’சங்க காலத்தில் ஜாதியம் இல்லையா?’ என்ற தலைப்பிலான கட்டுரையில், குறித்த கேள்விக்கு சங்ககாலத்திலேயே சாதிகள் உண்டு என்பது போன்ற ஒரு பதிலைக் கட்டுரையாளரும், ’தத்துவத் தலைமை’ என்ற நூலாசிரியருமான தணிகைச் செல்வன் அவர்கள் தந்துள்ளார். அதற்கு மறுப்பாக சங்ககாலத்தில் சாதிகள் இல்லை என்ற பொருளிலேயே இந்த மறுப்புக் கட்டுரை அமைகின்றது.

  முதலில் சங்ககாலத்தில் ஜாதி என்ற சொல்லோ அல்லது அதன் கிரந்தம் நீக்கிய வடிவமான சாதி என்ற சொல்லோ தமிழர்களினால் பயன்படுத்தப்படவேயில்லை. சாதி என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல் இன்றுவரை தமிழிலில்லை. சாதி (Caste) என்பது பிறப்பிலடிப்படையிலான கட்டாய தொழிற் பாகுபாட்டினையும், அக மணமுறையினையும் அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட மக்களின் குழுக்களைக் குறிக்கும். இங்கு பிறப்பிலடிப்படையிலான தொழில், அக மணமுறை, மதப்பின்புலம் என்பன சாதியின் அடிப்படைக் கூறுகளாகும். சங்க காலத்தில் தமிழர்களிடம் காணப்பட்ட குடி, குலம் போன்றவை அவ்வாறு அகமணமுறை, மதப்பின்புலம், கட்டாய பிறப்பு அடிப்படையான தொழிலைக் கொண்டவையல்ல என்பதனால் அவை சாதியினைக் குறிக்கமாட்டாது. சாதி என்ற சொல்லே சங்கமருவிய காலத்திலேயே முதன்முதலில் சிலப்பதிகாரத்தில் வர்ணங்களை குறித்தே வருகின்றது.

நால்வகை சாதியும், நலம்பெற நோக்கி “-(வேனில் காதை41)

அடுத்ததாக மணிமேகலையில் இடம்பெறுகின்றது.

நாமம் சாதி..கிரியையின் அறிவது ஆகும்.”- (சமயக்கணக்கர் 23).

எனவே சங்க காலத்தில் சாதி /அதற்கு நிகரான வேறு தமிழ்ச்சொல்லே இல்லாதவிடத்து, சாதி எவ்வாறு இடம்பெற்றிருக்க முடியும்?

       கட்டுரையின் முதற் பகுதியில் “யாயும் ஞாயும் யாரா கியரோ,

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்” {குறுந்தொகை 40} பாடலைச் சுட்டிக்காட்டி, கட்டுரையாளர் பின்வருமாறு கூறுகின்றார்.

#”மேற்படிப் பாட்டில் சாதியைக் குறிக்கும்’குலம்’ என்ற சொல்லோ ’குடி’ என்ற சொல்லோ இடம் பெறாததால் சாதிப் பிரிவுகள் நிலைப்படு வதற்கு நெடுங்காலத்துக்கு முன்னர் இயற்றப்பட்ட பாடலாக இருக்க வேண்டும் எனத் தெரிகிறது”#

மேற்படி பாடலில் குலம்/ குடி என்ற சொல் இடம்பெறவில்லை என்பது உண்மையே. ஆனால் வேறு சங்க காலப் பாடல்களில் அச் சொற்கள் இடம்பெறுகின்றன. இங்கு அது முதன்மையல்ல, மாறாக புறமணமுறை காணப்படுவதே முதன்மையானது. அதில் மட்டுமல்லாமல் வேறு பல சங்க காலப் பாடல்களில் {எ.காட்டு- குறுந்தொகை 167 ’முளிதயிர் பிசைந்த} புற மண முறைக்கான சான்றுகளைக் காணலாம். பல சங்க காலப் பாடல்களில் ஒரு ஆயத்திலுள்ள தலைவியினை ஆயத்திற்கு வெளியேயிருந்து வரும் ஒரு தலைவனே விரும்புகிறான், அதனால் சங்ககாலத்திலிருந்தது புறமணமுறையே என பேரா.கா.சிவத்தம்பி “சங்க இலக்கியம் கவிதையும் கருத்தும்” எனும் நூலில் 85-86 பக்கங்களில் நிறுவுகிறார். புறமண முறை காணப்படும் ஒரு சமூகத்தில் சாதி அமைப்புக் காணப்படமாட்டாது என்பது வெளிப்படையானது.

