமர்ஜென்சி காலத்தில் தவிர்க்கமுடியாமல் ஏற்பட்ட சிறுசிறு நன்மைகளைக் காட்டி, இதுதான் எமர்ஜென்சி என்று சித்தரிக்க முயற்சிப்பதா? சரி, வந்த வழிதான் இப்படி என்றால் அது செய்த காரியங்கள்தான் நியாயத்தின்பாற்பட்டதா?

Indra Gandhi and Vijaykanthஜூன் 25 பின்னிரவு தொடங்கி 26 அதிகாலைக்குள்ளாக ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், மதுதந்தவதே, ஜோதிர்மாய் பாசு, வாஜ்பாய், அத்வானி, முலயாம் சிங், லாலு என நாடு முழுவதும் 677 தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த கைது விவகாரமோ நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்ட விஷயமோ ஊடகங்கள் வழியாக மக்களுக்கு தெரிந்துவிடக் கூடாதென்பதற்காக பெரும்பாலான செய்தித்தாள் நிறுவனங்கள் செயல்பட்டு வந்த பகதுர் ஷா சபர் மார்க் பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. தில்லியில் 34 அச்சகங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. செய்தித்தாள்களை கடைகளுக்கு விநியோகிக்கும் ஏழாயிரம் பேர் சிறையிலடைக்கப்பட்டனர்.

அடுத்து வந்த நாட்களில் கருத்து சுதந்திரம் கடும் அச்சுறுத்தலுக்குள்ளானது. பத்திரிகைகள் கடும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. மத்திய அரசின் தணிக்கை அதிகாரிகள் மனம்போன போக்கில் செய்திகளை நீக்கவும் திருத்தவும் அதிகாரம் பெற்றிருந்தனர். எதிர்த்து எழுதும் பத்திரிகைகளுக்கு அரசின் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன. நெருக்கடி நிலையை எதிர்த்த இதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பஞ்சாபில் உருது இதழ்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப், அமெரிக்காவின் நியூஸ்விக் ஆகிய இதழ்களின் செய்தியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். கருத்துரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு 1966ல் உருவாக்கப்பட்ட பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா கலைக்கப்பட்டது. அரசின் கட்டுப்பாட்டிலிருந்த வானொலியும் தொலைக்காட்சியும் இந்திராவின் ஜால்ராக்களாக மாறிவிட்டிருந்தன.

ஜனநாயகத்தின் மற்றொரு தூணென கொண்டாடப்படுகிற நீதித்துறையும் தப்பவில்லை. அதிகாரத்திற்கும் முறைகேடுகளுக்கும் துணைபோகாதிருக்கும் ஜக்மோகன்லால் சின்ஹாக்களும் வி.ஆர்.கிருஷ்ணய்யர்களும் இருக்கிற நீதித்துறை இந்திராவைப் பொறுத்தவரை அநீதித்துறையே. எனவே அதை வெறுக்கவும் தன் கட்டுப்பாட்டின் கீழ் அத்துறையை வீழ்த்தவும் இந்திராவுக்கு நூறு நியாயங்களிருந்தன. அதன்பொருட்டு அவர் நீதிமன்றங்களின் அதிகாரங்களைக் குறைக்கும் ஏராளமான சட்டத் திருத்தங்களை கொண்டுவந்தார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த மனசாட்சியோடு செயல்பட்ட நீதிபதிகள் கடும் அச்சுறுத்தலுக்காளாயினர். மொத்தத்தில் சட்டத்திற்கு மேலாக தன்னை நிறுவிக் கொண்டார் இந்திரா.

மிசா, இந்திய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நாடு முழுவதும் 1,11,000 பேர் சிறையிலடைக்கப்பட்டிருந்ததாக பத்திரிகையாளர் வி.கிருஷ்ணா ஆனந்த் தெரிவிக்கிறார். இவர்களில் 39 எம்.பி.களும் அடக்கம். 1976 ஜனவரி 31 அன்று தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. இக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் தொழுநோயாளிகளோடு சேர்த்து தங்க வைக்கப்பட்டனர். 24 மணிநேரமும் லாக்அப்பிலேயே வைத்திருப்பது, கடுமையாகத் தாக்குவது, மருத்துவ உதவியை மறுப்பது, குறைந்தளவே உணவளிப்பது, உணவில் வேப்பெண்ணையை கலந்து தருவது, தாகத்திற்கு தண்ணீர் கேட்டால் வாய்க்குள் சிறைக்காவலர்கள் சிறுநீர் கழிப்பது என காலனியாட்சியிலும் காணாத சித்திரவதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

