போஸ்பாண்டியின் இந்த முரட்டுக் குத்து அரசின் செயல்பாடுகளால் அனைத்துத் துறைகளும் பாழ்பட்டுள்ளன என்பது உண்மை. மன்மோகன் சிங் 'நேர்மையான' முதலாளித்துவ பொருளியல் அறிஞர் என்றே வைத்துக் கொள்ளலாம். அவரோடு மட்டும் நின்று விடாமல், சிதம்பரம், ரகுராம் ராஜன், மாண்டேக் சிங் அலுவாலியா என பல முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் காங்கிரஸ் அரசாங்கத்தில் இணைந்து பணிபுரிந்தனர் என்பதும் உண்மை. மன்மோகனைப் போன்று தத்தம் துறைகளில் இவர்களெல்லாம் 'நேர்மையான' அறிஞர் என்றே வைத்துக் கொள்வோம்.

gdp growth Indiaதற்போதைய போஸ்பாண்டி அரசின் பொருளாதார வல்லுனர்கள் அனைவரும் கோமியக் குடிகளாக இருக்கின்றனர் என்பதும் உண்மை என்பதாகவே இருக்கட்டும். இந்தக் காரணங்கள் தான் தற்போதைய பொருளாதார சரிவிற்குக் காரணம் என வியாக்கியானம் பண்ண இயலுமா? அல்லது அம்பானிக்கும், அதானிக்கும் மோடி அள்ளிக் கொடுக்கிறார் என்றும், அதுவே பொருளாதார சரிவிற்குக் காரணம் என சொல்ல இயலுமா? மன்மோகனும், சிதம்பரமும் அகப்பையில் அள்ளி அள்ளி அம்பானிக்கும் அதானிக்கும் கொடுத்தனர். மோடி கரண்டியில் அள்ளிக் கொடுக்கின்றனர் என்பது மட்டுமே வேறுபாடு என்பதை யாராலும் மறுக்க இயலுமா?

அசமத்துவத்தை உண்டாக்கும் முதலாளித்துவ பொருளாதார முறை இதற்கு மூலமுதல் காரணம் இல்லையா?

2008-9களில் அமெரிக்காவில் பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டு உலகையே ஆட்டியதே.. அது எதனால் வந்தது என நாம் அறிவோமா?

இந்த போஸ்பாண்டி போல 2008 இல் புஷ்பாண்டி அமெரிக்கப் பொருளாதாரத்தை கொத்து பரோட்டா போட்டுவிட்டார் என நம்மைத் தேற்றிக் கொள்ள முடியுமா? முடியவே முடியாது. பின்னர் ஏன் பொருளாதார பெருமந்தம்?

2008ன் பொருளாதாரப் பெருமந்தத்திற்கு காரணமாக உலகப் பொருளியல் வல்லுனர்கள் (நம்மூர் ரகுராம் ராஜன் உட்பட) சொல்லும் காரணம் அமெரிக்க வங்கிகளின் "அமைப்பு ரீதியான ஆபத்தை" (Systemic Risk) பெருமளவில் வளர விட்டதும், அதை முன்னரே கண்டறியத் தவறியதும் (இது பற்றி 2005 ஆண்டிலே ரகுராம் ராஐன் கணித்தார் என்பது அவருக்குரிய அறிவின் உச்சம்) தான் என அங்கலாய்க்கிறார்கள்.

ஏன் இந்த அமைப்பு ரீதியான ஆபத்து ஏற்பட்டது என்பதை அறிந்து கொண்டால், முதலாளித்துவ பொருளியல் முறை மானுட சமூகத்தின் முன்னேற்றத்திற்கு உதவாது என்பதை அறிந்து கொள்ள இயலும்.

இப்ப ஒரு கதை.