 தொல்காப்பிய இடைச் செருகல்:

 அடுத்ததாக கட்டுரையாளர் #”தொல்காப்பியம் வகுத்த தொழில் பிரிவினை மனுவின் நால்வருணத் தருமத்தோடு பொருந்து கிறது;…”# என்கின்றார். இதில் ஓரளவு உண்மை இருக்கின்றது. ஆனால் அதற்ககுக் காரணம் தொல்காப்பிய (குறிப்பாக மரபியல்) உரைகளில் ஏற்பட்ட சிக்கல்களும், சில இடைச் செருகல்களுமே. உரைச் சிக்கல்களிற்கு எடுத்துக்காட்டாக, நால்வர் என்று இடம்பெற்றாலே நால் வர்ணம் என்றும் ஐயர் என்றாலே பார்ப்பனர் என்றும் உரை எழுதிவிட்டார்கள். ஏன் நால்வர் என்பது நான்கு நிலத்தவர்களையும் {முறைமையில் திரிந்ததே பாலை} ஐயர் என்பது தலைவரையும் குறிக்கக்கூடாது {‘ஐ’என்ற ஒரெழுத்து மொழியின் பொருளே தலைவன்}. இடைச் செருகலிற்குச் சான்றாக ‘குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும்..’எனத்தொடங்கி விலங்குகளின் ஆண்-பெண்-இளமைப் பெயர்கள் எனச் சென்றுகொண்டிருந்த பாடலில் திடீரென அந்தணர், அரசர், வைசிகன் என வரும். ‘வைசிகன்’என்ற சொல்லே அக் காலத்தில் கிடையாதே. வணிகன் என்று கூறியிருந்தாலாவது ஒரளவிற்கு இடைச்செருகல் வெளித் தெரிந்திருக்காது. இவ்வாறான உரைக் குழறுபடிகளையும், இடைச்செருகல்களையும் முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் தனது ‘அறியப்படாத தமிழ்மொழி’எனும் நூலில் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியிருப்பார் (பக்கம் 180-187). எமது கவனத்தை நாம் மீண்டும் சங்க காலப் பாடல்களை நோக்கித் திருப்புவோம்.

புலையர்:

அடுத்ததாக கட்டுரையாளர் சங்க காலப் பாடல்களில் இடம்பெறும் ‘புலையர்’ என்ற சொல்லில் கவனம் செலுத்துகின்றார். கட்டுரையாளர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

 #”புலையர் என்றசொல் இழி சொல்லாகவும், புலையர்கள் இழிந்த குலமாகவும், புலைத் தொழில் இழிகுலத் தொழிலாகவும் அடையாளம் பெறப் பார்ப்பனியம் முழு மூச்சாக உழைத்தது”#

மேற்குறித்த கூற்றுக்குச் சான்றாக அப்பர் அடிகளாரையும், சங்கராச்சாரியாரினையும் காட்டுகின்றார். அவை முழுக்க முழுக்கச் சரியானதே, ஆனால் அவை எல்லாம் சங்க காலத்திற்கு பிற்பட்ட நிகழ்வுகளே. சங்க காலத்தில் புலையரின் நிலை என்ன என்பதனைத் தெளிவாகக் கூறாமல் விட்டுவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது. புலையர் என்ற சொல் பரந்த பொருளில் பயன்படுத்தக்கூடிய ஒரு சொல்லாகும். இதன் வேர்ச் சொல்லாகப் ’புல்’ என்பது காணப்படுகின்றது. இங்கு புல் என்பது ஒரு வகையான மூங்கிலைக் குறிக்கும். புல் என்ற வகைப்பட்ட மூங்கிலைக் கொண்டு பின்னுவதில் வல்லவர்களே புலையர் எனப்பட்டார்கள். அதே போன்று புல் வகையிலான மூங்கிலில் வேலும் செய்யப்பட்டது. இதனாலேயே வேலனிற்கு சடங்கு நடாத்துபவர்களும் புலையர்கள் (புரோகிதர்கள்) எனப்பட்டார்கள். இத்தகைய சமூக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வின் நாயகனாக அன்று இருந்தவன் வேலன் என்ற பட்டம் தாங்கிய புலையன் ஆவான். சடங்கு முடிந்ததும் அவனும் மக்களோடு மக்களாகப் பிற பணிகளிற்கும் செல்வான் (இன்றைய நாட்டுப்புற பூசாரிகள் போன்று).

