முடிவே தெரியாத நீளமான குகைக்குள் பயணம் செய்ய நேர்வதாக கனவு வரும்போது, எப்பேர்ப்பட்ட தூக்கமாக இருந்தாலும், கலைந்து எனக்கு விழிப்பு ஏற்பட்டுவிடுகிறது. மூச்சுத்திணறலாகவும், நெஞ்சு முழுக்க ஏதோ பாரம் அழுத்தி வலிப்பது போலவும் உணர்வேன். மீண்டு(ம்) தூக்கம் வர நெடுநேரம் ஆகிவிடும். ஒருமுறை, திரைப்படம் பார்க்க நண்பர்களோடு ஒரு சுமாரான, பழைய திரையரங்குக்குச் சென்றிருந்தபோது, நுழைவுச்சீட்டு தரும் இடம் மிக நீண்ட, ஒரு நபர் மட்டுமே செல்லக்கூடிய அளவு அகலத்தோடும், எங்கோ தொலைவில் ஒரேயொரு சிறிய ஜன்னல் மட்டுமே வைக்கப்பட்டதுமாக, மூடப்பட்டுக் குகைபோல இருப்பதைக் கண்ட நான், பயந்துபோனவனாக, படம் பார்க்கவே வரவில்லை என்று சொல்லியிருக்கிறேன். இன்னொருமுறை சிறுபிள்ளையாய் இருக்கும்போது, மற்ற பிள்ளைகள் என்னை கொசுவலைக்குள் அடைத்து, நான் வெளியேற முடியாதவாறு பிடித்துக்கொண்டபோது, நான் அலறிக் கூச்சல் போட்டது இன்னமும் என்னாலேயே நம்ப முடியாததாகவும், ஆச்சரியமாகவும், நன்றாக நினைவில் உள்ளது.

கேளிக்கை விளையாட்டு மையங்களில் (THEME PARK) நீண்ட குழாய்களின் வழியே சறுக்கி விளையாடுவது என்பது எனக்கு மிகப்பரிய சவாலாகப் பட்டது. பாதிவழியில் சிக்கிக் கொண்டால்..? நினைக்கும்போதே மூச்சுத் திணறுகிறது. (ஆனாலும் BLACK THUNDER சென்றிருந்தபோது சவாலில் வென்றுவிட்டேன். சில சமயம் உண்மையைவிட, கற்பனை அதீதமான உணர்வுகளை ஏற்படுத்தி விடுகிறது) அதாவது, இதுபோன்ற நேரங்களில் நானே நினைத்தாலும், நினைத்த மாத்திரத்தில் என்னால் வெளியே வரமுடியாது. இப்போது, நான் எதுகுறித்து எழுதவிருக்கிறேன் என்று உங்களால் ஊகித்திருக்க முடியும்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் எதுவுமே மனித உயிர்களைப் பலிவாங்குவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல. ஆனால் அறிவியல் வளர, வளர ஆபத்துக்களும், விபத்துக்களும் பெருகிக்கொண்டே இருக்கிறது. சாலைப் போக்குவரத்தில், தொடர்வண்டிகளில், மின்சாரத்தால் என உயிர்ப்பலி தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இவ்வாறு உயிர்ப்பலி வாங்கும் கண்டுபிடிப்புகள் எப்போது முழுமையடைகின்றன என்றால், அந்த அறிவியலால் விபத்துக்கள் இல்லாத ஒரு நிலையை எட்டும்போதுதான். இந்நிலையையும் உள்ளடக்கியதாகவே கண்டுபிடிப்புகள் இருக்கவேண்டும். பாதுகாப்பு விதிமுறைகளும், உறுதியான பின்பற்றலும் நடந்தேற வேண்டும்.

ஆழ்துளைக்குழாய்கள் அமைத்துத் தண்ணீர்த் தேவையை நிறைவேற்றும்பொருட்டு வளர்ந்த விஞ்ஞானம், அதிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றவும் செய்யவேண்டும். இதுவரை எத்தனையோ அப்பாவி சிறுவர்களை நாம் இழந்துவிட்டபோதிலும், இன்றளவும் தொடர்கதையாகவே இருக்கிறது என்பது நாமனைவரும் வருந்தவேண்டிய, வெட்கப்படவேண்டிய ஒரு செயல். குழந்தைகள் ஒன்றும் குடிபோதையில் குழிக்குள் விழுவதில்லை. சென்றவாரம்கூட 2 வயதேயான சிறுவன் 150 அடி ஆழக் குழிக்குள் விழுந்துவிட்டான். இதில், அச்சிறுவனின்-சிறுவன்கூட அல்ல, குழந்தை-தவறு என்னவாக இருந்துவிடமுடியும். 150 அடி ஆழத்திற்குக் குழிதோண்டத் தெரிந்த விஞ்ஞானத்திற்கு அதிலிருந்துக் குழந்தைகளைக் காப்பாற்றத் தெரியவில்லை.

ஏற்கனவேயுள்ள குழிக்கு இணையாக மற்றொரு குழி வெட்டுவதும், ராட்சத இயந்திரங்களை வரவைப்பதும், ஒரு கட்டத்திற்கு மேல் மனிதர்களை வைத்தே மண் அள்ளுவதும், சிறுவன் மூச்சுவாங்கும் பொருட்டு, குழாய்கள் வழியாக காற்று செலுத்துவதும் என்று மணிக்கணக்கில், நாள்கணக்கில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுவரை, ஏதுமறியா அப்பிஞ்சுக் குழந்தையின் நிலையை, தவிப்பை சற்றே கற்பனை செய்து பாருங்கள். போதாக்குறைக்கு குழிக்குள் நீர்மட்டம் வேறு உயர்ந்து கொண்டேயிருக்கிறது. நீங்கள் கற்பனைக்கு ஒதுக்கும் ஒரு வினாடி, இறந்த சிறுவர்களின் ஆன்மா சாந்தியடைவதற்கான பிரார்த்தனைக்கான நேரமாக இருக்கட்டும்.

என்னதான் சூரரராகவே, வயதில் பெரியவர்களாக இருந்தாலுமேகூட, அந்த நிலையில் அவரால் என்ன செய்துவிடமுடியும்? இந்த மாதிரியான சூழலில் அக்குழந்தையின் நிலையை, தவிப்பை நான் விளக்கிக் கொண்டிருக்கப் போவதில்லை. அதை வெறும் சொற்களால் விளக்கிவிடமுடியாது. அவரவர் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கூட இத்தொடர் நிகழ்வுகளுக்கு வருத்தமும்,கண்டனமும் தெரிவித்திருப்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது.

செய்ய வேண்டியது.
1. வேலையை முடித்ததும் குழியை மேலே மூடிவிட்டுச் செல்ல வேண்டும்.
2. சிறு பிள்ளைகள் அப்பகுதிக்கு வரமுடியாத அளவுக்குச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்க வேண்டும்.
3. இம்மாதிரி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்யாதவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். அப்போதாவது பயந்து செய்வார்கள் அல்லவா.

வந்தபின் அவதிப்படுவதைவிட, வருமுன் காப்பதே சிறந்தது என்ற கூற்று இவ்விசயத்தில் மிகவும் பொருந்தும். 
- ச.முத்துவேல்

Pin It