முந்தைய பகுதி: வேளாண் விளைபொருள்கள் மற்றும் கால்நடைகள் ஒப்பந்த விவசாயம் மற்றும் சேவைகள் சட்டம் - 2019

உலக சந்தைகளைக் கைப்பற்றும் போட்டியில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் கொள்ளை லாபத்தைத் தொடர, அடிப்படையில் விவசாய நாடுகளான இந்தியா போன்ற வளரும் நாடுகளின் விவசாயத்தை தங்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனத் துடிக்கின்றன. ஆனால் இதற்கு முட்டுக்கட்டையாக சில பிரச்சனைகள் முன்னிற்கிறது..

உதாரணமாக இந்தியாவை எடுத்துக் கொள்வோம், ஐந்து ஏக்கருக்கும் குறைவான நிலங்களைக் கொண்ட சிறு-குறு விவசாயிகள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் நிலமுடைய பணக்கார விவசாயிகள் மிகவும் குறைவு. இரண்டாவதாக, உள்ளூரளவில் விவசாயிகளின் நம்பிக்கையைப் பெற்ற இடைத்தரகர்கள், வியாபாரிகள் ஆகியோர் செல்வாக்கு செலுத்தும் எளிய - வெளிப்படையான சந்தை முறை செயல்படுகிறது. மூன்றாவதாக, எளிய தொழில்நுட்பக் கருவிகளுடன், உள்நாட்டு சந்தைகளுக்கான உணவுப் பொருள் உற்பத்திதான் இங்கு பரவலாக நடந்து வருகிறது.

 இதுதவிர, கூட்டுறவுத் துறை, குறைந்தபட்ச விலை நிர்ணயம், அரசின் நேரடிக் கொள்முதல், மானியத் திட்டங்கள் போன்ற அரசின் பல்வேறு கொள்கைகளும் விவசாயத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. இதுபோல ஒவ்வொரு நாட்டிலும் தனிச்சிறப்பான பல பிரச்சனைகள் உள்ளன.

agreement model 1கார்ப்பரேட்டுகளின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், மேற்கண்ட தடைகளை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும். அதேசமயம் படிப்படியாக முழு விவசாயத்தையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இதுதான் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலக்கு! இந்த இரண்டு வேலைகளையும் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு இவர்கள் கடைப்பிடித்துவரும் வழிமுறையை, 'முழுமையான அல்லது மேல் கீழான ஒருங்கிணைப்பு' (VERTICLE CO-ORDINATION) என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

agreement model 2முழுமையான அல்லது மேல் கீழான ஒருங்கிணைப்பு” ஏன்? எதற்காக?

விளைபொருள்கள் நிலத்திலிருந்து தொடங்கி இறுதியாக நுகர்வோரைச் சென்று அடைவதற்குமுன், சங்கிலித் தொடராக பல இடைநிலைகளைக் கடந்து செல்கிறது. விதை, உரம், பூச்சிமருந்து விற்பனையாளர்கள், உழவு - நடவு - பாசன தொழில்நுட்பங்கள், கமிசன் மண்டி, மொத்த வியாபாரி, வாகனப் போக்குவரத்து, குளிர்ப்பதன சேமிப்புக் கிடங்குகள், பதப்படுத்தும் தொழிற்சாலைகள், உற்பத்திப் பிரிவுகள், சில்லறை வணிகம், ஆகிய இவ்வளவையும் கடந்துதான் ஒரு விளைபொருள் நுகர்வோர் கைகளைச் சென்றடைகிறது.

இந்த மொத்த சங்கிலித் தொடரையும் ஒரு தனிநபர் அல்லது ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதைத்தான் 'முழுமையான அல்லது மேல் கீழான ஒருங்கிணைப்பு (VERTICLE CO-ORDINATION)' என்கிறார்கள். (இத்தகைய ஒருங்கிணைப்புத் திட்டத்தை வேளாண்மைத் துறையில் மட்டுமல்ல, அனைத்து தொழில் துறைப் பிரிவுகளிலும் கார்ப்பரேட்டுகள் செயல்படுத்தி வருகின்றனர்.)