 புல் என்ற மூங்கிலை இழைவோர் மட்டுமன்றி, தோல் இழைவோரும் புலையரே. கட்டுரையாளர் சொன்னதுபோல, தோல் தொடர்பான தொழில்கள் செய்வோர் கூடப் புலையர் என்பது உண்மையே. ஆனால், சங்க காலத்தில் அவ்வாறு தோல் தொழிலுடன் தொடர்புடையோர்கள் கீழானவர்களாகக் கருதப்பட்ட சான்றுகள் இல்லை. பின்வரும் புறநானூற்றுப் பாடல் (புறம்335) வரிகளைப் பாருங்கள். 

துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று

இந்நான் கல்லது குடியும் இல்லை

பறையன், துடியன் (உடுக்குப் போன்ற சிறு பறை அடிப்போன்) போன்ற சிறந்த குடிகளே இல்லை என்று அவர்களைப் போற்றியல்லவா பாடப்படுகின்றது. இவ்வாறு பறை போன்ற தோலுடன் தொடர்புடையவர்களின் சிறப்பினைக் காட்டும் பல பாடல்கள் சங்க காலத்தில் உண்டு. பறைக்கு பலியிடப்படுவதன் மூலம் தெய்வத்திற்கு நிகராகப் பறை கருதப்பட்டதனைச் சங்ககால பத்திற்பத்தில் இடம்பெறும் பின்வரும் பாடலில் காணலாம்.

கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன்பனை

ஆடுநர் பெயர்ந்து வந்து அரும்பலி தூஉய்

கடிப்புக் கண் உறூஉம் தொடித்தோள் இயவர்”- (பதி. 17: 6-7)

இறந்தோரிற்கான சடங்குகளைச் செய்பவனும் புலையர்களே என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அரச செய்திகளை மக்களிடம் பறையும் (கூறும்) அதே பறையர்களே, மணவிழாவில் பறை இசைத்தும், இறப்பு நிகழ்வில் பறை இசைத்தும், போரினைப் பறை அறைந்து தொடக்கிவைத்தும் இருந்தார்கள். இத்தகைய புலையர்கள் இன்றைய சாதி அடுக்குகளில் கீழ் நிலைப்பட்டவர்களாக இருப்பது போன்ற நிலை அன்றில்லை.

  சங்க காலம் தொடர்பான மற்றொரு செய்தி யாதெனில் அக் காலத்தில் பிறப்பு அடிப்படையிலான தொழிற் கட்டாயம் அங்கிருக்கவில்லை. இதனைப் பின்வரும் பாடல் காட்டுகின்றது.

முள் எயிற்றுப் பாண்மகள் இன் கெடிறு சொரிந்த

அகன் பெரு வட்டி நிறைய, மனையோள்

அரிகாற் பெரும் பயறு நிறைக்கும் ஊர!

மாண் இழை ஆயம் அறியும் நின்

பாணன் போலப் பல பொய்த்தல்லே.’ – (ஐங்குறுநூறு 47)

மேலுள்ள பாடலில் பாட்டுப்பாடும் பாணரே மீன்பிடித்து ஊரில் கொண்டு சென்று, மீனுக்கு நிகர் பயறோ, நெல்லோ கொடுத்துப் பண்டம் மாற்றிக்கொண்ட நிகழ்வினை ஐங்குறுநூறு காட்டும். எனவேதான் ஒரே தொழில்/ குலத்தொழில் கட்டாயம் என்பது சங்க காலத்தில் இல்லை. அதே போன்று நக்கீரப்புலவரிற்கோ புலவர் பணி, தந்தைக்கோ கணக்காயர் பணி; புலவரான சீத்தலைச் சாத்தனாரின் தந்தை கூலவாணிகம் தொழில் செய்பவர். இவ்வாறு பல சான்றுகள் சங்ககாலத்தில் பிறப்பிலடிப்படையிலான தொழில் காணப்படவில்லை என்பதனை எடுத்துக்காட்டும். இத்தகைய நிலை காணப்படும் ஒரு சமூகத்தில் சாதி அமைப்பு முறை காணப்படமாட்டாது.

இழிசினன்:

சங்க இலக்கியங்களில் இடம்பெறும் ‘இழிசினன்’ என்ற சொல்லின் பொருள் தவறாகவே கொள்ளப்பட்டு வருகின்றது. இச்சொல்லானது இழி, சினன் (இழி+சினன் = இழிசினன் ) என்ற இரு சொற்களாகப் பிரியும். இங்கு ‘இழி’என்ற என்ற சொல்லின் பொருள் ‘இறங்கு’என்பதே. இப்போது ‘ஈழம்’ என்ற சொல்லை எடுத்தால், அது (ஈழம்) தமிழகத்திலிருந்து புவியியல்ரீதியாகக் கீழே இறங்கியிருப்பதால், அப் பெயர் பெறும்.

