காஷ்மீர் உலகின் மிக அழகான மலைப்பகுதிகளும், பள்ளத்தாக்குகளும் நிறைந்த வளம் செறிந்த ஒரு நிலப்பகுதி என்பது நம் அனைவருக்கும் தெரியும். நமது நாட்டின் உச்சியில் இருக்கும் ஒரு மணி மகுடம் போன்ற இந்த சுயாட்சி பெற்ற (குறைந்த பட்சம் அரசியல் சட்ட சாசன சுயாட்சி) மாநிலம் இன்று கலவர பூமியாய்க் காணப்படுகிறது. எதற்காக இந்த அவல நிலை, என்ன நடக்கிறது அங்கே என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதன் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்க வேண்டும்.

சரி, வரலாற்றின் பக்கங்களில் என்ன எழுதப்பட்டிருக்கிறது?

வரலாற்றில் அசோக மன்னரின் காலம் தொட்டு இதன் முக்கியத்துவம் ஒரு தொடர்கதை போலவே இருக்கிறது. இந்து மதம் சார்ந்த மன்னர்கள் பத்தாம் நூற்றாண்டு வரையில் இங்கு ஆட்சிக் கட்டிலில் இருந்ததும், அசோகரின் புத்தம் நோக்கிய பயணத்தில் இந்த பள்ளத்தாக்கும் புத்த மதம் நோக்கித் திரும்பியதும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒன்பதாம் நூற்றாண்டின் துவக்கம் முதல் இங்கு சைவம் பரவத் துவங்கியது.

1349 ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய மன்னர் சா மிர்ஷா தனது ஆட்சியைத் துவங்கிய போதும், தொடர்ந்து ஒரு மத நல்லிணக்க அரசாகவே இருந்து வந்த காஷ்மீர், அடுத்த ஐந்து நூற்றாண்டுகளில் இஸ்லாமிய அரசுகளைத் தொடர்ச்சியாகப் பெற்றிருந்தது. இவர்களைத் தொடர்ந்து முகலாயர்கள், ஆப்கன் மன்னர்கள் என்று வரலாற்றுப் பயணம் மேற்கொண்ட இந்தப் பகுதி சீக்கியர்களின் ஆதிக்கத்தில் இருந்தும் தப்பிப் பிழைக்கவில்லை.

1846 ஆம் ஆண்டு ரஞ்சித் சிங் என்னும் சீக்கிய மன்னன் வசம் வந்தது. இந்த நேரத்தில் இந்தியாவில் தங்களது ஆளுமையை முழுமையாக்க விழைந்த ஆங்கிலேயர்கள் ரஞ்சித் சிங்கை 75,00,000/- பணத்தை வரியாகச் செலுத்துமாறு வலியுறுத்தினர், அதாவது பஞ்சாப் மாகாணத்தை சீக்கியர்கள் ஆங்கிலேயர்களிடம் போரில் இழந்ததன் காரணமாக, அதற்கு இழப்பீட்டுத் தொகையாக இந்தப் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்கள் காஷ்மீரை ஆங்கிலேயர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதும் நிபந்தனை. இந்தப் பெரிய தொகையை அப்போது சீக்கியர்களால் கொடுக்க இயலவில்லை, எனவே காஷ்மீரை ஆங்கிலேயர் வசம் ஒப்படைத்து வெளியேறினர்.

இந்நிலையில் குலாப் சிங் என்னும் ஜம்முவின் ஆளுநராக அப்போது இருந்த (ரஞ்சித் சிங்கால் நியமனம் செய்யப்பட்டவர்) ஒரு தளபதி 75,00,000/- பணத்தை தான் தருவதாகக் கூறி ‘அமிர்தசரஸ்’ ஒப்பந்தம் என்ற பெயரில் ஆங்கிலேயருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறான். அந்த ஒப்பந்தப்படி குலாப்சிங் 75 இலட்சம் ரூபாயும், ஓராண்டு அடையாள வாடகையாக இருபது பாஸ்மினா வகை ஆடுகளையும், ஒரு குதிரையையும், மூன்று இணை காஷ்மீர் சால்வைகளையும் கொடுத்து காஷ்மீரை தன்வசப்படுத்திக் கொள்ள பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டான்.

டோக்ரா இனத்தைச் சேர்ந்த இந்த குலாப்சிங் ரஞ்சித் சிங்கின் பல்வேறு திட்டங்களுக்குத் துணை நின்று செயல்பட்டு, அதற்குப் பரிசாக ஜம்முவை பரிசாகப் பெற்று ஆளுமை செய்ததும், பல்வேறு கொள்ளைகளில் ஈடுபட்டு பணம் சேர்த்ததும், சமயம் கிடைத்த போது அழகாகக் காய்களை நகர்த்தி ஆங்கிலேயருக்கு உதவி காஷ்மீரைப் பெற்றது ஒரு தனி துணைக் கதை.