Prof Erken Rehberபத்திற்கும் மேற்பட்ட நாடுகளில் நடந்து வரும் ஒப்பந்த விவசாய முறைகளை ஆய்வு செய்த, துருக்கி நாட்டின் பொருளாதாரப் பேராசிரியரான ‘எர்கன் ரெபர்’ (ERKAN REHBER) என்பவர், முழுமையான அல்லது மேல் கீழான ஒருங்கிணைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு பல மாதிரித் திட்டங்கள் உலக நாடுகளில் சோதிக்கப்பட்டு வருகிறது. இறுதியான கோட்பாட்டு முடிவு எதுவும் இன்றுவரை எட்டப்படவில்லை. ஆனால் ஒப்பந்த விவசாயம் என்பது இந்த ஒருங்கிணைப்புக்கு மிக நெருக்கமாக இருக்கிறது.” என 'contract farming: Theory and practice' என்ற தனது ஆய்வு நூலில் தெளிவுபடுத்துகிறார்.

மேலும், “பின்தங்கிய, வளரும் நாடுகளின் திட்டங்களில் இந்த ஒருங்கிணைப்பு அதிகளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்றும், “உலக வங்கி, ஐ.எம்.எஃப், ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் ஆதரவால் இது துரிதப்படுத்தப் படுகிறது” என்றும் குறிப்பிடுகிறார். வேறுபல பொருளாதார ஆய்வாளர்களின் முடிவுகளும், பேராசிரியர். ‘எர்கன் ரெபர்’-ன் கருத்துக்களுக்கு வலிமை சேர்ப்பதாகவே உள்ளன!

'முழுமையான அல்லது மேல் கீழான ஒருங்கிணைப்பு' என்ற கார்பரேட் நிறுவனங்களின் லட்சியத்தை நிறைவேற்றுவதுதான், ஒப்பந்த விவசாயத்தின் அடிப்படை நோக்கம்! நம் நாட்டின் வேளாண்மைத் துறையில், அண்மைக் காலமாக அமுலாகி வரும் அரசின் புதிய கொள்கைத் திட்டங்கள் அனைத்தும், கார்ப்பரேட்டுகளின் மேற்கண்ட ஒருங்கிணைப்பை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. அது எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை இனி பார்ப்போம்.

கார்ப்பரேட் சேவையே அரசின் கொள்கை!!

‘தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்’ என்ற கார்ப்பரேட்டுகளின் கொள்கைகளை இந்திய அரசு ஏற்கனவே ஏற்றுக் கொண்டு விட்டது! உலக வர்த்தகக் கழகத்தில் இந்தியா இணைந்த பிறகு, விவசாயம் உட்பட அனைத்துத் துறைகளையும் கார்ப்பரேட்டுகளுக்கு முழுமையாக தாரைவார்க்கும் வகையில், அரசின் மொத்தக் கட்டமைப்பும் தீவிரமாக மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, உள்நாட்டு விதை பாதுகாப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு, வெளிநாட்டு விதை நிறுவனங்களுக்கு தாராள அனுமதி, உணவுப் பொருள் உற்பத்திக்கான மானியங்களை ரத்து செய்துவிட்டு, ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு தாராள கடனுதவி - மானியங்கள் வழங்கியது, நில உச்சவரம்புச் சட்டத்தை ரத்து செய்தது, கார்பரேட் நிறுவனங்களின் தொழில் வளர்ச்சிக்காக நிலம் கையகப்படுத்தும் சட்டம், நிலப் பயன்பாட்டு சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்தது, நீர்நிலைகளைப் பராமரிக்க நேரடி அந்நிய முதலீடுக்கு அனுமதி, உணவுப் பதப்படுத்தும் தொழில் துறை மற்றும் சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய முதலீடு ஆகியவை விவசாயத் துறையில் கொண்டு வரப்பட்ட முக்கிய கட்டமைப்பு மாற்றங்கள் ஆகும். இவ்வாறு இந்திய அரசு நிர்வாக ரீதியாகவும், சட்டப் பூர்வமாகவும் கார்ப்பரேட்டுகளின் காவலனாக ஒருங்கிணைக்கப்பட்டு விட்டது.

