jaggi cauvery callingதமிழ்நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளை எல்லாம் சாமானிய மக்களால் எளிதாக சந்திக்க முடிகின்றதோ இல்லையோ, ஆன்மீகத்தின் பெயரால் ஊரை ஏமாற்றி கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் திருட்டு சாமியார்களால் மிக எளிதாக சந்திக்க முடிகின்றது. பன்றிகள் சாக்கடையில் புரண்டு உருள்வது எப்படி அதிசயமில்லையோ, அதோ போல பொறுக்கித் தின்பதற்காகவே அரசியல்வாதி வேடத்துடன் சுற்றிக் கொண்டிருக்கும் மோசடிக் கும்பலும் இது போன்ற சாமியார்களின் பாதார விந்தங்களில் விழுந்து தொழுவதையும் நாம் அதிசயமாக பார்க்கத் தேவையில்லை.

ediyurappa CauveryCallingசில நாட்களுக்கு முன்னால் மேல்மருவத்தூரில் குடி கொண்டிருக்கும் ‘அம்பள அம்மா’ வீட்டுத் திருமணத்தில் கட்சி பேதமின்றி தமிழ்நாட்டில் உள்ள பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டு, அவர் சம்பாதித்த 'ஆன்மீக'ப் பணத்தில் வெட்க, மானமே இல்லாமல் வயிறு நிரப்பிக் கொண்டு வந்தார்கள். ஏன் இவர்கள் எல்லாம், இது போன்ற ஊரை அடித்து உலையில் போடும் திருட்டுப் பயல்களோடு கூடிக் குலாவுகின்றார்கள் என்றால், அடிப்படையில் சாமியார்கள் காவி வேட்டி கட்டி செய்வதைத்தான், இந்த அரசியல்வாதிகள் வெள்ளை வேட்டி கட்டி செய்து வருகின்றார்கள். இருவருமே ஒன்றுபடும் புள்ளி என்பது மக்களின் அரசியல் அறியாமைதான். அது இருக்கும் வரைதான் இரண்டு குற்றக் கும்பலும் காலம் தள்ள முடியும். அதனால் திருட்டுக் கும்பல்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவரை புனிதப்படுத்திக் கொள்ள இது போன்று அரவணைத்துச் செல்வது இயற்கையான நிகழ்வாக உள்ளது.

அந்த அடிப்படையில் தற்போது தன்னைத் தானே சத்குரு என்று சொல்லிக் கொண்டு, காடுகளை அழித்து, யானையின் வலசைப் பாதைகளை மறித்து, யோகாவின் பெயரால் தமிழக மக்களை ஏமாற்றி, பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடித்த கார்ப்ரேட் கிரிமினல் சாமியாரான ஜக்கி வாசுதேவன், காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஆரம்பித்து, அதற்காக தமிழ்நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகளின் ஆதரவும் தனக்கு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றான். இவன் போடும் எச்சிக் காசுக்கு வாலை ஆட்டிக் கொண்டு நிற்கும் தமிழினத் துரோகிகள் துளி கூட சுயமரியாதை உணர்வு இல்லாமல் இவனோடு தற்போது கரம் கோர்த்துள்ளார்கள்.

இது சம்மந்தமாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவிரி நதிக்கு புத்துயிரூட்டவும், அதைச் சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ளார். இதன் மூலம் தமிழகம் மற்றும் கர்நாடகத்தின் காவிரி வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில், அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக, கர்நாடக மாநில அரசுகள் மற்றும் மக்கள் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், 35,00 கி.மீ. தொலைவுக்கு மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெறவுள்ளது.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் காவிரியின் மீது ஜக்கிக்கு அக்கறை இருக்குமானால் காவிரியில் கழிவு நீரைக் கலந்து அதை மாசுபடுத்தும் சாயப்பட்டறைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு எதிராகவும், எந்தவித வரைமுறையும் இல்லாமால் நீர்க் கொள்ளையில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களுக்கு எதிராகவும், காவிரிக் கரையை ஆக்கிரமித்து அதை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் துணையோடு பட்டா போட்டு விற்பனை செய்த ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு எதிராகவும், காவிரி ஆற்றில் கிணறு தோண்டி மணற்கொள்ளையில் ஈடுபட்டு அதைத் துடிதுடிக்க கொலை செய்த மணற்கொள்ளை மாஃபியாக்களுக்கு எதிராகவும், காவிரியில் தண்ணீரைத் திறந்துவிடாமல் அடாவடித்தனம் செய்யும் கர்நாடகாவுக்கு எதிராகவும்தான் இயக்கம் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் உண்மையான எதிரிகளுக்கு எதிராக சுட்டுவிரலைக் கூட நீட்டத் துப்பில்லாத இந்த 420 சாமியார் காற்றில் கம்பு சுற்றிக் கொண்டு இருக்கின்றார். மண்ணையும் மக்களையும் அழிக்கும் வேதாந்தா போன்ற பெருந்தொழில் நிறுவனங்களின் ஏவலாளாக வாழ்வதையே தன்னுடைய பிறவிக் கடமை என்று வாழ்ந்து வரும் ஜக்கி போன்றவர்களால் அது ஒருபோதும் முடியாது என்பதுதான் உண்மை.

ravikumar CauveryCallingதான் கூப்பிட்டால் பிரதமரில் இருந்து குடியரசுத் தலைவர், மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் என அனைவரையும் கைக்கட்டி, வாய் பொத்தி தன் முன்னால் நிற்க வைக்கும் ஆற்றல் கொண்ட ஒரு நபர், காவிரியைக் காக்க பொதுமக்களின் ஆதரவைக் கேட்பது என்பதே பெரும் கேலிக்கூத்தானது. இவை எல்லாம் தன்னை புனிதப்படுத்திக் கொள்ள ஜக்கி போடும் நாடகமே தவிர வேறொன்றுமில்லை. தன்னை சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்டவராகவும் காட்டிக் கொள்ள வேண்டும், அதே சமயம் அது அரசியலற்ற மொக்கையான செயல்பாடாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் ஜக்கியின் திட்டம். அதனால்தான் இந்த மொக்கைத் திட்டதிற்கு அரசியலற்ற பல்வேறு மொக்கைப் பேர்வழிகள் ஆதரவு தெரிவிக்கின்றார்கள்.

