பொங்கல் எங்களுக்கு பொள்ளாச்சி பஸ் ஸ்டேண்ட்லேயே ஆரம்பித்து விடும்.

பொங்கலுக்கு, வால்பாறைக்கு போவதென்பது ஒரு வருட தவம். பொருள் தேடி ஊரெங்கும் நாடெங்கும் எங்கெங்கோ சிதறியவர்கள்.. ஒன்று சேரும் நாள் பொங்கல் நாட்கள். மனம் நிறைய, குடும்பத்துக்கு தேவையான துணிமணிகள்... இனிப்பு... இன்னும் என்னென்ன தேவையோ எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு ஊருக்கு போவதென்பது அமிழ்தினும் பேரின்பம்.

எங்கிருந்து வேண்டுமானாலும் பொள்ளாச்சி வந்து விடுதல் சுலபமாக நிகழும். ஆனால் பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்வதென்பது இமயமலை பனிச்சறுக்கு சாகசம் நிறைந்தவை. பொள்ளாச்சி பஸ் ஸ்டேண்ட்டில் வால்பாறைக்கு பேருந்து கிடைப்பதென்பது குதிரைக்கொம்பு. எப்படி வரும் எப்போ வரும் என்று தெரியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் சரியாக வந்து நிற்கும் பேருந்து. எங்கிருப்போம்.. எப்படி இருப்போம் என்றெல்லாம் தெரியாது. பேருந்தைக் கண்டவுடன் கால்களில் இறக்கை முளைக்க குறுக்கும் நெடுக்குமாக உள்ளும் புறமுமாகப் பறப்போம்.

அது அக்காமாலை பேருந்தாக இருக்கலாம்... குரங்குமுடி பேருந்தாக இருக்கலாம்.....சேக்கல்முடி பேருந்தாக இருக்கலாம்.....வில்லோனி பேருந்தாக இருக்கலாம்....ஹைபாரஸ்ட் பேருந்தாக இருக்கலாம்.....மானாம்பள்ளி பேருந்தாக இருக்கலாம்......எல்லா பேருந்தும் வால்பாறை தாண்டி தான் போக வேண்டும்..... வால்பாறை பேருந்தில் வால்பாறை டிக்கெட் மட்டும் தான் ஏறும். முன் சொன்ன பேருந்துகளில் அந்தந்த ஊர் டிக்கட்டுகளும் ஏறும். கூட்டம்.. சும்மா ஜிவ்வென்று இருக்கும். மூச்சு விட முடியாத அணைப்பில்... ஆண் பெண் என்ற பாகுபாடெல்லாம் ஒருபோதும் இருந்ததில்லை. அத்தனை நெருக்கத்தில்... பரஸ்பரம் விசாரிப்புகள்.... நிகழும். சினேகப் புன்னகை தவழும். பேச்சுக் கொடுத்து கதையடிக்க கூட ஆரம்பித்து விடுவோம். எல்லா முகமும் தெரிந்த முகமாக ஒரு பாவனை இருக்கும். அது வால்பாறை மரபணு சார்ந்தது.

பொள்ளாச்சி பேருந்து நிலைய எல்லா சந்துக்குள்ளிருந்தும் வெளி வருவோம். பொள்ளாச்சி என்டரன்சில் நின்று "புத்திசாலித்தனமாக" பேருந்து நிலையத்துக்குள் வரும் பேருந்தில் ஏறிய அனுபவமும் உண்டு. மகாலிங்கபுரம் பேருந்து டிப்போ வளைவில் நின்று வண்டி திரும்ப திரும்ப ஏறி சீட் போட்ட நாட்களும் உண்டு. பேருந்து, நிலையத்துக்குள் வரும் போதே இனம் புரியாத சப்தம் எழும். காக்கா கூட்டம் போல கரகரத்து பரபரக்கும் அவ்விடமே. பேருந்தைக் கண்டதுமே சீட் பிடிக்க துண்டு போடுவார்கள். பையை போடுவார்கள். ஜன்னல் வழியே குழந்தையைக் கூட போடுவார்கள். சீட்டுக்கு சண்டை எல்லாம் போட்டுக் கொள்வோம். உருளும் டயரில் கால் மாற்றி கால் வைத்து கம்பியைப் பற்றி தொங்கியபடியே இறங்குவோரிடம்.. பையை நீட்டி சீட் சீட் என்று தலையை ஆட்டுவோம். எல்லாம் கொஞ்ச நேரத்துக்கு தான். ஆழியார் தாண்டுகையில்.. தூங்கி வழிந்து ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொள்தல் நிகழும். ரெம்ப நேரம் நிற்க முடியவில்லை என்றால் உட்கார்ந்திருப்பவர்..... குறுகி.. ஒடுங்கி இடம் உருவாக்கி அருகில் நிற்பவரை உட்கார வைத்துக் கொள்வார்கள்.