இதற்குப் பிறகு தான் காஷ்மீரை ஒருதலைப் பட்சமான, மத விளையாட்டுக்கள் ஆடும் ஒரு மைதானமாக குலாப்சிங் மாற்றத் துவங்கினான். இஸ்லாமிய சகோதரர்களின் மீதான அடக்குமுறை மிகக் கொடிய முறையில் ஏவப்பட்டது, இஸ்லாமியப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டார்கள், இஸ்லாமிய இளைஞர்கள் தோலுரிக்கப்பட்டார்கள் (உண்மையில் தோலுரிக்கப்பட்டு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டார்கள்), மன்னர் குலாப்சிங்கின் ஆட்சிக்குப் பிறகு அவரது வாரிசான ரன்பீர்சிங் ஆட்சி 1857 வரையிலும், பின்னர் 1885க்கு பின் பிரதாப்சிங்கின் ஆட்சியும் 1925க்கு பிறகு மன்னர் ஹரிசிங்கின் ஆட்சியும் என மாறி, மாறி ஒரு நூற்றாண்டு காலம் டோக்ராக்களின் ஆட்சி அதிகாரமே காஷ்மீர் மக்களை வாட்டி வதைத்தது. இஸ்லாமிய மக்கள் இந்தப் பெரும் கொடுமைகளை கண்டு மனம் வெதும்பினர். இவற்றின் தொடர்ச்சியாக ஷேக் முகம்மது அப்துல்லா என்கிற இளைஞர் ஒரு இயக்கத்தைத் தோற்றுவித்து அடக்குமுறைக்கு எதிராகப் போராடத் துவங்கினார்.

1931 ஜூன் 25 அன்று அப்துல் காதர் என்னும் இளைஞர் ஒரு எழுச்சி மிக்க பேருரை நிகழ்த்தினார். இவரது உரையை அரசுக்கு எதிரான நடவடிக்கை என்று முத்திரை குத்தி விசாரணைக்கு உத்தரவிட்டனர் கொடுங்கோலர்கள். மக்கள் பெரும் கிளர்ச்சி செய்து விசாரணையைத் தடுத்தனர். மூன்ற முறை தொடர்ந்து தடை கொண்ட விசாரணை 1931 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 13 ஆம் நாள் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட போது துப்பாக்கிச் சூட்டிற்கு அரசு உத்தரவிட்டது. இதில் ஏறத்தாழ 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த நாளை இன்றும் " தியாகிகள் நாளாக மக்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தகுந்தது. இதன் பின்னர் பல்வேறு இயக்கங்கள் அடக்குமுறைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வந்தன. அதன் விளைவாக 1932ல் உருவானதே சேக் அப்துல்லா தலைமையிலான "ஜம்மு-காஷ்மீர் முஸ்லீம் மாநாட்டுக் கட்சி".

ஜனநாயகம், சோஷலிசம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மதச்சார்பற்ற தான்மையோடு செயல்பட்டு வந்த ஜம்மு-காஷ்மீர் முஸ்லீம் மாநாட்டுக் கட்சி பின்னர் 1939ல் "ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி ஜம்மு - காஷ்மீரின் பெரும்பான்மை முஸ்லீம்களை அடக்கியாளும் டோக்ரா மன்னர் ஹரிசிங்கின் ஆட்சியை எதிர்த்து "காஷ்மீரை விட்டு வெளியேறு" என்ற ஒரு இயக்கத்தை முன்னெடுத்தனர்.

(இதற்கிடையில் தங்கள் கொடிய நச்சு முகத்தை ஆர்.எஸ்.எஸ் இயக்கமும், இந்துத்துவ இயக்கங்களும் காஷ்மீர் மன்னருக்கு விசுவாசமாக இருந்து வெளிப்படுத்தியதும், இஸ்லாமிய மக்களின் மீதான அடக்குமுறைகளைத் தூண்டும் காரணிகளாக இருந்து வெளிப்படுத்திய இந்துமத இயக்கங்கள் இன்று வரையில் அதனைத் தொடர்வது ஒரு வேதனை நிரம்பிய துணைக் கதை).