இப்படியான கைதுகளும் சித்திரவதைகளும் எதிர்க்கட்சியினருக்கு மட்டுமல்ல, எந்தவொரு இயக்கத்திலும் தொடர்பு கொண்டிராத எளிய மக்களுக்கும் நேர்ந்த கொடுமைகள் என்பதற்கு உதாரணம்தான் கேரள மாணவர் ராஜன், மங்களூர் மாணவர் உதயசங்கர் ஆகியோரின் மரணம். கடும் சித்திரவதை காரணமாக கன்னட நடிகை சிநேகலதா, திமுக தலைவர்கள் சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் ராபின் கலிதா, போன்றவர்கள் அகால மரணமடைந்தனர். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இயக்கத்தின் பூமிய்யா, கிஸ்தே கவுடு ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். காவல்துறையின் வரம்பற்ற அதிகாரம் மக்களின் உயிர் குடிக்கும் எமனாய் இந்த மண்ணை ஆக்ரமித்திருந்தது.

அறுபதுகோடி வயிறு நிறைந்திட இருபதம்சத் திட்டம் வந்ததம்மா என்ற பாட்டு ஊரெங்கும் ஒலித்துக் கொண்டிருக்க, எளிய மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் கொஞ்சநஞ்சமா? துர்க்மான் கேட் போன்ற பகுதிகளில் இஸ்லாமியர் மீது நடந்த தாக்குதல்களை மறக்க முடியுமா? இறை நம்பிக்கையின் காரணமாக இஸ்லாமியர் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள மறுக்கின்றனர் என்று இந்துத்துவவாதிகள் சொல்கிற அதே பொய்யை சொல்லிக் கொண்டு, திருமணமாகாத இஸ்லாமிய இளைஞர்களையும் தூக்கிப்போய் இனவிருத்தி நரம்பை அறுத்துவீசிய சஞ்சய்காந்தி என்ற ஒரு கொடுமைக்காரன் இனியொருமுறை இந்த மண்ணுக்குத் தேவையில்லை.

அரசியல் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அனைத்து உரிமைகளும் ரத்து செய்யப்பட்டன. உயிர் வாழ்தலும்கூட அரசின் கருணையின்பாற்பட்டதாய் மாற்றப்பட்டிருந்தது. ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்யும் உரிமையும் மறுக்கப்பட்டது. பேச்சைக் குறைப்பீர் உழைப்பை பெருக்குவீர் எனச் சொல்லி உழைக்கும் மக்களின் எல்லா கோரிக்கைகளும் பின்தள்ளப்பட்டன. தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டன. அமெரிக்க விமான நிலையத்தில் அண்டர்வேருடன் நிற்க வைக்கப்பட்டபோதும் அவமானப்படாத அளவுக்கு தோல் தடித்துப்போன இன்றைய ஜார்ஜ் பெர்னாண்டஸ் ரோஷத்தோடும் போர்க்குணத்தோடும் வாழ்ந்த காலம் அது. ரயில்வே தொழிலாளர்களின் ஆற்றல்மிக்கத் தலைவராய் அப்போதிருந்த அவரை கேட்டுப் பாருங்கள், தொழிலாளிகள் மீது நடந்த ஒடுக்குமுறைகளின் வன்மையை அவர் கூறக்கூடும்.

இப்படி இன்னும் இன்னும் ஆயிரமாயிரம் கொடுமைகளை எழுதிப் போகுமளவுக்கு இந்திய சமூகத்தை ஆட்டிப் படைத்ததாய் இருந்த எமர்ஜென்சி காலத்தில் உளவுத்துறை ஒழுங்காய் செயல்பட்டது என்று எந்த ஆதாரத்தின்மீது நின்று சொன்னீர்கள் விஜயகாந்த்? அப்போது எந்த குண்டுவெடிப்பு சதியை அது முன்கூட்டியே உளவறிந்து அப்போது தடுத்தது? இன்னும் சொன்னால் இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, சித்தார்த்த சங்கர் ரே, பன்சிலால், ஆர்.கே.தவான் போன்ற தான்தோன்றிகளின் கூட்டம்தான் இந்த சமூகத்தின்மீது பேரழிவை உண்டாக்கும் எமர்ஜென்சி என்ற குண்டை வீசியது. இந்த கும்பலின் அட்டூழியங்களுக்கு எதிரான தலைவர்களையும் அமைப்புகளையும் கண்காணிக்கவும் உளவுசொல்லவும் பணிக்கப்பட்டிருந்த உளவுத்துறை, அந்த வேலையையும் செய்யாமல் சஞ்சய்காந்தியின் பைஜாமாவுக்கு நாடா கோர்த்துக் கொண்டிருந்த விசயத்தை நாடறியும். மாருதி கார் ஊழல் மன்னன் என்று வர்ணிக்கப்பட்ட அந்த சஞ்சய் காந்தியின் விரலசைப்புக்கு பணிந்து போகுமளவுக்கு உளவுத்துறை துணிச்சலற்றுக் கிடந்தது.

