உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மோடி அரசின் திட்டத்தை தமிழகத்தில் அமுல்படுத்துவதற்காக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட 21 கட்சிகளில் 16 கட்சிகள் இதற்கு எதிராகவும், பாஜக, காங்கிரசு, CPM உள்ளிட்ட 5 கட்சிகள் ஆதரவாகவும் வாக்களித்துள்ளன. இதனால் CPM நிலைப்பாடு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றது. இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி ஒட்டுமொத்த CPMமும் பார்ப்பன அடிவருடிகள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த சில சின்னபுத்திக்காரர்கள் முயன்று வருகின்றார்கள். நிச்சயம் இப்படியொரு நிலைப்பாடு எடுத்தால் அது பொதுக்கருத்துக்கு எதிராக இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாதது அல்ல. ஆனால் கட்சியின் பார்வை வர்க்கத்தை மட்டுமே முன்னிலைப்படுத்துவதாலும், சாதியை இரண்டாம் பட்சமாக கருதுவதாலும் ஏற்படும் தவிர்க்க முடியாத நெருக்கடிக்கடிக்கு CPM ஆளாகியுள்ளது.

all party meeting on 10 reservationமத்திய குழு என்ன சொல்கின்றதோ அதை மாநிலக் குழு செயல்படுத்தும் நிலைதான் தற்போது CPM-ல் உள்ளது. இது அடிப்படையிலேயே தேசிய இன உரிமைகளுக்கும், அதன் பன்முகத் தன்மைக்கும் எதிரானது ஆகும். ஒவ்வொரு மாநிலத்தின் தனித்த தன்மைக்கு ஏற்றாற்போல முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தை மாநில கமிட்டிக்கு மத்திய கமிட்டி வழங்க வேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் அங்கிருக்கும் CPM-ம் இங்கிருக்கும் CPM-ம் இருவேறு துருவங்களாக நிற்பதைக் கண்டு கொள்ளாத மத்திய தலைமை ஏன் இட ஒதுக்கீடுப் பிரச்சினையில் மட்டும் மூக்கை நுழைக்க வேண்டும்?

CPM பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும்போது, அதனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய சமூகத்தில் ஆழமாக வேரூன்றிப் போய் இருக்கும் சாதி ஏற்றத்தாழ்வையும், அதனால் தலித்துகள் மக்கள் பிற்பட்ட மக்கள் கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்டதை எப்படி சரி செய்வது, அதற்கான வழி முறைகள் என்ன என்பதைப் பற்றி தெளிவான விளக்கங்களைத் தர வேண்டும். அப்படி இல்லாமல் வெறுமனே 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரிப்பது என்பது பிஜேபி, காங்கிரசு போன்று ஆதிக்க சாதிகளை குஷிப்படுத்தி அதன் மூலம் ஓட்டு பெற நினைக்கும் அதன் சூழ்ச்சியை CPM ஆதரிப்பதாகவே இருக்கும்.

பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது மாறும் தன்மை கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இதை CPM ஆதரிக்கும் போது என்ன அளவுகோலைப் பயன்படுத்தி ஒருவர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கின்றார், அப்படியே பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள ஒருவர் தொடர்ச்சியாக அதே நிலையில்தான் இருக்கின்றாரா, மேலும் ஒருவர் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டை பெற்றதாலேயே சாதிவெறியை விட்டொழித்தவராகவும், சமூக தளத்தில் பிற பிற்பட்ட மற்றும் தலித் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நபராக இல்லாமல் இருக்கின்றாரா என்பதை எல்லாம் எப்படி கண்காணிப்பது, எப்படி கண்டுபிடிப்பது என்பதை CPM விளக்கமாக அறிவிக்க வேண்டும். சாதி ஒழிப்பு, சமூக சமத்துவம் என்பதையெல்லாம் CPM உண்மையில் உள்வாங்கிக் கொண்டுதான் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதை ஆதரிக்கின்றது என்றால், அதைப் பற்றிய முழுமையான தரவுகளை வைத்து நிறுவும் பொறுப்பு அதற்கு உள்ளது. அப்படி நிறுவ முடியவில்லை என்றால் அது தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆனால் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களும் அதே போல சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்பட்ட மக்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீட்டால் சாதி ஒழிப்பு பணியிலும் சமூக சமத்துவத்தை ஏற்படுத்தும் பணியிலும் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவ வேண்டும். ஒருபக்கம் பிற்பட்ட சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை வலியுறுத்துவதும் மற்றொரு பக்கம் பிற்பட்ட சாதிகளில் சில சாதிகள் தாங்கள் ஆண்ட பரம்பரை என்று சொல்லிக் கொண்டு அருவாளை தூக்கிக் கொண்டு வெட்ட போகும் போது அவர்களுக்கும் சேர்த்து இட ஒதுக்கீடு கேட்பதும் சாதி ஒழிப்பு, சமூக சமத்துவம் என்ற கோட்பாட்டிற்கே முரணானது ஆகும். தேர்தலில் நிற்கும் ஓட்டுப்பொறுக்கிகள் தான் இது போன்ற ஆண்ட பரம்பரை கதை பேசும் சாதி வெறியர்களை, ஓட்டுக்காக அவர்கள் செய்யும் அயோக்கியத்தனங்களை கண்டுகொள்ளாமல் அவர்கள் தொடர்ச்சியாக சமூக தளத்தில் சாதிவெறியையும், தீண்டாமையும் கடைபிடிக்க ஆதரவளிப்பவர்கள்.

