கீற்று இணையத்தில் முன்று பகுதிகளாக வெளியான தியாகுவின் நேர்காணல் குறித்து எனது சில அபிப்பிராயங்களை பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். நான் சமூக அரசியல் செயல்பாடுகளின் பக்கமாக திரும்பிய காலத்தில்தான் தியாகு பற்றி அறிந்து கொண்டேன். அவர் எனக்கு அறிமுகமாகியபோது நக்சல்பாரி தியாகு என்றுதான் அறிமுகமாகியிருந்தார். இன்றும் ஈழத்தில் உள்ள பல எழுத்தாளர்களுக்கும் அவ்வாறு சொன்னால்தான் தியாகுவை விளங்கும். தியாகுவின் ‘சுவருக்குள் சித்திரங்கள்’ என்னும் நூலை எனக்களித்து ஒரு நண்பர் அப்படிச் சொல்லித்தான் தியாகுவை எனக்கு அறிமுகம் செய்திருந்தார். ஆனால் தியாகுவின் ஈழப் போராட்டம் தொடர்பான செயற்பாடுகள் பற்றி நான் அதிகம் அறிந்திருக்கவில்லை. குறிப்பாக ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கொடும்பாவி எரித்தது தொடங்கி ‘திலீபன் மன்றம்’ அமைத்தது மற்றும் சி.பி.எம்முடன் ஈழ ஆதரவு நிலைக்காக முரண்பட்டு வெளியேறியமை வரையான, அவரது செயற்பாடுகள் பற்றி இப்பொழுதுதான் முதன்முதலாக அறிந்து கொண்டேன்.

பொதுவாகவே தேசிய இனத்துவ விடுதலைப் போராட்டங்களை விளங்கிக் கொள்வதில் மார்க்சியர்களின் புரிதல் குறித்து என்னிடம் தோழர் தியாகுவுடன் முரண்படுமளவிற்கு வித்தியாசமான அபிப்பிராயங்கள் எதுவுமில்லை. ஈழத்தில் இப்பொழுதும், வறட்டு மார்க்சிய அளவுகோல் கொண்டு தமிழர் விடுதலைப் போராட்டத்தை விமர்சிப்போருடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாங்களும் முரண்பட்டே வருகிறோம்.

தியாகு என்ற பெயரின் அடையாளமாக எந்த நக்சல்பாரி இருந்ததோ அதன் பொருத்தப்பாடு பற்றி அவரே பேசும் அளவிற்கு நிலைமைகள் மாறியிருக்கின்றது. சமூக அரசியல் செயற்பாடுகளில், கால மாற்றங்களைத் துல்லியமாக விளங்கிக் கொள்ளாதவர்களின் சிந்தனைகளால் எந்தப் பயனும் இல்லை. அந்த வகையில் பார்த்தால் அவர் இந்திய நக்சலைட்டுகள் பற்றி குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கள் என்னளவில் முழுமையான உடன்பாட்டுக்குரியவையே. தியாகுவின் இந்த நேர்காணல் தமிழக மட்டத்திலுள்ள வைதீக மார்க்சியர்களுக்கு (Orthodox Marxists) எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். அத்துடன் அவர் தமிழ்த் தேசியம் குறிப்பாக ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் பற்றி குறிப்பிட்டிருக்கும் அபிப்பிராயங்கள் ஈழத்திலுள்ள பழைய நம்பிக்கைகளின் சொந்தக்காரர்களான மார்க்சியர்களுக்கு மட்டுமன்றி புலம்பெயர் தளங்களில் புலிக் காய்ச்சலுடன் இயங்குவோருக்கும் கூட எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம்.