அவசரநிலை எதிர்ப்பாளர்களில் ஒரு பிரிவினர், உயிர்ச்சேதம் விளைவிக்காத டம்மி குண்டுகளை ரயில்பாதைகளின் நெடுகவும் வெடிக்க வைத்து அரசை எச்சரித்தார்கள். இந்த தொடர் குண்டுவெடிப்பில் ஒன்றைக்கூட, அப்போது மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக தாங்கள் பாராட்டும் உளவுத்துறை கண்டுபிடிக்கவில்லை தெரியுமா? குண்டுசத்தம் கேட்டபின் குறட்டையிலிருந்து விழித்துக்கொண்ட அந்த உளவுத்துறை பரோடா டைனமைட் வழக்கு என்ற ஒன்றை நடத்தியது. அதிலும் இன்னார்தான் குற்றவாளி என்று நிரூபிக்கவில்லை.

உளவுத்துறையால் இந்திய மக்களுக்கு விளைந்த நன்மை என்று ஏதேனும் இருக்குமானால், அது, சட்டத்தையெல்லாம் வளைத்து ஐந்தாண்டுக்கொருமுறை தேர்தல் என்பதை ஆறாண்டுகாலமாக மாற்றிக்கொண்ட இந்திராவிடம் தவறான அறிக்கை கொடுத்து அவரை ஓராண்டுக்கு முன்பாகவே தேர்தலை நடத்தத் தூண்டியதுதான். இப்போது தேர்தல் நடத்தினால் ஜெயித்துவிடுவீர்கள் என்று இந்த உளவுத்துறை கொடுத்த அறிக்கையை நம்பித்தான் எமர்ஜென்சியை விலக்கிக்கொண்டு இந்திரா தேர்தலை நடத்தி மண்ணைக் கவ்வினார் என்பதையாவது தாங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கருணாநிதி மீதான தனிப்பட்ட விரோதகுரோதங்களுக்காக சிவப்பு/வெளுப்பு எம்.ஜி.ஆர். எமர்ஜென்சியை ஆதரித்த தவறைச் செய்தார். ஆனால் கறுப்பு/பழுப்பு எம்.ஜி.ஆராக வர்ணிக்கப்படும் தாங்கள் அத்தவறை செய்யக்கூடாது. எமர்ஜென்சியைக் கொண்டுவந்ததற்காக இந்திய மக்கள் தனக்கு வழங்கிய தண்டனையை வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டார் இந்திரா. இத்தகைய வரலாற்றை இனியொருபோதும் செய்யமாட்டேன் என்று அவரே தெண்டனிட்டு மன்னிப்புக் கோரிய நிலையில், எமர்ஜென்சி வந்தால் தான் எல்லாம் சரியாகும் என்று உங்களைப் போன்றவர்கள் கூறுவது சரிதானா விஜயகாந்த் அவர்களே? எமர்ஜென்சி வந்தால் இப்படி மனம்போன போக்கில் நீங்கள் பேசுவதற்கான சுதந்திரம்கூட மறுக்கப்பட்டுவிடும் என்பதை நினைவில் வையுங்கள்.

வடிவேல் வழக்கில் ஜாமீன் கோரமாட்டேன், சிறைக்கு சென்று மீண்டு வருவேன் என்று இப்போதுபோல் முழங்கவும் முடியாது. ஏனென்றால் எமர்ஜென்சியில் சிறைகள் உயிரெடுக்கும் வதைக்கொட்டில்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் ( எல்லாக்காலத்திலும்கூட). சின்னக்கவுண்டரில் சுகன்யா வைத்த மொய்விருந்தை நினைத்துக்கொண்டு வேப்பெண்ணை கலந்த சோற்றைக்கூட சாப்பிட்டுவிடலாம்தான். ஆனால் தாகத்துக்கு என்ன செய்வது? யார் வாயில் பெய்யலாம் என்று மூத்திரப்பை கடுக்க சிறைக்காவலர்கள் காத்திருக்கும் இக்காலத்தில் வாயை மூடிக் கொண்டிருப்பதோ அல்லது கவனமாய் திறப்பதோ பாதுகாப்பானது என்பதை அறியுங்கள் கேப்டன்.

- ஆதவன் தீட்சண்யா