இழிவு < > ஈழ் < ஈழம். (தமிழகத்தை விட்டு ”இறங்கி” இருப்பதால்= ஈழம், அதே வேளையில் காழ்தல்= ஏறுதல் என்பதால் காழகம் என்று இன்றைய மியன்மாரினை (பர்மா) அழைத்தனர்)

இப்போது சொல்லுங்கள், ஈழம் என்ன தமிழகத்தைவிடத் தாழ்ந்த சாதியா?. இல்லையே, அது போன்றதே இழி என்ற சொல்லும் இறங்குதல் என்ற பொருளே தவிர, கீழ்ச்சாதி என்ற பொருள் இல்லை. ‘நீரிழிவு’ (நீர்+இழிவு) என்ற சொல்லில் இழிவு என்பது இறங்குதலையே குறிக்கும். அடுத்ததாக சங்க காலப் பாடல்களில் ‘இழிவு’என்ற சொல்லின் பொருளினைப் பார்ப்போம்.

காண்டல் விருப்பொடு தளர்புதளர்பு ஓடும்

பூங்கட் புதல்வனை நோக்கி, 'நெடுந்தேர்

தாங்குமதி, வலவ!' என்று இழிந்தனன், தாங்காது,

மணிபுரை செவ்வாய் மார்பகம் சிவணப்

புல்லிப் பெரும! செல்இனி, அகத்து' எனக்’ {அகநானூறு 66 :11-15}

மேற் குறித்த பாடலில் தேரினை நிறுத்துமாறு கூறி ‘இறங்கினன்’என்பதற்கு ‘இழிந்தனன்’ என்றுதான் குறிக்கப்பெற்றுள்ளது. திருக்குறள் ஒன்று பார்ப்போமா!

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை’. { குறள் 964}

இங்கு’இழிந்த மயிர்’ என்பது கீழே விழுந்த மயிர் என்ற பொருளே பெறுகின்றது. எனவே சங்க காலத்தில் இழி என்ற சொல் இறங்கு /விழு என்ற பொருளே பெறுகின்றது. அடுத்ததாக, ‘சினன்’ என்ற சொல் அறிவுடையோன் என்ற பொருளினைப் பெறும். இன்றைய அகராதிகள் கூடச் ‘சினன்’என்ற சொல்லிற்குப் ’புத்தன்/ அருகன்’ என்ற பொருள் தருகின்றன. எனவே இழிசினன் என்ற சொல்லானது கீழிறங்கும் அறிவுடையோன் என்ற பொருள் பெறுகின்றது. குறிப்பாக புலையன் வேலனாக மாறிச் சடங்குகள் செய்யும்போது, அவனில் முருகு வந்து இறங்குவதாக இதனைச் சொல்லலாம். அறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் ‘அவதாரம்’ என்ற வடமொழிச் சொல்லிற்கு நிகரான தமிழ்ச்சொல்லாக ‘இழிசினன்’ என்ற சங்கத் தமிழ்ச் சொல்லினையே கொள்வார். (அவதாரம் என்ற சொல்லும் மேலிருந்து கீழே இறங்கி வரல் என்ற பொருள் பெறும்). எனவே சங்க காலத்தில் ‘இழிசினன்’என்ற சொல் பெருமைக்குரிய ஒரு சொல்லேயாகும்.

  இறுதியாக, கட்டுரையாளர் சுட்டிக் காட்டிய சில பாடல்களைப் பார்ப்போம்.

கட்டில் நிணக்கும் இழிசினன் கையது

 போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதே”( புறநானூறு : 82)