அடுத்து நிலம் - விவசாயிகள் - சந்தைகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்க வேண்டும்! பழமையான உற்பத்தி முறையில் நீண்ட காலமாகப் பழகிப் போன விவசாயிகளையும், விவசாய உற்பத்தியையும் ஒரு புதிய முறைக்குள் கொண்டு வந்து சேர்ப்பது என்பது எளிதான காரியமல்ல. நடைமுறையில் சவாலான இப்பிரச்சனைக்கு அவர்கள் சற்று சுற்றி வளைந்து செல்லும் வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளனர். 2003-ல் வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலிருந்தே இதற்கான வேலைகளும் இங்கு தொடங்கி விட்டது.

அதாவது, கிராம அளவில் 15, 20 சிறு குறு விவசாயிகளை இணைத்து விவசாயிகள் ‘விருப்பக் குழுக்களை’ (INTREST GROUPS) உருவாக்கி, இதில் முறையாக இயங்கும் குழுக்களை இணைத்து 1,000 விவசாயிகளைக் கொண்ட ஒரு விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் (FPO) உருவாக்கப்படும். இது கூட்டுறவு சங்கமாக பதிவு செய்யப்படும். ஒரு FPO என்பது குறைந்தது 1000 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

இதில் பங்கெடுக்கும் விவசாயிகளுக்கு, ஒரு சங்க நிர்வாகத்தின் கீழ் எப்படி இயங்குவது, அதில் வரும் பிரச்சனைகளை எப்படி சுமூகமாக தீர்த்துக் கொள்வது, தங்களின் விளைபொருள்களில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை தயாரிப்பது, அதனை சங்கத்தின் மூலமாக ரிலையன்ஸ் - ஃப்ரஸ் போன்ற வேளாண் வணிக நிறுவனங்களிடம் விற்பனை செய்வது, நிதி விவகாரங்களைக் கையாள்வது ஆகியவற்றைப் பற்றி தன்னார்வக் குழுக்கள் மூலம் பயிற்சியளிக்கப்படும். நபார்டு வங்கியின் மூலம் கடனுதவியும் செய்து தரப்படும். இதில் தேர்ச்சியடைந்த சங்கங்களை ஒன்றிணைத்து அது ‘விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனி’ (FPC)-யாக பதிவு செய்யப்படும். ஒரு உற்பத்தியாளர் கம்பெனி என்பது குறைந்தது 10,000 ஏக்கர் நிலங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்..

விவசாயிகளையும், நிலங்களையும் இவ்வாறு ஒருங்கிணைப்பதற்கு என்றே SFAC - என்ற ‘சிறுவசாயிகள் வேளாண்மைக் கூட்டமைப்பு’ நிறுவனம் தனியாக இயங்குகிறது. இது மத்திய வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இதுதவிர, நபார்டு வங்கி, தன்னார்வக் குழுக்கள், உள்நாட்டு மற்றும் அன்னிய கார்பரேட் நிறுவனங்கள் ஆகியவையும் தனித்தனியே செயல்படுகின்றன. சில ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் நேரடியாக விவசாய உற்பத்தியாளர்கள் சங்கங்களை உருவாக்கி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

இவ்வாறு 2019 மார்ச் வரை நாடு முழுவதும் சுமார் 10,000 விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கங்களும், 6,926 உற்பத்தியாளர் கம்பெனிகளும் பதிவு பெற்று இயங்கி வருகின்றன. இதன்மூலம் சுமார் 1.25 கோடி விவசாயிகளும், சுமார் 3 கோடி ஏக்கர் நிலங்களும் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. மேலும், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கூடுதலாக 10,000 விவசாய உற்பத்தியாளர்கள் சங்கங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக 2019 ஜூலையில் மோடி அரசு அறிவித்துள்ளது!

national agriculture marketஇதேபோல, தேனி, ஒட்டன்சத்திரம், மேட்டுப்பாளையம், கோயம்பேடு, போன்ற 18 மாநிலங்களில் இயங்கி வரும் 585 முக்கிய சந்தைகளை இணைத்து, e-NAM என்ற ‘தேசிய எலக்ட்ரானிக் வேளாண்மை சந்தை’ முறையை உருவாக்கியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம் நாட்டின் எந்த மூலையிலுள்ள ஒரு வர்த்தக நிறுவனமும், அனைத்து சந்தை நிலவரங்களையும் அறிந்து கொள்ள முடியும். இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வர்த்தகர்களும், 70,414 கமிஷன் ஏஜெண்டுகளும் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளதாக SFAC-யின் இணைய தளம் கூறுகிறது!