1947 விடுதலைக்குப் பின்னர் இரு நாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்ட இந்த பள்ளத்தாக்கு, 80 சதவிகித இஸ்லாமிய மக்களைக் கொண்டிருந்தாலும், சிறுபான்மை மதவாதிகளின் கொடூரப் பிடியில் சிக்குண்டு தனது உணர்வுகளை தனலாக்கிக் கொண்டு தவித்தது. ஒரு பக்கம் பல்வேறு நாடுகளின் ஆளுமைகள், இந்திய பாகிஸ்தானிய நாடுகளின் பஞ்சாயத்து என்று தொடர்ந்த இதன் துயரம், இந்திய ஆட்சியாளர்களை நோக்கித் திரும்பியது. இந்த நேரத்தில் காஷ்மீரை ஆண்ட ஹரிசிங் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவின் உதவியை நாடினார். பின்னர் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஒப்புக் கொண்டு அதன் படியே இணைத்தார்.

இந்தியா இராணுவம் காஷ்மீருக்குள் அடியெடுத்து வைத்து தனது ஆளுமையை காஷ்மீருக்குள் செலுத்தியது. பின்னர் இந்த மக்களின் துயரம் ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தியாவால் எடுத்துச் செல்லப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு எல்லை கோடுகள் வகுக்கப்பட்டன. (LINE OF CONTROL) என்ற நடுக்கோடும், பாக் ஆளுமை காஷ்மீர், இந்திய ஆளுமைக் காஷ்மீர் என்றும் பகிரப்பட்ட பள்ளத்தாக்கு அமைதிக் கோட்டை மட்டும் காணவே இல்லை.

சுயாட்சி என்கிற ஒரு சிறப்புப் பிரிவு - 370 அரசியல் பாதுகாப்புடன் துவங்கிய இந்திய மேலாண்மை படிப்படியாக ஒரு அதிகாரக் கைப்பற்றலில் முடிந்தது தான் இன்னும் வேதனையான ஒரு முடிவு.

(சுயாட்சி என்பது இராணுவம், வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பு மட்டும் இந்திய மேலாண்மையிலும், மாற்ற அனைத்து முடிவுகளும் தங்கள் சொந்த அரசியல் சாசனப்படி முடிவு செய்வது, ஆளுநரைத் தேர்வு செய்து ஆட்சியில் அமர்த்துவது, இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தொடர்பின்றி இருப்பது (எடுத்துக்காட்டு - IAS மற்றும் IPS அதிகாரிகளை இந்திய அரசால் நியமனம் செய்ய இயலாது)

காஷ்மீர் மக்களின் பிரதான செல்வாக்கை பெற்ற தலைவர் சேக்அப்துல்லா விடுதலை செய்யப்பட்ட பின்னர் இந்திய அரசுக்கும், மன்னர் ஹரிசிங்கிற்கும், சேக்அப்துல்லாவிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் சேக்அப்துல்லா மாநிலத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டார். ஹரிசிங்கின் மகன் கரன்சிங் அம்மாநிலத்தின் முதல் சரர்-ஈ-செரீப் ஆக நியமிக்கப்பட்டார்.

சேக்அப்துல்லா ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக விளங்கினார். அவரது ஆட்சிக்காலத்தில் முற்போக்கான நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. மாநிலத்தின் மொத்த விவசாய நிலப்பரப்பின் மொத்த உரிமையாளர்களாக மன்னர் ஹரிசிங்கின் குடும்பத்திற்கும், அவரது ஆட்சியாளர்களுக்குமே சொந்தமாக இருந்தது. சேக் அப்துல்லா பதவி ஏற்ற பின்னர் நிலச் சீர்திருத்தத்தில் ஈடுபட்டு, நிலப் பிரபுக்களிடமும், இந்துத்துவா கொடுங்கோலர்களிடம் இருந்த நிலங்களைக் கையகப்படுத்தி அரசுக்குச் சொந்தமாக்கினார், இதனால் கடும் பாதிப்புக்குள்ளான மதவாதிகள் சுயாட்சிக்கு எதிரான கோஷங்களோடு காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக இணைக்க வேண்டும் என்று புலம்பினர்.

இன்றுவரையில் இந்து அமைப்புகள் மற்றும் காஷ்மீர்ப் பண்டிட்டுகள் என்று அழைக்கப்படும் அடிப்படை இந்து மதவாதிகளும் தங்கள் நிலங்களைக் காப்பாற்றவே சுயாட்சிக்கு எதிரான வேடம் புனைகின்றன. பின்னர் பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு சீர்திருத்தத் திட்டங்களை முடக்கி தொடர்ந்து ஆளும் காங்கிரஸ் அரசுகள் காஷ்மீரை ஒரு ஆதிக்க வெளிப்பாட்டு முகமாகவே தக்க வைத்தனர். இதற்கிடையில் போடப்பட்ட சிம்லா ஒப்பந்தம் ஒரு நல்ல தீர்வை எட்டுவதற்கு உதவிகரமாக் இருந்தது என்று சொல்லலாம். சுல்பிகர் அலி பூட்டோவிற்கும் - இந்திராகாந்திக்கும் இடையில் ஏற்பட்ட இந்த ஒப்பந்தம், மக்களின் விருப்பின் அடிப்படையில் தன்னாட்சி பெற்ற ஒரு பகுதியாக இத்தனை வைத்திருக்க உதவியது. ஆனால் பின்னர் வந்த அரசுகளின் தொடர் ஏமாற்று வேலைகள் காரணமாக இந்த பள்ளத்தாக்கின் நிலை கவலைக்கிடமாகவே இருந்து வருகிறது.