இந்திய நக்சலைட் செயற்பாடுகள் எப்படி மாவோவின் செல்வாக்கிற்கு ஆட்பட்டு சூழலைச் சரியாக விளங்கிக் கொள்ளாமல் உருக்குலைந்து போனதோ, அவ்வாறானதொரு அரசியல் பின்புலம்தான் ஈழத்து இடதுசாரி அரசியல் செயற்பாடுகளிலும் நிலை கொண்டிருந்தது. ஆரம்பத்திலிருந்தே இலங்கையின் இடதுசாரி அரசியல் தளம் ரொட்ஸ்கியவாதிகள் மற்றும் லெனின், ஸ்டாலின் வகை வாதிகள் என இரண்டாகவே பிரிந்து கிடந்தது. பெரும்பாலான சிங்கள இடதுசாரி செயற்பாட்டாளர்கள் அனைவரும் ரொட்ஸ்கியவாதிகளாகவே இருந்தனர். இவர்கள் அடிப்படையில் மக்களை அணிதிரட்டும் புரட்சிகர செயற்பாடுகளிலிருந்து விலகி, இடதுசாரி அரசியல் என்பதே வெறும் தொழிற்சங்க நடவடிக்கை என்பதாக அரசியலை சுருக்கினர்.

ஆரம்பத்தில் தமிழ் மக்களின் நியாயமான பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்த ரொட்ஸ்கியவாதிகள் பின்னர் மிக மோசமான இனவாதிகளாக மாறி தமிழர்கள் மீதான அழித்தொழிப்புக்களுக்கு நியாய விளக்கம் சொல்பவர்களாக மாறியதே வரலாறு. இது இலங்கையின் இடதுசாரி அரசியலின் ஒரு பகுதி என்றால், மறுபகுதி வர்க்க அரசியல் ரீதியில் சரியான நிலைப்பாடுகளை கொண்டிருந்தது. ஆரம்பத்தில் ரஸ்ய, சீன சிந்தனைகளில் நிலைகொண்டிருந்த இவ்வகை இடதுசாரிகள் ரஸ்ய - சீன முரண்பாடுகளின் போது ஏற்பட்ட இடதுசாரி பிளவில் சீனத்தின் பக்கம் சாய்ந்தனர். சீனாவின் நிலைப்பாடே சரியானது என்ற நிலைப்பாட்டில் இயங்கி இவர்களுக்கு என்.சண்முகதாசன் தலைமை தாங்கினார்.

இந்த சீனசார்பு அணியே யாழ்ப்பாணத்தில் சாதிய எதிர்ப்புப் போராட்டங்களை நடாத்தியது. ஈழத் தமிழர்கள் மத்தியில் முதன் முதல் ஆயுதப் போராட்ட அரசியல் வகையை உருவாக்கிவர்கள் இந்த சீன சார்பு இடதுசாரிகளே ஆவர். ஓப்பீட்டளவில் இலங்கையின் இடதுசாரி அமைப்புக்களுடன் ஒப்பிடும் போது, முற்போக்கானதும் புரட்சிகர பண்புடையதாகவும் இருந்த சீனசார்பு அணியினர், ஈழத் தமிழ் மக்கள் மீதான சிங்கள ஒடுக்குமுறைகள் அதிகரித்தபோது அதற்கு எதிராக எந்தவிதமான போராட்டங்களையும் முன்னெடுக்கத் திராணியற்றவர்களாகவே இருந்தனர். அந்த ஒடுக்கு முறைக்கு எதிராக போராடுவதை விடுத்து, சீன மற்றும் ரஸ்ய வகை அரசில் பாணியில் ஒடுக்குமுறைக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தனர்.

சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சண்முகதாசன் ஈழத் தமிழர்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க மறுத்தார். ஸ்டாலினிய வரையறையின்படி பொதுப் பொருளாதாரம் இல்லாத ஈழத் தமிழர்களை ஒரு தேசிய இனமாக ஏற்க முடியாது என்பது சண்ணின் வாதமாக இருந்தது. உண்மையில் இது சண்முகதாசனின் பிரச்சனையல்ல அவரது, தேசிய இனங்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதிலிருந்த தத்துவார்த்த வரையறையின் விழைவுதான் அது.