ஒரு முறை 40 வளைவுகளுக்கும் 40 கடிதம் எழுதி (ஹாய் பெண்ட் 1, பெண்ட் 2.. பெண்ட் 3...என்று 40 வளைவுகளுக்கும்) ஒவ்வொரு கடிதம் போட்டுக் கொண்டே சென்ற போது ஆனைமலையை நானே செதுக்கியது போல நம்பினேன். ஆழியார் நிறுத்தத்தில்.. ஒரு டீயும் வடையும் சாப்பிடுவது போல சுவாரஷ்யமான மனதுக்கு நெருக்கமான உலக டிஸ் வேறொன்று கிடையவே கிடையாது. ஆம்.... எங்க ஊருக்குள்ள நுழைஞ்சிட்டோம் என்ற ஆன்ம திருப்தி. சில நாட்களில்.. பேருந்து ஆழியாறில் டீ குடிக்க நிற்காமல் அட்டகட்டியில் நிற்கும். அட்டகட்டியில் தண்ணீர் குடித்தாலே போதும். அத்தனை ஜில் தண்ணியை நீங்கள் எந்த பிரிட்ஜில் இருந்தும் எடுத்துக் குடித்து விட முடியாது.

மழை நாளில் பேருந்து வளைவுகளில் செல்கையில் கண்ணாடி வழியாக காணும் காட்சியில்... உலகமே மெல்ல சுழலுவது போன்ற தோற்றக் கலை ஏற்படும். கடைசி சீட்டில் அமர்ந்து பின்னால் திரும்பிக் காண்கையில் வழி விட்டுக் கொண்டே குறுகும் சாலையைக் காணக் கண் கோடி வேண்டும். காணும் இடமெல்லாம் பச்சை பூத்து நீரால் மினுங்கிக் கொண்டிருக்கும் காட்சிக்கு.. நூறு வருட கனவு வேண்டும்.

எனக்கு தெரிந்து..... பேருந்துள் "அவன் அங்க இடிச்சிட்டான்.... இவ இங்க இடிச்சிட்டா" என்று ஒரு நாளும் யாரும் கூறியதில்லை. பேருந்தில் எந்த மூலையில் இருந்தும் வாயை பிடித்துக் கொண்டு "வாந்தி வாந்தி" என ஜாடை செய்து கொண்டே பறந்து வருபவருக்கு நொடியில் ஜன்னலோரம் இடம் கிடைக்கும். அதன் பிறகு.. வண்டி வளைவில் திரும்ப திரும்ப வாந்தியும் மழையோடு சாரல் அடிக்கும். ஒருவர் வாந்தியெடுத்தால் ஆங்காங்கே மற்றவரும் எடுக்க ஆரம்பிப்பார்கள். எல்லாரும் சிறுபிள்ளையாகும் சமயம் அது.

சில நாட்களில் நானெல்லாம் கண்கள் மூடி தலை கவிழ்ந்து கம்பியோடு படுத்தால்... ரொட்டிக்கடை வந்து தான் முகம் தூக்குவேன். அத்தனை குமட்டல்களைத் தரும் நாற்பது கொணடை ஊசி வளைவுகளும் கோணையாய் வளைந்து நிற்கும் பூங்காவைப் போல தான் இருக்கும். புதுத்தோட்டம் தாண்டி வால்பாறை நுழையும் இடத்தில் இருக்கும் அந்த வளைந்த டிசைன் பாலம் வந்த உடனே.. முகத்தில் ஒரு மலர்ச்சி ஏற்படும். காமராஜ் நகர்.... தாண்டியதும்... சிரிப்பு தானாக முகத்தில் அப்பிக் கொள்ளும். சுடுகாட்டைத் தாண்டி இந்தியன் பேங்க் போஸ்ட் ஆபிஸ் ஏறி.... கீழே வளைகையில் எதிரே காவல் நிலையம் தன் கடமையை செய்து கொண்டிருக்கும்.