நான் எனது வீடு வாங்க அல்லது கார் வாங்க வங்கியிடம் கடன் விண்ணப்பிக்கிறேன் என வைத்துக் கொள்வோம். வங்கி என்னுடைய கடனைத் திருப்பி செலுத்தும் திறனை ( Creditworthiness) அடிப்படையாகக் கொண்டு எனக்குக் கடன் தருகிறது. கடனை பெற்றுக் கொண்ட சில மாதங்கள் கடன் தவணையை சரியாக செலுத்திய நான், பின்னர் சில மாதங்கள் கடன் தவணையை சரியான தேதியில் செலுத்தவில்லை. இதனால் வங்கிக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. எனவே தனக்கு வரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ள "எனது கடனை" கடன் ஒப்பந்தம் (Credit Derivatives) என்ற அடிப்படையில் இன்னொருவருக்கு (அவர் பெயர் ஆபத்பாந்தவன்) விற்று விடுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை என்னவெனில் எனது வங்கி ஆபத்பாந்தவனுக்கு மாதம் ஒரு தொகையை (எனது கடன் தவணைக் காலம் முடியும் வரை) தரும். அதற்குப் பதிலாக ஒருவேளை நான் வங்கிக்குக் கட்ட வேண்டிய கடன் தொகையை திருப்பிச் செலுத்தாவிட்டால் ஆபத்பாந்த்வன் மீதக் கடன் தொகையை வங்கிக்குத் தருவார். இதற்குப் பெயர் Credit Default Swaps என்று பெயர்.

இது போன்று அமெரிக்காவில் 2000ங்களில் வகை தொகை இல்லாமல் வங்கிகள் கடன் அளித்தன. எவ்வளவு குறைவாக வட்டி (Sub Prime Rate) பெற்றுக் கொண்டு கடன் தர இயலுமோ, அதை விடக் குறைவாக தரைமட்ட அளவுக்கு வட்டி பெற்றுக் கொண்டு கடன் அளித்தனர். வரைமுறை இன்றி அளித்த கடன்களை ஆபத்பாந்தவன்களிடம் விற்றனர் Credit Default Swaps மூலம். ஒரு கட்டத்தில் இந்த சமாளிப்புகள் வேலை செய்யாமல் போக இப்படி ஆபத்பாந்தவனாக எண்ணற்ற கடன்களை வாங்கிய Lehmann Brother என்ற நிதி நிறுவனம் திவாலாக, இதையே தொழிலாகச் செய்த மற்ற நிதி நிறுவனங்களும் வங்கிகளும் சீட்டுக்கட்டு போல வீழ்ந்ததன் விளைவே பொருளாதாரப் பெருமந்தம்.

இது போன்ற அமைப்பு ரீதியான மோசடிகள் (Systemic Risk) முதல் முறையாக நடந்ததா என்றால் இல்லை. 1930களில் உலகப் பெருமந்தமாக இருக்கட்டும், பார்ப்பன ஹர்சத் மேத்தாவாக இருக்கட்டும், மனவாடு சத்யம் ராஜூவாக இருக்கட்டும் - அனைத்தும் அமைப்பு ரீதியான மோசடிகளே. அதாவது இவனுகளே குண்டை வைப்பாங்களாம், இவனுகளே குண்டை எடுப்பாங்களாம்.

இது தான் முதலாளித்துவ பொருளாதார முறையின் லட்சணம். இது நோக்கித்தான் அறிவுலகம் நகர வேண்டுவே தவிர, மன்மோகன் வந்தால் மாற்றி விடுவார், ரகுராம் ராஜன் வந்தால் மாற்றி விடுவார் என பீற்றிக் கொள்ள கூடாது. கத்தியால் நம்மை குத்திக் கொன்றால் என்ன? விச ஊசி போட்டு நம்மைக் கொன்றால் என்ன? இறப்பும் இழப்பும் நமக்குத்தான்.

மோடி அரசை வீழ்த்துவது முதற்கடமையாக இருந்தாலும், முதலாளித்துவ பொருளியல் அமைப்பை வீழ்த்துவதும் மனித குலத்தை நேசிப்பவர்களின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும்.

சு.விஜயபாஸ்கர்