தமிழ்ப் பாராளுமன்றவாத அரசியல் செயற்பாடுகளின் தோல்வியைத் தொடர்ந்து ஆயுத வழி புரட்சிகர அரசியல் செயற்பாடுகள் மேலெழுந்தபோது, அதுவே ஈழத் தமிழர்களை சிங்கள மேலாதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்கான ஒரேயொரு வழிமுறை என்ற நிலைப்பாடு வலுவடைந்தது. இதன் பின்னர் படிப்படியாக, ஈழத் தமிழர்கள் மத்தியில் இடதுசாரி அரசியல் செயற்பாடுகள் வலுவிழந்து சிதைந்துபோனது. சீன சார்பு இடதுசாரி அமைப்புகளில் இருந்த பலரும் பல்வேறு விடுதலை இயக்கங்களில் இணைந்து கொண்டனர். சிலர் அரசியலிருந்து ஒதுங்கி பழைய நம்பிக்கைளை அசை போடுபவர்களாக மாறினர். அவ்வாறனவர்களில் சிலர் இப்பொழுதும் ஏதோ சில கொடிகளுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்திய நக்சலைட் செயற்பாடுகள் சீன அணுகுமுறையை அப்படியே இந்தியச் சூழலுக்குப் பொருத்தும் அதீத கற்பனையில் இயங்கியது போன்றே, ஈழத்தில் இயங்கிய மார்க்சியர்களும் ரஸ்ய, சீன வழி சிந்தனைகளை ஈழத்துச் சூழலுக்குப் பொருத்தும் கற்பனையில் காலத்தைக் கடத்தி சிதைந்து போயினர். மாவோவின் கெரில்லா போர்முறைகளை படித்துவிட்டு ‘யாழ்ப்பாணத்தில் மலை இல்லையே எதிரிகளை நோக்கி கல்லுகளை உருட்டுவதற்கு’ என்று விடுதலைப் போராளிகளை விமர்சித்தவர்களையும் நாங்கள் கடந்த காலத்தில் சந்தித்திருக்கிறோம்.

இன்று இலங்கையில் இடதுசாரி அரசியல் என்ற ஒன்றே கிடையாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில உதிரிச் செயற்பாடுகள் இருக்கலாம். இந்திய கம்யூனிஸ்ட கட்சியானது, ஜே.வி.பி.யை இடதுசாரி அமைப்பு என்று கூறி தலையில் தூக்கி வைப்பதன் அறியாமை வேறு. சூழலை சரியாக விளங்கிக் கொள்ளாமல் இன்னொரு சூழலில் தோற்றம் கொண்ட சிந்தனை முறைகளை, அப்பழுக்கற்ற முறையில் பிரயோகிக்க முற்பட்ட அறியாமையின் விழைவே ஈழத்தின் இடதுசாரி அரசியல் உருக்குலைந்து போனதன் பின்னணி. இந்த பின்புலத்தில் பார்த்தால், தமிழக இடதுசாரி அரசியல் செயற்பாடுகளுக்கும் ஈழத்து இடதுசாரி அரசியல் செயற்பாடுகளுக்கும் இடையில் சிறந்த ஒற்றுமை நிலவுகின்றது.

தோழர் தியாகுவின் நேர்காணலைப் படித்தபோது இப்படியாக எழுந்த சில அபிப்பிராயங்களையே இங்கு பதிவு செய்திருக்கிறேன். தமிழ்ச் சூழலில் தேசியத்தை சரியாக புரிந்து கொள்ளாத எந்தவொரு சிந்தனையும் உயிர்வாழ முடியாது. லத்தீனமெரிக்க இடதுசாரி அரசியல் அனுபவங்களைக் கருத்தில் கொண்டு ரெஜிரப்கே கூறியது போன்று தேசியத்துடன் இணையாத மார்க்சியத்தால் இனி பயனில்லை. அதே போன்று சோசலிசக் கூறுகளை உள்வாங்கிக் கொள்ளாத தேசியம் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பயனுடையதாக இருக்கப் போவதில்லை என்பதையும் நாம் மறுக்க முடியாது. 

-
யதீந்திரா
Pin It