பேருந்து வளைந்து நிமிர்கையில் மணம் வீசி கம்பீரமாக நிற்கும் சுப்பிரமணி கோயில். இன்னும் கீழிறங்க... பழைய பேருந்து நிலையத்தில் வண்டி நின்று இறங்க வேண்டியவர்கள் இறங்க, அடுத்து.... காந்தி சிலை நோக்கி நகர்கையில்..... ஒரு பெரும் போராட்டம் முடிந்து பெருமூச்சு வாங்கி ஆக்சிஜன் கம்மியாக கிடைத்தாலும் நுரையீரல் ஆசுவாசம் கொள்ளும். மலை உச்சியில் இருப்பது தெரியாமல்... மீண்டும் ஒரு டீ....ஒரு வடை சாப்பிட ஒதுங்குவோம். அதன் பிறகு.. அவரவர் அவரவர் எஸ்டேட்க்கான பேருந்துக்கு காத்து நிற்க.. நாங்கள் சேக்கல்முடி பேருந்துக்காக கண்கள் நிறைந்த பசியோடு நிற்போம்.

அத்தனை சிரமத்தையும் தாண்டி ஊர் சேர்கையில்..... களிகூரும் ஆழ் மனம். காடு சிரிக்கும் மூளைக்குள். கண்களில் ரகசியம் செய்யும் சிறுமழையும் பனி மழையும். பூ மரமும்... தண்ணிக்கா மரமும்...... சின்ன பாலமும்...செட்டியார் கடையும் வா வா என்று வரவேற்கும். வந்து விட்டாயா என நலம் கேட்கும்.

உருளிக்கல் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீடு செல்வதற்குள்... ஊர் நடுவே இருக்கும் கோவிலில் கூட்டம் பின்னியெடுக்க.. ஒரு பக்கம் கரகாட்டம் அடித்து நொறுக்க.. ஒரு பக்கம்... கலை நிகழ்ச்சிகளுக்கு ஒத்திகை நடக்க...கூட்டத்தை ஒதுக்கிக் கொண்டு வேண்டுமென்றே தன் இருப்பை நிலை நாட்டிய புன்னகையோடு நடப்பேன். எல்லாரும் என்னையே பார்ப்பது போன்ற கற்பனை அல்லது நிஜம் நன்றாக இருக்கும்.

"எப்போ வந்த.. விஜி, எப்படி இருக்க.. விஜி, இப்ப தான் வர்றயா.... விஜி, நல்லாயிருக்கியா... விஜி, நல்லா வளர்ந்துட்ட.... விஜி, போ.... போ.. உங்க மாமா இவ்ளோ நேரம் பஸ்ஸை பார்த்துட்டு தான் இருந்தாரு... போய் சாப்டுட்டு வா......" என்று எங்கிருந்தெல்லாமோ குரல்கள் ஒலிக்கும். குரலுக்கு ஒரு முகம் என்று அத்தனை குரலிலும் அன்பு மட்டுமே வழியும்.

ஒரு வழியாக குளிரோடு சில்லென்று வீட்டுக்கு சென்று முதலில் கட்டங்காப்பி குடித்து... அடுத்த அரை மணி நேரத்தில்.. பல கட்ட பரஸ்பரம் விசாரிப்புகள்.....பக்கத்து வீடு பக்கத்து பக்கத்துக்கு வீடு என அந்த லைனே விசாரித்து.... வேற்று உடைக்கு மாறி.. சாப்பிட்டு.. ஸ்வட்டர் குல்லா சகிதம் ஆட்டம் பார்க்க வருகையில்.. மனம் நிறைந்திருக்கும். இனம் புரியாத ஒரு பாதுகாப்பு உணர்வு நம்மை சூழ்ந்திருக்கும். நண்பர்கள் உறவுகள்..... என்று பார்க்கும் பக்கமெல்லாம் கைகள் காட்டி... அத்தனை ஒலிபெருக்கி சத்தத்திலும் கத்தி கத்தி பேசிக் கொண்டு... உடல் முழுக்க சந்தோசம்... உள்ளம் முழுக்க இன்பம். வாழ்தலின் உவகை அப்படித்தான் இருக்கும்.

ஆட்டம் முடிந்து திரும்ப வீட்டுக்கு வந்ததும் கம்பளியை இழுத்துப் போர்த்தி படுத்தால்...ஒரு வருஷக் கதைகளை பேசிக் கொண்டு அப்படியே தூங்கிப் போவேன். மச்சான்கள்..... அக்காக்கள்.... அண்ணி.... தம்பி.... அக்கா... தங்கச்சி..... மாமா.... அத்தை..... தாத்தா... பெரியம்மா...என்று எங்கள் எல்லாருக்கும் ஒரே மூச்சு.

கனவே இல்லாத தூக்கம் வாய்த்த அவ்விரவுகள்.... அதன்பிறகு எனக்கு எங்கும் வாய்க்கவேயில்லை.

- கவிஜி