இணையத்தின் பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் தொகைப் பெருக்கத்தைவிட அதிகமான விகிதச்சார அளவிற்கு சென்று கொண்டிருக்கின்றது. பல்வேறு தளங்கள் பலவேறு தகவல்களைத் தேடுபவர்களுக்கு அளித்தாலும் ஆபாசங்களைத் தேடுபவர்கள் தான் அதிகமான விகிதத்தில் இருப்பதாக கூறுகின்றது இணைய உபயோகிப்பு குறித்த புள்ளிவிவரங்கள்.

இணைய தளங்கள் பாதுகாப்பானதா? இல்லையா? என்ற விவாதங்களும் எழும்பி வருகின்றன. காரணம் ஒரு நாடு இன்னொரு நாட்டை உளவு பார்க்க மிகக் கடினப்பட வேண்டிய அவசியம் தற்போதில்லை!

social media 2அரசே கணினிமயமாக்கப்பட்ட பின், ஆவணங்களையும், அறிக்கைகளையும் ஒரு சேர அறிந்து கொள்ளும் வாய்ப்பு உளவாளிகளுக்கு சுலபமாகக் கிட்டி விடுகின்றது. தன் நாட்டில் உள்ள மாற்றுக் கருத்துடையோர்களை இலகுவாக அடையாளங்காண இணையத்தைத் தான் தேடுகின்றது அரசின் உளவு அமைப்பு.

சமூக வலைத்தளங்கள் இன்று சமூகத்தின் அடிநாதமாக மாறியிருக்கும் நிலையில், ஒவ்வொருவரும் தங்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும், அறிந்தோ அறியாமலோ வெளிப்படுத்துகின்றனர். பிறர் ரகசியங்களைத் தேடிடும் நபர்களும், பிறர் அந்தரங்கங்களை ரசிக்கும் மனநிலை பிறழ்ந்தோரும் இதனை மோப்பம் பிடிக்க இணையத்தைத் தாக்கி, தரவுகளைப் பதிவிறக்கம் செய்து கொண்டு தங்களது நோக்கங்களை அடைந்து கொள்கின்றனர்.

2019 செப்டம்பர் 17 அன்று NTROவில் இணையப் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் புக்ராஜ் சிங் "இந்தியாவின் முக்கியமான இணையதளங்கள் வைரஸ் தாக்குதலுக்கு ஆட்பட்டிருக்கலாம்" என்றார். செப்டம்பர் 23ல் (KASPERSKY) எனும் இணைய பாதுகாப்பு நிறுவனம், நிதி நிறுவனங்கள், முக்கியமான மையங்களின் கணிணிகளில் D-track எனும் வைரஸ் காணப்படுகின்றது என அறிவித்தது.

சில மாதங்களுக்கு முன் whatsapp நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில் தங்களது voice call எனும் பகுதியில் சில வைரஸ் தாக்குதல் உள்ளாகியிருக்கின்றது, அதனால் பயனாளிகள் அப்டேட் செய்து கொள்ளுங்கள் என பொது அறிவிப்பொன்றை வெளியிட்டது.

தற்போது மீண்டும் ஒரு தகவலை பயனாளியான சமூக ஆர்வலர் நீதிமன்ற வழக்காகத் தொடுத்திருக்கின்றார். அதாவது என்னுடைய உரையாடல்கள், பதிவுகள் திருடப்பட்டிருக்கின்றன என்பதே அந்த வழக்கு.

இதனை விசாரித்த நீதிமன்றத்தில் Whatsapp நிறுவனம், இசுரேலிய உளவு நிறுவனமான NSO இதன் பின்னணியில் இருப்பதாகவும், Pegasus என்னும் மென்பொருளின் மூலம் உலகமுழுவதும் உள்ள 2000த்திற்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகளின் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது. "சிட்டிசன் லேப்" எனும் கனடாவின் நிறுவனம் 20 நாடுகளைச் சேர்ந்தோரின் கணக்கு நோட்டமிடப்பட்டதாகக் கூறுகின்றது. மிகவும் செலவு மிகுந்த இந்த நோட்டமிடல் சாமானியர்களுக்கு சாத்தியமானதல்ல என்பதே என் கருத்து.

நாட்டின் பாதுகாப்பு விஷயத்திலும் இந்த வைரஸ்கள் அச்சத்தினை உண்டாக்குகின்றன. அணு உலைகளின் மீது சைபர் தாக்குதல் நடைபெறலாம் என்று International Atomic Energy Agency 2017ல் ஓர் அறிவிப்பு செய்தபோது உலகமே விழித்தது, இந்தியாவும் கூட!

ஏற்கனவே இசுரேலின் தூண்டுதலினால் "ஸ்டக்ஸ்நெட்" என்னும் வைரஸை அமெரிக்க உளவாளிகள் தங்களின் அணு விஞ்ஞானியின் கணினியில் ஏற்றியதாகவும், அதனால் பல சமிக்ஞ்சைகள் மாற்றப்பட்டதாகவும், "சென்டிரிஃபியூஜ்" செயலிழந்து யூரேனியம் செரிவூட்டல் தடைபட்டதாக 10 வருடங்களுக்கு முன்னால் ஈரான் குற்றஞ்சாட்டியது நினைவு இருக்கலாம்.

நாமும் ஓரளவு அணு உலைகளைக் கொண்டிருக்கிறோம். மக்களின் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் மின்சாரத் தேவை எனக் கூறினால் அதன் பின் இருக்கும் ஆயுத அரசியலை அறிந்தே இருக்கிறோம்.

ஜப்பானின் புகுஷிமா அழிவுக்குப் பின் எழுந்த அணுவுலை பாதுகாப்பின்மை கருத்தியல், பாதுகாப்பு விஷயத்தில் கேள்வி எழுப்ப வேண்டியதிருக்கும். இந்தியா இன்னும் கவனமாக தன் பாதுகாப்பை சுற்றுச்சூழல் பிரச்சனை தாண்டி இணையத் தாக்குதலிலும் உறுதிப்படுத்த வேண்டும். ஏனென்றால் அணு உலைகளோடு மக்களின் உயிரும் சம்பந்தப் பட்டிருக்கின்றதல்லவா? .

- நவாஸ்