நாம் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டியது திமுக பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டை ஆதரிக்காததாலேயே அது சாதி ஒழிப்பு என்ற கருத்தியலுக்கு ஆதரவான கட்சி என்றோ, CPM பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதாலேயே அது முற்ற முழுக்காக சாதியை ஆதரிக்கும் கட்சி என்றோ எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்பதுதான். திமுக உண்மையில் சாதி ஒழிப்பில் அக்கறை உள்ள கட்சி என்றால் அது நிச்சயம் கொங்கு பகுதியில் ஓட்டு பெறுவதற்காக அப்பட்டமான சாதிவெறியை பரப்புரை செய்து கொண்டிருக்கும் ஈஸ்வரன் போன்றவர்களை வலிய சென்று வரவேற்றிருக்காது. தமிழகத்தில் சாதிவெறி பிடித்த கட்சிகள் எல்லாம் திமுகவும், அதிமுகவும் வளர்த்து விட்டவையே தவிர இங்கிருக்கும் CPM வளர்த்துவிட்டதல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போதும் தேர்தல் சமயத்தில் எல்லா சாதிவெறி பிடித்த கழிசடைகளும் சங்க‌மிக்கும் இடமாக திமுக மற்றும் அதிமுகவே உள்ளது. இவர்களிடம் இருந்து ஆதரவைப் பெறுவதில் இரண்டு கார்ப்ரேட் கட்சிகளுக்கும் போட்டியே உள்ளது. ஒரு பக்கம் சாதிவெறி பிடித்த சங்கங்களையும் கட்சிகளையும் ஊக்குவித்து அதற்கு தேர்தலில் நிற்க வாய்ப்பளித்து வளர்த்துவிடுவது இன்னொரு பக்கம் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டை CPM ஆதரித்ததாலேயே அதைப் பார்ப்பனக் கட்சி, சாதியை ஆதரிக்கும் கட்சி என்பது. என்ன ஒரு முரண்பாடு?.

உண்மையில் சாதி ஒழிப்பு, சமூக சமத்துவ‌ம் என்ற கோட்பாட்டில் உறுதியாக உள்ள எந்த ஒரு மானஸ்தனும் திமுகவில் இருக்க மாட்டான் என்பதுதான் உண்மை. சாராய வியாபாரிகளுக்கும், கல்விக் கொள்ளையர்களுக்கும், சாதி வெறியர்களுக்கும் திமுக இடம் கொடுப்பதைப் பற்றி மறந்தும் கூட வாய்திறக்காத பிழைப்புவாதிகள்தான் ஏதோ திமுகவிற்கு மட்டுமே தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனில் அக்கறை இருப்பது போல பிதற்றித் திரிகின்றார்கள். குடும்பத்தை கூட பார்ப்பன எதிர்ப்பு மரபில் கட்டமைக்காத திமுக தமிழ்நாட்டில் சாதி ஒழிப்பையும், சமத்துவத்தையும் கட்டி எழுப்பும் என்று நம்புபவன் அல்லது நம்ப வைக்க முயற்சிப்பவன் கழிசடைப் பேர்வழியாகத்தான் இருப்பான்.

- செ.கார்கி