இத்தகைய பயிற்சி மற்றும் நடைமுறைகள் மூலம், நமது விவசாயிகளையும், விளைநிலங்களையும் படிப்படியாக இழுத்துச் சென்று, கார்பரேட் நிறுவனங்களின் வர்த்தக சங்கிலியுடன் கோர்த்துவிடும் வேலையைத்தான் மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன!

கூட்டிக் கழிச்சுப் பாருங்க... கணக்கு சரியா வரும்!

உலக வர்த்தகக் கழகம் என்ன கூறுகிறது? “உணவுப் பொருள் உற்பத்திக்கான மானியங்களை ரத்து செய். ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு முன்னுரிமை கொடு! அரசு நேரடிக் கொள்முதல், குறைந்தபட்ச விலை நிர்ணயம் என்று சந்தையில் அரசின் தலையீடு கூடாது. அதை சுதந்திரமாக விட்டுவிடு! தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்வதற்கு தாராள அனுமதி கொடு!” என்று வளரும் நாடுகளை நிர்பந்திக்கிறது!

ஒப்பந்த விவசாயத்தில் என்ன நடக்கிறது? விதை, உரம், பூச்சி மருந்து, தொழில்நுட்பம், கடனுதவி என அனைத்தையும் கார்பரேட் கம்பெனிகளே கொடுத்து விடுகிறார்கள். விலையையும் அவர்களே தீர்மானித்து விடுகிறார்கள்! விளைய வைத்துக் கொடுப்பது மட்டும்தான் விவசாயியின் வேலை! இந்த ஒப்பந்தத்தில் வெறும் சாட்சிக் கையெழுத்து போடுவதும், பிரச்சனை வந்தால் கட்டப் பஞ்சாயத்து செய்வதும்தான் மத்திய, மாநில அரசுகளின் வேலை! இது தவிர, அரசுக்கு எவ்வித தார்மீகப் பொறுப்பும் அதிகாரமும் இதில் இல்லை!

ஒப்பந்த விவசாயத்தில் அரசு கொள்முதலுக்கு இடமே இல்லை! எனவே ‘கட்டுபடியான விலையை நிர்ணயம் செய்’ என்று அரசிடம் விவசாயிகள் கேட்க முடியாது! உர மானியம், பயிர்க் கடன், நட்டஈடு என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை! எனவே விவசாயிகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் அரசுக்கு இல்லை! என்ன விளைய வைக்க வேண்டும், எத்தனை ஏக்கரில் விளைய வைக்க வேண்டும், அதை எப்படி... எங்கு... என்ன விலைக்கு விற்க வேண்டும் ஆகிய அனைத்தையும் கார்ப்பரேட்டுகள் மட்டுமே தீர்மானிக்கிறார்கள்!

 ‘ஆண்ட்ரூ W.செப்பர்டு’ என்ற பொருளாதார நிபுணர், “முழுமையான அல்லது மேல் கீழ் ஒருங்கிணைப்பு (VERTICLE-COORDINATION) என்பதன் முக்கியத்துவம் என்னவென்றால், விவசாயத்தில் அரசின் கட்டுப்பாடுகளை நீக்குவதுதான்” என்று கூறுகிறார்,

இப்போது கூட்டிக் கழித்துப் பாருங்கள்... உலக வர்த்தகக் கழகம், உலக வங்கி ஆகியவை கூறும் நிபந்தனைகள் அனைத்தும் ஒப்பந்த விவசாயத்தில் அச்சுப் பிசகாமல் நடந்து விடுகிறது! இதற்குத்தான் உள்ளூர் வேளாண்மை அதிகாரி முதல் மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள் வரை, கடந்த 15 வருடமாக களத்தில் இறங்கி வேலை செய்து, இந்த ஒப்பந்த விவசாய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர்.

(தொடரும்)

- தேனி மாறன்