சோழன் பெருநற்கிள்ளி போரில் காட்டும் விரைவிற்கு உவமையாகவே கட்டில் புனையும் தொழிலாளி ஒருவனின் வினைத்திறன் காட்டப்படுகின்றது. பொதுவாக ஒன்றுக்கு உவமையாகக் காட்டப்படும் மற்றொன்று முன்னையதனைவிட உயர்வாகவல்லவா காணப்படும். எனவே அரசனின் வீரத்திற்கு இணையாகக் காட்டப்படும் இழிசினன் என்ற உவமையும் உயர்வாகத்தானே காணப்படும். கட்டுரையாளர் இழிசினன் என்ற சொல்லிற்கான பொருளில் கொண்ட குழப்பமே முழுக் குழப்பத்திற்கும் காரணம். கட்டுரையாளர் காட்டும் அடுத்த பாடலிலும் (புறம் 170) கட்டுரையாளரே குறிப்பிட்டபடி பறை ஒலியானது மலை நாட்டுத் தலைவனின்(சேயோன்) போர்க் குரலுக்கு நிகராகும் என்றே அமைகின்றது. இப் பாடலைப் பாடிய ‘உறையூர் மருத்துவன் தாமோதரனார்’பற்றி அறிஞர்கள் குறிப்பிடும்போது “உடுக்கு அடிக்கும் வேலனை இவர் 'இருபிறப்பாளன்' என்று குறிப்பிடுகிறார்” என்கின்றார்கள். அதாவது, எளிய மனிதனாக உள்ளபோது அவனுக்கு உள்ளது ஒரு பிறப்பு. வீட்டு விழாவில் அகத்திணைப் பாடல்களில் தலைவிக்கு முருகயரும்போது மற்றொரு பிறப்பு. இப்படி ஒருவனே இரு பிறப்பாளனாக மாறுகிறான். இங்கு முருகு வந்து இறங்கும் போது ஏற்படும் இரண்டாவதான ‘முருகு இறங்கும் பிறப்பினையே’ இழிபிறப்பாளன் {இழி=இறங்கும்} என்பது குறிக்கின்றது. எனவே இங்கும் எந்தவொரு சாதிய ஏற்றத்தாழ்வும் இல்லை.

 அடுத்து கட்டுரையாளர் சுட்டும் பாடலைப் பார்ப்போம்.

புலையன் ஏவப் புல்மேல் அமர்ந்துண்டு

அழல்வாய்ப் புக்க பின்னும்

பலர்வாய்த் திராஅர் பகுத்துண்டோரே

இப் பாடலிலும் புலையன் என்பதற்கான பொருளினையே பிழையாகக் கொண்டுள்ளார். வேலனிற்கு சடங்கு செய்யும் அதே புலையனே இங்கு இறுதிச்சடங்கும் செய்பவன் (இன்றும் சில மதங்களில் இத்தகைய நிலையினைக் காணலாம்). மேலும் “புலையன் ஏவ” (ஏவ = கட்டளையிட) என்ற வரியினையும் கவனத்திற்கொள்க. கட்டுரையாளர் சுட்டிக் காட்டும் அடுத்த இரண்டு பாடல்களிலும் கூட, அவர் புலையன், புலைத்தி போன்ற சொற்களிற்கான பிழையான விளக்கத்தினைக் கொண்டே கட்டுரை அமைந்துள்ளது. இறுதியாகக் கட்டுரையாளர் காட்டும் நற்றிணைப் பாடலில் வெளிக்கொண்டுவருவது வர்க்க வேறுபாடேயன்றி, சாதிப் பாகுபாடல்ல.

முடிவுரை:

சங்க காலத்தில் சாதி என்ற சொல்லோ அல்லது அதற்கு நிகரான பிற சொற்களோ எதுவுமே புழக்கத்திலில்லை. அப்போதிருந்த புறமணமுறையும், தொழில் தெரிவும் சாதியமைப்பிற்கான அடிப்படையினையே சங்க காலத் தமிழர் கொண்டிருக்கவில்லை என்பதனைத் தெளிவுபடுத்தும். இலக்கியச் சான்றுகளை விடத் தொல்பொருள் ஆய்வுகள் மேலும் இதனைத் தெளிவுபடுத்தும். குறிப்பாக, கீழடி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட 12000 இற்கும் கூடுதலான பொருட்களில் எதுவுமே சாதியினையோ அல்லது மதத்தினையோ குறிக்காமை எமது இந்தக் கருத்தினை வலுப்படுத்தும். கடைச் சங்ககாலத்தில் தமிழகத்திற்கு வந்துசேர்ந்த பார்ப்பனியம் வர்ணங்களை பரப்பும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியதனை, நாம் மறுக்கவில்லை. ஆனால் சாதியோ /வர்ணங்களோ தமிழரிடம் சங்க காலத்தில் பரவியிருக்கவில்லை. எனவே ‘சங்ககாலத் தமிழர்கள் சாதியற்ற தமிழர்கள்’ என உறுதியாகச் சொல்லலாம்.

துணை நின்றவை:

சங்க இலக்கியம் கவிதையும் கருத்தும் - பேரா. கா. சிவத்தம்பி

அறியப்படாத தமிழ்மொழி - முனைவர் இரவிசங்கர் கண்ணபிரான்

பல்வேறு கட்டுரைகள் - இலக்குவனார் திருவள்ளுவன்