நம்மில் பலர் பெரும்பான்மை வாத சிந்தனையோடு இருப்பதை பல நேரங்களில் பல இடங்களில் பார்க்க முடிகிறது.

தனிநபர் செயல்பாடுகள் தொடங்கி ஆட்சி அதிகாரம் வரை இந்தப் பெரும்பான்மைவாதம் மிகுந்த பேராபத்தாய் வளர்ந்து வருகிறது.

உலகம் முழுவதும் பெரும்பான்மை சிந்தனைப் போக்கு பல்வேறு கெட்ட விளைவுகளை தொடர்ந்து விளைவித்துக் கொண்டே இருக்கிறது.

hindutwa indiaஇலங்கையில் சிறுபான்மை தமிழ் இன மக்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாதம் தனிநபர் தொடங்கி ஆட்சி அதிகாரம் வரை கோலோச்சுகிறது.

இந்தியாவில்
சாதியப் பெரும்பான்மை வாதம்...
மதப் பெரும்பான்மை வாதம்...
மொழிப் பெரும்பான்மை வாதம்...
என பெரும்பான்மை வாதம் மக்களிடம் குடிகொண்டு மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்தப் பெரும்பான்மை வாதத்தால் நிர்வாகக் குளறுபடிகள், ஊழல், மனிதத் தன்மையற்ற செயல், வியாபார மனப்பான்மை, நல்லிணக்கமற்ற சூழல், உரிமை மறுப்பு என மனித குலத்துக்கு எதிரான சிந்தனையும் செயலும் வளர்ந்து வருவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

பெரும்பான்மை மக்களின் அதிகாரச் சிந்தனைக்கு சிறுபான்மை சமூகம் கட்டுப்பட்டு போக வேண்டிய கட்டாய சூழல் உருவாக்கப்படுகிறது...

சட்டம், மனித நேயம், தனி மனித உரிமைகள் அத்தனையும் இந்தப் பெரும்பான்மைவாத சிந்தனையால் தூள்தூளாகப் போகிறது.

பெரும்பான்மைவாத மக்களின் சடங்குகள் சிறுபான்மை மக்களிடம் திணிக்கப்படுகிறது.

குறிப்பாக தொடக்கப் பள்ளிகளில் கூட சிறுபான்மைச் சமூக குழந்தைகளின் உணர்வுகள் நசுக்கப்படுகிறது.

பகுதி பகுதியாக எந்த சமய மக்கள் அதிகமாக வாழ்கிறார்களோ அந்த சமய மக்களின் சடங்குகள் அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்களில் கொஞ்சமும் கூச்சமின்றி பின்பற்றப்படுகிறது.

பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் மத்தியில் பெரும்பான்மைவாத சிந்தனை விதைக்கப்படுவது ஜனநாயகப் படுகொலை.

தவறு செய்கிறோம் என்பதை உணராமலேயே பெரும்பான்மைவாத சிந்தனை குடிகொண்ட ஆசிரியர்கள் சிறுபான்மை மாணவர்களின் உரிமைகளை மறுப்பதோடு பெரும்பான்மைச் சமூக மாணவர்களின் நெஞ்சில் பேரினவாத நச்சுச் சிந்தனையை விதைக்கிறார்கள்.

நீதிமன்றங்கள் பேரினவாத சிந்தனை கொண்ட மக்களின் பழக்க வழக்கங்களை மக்களின் மனசாட்சியாக மதிக்கத் தொடங்கி நீதியின் மாண்பை குலைக்கும்போது சமூகம் கெட்டுச் சீரழிகிறது.

"தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற பாரதியின் வரிகள் உணவுக்காக மட்டுமல்ல ஒவ்வொருவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கச் சொல்கிறது...

ஜனநாயகப் பண்பு, சமூகநீதி அத்தனையையும் குழிதோண்டிப் புதைத்து இந்தப் பெரும்பான்மைவாதம் ஒரு புதிய மரபு பழக்கத்தை உருவாக்கி வருகிறது.

தமிழர்களின் ஆதி சமயப் பண்பாட்டுக்குள் வாழ்ந்த மன்னர்கள் பிற சமயங்களைப் பின்பற்றும் மக்களையும் மதித்து பல ஆலயங்களை எழுப்பி இருக்கிறார்கள். பெருமாள் சேரமான் கட்டியெழுப்பிய பள்ளிவாசல் சேரநாட்டின் சிறப்பாய் இன்றும் திகழ்கிறது...

இந்தியாவில் ஆட்சி செய்த முகலாய மன்னர்கள் பல சைவ வைணவ ஆலயங்களுக்கு நிதி வழங்கிய செய்தியை திப்பு சுல்தான் வரலாற்றின் மூலம் அறியலாம்...

கிறிஸ்தவ மதத்தை பூர்வ மதமாகக் கொண்ட வெள்ளைக்காரர்கள் கூட தமிழர்களின் ஆலய கோபுரங்களை அலங்கரிக்கிறார்கள்...

சைவம் போற்றிய மன்னர்கள் வைணவக் கோவில்களை செப்பனிட்டதையும், சமண நெறி போற்றிய புலவர்களை சைவ வைணவ மன்னர்கள் கொண்டாடியதையும் வரலாற்றின் புனிதப் பக்கங்களாகப் படிக்கிறோம்...

மதவாத சிந்தனை கொண்டு மாண்புகளை இழந்த மன்னர்களையும் மனவேதனையோடு படித்துக் கடக்கிறோம்...

மன்னராட்சியோ... மக்களாட்சியோ... பேரினவாத சிந்தனை கொண்டவர்கள் ஆட்சியை கொடுங்கோன்மை என்கிறது தமிழர் அறம்.

பெரும்பான்மைவாதம், பேரினவாத சிந்தனை வேரறுக்கப்பட வேண்டிய நச்சு மரம்.

இது இந்துக்களின் தேசம் என்றோ...
இது இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதி என்றோ...
இது ஒரு குறிப்பிட்ட சாதி மக்கள் வாழும் பகுதி என்றோ...
பெரும்பான்மைவாதம் பேசுவது பேராபத்து!

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி.

- நா.வெங்கடேசன், ஆசிரியர், மெய்ச்சுடர் இதழ்