இந்த மொக்கைப் பேர்வழிகள் வரிசையில் விடுபட்டவர்கள் என்று தமிழ்நாட்டில் உள்ள எந்தக் கட்சியையும் சொல்லிவிட முடியாது. ஜக்கியைப் பற்றி விமர்சித்த சீமான் கூட ஒரு சங்கியாக தன்னுடைய ஆதரவை வந்தேறி ஜக்கிக்குக் கொடுத்திருக்கின்றார். நாய் விற்ற காசு குரைப்பதில்லை என்பது அண்ணன் சீமானுக்கு நன்றாகவே தெரியும்!

பார்ப்பன எதிர்ப்பு பேசும் விடுதலைச் சிறுத்தைகள் கூட தன்னை ஜக்கியோடும், அவரது சித்தாந்தத்தோடும் அடையாளப்படுத்திக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றது. இன்னும் பெரியாரியக்கத் தோழர்களை மட்டும்தான் ஜக்கியின் ஆட்கள் அணுகவில்லை என்று தெரிகின்றது.

காவிரியில் ஒழுங்காக தண்ணீர் வந்தாலே விவசாயிகளின் பாதி பிரச்சினை தீர்ந்துவிடும். ஆனால் டெல்டா விவசாயிகளை விவசாயத்தில் இருந்து வெளியேற்றிவிட்டு, மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில்தான் மத்திய அரசு காவிரியைத் திட்டமிட்டு வறண்டு போக வைக்கின்றது என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. தமிழகத்தின் உணவுத் தேவையில் பெருமளவைப் பூர்த்தி செய்யும் காவிரி டெல்டாவை அழிப்பதென்பது தமிழர்களை உணவுக்காக கையேந்த வைத்துவிடும் என்பதுதான் உண்மை.

ஜக்கியின் இந்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடும் இலக்கு கூட விவசாயிகளை பரம்பரியமான நெல் மற்றும் உணவு தானிய உற்பத்தியில் இருந்து வெளியேற்றுவதன் மூலம், அவர்களை விவசாயத்தை விட்டு அப்புறப்படுத்தவும், தமிழர்களை அரிசிக்காகவும் உணவு தானியத்திற்காகவும் கையேந்த வைக்கவும், ஜக்கி போடும் சதித் திட்டமாகும். ஜக்கியின் இந்தத் திட்டத்தின் பின்னால் நிச்சயமாக கார்ப்ரேட்களின் கை இருக்கும் என்பது உறுதி.

kamal cauvery callingஇந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை 5 முதல் 8 மடங்கு உயர்த்த முடியும் என ஈஷா யோகா மையம் சொல்கின்றது. ஆனால் காடு வளர்ப்பு என்பதெல்லாம் நீண்ட கால அடிப்படையில் மட்டுமே பயன் தரும் ஒன்றாகும். தமிழகத்தின் முதன்மையான மழைவளக் காடுகளாக உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை போன்றவற்றில் கணக்கு வழக்கில்லாமல் ஜக்கி போன்றவர்களால் வெட்டப்பட்ட மரங்களை எல்லாம் திரும்ப நட்டு வளர்த்தாலே நம்மால் இயற்கை சமநிலையைப் பேண முடியும். சமவெளிப் பகுதிகளில் அதுவும் காவிரி பாசன வசதி பெறும் விவசாய நிலங்களில் காடு வளர்ப்புத் தொழிலை செய்வதெல்லாம் விவசாயத்தை அழிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டதே தவிர வேறொன்றுமில்லை.

seeman cauvery callingசங்கிகள் ஒரு திட்டம் கொண்டு வருகின்றார்கள் என்றால் அதை சந்தேகக் கண்கொண்டு பார்க்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதிகார வர்க்கத்தின் துணையுடன் காடுகளை அழித்து, ரிசாட்டுகள் கட்டி, வன விலங்குகளை அழித்துக் கொண்டிருக்கும் ஒரு கிரிமினல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கின்றேன், ஆறுகளை மீட்டெடுக்கின்றேன், விவசாயகளின் வருமானத்தைப் பெருக்குகின்றேன் என்று சொன்னால், அதைக் கேள்விக்கு உட்படுத்தாமல் ஏற்றுக் கொள்கின்றவன் அந்த அயோக்கியனுடன் சேர்ந்த கூட்டுக் களவாணியே ஆவான்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பதெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செய்ய வேண்டிய பணியாகும். அதை ஒரு சாமியார் செய்வதாக சொல்வதே ஒரு மானமுள்ள அரசுக்கு வெட்கக் கேடானது ஆகும். ஆனால் மானமுள்ள அரசுக்கு நாம் எங்கு போவது? ஆனால் ஒன்று மட்டும் ஜக்கியால் நடந்திருக்கின்றது, அது தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளில் ஒளிந்து கொண்டிருந்த சங்கிகளை எல்லாம் நாம் தற்போது அடையாளம் கண்டிருக்கின்றோம். அந்த வகையில் நாம் ஜக்கிக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.

- செ.கார்கி