ஆக, காஷ்மீர் மக்களைப் பொறுத்த வரை அவர்கள் தேர்தல் என்னும் கண்துடைப்பு வேலைகளால் ஏமாற்றப்பட்டு (நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களும் காங்கிரஸ் அரசுகளின் அடிவருடிகளுக்குச் சாதகமான வகையில் நடத்தப்பட்டதும், மக்களின் எண்ண அலைகளைப் புரிந்து கொள்ள எந்த ஒரு அரசுகளும் தயாராக இல்லை என்பது தான் உண்மை) இதற்கிடையில் ஆட்சிக்கு வந்த இந்து மதப் பயங்கரவாதி ஜக்மொகனின் ஆட்சி மேலும் மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலும், இஸ்லாமிய மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வண்ணமும் இருந்ததை உலகம் இன்றும் ஒப்புக் கொள்கிறது.

இந்தியா காஷ்மீரை ஒரு இந்து மதச்சார்பான பகுதியாகவும், பாகிஸ்தான் இதனை ஒரு இஸ்லாமிய மதம் சார்ந்த பகுதியாகவும் நோக்குவதால் விளையும் அரசியல் சித்து விளையாட்டுகளில் சிக்கிக் கொண்டு அல்லாடுவது என்னவோ அப்பாவி மக்கள் தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

இந்திய அடிவருடி அரசுகள் வழக்கம் போல தங்கள் இந்த்துத்துவ முகத்தை அண்மையில் வெளியிட்டு, (அமர்நாத் - நில விவகாரம்), பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்களாக இருந்தும், சுயாட்சி பெற்ற ஒரு மாநிலமாக இருந்தும், ஒரு சார்பாக அமர்நாத் ஆலயத்திற்கு வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தை கொடுத்து (பின்னர் திரும்பப் பெற்றதும், அதன் காரணமாக மாநில கூட்டணி அரசு தனது பதிவியை இழந்ததும் துணைக் கதை) தனது மதச்சார்பின்மை முகத்தை துவைத்துத் தொங்க விட்டு வெளியிட்ட கதையும், இப்போது சிக்கலில் விழி பிதுங்கும் இந்திய அரசு தனது இந்து மதம் சார்ந்த பார்வையை விடுத்து மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ளும் அரசாக மாறுமேயானால், இந்தச் சிக்கலுக்கு உண்மையில் ஒரு நிரந்தரத் தீர்வை நம்மால் எட்ட இயலும்.

காஷ்மீர மக்களில் பலர் இன்னும் இந்தியாவுடன் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள், (இஸ்லாமியர்கள் உட்பட), ஆனால் நடைபெறும் ஆட்சி ஒரு சார்பற்ற, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட ஆட்சியாக இருக்க வேண்டும் என்பதும், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்கள் காஷ்மீரை ஒரு சர்வதேச சிக்கலாகவே வைத்துக் கொண்டு தங்கள் ஆளுமையை ஆசிய நாடுகளின் மீது திணிக்க முயல்கின்றன என்ற உண்மையைப் புரிந்து கொண்டும், இரு நாடுகளும் (இந்தியா மற்றும் பாகிஸ்தான்) செயல்படுமேயானால், மீண்டும் ஒரு அழகான மலைகளும், மலர்களும் நிரம்பிய பள்ளத்தாக்காக காஷ்மீரை நாமும் வலம் வர வாய்ப்பு இருக்கிறது.

(இதில் வேறு மணிரத்னங்களும் இன்னும் சில பார்ப்பன நண்பர்களும் படம் எடுத்து இஸ்லாமியர்கள் மட்டுமே தீவிரவாதிகள் மற்றவர் எல்லாம் நல்லவர் என்று குழப்புவது இன்னும் வேதனை)

சிக்கலின் அடிவேரைப் புரிந்து கொண்டு, காஷ்மீர் நம்முடன் இருக்க வேண்டுமா? தனியாகச் செல்ல வேண்டுமா? என்பதைத் தீர்மானம் செய்யும் பொறுப்பை உங்களுக்கே வழங்கி நான் தப்பித்துக் கொள்கிறேன் நண்பர்களே!

- அறிவழகன்